Tuesday, October 21, 2008

அப்பாவின் நினைவும் - கைச்சோறும்


அப்பாவைப்பற்றி பிறிதொருநாளில் எழுத வேண்டுமென்றிருந்த என் எண்ணத்தை இன்றே என மாற்றியமைத்தது நேற்றய நாள்.

கவளம் கவளாமாய் சுடுசோறு உருட்டித்தந்து கைச்சோறு நான் ஊதி ஊதி உண்ணக்கண்டு மறு கை தருமுன்னே தான் ஊதி தந்தவர் அவர்.
கூடவே அம்மா " அப்படியே வாயிலும் ஊட்டி விடவேண்டியதுதானே என்றால் " "ஊட்டினா ஒரு வாய் தான் இருக்கும் இதில் கூட ரெண்டு வாயிருக்கும் குழந்தை ரெண்டு கை வாங்கிண்டா போறும்" என்று சொல்வார்.

சிறு பிராயத்தின் விடுமுறை நாட்களில் குளித்து விட்டு வந்தால் மட்டுமே காலை உணவு கிட்டும் என்பது என் தாயாரின் கண்டிப்பான கட்டளை. விடுமுறைநாட்களுக்கேயுண்டான பெருந்தூக்கம், சோம்பல், எண்ணைக்குளியல், வீட்டுசுத்தீகரிப்பு, வாய்க்காலில் ஓடும் புதுத்தண்ணீர், இத்தனையும் இல்லையென்றால் கரைதொட்டு ஓடும் அகலமான தாமிரபரணி கூடவே கும்மியடிக்க தோழிகள் என்று எத்தனையோ காரணிகள் எங்கள் காலை உணவிற்கான நேரத்தை தள்ளிப்போடும். ஆனாலும், சுடச்சுட இறக்கிவைக்கும் சமையல் மணம் பசியின் நரம்புகளை மீட்டத்தான் செய்யும். இருந்தும் அம்மாவின் கண்டிப்பை மீற முடியாது.

இதற்கிடையில் இதற்கான மாற்றுவழிதான் அப்பா தரும் கைச்சோறு. அவர் சாப்பிட உட்கார்ந்த பின் தட்டிலிருக்கும் சுடச்சுட சாப்பாட்டில் பெரும் கையாய் இரண்டோ மூன்று கைச்சோறு என் உண்டி நிறைக்கும். எனக்கான உணவு நேரம் வரும்வரை என் பசி தாங்கி நிற்கும் அவர் கொடுக்கும் அந்த கைச்சோறு.

திருப்பி நான் அவர் கையில் கொடுத்திராத கைச்சோற்றை என்னால் அவருக்கு வைக்கவே நேர்ந்தது. ஒரு பிடி சோறும் நெய்யும், பருப்பும் இட்டு மதில் மேல் வைத்துவிட்டு பட்ஷி ரூபத்தில் வந்து உண்ணும் தந்தைக்காக கடந்த சில வருடங்களாக காத்து நிற்கும் தருணங்களின் தவிப்பு எப்போதும் வாய்விட்டு பகிர்ந்து கொள்ள முடியாத பெரும் வலியைக்கொண்டிருக்கும். காலம் மாற்றாத அந்த உணர்வுகளை இன்னும் ஈரமாகவே வைத்திருப்பதில் எனக்கெப்போதும் அலுப்பில்லை.

அவருக்குப்பிடிக்குமென ஏதேதோ சமைத்துவிட்டு அவராக எண்ணி ஏதோ இருவருக்கு உணவிட்டு நிமிர்ந்தாலும் தாளமுடியாத உணர்வின் பெருக்கில் என் அன்றைய உணவு இறங்க மறுக்கிறது.

எனக்கும் ஒரு நாள் பிடிசோறு வைக்க நேரும் ஆனால் என் அப்பாவைப்போல் நல்லதொரு அன்னையாய் என் தாக்கத்தை விட்டுச்சென்றிருப்பேனா?????

