Thursday, May 21, 2015

முரண் உணர்வுகள் - முகமூடிக்கவிதைகள்

தர்க்கங்களற்று சிறு குழந்தையாய்
இருந்திருக்கலாம் - அல்லாது
குழந்தமையை தொலைக்காது
உண்டு உறங்கி களித்து அன்பு செய்து
வாழ்ந்திருந்திருக்கலாம் - நாமோ

அத்தனையும் தொலைத்து விட்டு
நிணமும் இரணமும் மனதில் ஏந்திய மாக்களாய் வாழ தலைப் பட்டுவிட்டோம்...இங்கனமே வாழ்ந்து வீழ்வோமா இல்லை
தெளிந்து விலகுவோமா..

தர்க்கங்களின் கரம் பற்றி நாளும் நடக்கிறேன் வாழ்வின் முரண்களை உணர்ந்த்படி !!!

Tuesday, May 19, 2015

அல்சைமர்

வெகு ஆழத்தில் சிக்கியிருக்கும் சிக்கலான ஒரு நூல் கண்டின் ஒரு முனை மட்டும் அவ்வப்போது வெளிவருகிறது.
கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி இத்தனை வருடம் உள்ளூரிய உணர்வுக்குவியலுடன் ரணமாய் நிணமாய் வெளிக்கிடும் நிமிடங்களில் நம் காதுகளை விட மனமே அதி வேகமாய் செயல் படுகிறது.
சொற்களை தாண்டி உள்ளிருக்கும் முதிய மனத்தின் குகை இருட்டு வாழ்வில் நமக்கு எதையெதையோ சொல்லித் தருகிறது.

இன்று பௌர்ணமி, கூடவே சந்திர கிரஹணம். உடலில் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனிக்க முடிந்தது. சுற்றிலும் இருக்கும் மனிதர்களை காணும் பொழுது ஒரு சிறிய இயல்பின்மை நூலிலும் மெல்லிய கோடாய் பரவியிருப்பது போல் தோன்றியது. அதிக வெய்யில், வெக்கை ஜாஸ்தி என்று ஆயிரம் காரணம் சொல்லிகொள்ள இருந்ததுதான்.
மேலும் இது வெறும் என் தோன்றலாய்க்கூட இருக்கலாம்தான்

பயணம் - இரவின் அழகு

அலையலையாய் நெளிந்து நீள்கிறது இருட்டு. இடையிடயே நெய்யப்பட்ட ஜர்தோசிக்கற்களாய் வெண்குழல் விளக்குகள்.

இந்த அழகைக் கிழித்தபடி என்னோடு முன்னும் பின்னும் எதிருமாய் பளிச்சென பல்காட்டிச்செல்லும் இரண்டு மூன்று நான்கு சக்கரங்கள்.

வாழ்வின் தவிர்க்க முடியா அவலங்களை நினைவுறுத்துகிறது மங்கிய வெளிச்சத்தில் புன்னகைக்கும் சாலைகள்

இருளையும் பகலையும் ஒன்று போல் உணர்ந்தபடி தனித்திருக்கும் நெடுஞ்சாலையோர மரங்களில் கூட்டமாய் இரைந்தபடி கூடடையும் புள்ளினம். நம் மன எண்ணங்களைப் போல

நீண்ட நெடுஞ்சாலைகளின் அழைப்பை மறுதலிக்க முடிவதேயில்லை. நாடோடிகளின் மனதை ஒத்து சாலைகளில் கால் பதிக்க காரணங்களைத் தேடியலையும் மனதையும் மறைக்க வேண்டிய தேவையற்று ஒப்புக்கொள்வதில் இருக்கும் நேர்மையைக் கொண்டு வாழ்வை பிணைத்திருக்கும் சங்கிலிகளின் கண்ணிகளை என்னால் குறைத்துக் கொள்ள முடிகிறது. smile emoticon

மரணம்

சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் பச்சையுமாய் வழியெங்கும் நாரோடும் இன்றியும் இறைந்து கிடக்கிறது பூக்கள்.

தள்ளாடியபடி நடமிட்டும் நடந்தும் செல்லும் பல ஜோடிக்கால்கள்.
தாளம் தப்பியும் தவறாதும் ஒலிக்கும் தாரை தப்பட்டைகள்.
...
இவைநடுவே அசையும் பல்லக்கில் சலனமற்றுச் செல்கிறது உடல் ...
வாழ்வின் அத்தனை சூத்திரங்களையும் சொல்லாமல் சொல்லியபடி.

