Saturday, April 10, 2010

மனவெளியில் சில வார்த்தைகள்

ஊரெங்கும் பூத்திருக்கும்

மின்விளக்குகளை விட

எங்கோ ஓர் மூலையில்

மினு மினுக்கும்

ஒற்றை சிம்மினியின் ஒளி

மிக நெருக்கமாய்

உணர்த்துகிறது

தனிமையை

நிராகரிப்பை

மற்றும்

உன்னிருப்பை

**************************************

சொற்களில் வழிந்தோடுகிறது

களிப்பு, காமம் காதல் மற்றும் கடமை

சர்ப்பம் உரித்த சட்டை போல்

உள்ளே கேட்பாரற்றுக்கிடக்கிறது மனது

Saturday, April 3, 2010

நாடோடிகளின் வெயில்


எதையும் பற்றிக்கொள்ளாததோர் அடர் வெளியில் மனம் எளிதில் புகுந்து கொள்கிறது. கூடவே கனம் சேர்க்கிறது சுட்டெரிக்கத்துவங்கியிருக்கும் வெயிலும் அதோனோடு சேர்ந்து துவங்கும் வழமையான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபடும் பண்பும்.

உடையும், உணவும், கூடவே உறங்கும் பொழுதுகளும் தன்மைகளும் கூட இந்த வேனலின் பொருட்டு மாறிக்கொண்டிருக்கிறது. மிகவும் உற்றுநோக்கினால் ஒரு மெலிதான வன்முறையும் தனிமையும் எல்லோரிடமும் படர்வதைக்கூட உணர முடிகிறது. உள்ளும் புறமும் வியர்வையோடு ஒரு சிறு அலுப்பும் கூடவே ஒரு எதிர்ப்புணர்வும் ஒட்டிக்கொள்கிறது,

இத்தனையும் கொண்டு வரும் வேனல், எல்லோர்க்கும் ஒன்றேயான மனநிலையைத்தானா தருகிறது? குளிர்சாதன, காற்றாடி வசதிகளற்று நடைமேடைகளிலுறங்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் வேனல் எத்தகைய மாற்றங்களைக் கொணர்கிறது. அதைவிடவும் நாடோடிகளின் வெயில் எங்கணமிருக்கும். இந்தக்கேள்வி என்னுள் எழும் வேளையில் நானும் ஒரு குளிர்சாதனப்பெட்டிக்கு மிக அருகாமையிலிருந்தாலும் கூட நாடோடி வாழ்வுக்கான விழைதலை தவிர்க்க முடியவில்லை.

ஒரு மாற்று உடையும், சிறிதளவு பணமும் வாழ்வதற்குண்டான மனநிலையையும் மட்டும் கைக்கொண்டு ஊர்களைக்கடந்து செல்லும் நாடோடியின் வாழ்வில் வெயிலும் மழையும் குளிரும் செய்யும் மாற்றங்கள் என்னவாயிருக்கும். கையளவு சிலேட்டில் கல்குச்சி கொண்டு சிறு வீடு கட்டி கற்பனையில் பொங்கலிட்டு திருவிழா முதல் திருமணம் வரை செய்து முடிக்கும் குழந்தமையின் மனநிலையில் மட்டுமே யோசிக்க முடிகிறது இருப்பை விட்டு அதிக பட்சம் 50 மைல்கள் கூட தனித்து நடந்திராத கால்களுக்கு.

பறவைகளின் இடமாற்றம் போலும் ஒரு நாடோடியினால் குளிர் வெய்யில் பிரதேசங்களை இந்தந்த காலகட்டங்களில் தான் கடந்து செல்ல வேண்டுமெனும் கணக்குகளை உண்டாக்கிக்கொள்ள இயலுமா? அல்லது எதையும் எதிர்கொள்ளும் மனநிலைக்குச்சென்ற பின்பான பிரயாணங்களில் இத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்யும் எண்ணம் தோன்றாது போகுமா?

இதை இப்படித்தான் செய்யவேண்டும், இந்தந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும், இங்கு சென்றால் அந்த வழியை அடையலாம், இப்படிப்போட்டால் அப்படி எடுக்கலாம், இவரைப்பிடித்தால் அவரோடு நெருங்கலாம், அதை அடைய இதைப்பற்றிக்கொள்ளலாம என்ற எந்த ஒரு செயல்திட்டங்களும் அன்றி அன்றன்றைய நாட்களோடும், நிமிடங்களோடு வாழும் மனநிலையைக்கொள்வது கூட நாடோடியின் வெயிலாகத்தான் இருக்க முடியுமல்லவா?

நடந்து செல்வதென்பதும் கடந்து செல்வதென்பதும் வெறும் வழிகளையும் தூரங்களையும் மட்டுமல்லாது வாழ்க்கையையும் அதைச்சார்ந்த மனித மனங்களையும் தானே, நாடோடியின் வெயிலைப்போல...