இந்தக்கேள்வியையே என்னுள் விதைத்துச்சென்றது இந்த வருடத்திய என் தந்தையின் நினைவு நாள்.

Friday, October 17, 2008

பெண்பால் கவிதைகள் - 1

பெண்ணியம்
என்
போதையின்
முகச்சாயைகளை
வெளிக்கிட வைத்தது

என் புகழ் போதை
என்னை
எல்லாவற்றையும்
எழுதவைத்தது
காதல், காமம்
மற்றும் என்
தூமை உட்பட.


**************

Thursday, October 16, 2008

முகமூடிக்கவிதைகள் - 4இயலாமை

பரிதாபங்களை யாசித்தல்
கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது.

இயலாமைகளை உரத்துச்சொல்வதை
தடுக்கிறது சுயமரியாதை

நடப்பின் இருப்புகளை
உதறவோ உடைக்கவோ முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

Monday, October 13, 2008

இது ஒரு மழைக்காலம்

எல்லா மழைக்காலங்களும் தனக்குள் வசீகரத்தை புதைத்துக் கொண்டிருப்பவைதான். எல்லா வயதினருக்கும் தரக்கூடிய ஆச்சர்யத்தை அதிசயத்தை மட்டுமின்றி ஆயசத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது மழைக்காலம்.

பால்ய வயதுகளின் மழை நேரங்களில் வாசல் திண்ணைகளை ஒட்டிய கதவருகில் நின்றுகொண்டு கம்பி அழிகளின் வழியே வெளியே வைர ஊசியாய் தரையிரங்கிக் கொண்டிருக்கும் மழையை வேடிக்கை பார்ப்பதுண்டு. மட்டப்பா வீடுகளின் திண்ணை விளிம்புகளில் முத்து முத்தாய் தெறித்தோடும் மழை, சாய்ந்த மலபார் ஓடுவேய்ந்த வீடுகளின் திண்ணைகளின் கம்பி அழிகளுக்கு இணையாக வெள்ளிக் கம்பிகள் போன்றே தரையிரங்கும். தெருவின் ஏதோ ஓரங்களில் இருந்து கொணரும் வண்டல் மண் படுகைகள் ஒரு சிறிய நீரோடைகளை சிருஷ்டிக்கும். அந்தப்படுகைகளின் முடிவில் தெரியும் சரளைக்கற்கள் என்றோ இந்த தெருவில் போட்டிருந்த செம்மண் பாதையை நினைவுற்த்தும்.

ஓடிவரும் சிற்றோடையில் விடுவதற்கென கப்பலோ, கத்திக்கப்பலோ செய்து தர தனையன் இல்லாதபோதும், தந்தை செய்து தரும் கப்பல்களின் அளவும் வசீகரமும் மற்றெந்த தோழர்களின் கப்பலை விட விஸ்தீரணமாயிருக்கும். கரைதட்டும் கப்பலை எடுத்துவிடும் நோக்கில் சிறுமழையை தலையில் வாங்கிவந்த நாட்களில் மழை இன்னும் நெருக்கமாய் உடனமர்ந்து கொள்ளும். தெருவின் கடைசியில் வழிந்தோடும் சிற்றோடை அடுத்திருக்கும் வெற்றிலைக்கொடிக்காலுக்கோ இல்லை தென்னந்தோப்பிற்கோ சென்று விழும். தெருவின் மற்றொரு கோடியில் இருக்கும் பெருங்குளத்துள் வந்து விழும் மழைத்தண்ணீரின் உபயத்தில் குளம் நிறந்து தளும்பும் செங்கழுநீர் நிறத்தில். மூழ்கியோ, வெளித்தெரிந்தோ இருக்கும் படிகள் மட்டுமே சொல்லும் மழையின் அளவெதுன்று. எப்போது பார்த்தாலும் சலிக்காதா அந்தக்குளக்கரையில் தான் எங்கள் வீடுவிட்ட பாதங்கள் அடுத்து நிற்கும். யார் முதலில் குளம் பார்த்தனர் என்பதில் கிடைத்த சந்தோஷத்தை இப்போதும் ஏதேதோ வழிகளில் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்.