நடுநிலைவாதமும் நாகரீகமும்

ஒரு விஷயம் நடக்கும் பொழுது அல்லது அறிந்து கொள்ள நேரும்பொழுது நம்முடையை உள்மனசின் கூற்றுப்படி இது நல்லது கெட்டது என்று இரண்டாகப் பிரிப்போம்.
 
நல்லதை எப்படி வேடுமானாலும் ட்ரீட் பண்ணலாம் – எழுதலாம் எழுதாமல் விடலாம் அவரவர்கள் இஷ்டம்.
ஆனால் கெட்டதை எழுதாமல் விட்டுவிடுவோம். அது மட்டுமே நமக்கான தெரிவாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அதைக் குறித்த மேலதிக ஆர்வத்தை நாம் கிளறாமல் இருக்க உதவும்.


சமிபத்திய சில கெட்டதுகளை எடுத்துக் கொள்ளலாம், அது என்ன வென்று பட்டியல் போட்டு நானும் அந்த வட்டத்துக்கு பங்களிக்கும் ஆர்வமில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள செய்தியை அதைக் குறித்து நடுநிலையாகவோ, எதிர்த்தோ ஆதரித்தோ கொந்தளித்தோ பேசுவதின் மூலம் நாம் இன்னமும் அதைக்குறித்து அறிந்து கொள்ளாத மேலதிகப் பேருக்கு அந்த செய்தியை கொண்டு செல்கிறோம் என்று புரிதில் அவசியம்.

வாசிக்கும் ஒரு சிலர் அதைக் கடந்து செல்லலாம் மேலும் சிலர் அது என்ன என்று அறிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம். அறிந்த பின் சரி/தவறென்று அவர்கள் வட்டத்தில் அவர்கள் விவாதிக்கலாம். ஆக நாம் அந்த செய்தியை கடத்தும் காரணிகளில் ஒன்றாகிறோம்.
இதுவும் வணிகப் பத்திரிகைகள் செய்யும் மலிவான விளம்பர உத்திகளில் ஒன்றுதான். நான் மிகவும் விரும்பும் மதிக்கும் சில பதிவர்கள் கூட இத்தகைய அறச்சீற்றத்திற்கு ஆள்படுவதைக் காணும் பொது இதைச் சொல்லத் தோன்றியது.

சமுகத்தில் நடக்கூடிய இத்தகைய வளர்சிதை மாற்றங்கள் தவிர்க்க முடியாதது அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்தபடி அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் இதில் நம் பங்கு ஏதுமில்லை unless we are part of those incident.

இத்தகைய விஷயங்களைத் தொடும் முன் இந்த எழுத்து அந்தப் பிரச்சனையின் மையப்புள்ளியை ஒரு நெல் முனையளவாவது நல்லதை நோக்கி நகற்ற கூடிய ஆற்றல் உள்ளதாக இருந்தால் மட்டுமே எழுதலாம் என்பது ஏன் கருத்து.

இல்லை சமூக விழிப்புணர்வு, நான்தான் மொரேல் டீச்சர், அவலங்களைக் குறித்து பேசியே ஆகவேண்டும் இல்லன்னா நீ சுயநலவாதி இப்படில்லாம் சொல்றிங்கன்ன இது உங்களுக்கான பதிவல்ல நட்புகளே (சேது - விக்ரம் ஸ்டைல் மனசுள் வந்தது smile emoticon ).

வாசிப்பு - ஜென் புரிதல்கள்

இந்த விசித்ரமான மனதிற்கு எப்போதும் உரைகல் தேவைப்படுகிறது. பரீட்சைகளின் முடிவுகளில் திருப்தியுறும் இந்த எளிய மனதை கண்டு நகைக்கிறது உள்ளுறங்கும் முதிய மனம். ஆனாலும் கற்றுக் கொள்வதை உரசிப்பார்ப்பத்தில் களிப்புறுகிறது புத்தி.