கல்யாணம் வரை உடன் வந்த கிராமத்து மழையின் முகம் மாறித்தான் போனது பட்டனத்தில். அடுக்குமாடி குடியிருப்புகளின் அடுத்ததடுத்த மதில்சுவர்கள் வெளிச்சத்தை மட்டுமல்ல மழையையும் கண்காணாமல் மறைக்கத்தான் செய்தது. வெளிச்சத்தை ஈடுகட்டும் வெண்குழல் விளக்குகள் போல் மழைக்கேதும் இல்லாது போனதில் யாருக்கும் வருத்தமில்லை. கான்கிரீட் சுவர்களுக்குப்பின்னிருந்து மழையின் சப்தத்தை கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. அப்படியும் பிடிவாதமாய் வாயிற்கதவு திறந்து மழைபார்க்க வந்தமர்ந்தால் திறந்திருக்கும் கதவுகளினூடே சுதந்திரமாய் நுழைந்து எங்கும் வியாபித்துவிடும் மழையின் பதியன்கள். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மழைக்கும் உண்டான நிரந்தர விரோதங்களில் மனம் வெதும்பித்தான் போனது. ஈர நமுப்போடு எப்போதும் இருக்கும் துணிகள் மட்டுமே சொல்லிக்கொள்ளத்துவங்கியது மழை காலத்தை.

மாடியும் கீழுமாய் சற்றே விரிந்திருக்கும் இந்த தனித்த வீடெனுக்கு என் கிராமத்து மழையின் நினைப்பை அதிகம் கொண்டுவருகிறது. சாய்ந்திருக்கும் மலபார் ஓடுகள் வழியே மழை இங்கு வெள்ளிக்கம்பியாய் தரை இறங்குகிறது. கீழ் வீட்டின் மட்டப்பாவில் இருந்து முத்தாய் தெறிக்கிறது ம்ழை. வீட்டின் எப்புறமும் தெறிகிறது சிறு தூரலும். தணுத்த தரைகள் கால்களின் கீழ் குளீரூட்டி கிசுகிசுக்கிறது இன்று ஒரு மழை நாள் என்று. மழைநாளின் துணி உணர்த்த தனித்த கொடி ஒன்று மேல்மாடியின் மறைவில் கட்டி அதன் முணுமுணுத்த புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாயிற்று. மழை மீண்டும் என்னுள் நெருக்காமாய் அமர்ந்து என் பால்ய கதைகளை மீ்ட்டெடுக்கிறது.

இப்போது கப்பலோ கத்திக்கப்பலோ செய்து தந்தாலும் ஓடிவரும் நீரோடையில் விட்டு விளையாட ஆர்வமில்லை பிள்ளைகளுக்கு அவர்கள் பட்டணத்து மழையை பழகிக்கொண்டார்கள்। நான் இப்போதுதான் சொல்ல ஆரம்பிக்கிறேன் என் கிராமத்து மழையை இருவரும் அப்போதுதான் மழையை கண்ணுயர்த்தி காண்கின்றனர். மழை ஒரு கனிந்த காதலி யாரையும் விட்டு வைக்க மாட்டாள் தானே...Friday, October 10, 2008

முகமூடிக்கவிதைகள் - 3நடைமேடை தூண்களுக்கு

இடயே

தெரியும்

விரைத்த கால்களும்

அதை சுற்றி நின்ற

கால்களில் இருந்த

தயக்கங்களூம்

தரும்

அச்சத்தை

தாண்டியும்

மனம்

நிம்மதித்தது

அவர்

நமக்கு

தெரிந்தவரில்லை

என்பதில்


*******


வாழ்க்கை

மிகவும்

சிக்கலாகித்தான் போனது

வாழ்த்துக்களின்

தடமும்

புரிந்தபோது.
Wednesday, October 8, 2008

50 வது பதிவு - நட்பின் பதிவு

நம்மில் பலரும் எண்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எதிலும் முதலாவதாய் இருப்பதில் இருக்கும் சுகம், பெருமை, இருவராய் இணைந்து இருப்பதில் உள்ள நம்பிக்கை... இப்படி எத்தனையோ எண்களில் நமக்கு ஈடுபாடு.