நான் நிகழ்வுகளில் என் கேள்வியை ஏற்றிக் கொள்கிறேனா இல்லை கேள்விக்குப் பின் நிகழ்வுகளை கோர்த்துக் கொள்கிறேனா என இப்போதெல்லாம் என்னை நானே விசாரித்துக் கொள்கிறேன்.
சிறிது நாட்களுக்கு முன் ஜென் பற்றிய ஒரு விட்டேத்தி மனநிலை கைக் கொண்டது. ஆனாலும் மனம் அதை ஒரு மூலை...யில் ஒதுக்கி விட்டு தன் பாடலை இசைத்துக்கொண்டு தானிருந்தது.

கையிலிருந்த மொழிபெயர்ப்பு புத்தகம் முடிந்ததும் அலுவலுக்கு கிளம்பும் அவசரத்தில் படிக்க வேண்டிய புத்தகங்களின் தொகுப்பில் இருந்து ஒரு புத்தகத்தை உருவிச் சென்றது கை. பொதுவில் அவ்வப்போதைய மனநிலைக்கு தக்கவாறு தெரிந்தெடுப்பதே வழக்கம். இன்றைய நிகழ்ச்சி எனக்கே ஒரு வழமை மீறிய செயலாகப்பட்டாலும் காலமின்மை உந்தித்தள்ள மனதின் வியப்புக்குறியை புறந்தள்ளினேன்.
வாசிக்க ஆரம்பித்த பொழுது என் மனம் நின்று மீண்டும் ஓடத் துவங்கியது.

அது சத்குரு ஜக்கி அவர்களின். ஜென் கதைகளின் தொகுப்பு. ஒரு கதை பின் அதற்கான விளக்கம்/புரிதல் என்றபடி செல்லும் புத்தகம். இது வரையில் இது போன்ற ஒன்றை வாசித்ததில்லை.

ஒரு சில கதைகளுக்குப்பின் மனம் நான் முதலில் எழுதிய வரிகளுக்குள் சிக்கிக் கொண்டது. ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னும் அதனுடனான என் புரிதலை தேர்வு எழுதும் மாணவியின் மனநிலையோடு ஆராய்ந்து விட்டு அவரது விளக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன்....
கதைகளின் முடிவில்.. முதல் இரண்டு பத்திகளை மீண்டும் வாசித்துக்கொள்ளலாம் பொறுமையிருந்தால்.

நம் கேள்விக்கான ஒவ்வொரு பதிலையும் பிரபஞ்சத்திலிருந்து உணர்ந்து கொள்வதொன்றே நாம் செய்ய வேண்டியது என மீண்டும் மனதிலிருத்திக்கொள்ளும் தருணம் இது.

#‎ஜன்னல்‬ - தங்கத்தாமரை பதிப்பகம் - ஜக்கி வாசுதேவ் - எழுத்தாக்கம் சுபா.

வெளிப்பாடு - உணர்வுக்குவியல்

கடலில் ஆழம் செல்லச் செல்ல அலையடிப்பதில்லை. அலையாடலில் களிகொண்ட மச்சம் விருந்தாகும் என்பதும் உண்மை.

மெளனம் மிக மெதுவாக உள்ளூருகிறது ஆனால் ஆழத்தில் சென்றமர்ந்து விடுகிறது

வெற்றி என்பது வெறும் வார்த்தையல்ல, சந்தோஷம் மற்றும் மவுனம் என்பதும்.

எதனுள்ளும் பற்றியிருக்காத ஒரு முனை அகத்துள்ளே தனித்து இயங்குகிறது. அது தன் ஒவ்வொரு அசைவிலும் உண்டு செரிக்கிறது எஞ்சிய மனதின் அத்தனை அடுக்குகளையும்.

உன் மூடிய கண்களுக்குள் என் முகம் தெரிகிறதா. கேட்டு கேட்டுச் சலித்து விட்டேன் இல்லையென்றாவது சொல்லிவிடு. நான் கேள்வியை மாற்றிக் கேட்கிறேன் உன் உண்மையை வெளிக்கொணர.

நான் கவிதையோ, கதையோ இல்லை கருத்தோ எழுதித் தொலைக்கிறேன்.
ஏனெனில் என் கைவசம் நேரமும் முகநூலும் இருக்கிறது.

ஏதோ ஒரு கணத்தில் கடந்து சென்று விடுகிறேன் உன்னிடம் பேசத்தோன்றும் விழைவை.
பின் அதைக் கவிதை எழுதி கரைத்தும் விடுகிறேன். எனக்குள் சொற்கள் மீதமிருக்கும் வரை நமக்குள் சொல்லாடல் இல்லை. சொல்லழியும் நாளுமுண்டு நினைவில் கொள்

கையிலிருக்கும் கோப்பையில் மிதக்கும் திரவத்திற்கு ஒப்பானதானது புத்தகங்கள். மெல்ல மிடறு விழுங்கி சுவை நரம்பின் கடைசி வாசலைத் தாண்டும் பொது உணறும் சுவைக்கு ஒப்பானது வாழ்க்கை. உள்ளிறங்கி ஊணுடன் முயங்கி வெளிப்படும் உணர்வினுக்கொப்பானது இசை.
தேர்ந்தெடுப்பதை மட்டுமே தெரிந்தெடுக்கமுடியும் என்ற உண்மையை உணர்ந்து கொள்வது வரை கசப்போ, இனிப்போ, புளிப்போ வாழ்வை கடந்துதானகவேண்டும்

ஆத்ம விசாரம்

உண்டு உறங்கி உண்டு உறங்கி, இடையிடையே சமைத்து, அலைபேசி, தொலைபேசி, முகமன் கூறி, சண்டையிட்டு, கண்ணீர் விட்டு, கவலைப்பட்டு, கருணைகற்று, கற்பித்து, வாசித்து, அதை வாந்தி எடுத்து, கணணி தட்டி.....
இத்தனையும் செய்வது யாரென்று தனிமையில் ஒடுங்கி நோக்கும் சிறு குரங்கின் மன நிலை அறிவாருண்டோ???

வாசிப்பு - விகசிப்புகள்

"+++“சிந்தனையை தேவையில்லை என்று சொல்வது எப்படி? அவை நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இந்த மணல்காற்றைப்போல. கண்ணுக்குப்பட்ட அனைத்துடனும் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் மெய்மை என்பது அவற்றால் தீண்டப்படுவதா என்றுதான் எனக்கு ஐயமாக இருக்கிறது?” “அவை பொய் என்கிறீர்களா?” என்று இளநாகன் கேட்டான்.
“பொய் என்று சொல்லமாட்டேன். மெய்யின் துளிகள் அவை. ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது” என்றார் அருணர். “மெய்மை என்பது மாற்றிலாததாக, முழுமையானதாக இருக்கும். அதை அறிந்தவனுக்கு விவாதிக்க ஏதுமிருக்காது என்றே எண்ணுகிறேன்.”+++++++++


வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்

எதை நெஞ்சிலிருத்த மனம் தவிப்புக் கொள்கிறதே அதுவே சத்தியம். எந்த வார்த்தைகளை எழுத்தெழுத்தாக மென்று விழுங்கும் பொது மனம் விகசித்து தவித்தெழுகிறதோ அதுவே கல்வி. எதை மனம் கேள்விகளற்று உள்வாங்கிக் கொண்டு கண் நிறைக்க தடுமாறுகிறதோ அதுவே நல்லூழ் உணர்த்தும் வாழ்வு.
இந்த உணர்வுகளை நான் இந்த வரிகளில் கண்டுகொண்டேன் என்று சொன்னால் மிகையாகாது.
+++++++++++++++++++++++++++...
வெண்முரசு - நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 41 - by ஜெயமோகன்


அவனுடைய திகைத்த முகத்தை நோக்கி சிரித்தபடி “உமது வியப்பு புரிகிறது. இங்குள்ளவை அனைத்தும் நான் இயற்றுபவை என எண்ணுகிறார்கள். என் பெயர்சொல்லி செய்யப்படுபவை அனைத்திலும் நான் உள்ளேன் என்பது உண்மை. ஆனால் அச்செயல்களே நான் என்பவன் என்னை வந்தடைவதேயில்லை” என்றான் கிருஷ்ணன்.
++++++++++++++++++++++++++++++++++=

 

இருத்தலின் உண்மை

மீண்டும் கிடைத்து விடக்கூடிய அத்தனை சாத்தியக்கூறுகளையும் கைக்கொண்டு தொலைந்து போவதில் எனக்கு உடன் பாடில்லை. எனவே இருத்தலே வாழ்வாகிறது