அது போல் இந்த ஐம்பதாவது பதிவையும் கொண்டாடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்துவிட்டேன்.

ஏதும் புதியதாய் செய்யவில்லை என்ற பெரிய புலம்பல்கள் ஏதுமின்றி எல்லா பதிவுகளுமே மிக்க மனநிறைவோடு நான் எழுதிய பதிவுகள் என்றமகிழ்ச்சி ஒன்று எஞ்சிநிற்கிறது.

அதனாலேயே எனக்கு இன்னும் நிறைவு தரும் ஒரு நன்பரின் எழுத்தை என் ஐம்பதாவது பதிவாக பதிவேற்ற விழைகிறேன். எனக்காக எழுதப்பட்ட ஒரு நட்பின் பதிவிது. நட்பைப்பற்றிய பதிவிது.

நட்பு எனப்படுவது யாதெனில்?...
--- விஜி
கடற்கரையில் காந்தி சிலை அருகே கூடியிருந்தோம். ஒவ்வொரு வாரமும் நடக்கிறது தான் இது. வெள்ளிக்கிழமை மாலை என்றால் தப்பாது இந்தக் கூட்டம் எங்கள் குழுவுக்கு ஞாபகம் வந்து விடும் ஜிலுஜிலுவென்று கடற்காற்று வீசிக்கொண்டிருந்தது பேராசிரியர் நஞ்சுண்டராவ் சொல்லிக் கொண்டிருந்தார்: "நட்பெனப்படுவது யாதெனில்_____"

உணர்வு சம்பந்தப்பட்ட எதுக்கும் இப்படி ஃப்ரேம் போட்டமாதிரி வரையறைகள் வகுப்பது எனக்குப் பிடிக்காத சமாச்சாரம். ஆகவே அவர் சொல்வதில் மனம் பதியாது கண்கள் அவர் முகம் பார்த்திருந்தாலும், நினைவலைகள் எங்கெங்கோ நீந்திக் கொண்டிருந்தன.. 'நட்பென்றால் என்ன? உம்?...' என்று என்னையே கேட்டுக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கை எனும் வேள்வியில் எத்தனையோ பேர் நம்மிடம் இனிமையாகப் பழகுகின்றனர். அவ்வளவும் நட்பாகி விடுமா? 'வசந்தா வெரைட்டி' என்பது எங்கள் பக்கத்தில் பிரபலமான சூப்பர் மார்க்கெட். இங்கு மேலாளராகப் பணியாற்றும் கோபால், நான் அங்கு நுழைந்தாலே ஓடிவந்து அன்பைப் பொழிவார். எதுவாவது வாங்கப்போனால், முதலில் "என்ன சாப்பிடுகிறீர்கள்?.. அதைச் சொல்லுங்கள்; அப்புறம் தான் எல்லாம்!" என்பார். அங்கு வருவோர் எல்லோரிடமும் அவர் அப்படித்தான் பழகுகிறாரா என்றால், 'இல்லை' என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் அவருக்குப் பிடிக்கும் ஏதோ குணநலன் தான் இந்த அன்புக்குக் காரணம் என்றாலும் வியாபார நிமித்தம் தான் இந்த உறவு என்பது எனக்குப் புரியும். நான் இந்த சூப்பர் மார்க்கெட்டை விட்டு வேறொன்றுக்குத் தாவினால், இந்த அன்பு முறிந்து விடும் என்கிற நிச்சய உணர்வு எனக்குண்டு

எதுதான் நட்பு என்று மேலும் யோசிக்கலானேன்:

நட்பு ஏமாற்றங்களை உருவாக்கக் கூடாது; அது சந்தேகங்களையும் தாண்டிய ஒன்று.