ஆன்மீகம் - வியாபரம்

நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகாமையில் அருகிருக்கும் ஒரு சிறிய மலையை பச்சை மலை என்று சொல்வார்கள். அந்த மலையை கொஞ்ச காலமாக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் ஏதோ அரியவகை முதுமக்கள் தாழி போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சான்று இருப்பதாகவும் செவி வழிச் செய்திகள் இருந்து வந்தது.
தற்போது அது உண்மையெனச் சொல்லி பல்லாவரம் ஏரியாவில் உள்ள ஒரு சில இடங்களையும் இந்த மலையையும் தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக உறுதி செய்து அதைச் சுற்றியுள்ள ஒரு கு...றிப்பிட்ட தூரத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட முடியாத படி கட்டுமானத்துறையில் விதிகளை புகுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இது வல்ல நான் சொல்ல வந்த விஷயம்.
அந்த மலையில் திறந்த வெளியில் ஒரு எல்லை பெண் தெய்வமும் சில சுற்று தேவதை சிலைகளும் இருக்கும். மலையேறிபோனால் கேட்பாரற்று இருக்கும் அந்த இடம் ஹோ வென காற்று சூழ மிக்க அதிர்வோடும் ஒரு சூட்சுமத்தோடும் மிகவும் அமைதியாய் நமக்கு மட்டுமேயான நம் வீட்டு பெருங்கிழவி போன்று மனதோடு பேசும் வல்லமை கொண்டவள் அந்த அன்னை.

வருடத்தில் ஆடி அம்மாவாசை அன்று மட்டுமெ சாரி சாரியாக எங்கிருந்தோ மக்கள் வந்து அவளுக்கும் அந்த சுற்று தெய்வங்களுக்கும் பொங்கலிட்டு பூசை செய்வர். மற்ற நாட்களில் என் போன்ற ஏகாந்திகளிக்கும் ஒரு சில கஞ்சா சாராய பிரியர்களுக்குமானவள் அவள்.

கடந்த சிவராத்திரி அன்று ஒரு இந்து அமைப்பு அங்கு வந்து மிகப்பெரும் அளவில் பூசை ஏற்பாடு செய்தது. இப்போது சித்ரா பெளர்ணமி அன்று மிகப்பெரும் பூசை நடைபெறப்போவதாகவும் அன்று இரவு அங்கு தங்கி வழிபடுவது மிகச்சிறப்பானது என்றும் விளம்பரம் செய்து அங்கங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.

அதில் இந்த தேவிக்கு ஏதோதோ பெயர் சூட்டி உலகத்திலேயே இதுவே இது போன்றதொரு முதல் தெய்வம் என்றும் இந்த பூசை காலம் காலமாக நடந்து வருவது போலவும் எழுதி அதற்கு ஒரு தக்கார் சாமியாரும் சாமியாரிணி பெயரையும் பொறுப்பாளார்கள் எனவும் விளம்பரம் செய்துள்ளனர்.
மேலும் பச்சை மலை என்ற பெயரையும் மந்தர கிரி என்று மாற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

இது வரலாற்று உண்மையா இல்லை வணிக விளையாட்டா ஒன்றும் புரியாது என் போன்றவர்கள் என்ன ஆகுமோ என்று கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

யார் கண்டார்கள் கூடியவிரைவில் கிரிவலம் கூட ஆரம்பித்தாலும் ஆரம்பித்து அதற்கும் சில நூற்றாண்டு கதைகளைச் சொல்லிவிடுவார்கள்.

ஆறாம் அறிவுப் பிரச்சனை

ஐந்தறிவு மாக்களான குதிரைக்கும், ஆட்டுக்கும் மாட்டுக்கும், பறவைக்கும் அவைகளாய் இருப்பத்தில் சிக்கலேதுமில்லை. இருத்தல் அவைகளுக்கு கருக்கொள்வதில் இருந்தே துவங்கி விடுகிறது.

ஆனால் இந்த ஆறறிவு மக்களுக்கு மட்டும் வாழ்தலை/இயலுலகைத் தாண்டி இருத்தலை புரிந்துகொள்வதற்கு எத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.

Be – Don’t try to become என்று சொல்வார் ஓஷோ by trying to become we become Existing not Being.
...
Inspiration from one of the statement from Swami Sukabhodananda.

கோவிந்தா - இளைய யாதவன்

முன்னாடி எல்லாம் கிருஷ்ணன்னு நினைச்சா ஒரு சின்ன அசட்டு சிரிப்போட சிவகுமார் முகம் நியாபகம் வரும் ஆனா இப்போ எல்லா எமோஷனோடயும் சவுரப் ராஜ் ஜெயின் முகம் தான் ஞாபகம் வருது. என்ன ஒரு தேர்வு.

இளைய யாதவன் - மயக்குமொறு சொல்

உணர்வு பூர்வமான வாசிப்பு

எல்லாவற்றினூடேயும் அகம் நகர்ந்து என்ன செய்கிறோமென பார்க்கமுடிகிறது.....த்வைதம் smile emoticon
ஆனால் வாசிக்கும் எந்த ஒரு நொடியிலும் மீள முடியாது அகமொன்றிப்போகிறது. நானே வாசிப்பவையாய், வாசிப்பவளாய்... அத்வைதம் _/\_
 
reading வெண்முரசு by ஜெயமோகன்

அம்மா - தாய்மை

இன்னைக்கு காலைல கொஞ்சம் வெளில போக வேண்டியிருந்தது. வர லேட்டாயிடுச்சு. லீவு நாளானாலும் ஸ்ரீக்கு டைமுக்கு சாப்பிடனும் அதனால கொஞ்சம் டென்ஷனோடத்தான் வந்தேன்.
வந்தா பசங்க எழுந்துக்கல ஸ்ரீ தாத்தாக்கு சாப்பாடு போட்டுட்டு அவரும் கொஞ்சம் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடிருந்தாரு. எனக்கு ஆசுவாசமா இருந்தது. ரொம்ப தேங்க்ஸ் மாமா கொஞ்ச நேரம் கழிச்சு சமைக்கறேன்னு பக்கத்துல உக்காந்துகிட்டேன்.

அம்மாக்கு ஸ்ரீ சாப்பிட்டது தெரியாது போல நான் ஒக்காந்திருக்கறதப் பாத்ததும் டென்ஷன் ஆயிட்டாங்க "வந்ததே லேட் அந்த ம...னுஷன் காலைலேர்ந்து தாத்தா பக்கத்துல இருக்காரு வந்தமா சாப்பாடு பண்ணிப்போட்டாமான்னு இல்லாம இன்னும் என்ன சிட்டிங்னு" ஒரே திட்டு. காணாததுக்கு அந்த மனுஷன் ஏதோ சும்மாயிருக்காரு இதே உங்க அப்பாவாயிருக்கனும் இந்நேரம் இந்த வீடு ரெண்டாயிருக்கும்னு ஒரே கூப்பாடு.

அம்மா ஸ்ரீ சாப்டாச்சு இனிமே லன்ச் தான் அப்படின்னு சொன்னா உடனே ஸ்ரீ கிட்ட அப்படியா அப்பவே சொல்லயிருக்கலாம்ல அப்படிங்கறாங்க என்னன்னு கேட்டா நான் வரதுக்கு முன்னாடியிருந்தே இப்படித்தான் புலம்பிக்கிட்டிருந்தாங்களாம்.
உடனே நான் அம்மா நீ என்ன எனக்கு அம்மாவா இல்ல
மாமியாரா இப்படி போட்டுக்கொடுக்கறயேன்னு கேட்டா நான் அம்மாடி இதுல உன் பசி அவன் பசில்லாம் வித்யாசம் கிடையாது அப்படின்னு சொன்னாங்க

அதுவும் சரிதான் smile emoticon. கண்டிப்பா இது மதர்ஸ்டே பதிவில்ல.

கேள்விகள்

நேத்து தியேட்டர்ல நடுவுல தான் சீட் கிடைச்சது. நானும் ஸ்ரீயும் தாங்கறதால வேற வழியில்லை ஒரு பக்கம் ஸ்ரீ மறுபக்கம் வேற ஒரு ஆளு.
அவர் ரைட் ராயலா சீட்டோட ரெண்டு கைப்பிடிலேயும் முழங்கையை ஊனிக்கிட்டு ரொம்ப சகஜமா படம் பாத்துகிட்டிருக்காரு. பக்கத்துல ஒரு அயலாள் இருக்காங்களே அவங்க எப்படி கை வைப்பாங்க ஒரு சென்ஸும் இல்ல. நான் ரொம்ப அடக்கமா கையை ஒடுக்கிட்டு இருக்க வேண்டியதாப்போச்சு. இவ்ளோத்துக்கும் நடுத்தர வயசு ஆள்தான் பார்க்க ரொம்ப ஜெண்டிலா பொறுப்பாத்தான் இருந்தாரு.
படம் பாக்கற ஸ்வாரஸயத்துல நான் தான் ரெண்டுதரம் கையை இடிச்சுட்டு சாரி சொன்னேன். அவரு கண்டுக்கவேயில்லை.