தோழமை வேறு; நட்பு வேறு அதனால் நண்பர்கள் இருவர் ஒரே கொள்கையையோ, கருத்தையோ கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. நட்பு என்பது உதட்டு உறவல்ல; இன்றைக்கு இருக்கும் நாளை காணாமல் போகும் என்கிற விஷயமும் அல்ல. உண்மையான நட்பினில் முறிவு என்பதே கிடையாது. இறப்பு ஒன்றாலேயே இருவரையும் பிரிக்க முடியும்.

இளம் வயசில் இருவர் கொள்ளும் நட்புக்கு பலம் ஜாஸ்தி அது எஃகு போன்று உறுதி குலையாது இறுதி வரை இருக்கும் 'இன்னாருக்கு இன்னார்' என்று நண்பர் கிடைப்பது கணவன் - மனைவிக்கு மட்டுமல்ல; நண்பர்களுக்கும் பொருந்தும்। இன்னும் சொல்லப் போனால், திருமணத்திற்கு முன்னேயே, மனைவி அமைவதற்கு முன்னேயே ஏற்படக்கூடிய உறவு இந்த ஆத்மார்த்த நட்பு என்கிற உறவு. இந்த நட்பின் ஆரம்ப காலங்களில் இருவராலும் ஒருநாள் கூட சந்திக்காமல் இருக்க முடியாது. ஆண்- பெண் காதலுக்கு சற்றும் மாற்றுக் குறைந்ததில்லை, இந்த நட்பின் மேன்மை. அந்தியந்த நட்பு என்று சொல்லக்கூடியவர் ஒருவருக்கு ஒருவரே இருக்க முடியும்

ஆழ்ந்த இருவரின் நட்பு அவரவர் கணவன் மனைவிமார்கள் கூடப் பொறாமைப்பட வைக்கும் ஒன்று. அதனால் அந்தியந்த நட்பை பிறர் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது

உண்மையான நட்புக்கு 'பிரிவு' கூட ஒரு பொருட்டல்ல; நீண்ட நெடியகாலம் இருவரும் சந்திக்காமல் கூட இருக்கலாம். இந்த 'சந்திப்பின்மை'.'கால இடைவெளி' இதெல்லாம் நட்பை ஒன்றும் செய்யும் முடியாது எவ்வளவு ஆண்டுகள் கழித்து சந்தித்தால் என்ன, நேற்று பார்த்துப் பிரிந்தது போல், பச்சை பசேலென்று பசுமையாக இருக்கும். அப்படிப்பட்ட சந்திப்புகள் 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்கிற நிலைதான். அதனால் தான் தெய்வப்புலவர், 'அகம் நக நட்பது நட்பு' என்றார். கணவனோமனைவியோ அறியாததைக் கூட நட்பு அறியும். அதனால் தான், கல்யாணங்களில் 'மாப்பிள்ளைத் தோழன்' என்று தனி மரியாதையே நண்பனுக்கு உண்டு.
ஆதலின் கோபாலுக்கும் எனக்கும் உண்டான பழக்கம் நட்பல்ல; அது ஒவ்வொருவருக்கொருவர் புரிந்து கொண்ட இனிமையான பழக்கம். அவ்வளவு தான்.

* நண்பன் குசேலன் கிழிசல் துணியில் கட்டிவந்த அவலை ஆசையோடு அள்ளி உண்ட கண்ண பெருமான் --
* சொக்கட்டான் விளையாட்டின் பாதியில் எழுந்த தன் மனைவி பானுமதியின் துகிலை நண்பன் பற்றி இழுக்க, துகிலில் கோர்த்திருந்த மணிகள் அறுந்து கீழே கொட்ட, "இந்த மணிகளை எடுக்கவோ, அன்றி கோக்கவோ" என்று கேட்ட துரியோதனன் - கர்ணனின் நட்பு --
* மன்னன் கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருந்து உயிர் துறந்த பெரும் புலவர் பிசிராந்தையாரின் தூய நட்பு --
* தகடூர் அதியமான் - ஒளவையாரின் அதிசயத்தக்க அருந்நட்பு --
* நண்பன் வள்ளல் பாரி இறந்து விட, நண்பனின் மணமாகா புதல்வியருக்கு நல்ல இடத்தில் மணம் முடிக்க அலைந்து திரிந்து பெறாத தந்தையாய்ப் பொறுப்பேற்றுக் கொண்டு நண்பன் உயிருடன் இருந்தால் என்ன செய்வானோ அதைச் செய்த புலவர் கபிலரின் போற்றி மகிழத்தக்க நட்பு ---


இத்தகைய மாட்சிமைப் பெற்ற நண்பர்களின் கூட்டம் இறந்து பட்டாலும், இத்தனை நுற்றாண்டுகளுக்குப் பின்னும் காலத்தின் இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னும் இவர்
கள் நெஞ்சில் அழியாமல் இன்னும் நம் நினைவிருக்கிறார்கள் என்றால்,

இத்தகைய உன்னத நட்பின் மேன்மையை என்ன பெயரிட்டு அழைப்பது என்று தான் தெரியவில்லை।


Friday, October 3, 2008

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப்பானுபவம்

சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும்.

ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் "சாய்வு நாற்காலி" (கசேர்) என்னை அவ்வாறு வாழ்ச்செய்தது.

சுற்றம் மறந்து, தன் இருப்பு மறந்து, நான் என்பதும் மறந்து தென்பத்தன் கிராமத்தில் ஒருத்தியாய், சவ்தா மன்ஸிலின் ஒரு குடியிருப்பாய் நான்கு நாட்கள் என்னால் வாழ முடிந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

கசேர், மய்யத், பவுரீன் பிள்ளக்கா வம்சம், எக்க வாப்பா, வாப்பும்மா, பரக்கத், அவுலியாக்கள், ஜின்னு, தங்களுமார், சாயா, வலிய அங்கத்தை, செந்தரையம்மா, ராத்திபு, .....

சவ்தா அவருக்கெ உம்மா, மன்ஸில் ஆருக்கெ உம்மா???........ மன்ஸில் எண்ணு சொன்னா அரபியெலெ ஊடு எண்ணாக்கும் அர்த்தம்"... இப்படியாக புன்னகைக்க வைக்கும் வரிகள்

இப்படி எத்தனையோ வார்த்தைகள் என்னுள் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. பால்யவயதில் கண்டிருந்த ஐஸ்வர்யம் அழிந்த எத்தனையோ மாளிகைகளின் கதைகளை நமக்கு மீட்டுத்தருகிறது சவ்தாமன்ஸில்.

தென்பத்தன் கிராமத்தின் அரபிக்காற்றும், திருவிதாங்கூர் இராஜியத்தின் அரசியல் ஆளுமைகளும் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்பிற்கு அது எந்த குந்தகத்தையும் விளைவிக்கவில்லை. முஸ்தாபகண்ணின் மன ஓட்டத்தோடு நாமும் அந்த கேரளக்கரைகளில் மிக எளிதாக பயணம் செய்து மீளமுடிகிறது.