இடைவேளைக்கு அப்புறம் அவரு வரதுக்கு முன்னாடி நான் கையை வைச்சுகிட்டேன். ஒன்னும் சொல்லலை அமைதியா உக்காந்துட்டாரு. ஆனா எனக்குதான் ஒரே கான்ஸிஷியஸா இருந்தது கொஞ்ச நேரத்துல கையை எடுத்துட்டேன் அவரு ரொம்ப சரிங்கற மாதிரி படம் முடிய வரைக்கும் கைப்பிடில ஊனின முழங்கையை எடுக்கவேயில்லை.

நான் தப்பா அவரு தப்பா????

டிவிட்டர் - ஆவணம் - 4

வெறுமை தாக்கும் அநேக சமயங்களில் அதனுள் சென்று அமர்ந்து விடுவது அதை வெல்வதற்கு சமமாகிறது

சில வேளைகளில் மாற்றாக ஒரு சொல் தேவைப்படுகிறது.

வாங்கியங்களற்ற மெளனத்தினுள்ளும் ஒரு சொல் ஓங்கி ஒலித்த வண்ணமிருக்கும்.

பலூன் விற்பவரின் கைகளில் உடையும் பலூனுக்காக அழுவதற்கு எந்தக் குழந்தையும் இல்லை

கண்களிலிருந்து தப்பிய ஒரு வண்ணத்துப்பூச்சியை தேடும் பொழுதுதான் நம்மை சுற்றி பறக்கும் அத்தனை வண்ணத்துப்பூச்சிகளையும் கண் கண்டுகொள்கிறது.

எதப்பற்றி வேண்டுமானாலும் இரண்டு வரிகள் எழுதிவிடலாம் பிறகெப்போதும் நாம் வாசிக்க்கப் போவதில்லையெனில்

பால்யங்களை மீட்டெடுக்க கூடிய பயணங்கள் ஒரு நொடியில் வாழ்வை வானவில்லாக்கி விடுகிறது

மீட்டெடுக்கக்கூடிய இனிமையான தருணங்களைக் கொண்ட கடந்த காலத்தைப் பெற்றவர்கள் அன்பால் தன் உலகத்தை கட்டமைத்துக் கொண்டவர்களாகும்.

பேசிப்பேசி ஏதுமில்லாமலாக்க முயன்றோம், இடையில் உனையறியாமல் வந்து விழுந்த ஒரு சொல் உண்மையை முகத்திலறைந்து சென்றது.

உண்மையைத் தவிர எல்லாமும் பேசினோம் :)

இயலாமை நதியைக் கடக்க எத்தனை வார்த்தை ஓடங்கள்??

நிர்ணதிக்கப்பட்ட இலக்குகள் என்றும் பதட்டத்தையே தருகிறது

டிவிட்டர் - 2015 - May
 

டிவிட்டர் - ஆவணம் - 3

சில சமயம் வருத்தத்தின் வெளிபாடய்க் கூட கோபம் வருகிறது

மிக நேர்த்தியாய் செய்ய முயலும் எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத் தன்மை புகுந்துவிடுகிறது

மிகவும் அலுப்பாக உள்ளது எல்லோரையும் எல்லாவற்றையும் சடங்குகளுக்குள் முடக்கிபோடுவது

2014 - Twitter

டிவிட்டர் - ஆவணம் - 2

சிறு குழ‌ந்தையின் பிடிவாத‌மாய் கார‌ண‌ம‌ற்று தொட‌ர்ந்து கொண்டேயிருக்கிற‌து உன்னுட‌னான‌ ஊட‌ல்

நீ எப்பொழுது வருவாய் என காத்திருப்பதில் இப்போதும் ஒரு சுவாரசியம் இருக்கிறது

நூற்றில் ஒரு வார்த்தை மட்டுமே உண்மையாகிறது

உரத்த சிந்தனைகளுக்குப் பின்னிருக்கும் உணர்வுகளோ இல்லை உண்மைகளோ மிகவும் கவனிக்கப்படவேண்டியவை

2013 - Twitts

டிவிட்டர் - ஆவணம் - 1

எதையோ எழுத ஆரம்பித்தேன் ஆனால் பாதியில் நிறகிறது உன் நினைவைப்போல....