உண்மையின் முகத்தை கண்டுணரமுடியாத ஒரு பழம்பெருமை பேசி அதன் இன்பத்திலேயே இன்றும் வாழ்ந்திருக்கும் முஸ்தபாகண்ணு இன்றைய நிலை தெரிந்தும் அதிலிருந்து மீளுவதற்குண்டான மனத்தைரியம் அற்ற ஆசியா, இவை எல்லாம் கண்டுணர்ந்தும் ஏதும் செய்ய வழியற்று அன்பை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் மரியம்தாத்தா,
இந்த இறந்த காலத்திலிருந்து தப்பித்துச்சென்று விடும் சாகுல் ஹமீது, எரிந்த வீட்டில் பிடிங்கியது ஆதாரம் என்று இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் இஸ்ராயில் ஆனாலும் கடைசி சில பத்திகளில் தன்முக அடையாளத்தை மாற்றிக்காட்டக்கூடிய ஒரு படைப்பு, இதனிடையே கண்ணுக்குத்தெரியாமல் பொங்கிவழியும் காமம், தறவாட்டுப்பெருமை காக்கும் சந்தன அலமாரி, பட்டு உறுமால், பப்புவர்மனின் வாள், வெள்ளித்தட்டு, வீட்டின் ஒவ்வொரு சன்னலின் விஜாவரிகள், இப்படி ஒவ்வொரு சேதன அசேதனப்பொருட்களும் இந்த நாவலில் பாத்திரமாக நம்மோடு வாழ்கிறது.

காமமும் காமம் சார்ந்த விழைவுகளும் ஒரு பழம்பெரும் தறவாட்டின் பெருமையை எங்கணம் புரட்டிப்போடுகிறதென்பதையும், "கிணற்று நீரில் மிதந்து கழியும் எத்தனை கன்னிமாரின்" சாபங்களின் வடிகாலாக சவ்தாமன்ஸில் உருக்குலைகிறதென்பதையும், இத்தனைக்கும் சாட்சியான அந்த கசேரின் கதையும், கதியும் உணர்த்தும் உன்னதமும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை.

இஸ்ராயிலின் நாவிலிருந்து வரும் கடைசி நேர சொற்றொடர்கள் இன்றைய வகுப்பும் வர்க்கமும் சாரா வாழ்வியல் நடைமுறையை சுட்டுக்காட்டுவதில் மட்டுமே படைப்பாளியின் வெளிப்பாடு தெறிகிறது அதுவரை கதைசொல்லி மட்டுமே கதைசொல்லாடல் மட்டுமே நிகழ்கிறது.

எதனால இந்தப்புத்தகம் நம்மை அதோடு வாழ்வைக்கிறது என்று சற்றே தெளிந்த மனதோடு ஆராயமுற்பட்டோமானல் அங்கு ஒங்கியர்ந்து நிற்கிறது வட்டாரவழக்கு। எந்த சமரசங்களுமற்ற நெடுந்தீர்க்கமான வட்டார வழக்கில் தொடர்ந்து ஒலிக்கும் மொழி நடை, பாசாங்குகளற்ற கதைப்பாங்கு இவைகள் மட்டுமா காரணம் அதையும் மீறிய ஏதோ ஒன்று.

எல்லா உள்ளுணர்வுகளுக்கும் காரணமறிய முடியுமானால் நாம் ஏன் இன்னும் எழுத்தோடும் புத்தகங்களோடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும்। நம் தேடுதல்களுக்கு ஒரு காரணியாய் நம்மை உந்திச்செல்லும் சக்தியாய் நல்ல வாசிப்புகள் மட்டுமே துணையாக முடியுமென்பது உண்மையானால் இப்புத்தகமும் ஒரு காரணிதான்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ள புத்தகமானாலும் எனக்கு படிக்ககிடைத்ததென்னவோ இப்போதுதான்.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

முகமூடிக்கவிதைகள் - 2

01. சமாதனங்கள்
ஆசுவாசங்கள்
இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கண்ணீர்
கவலை
இவைகளின் இடையே
இன்றைய சந்தோஷம்

02. இலக்கியம் புடலங்காய்
கவிதை கத்தரிக்காய்
கதை அவரைக்காய்
கட்டுரை வெண்டைக்காய்
இவையெதையும்
செய்தது நானில்லை
பின்னெப்படி
உப்புக்கும் சுவைக்கும்
நான் பொறுப்பு???


03. சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
கோபி
சம்பத்
நிழல்கள்
நவீனன் போல