Wednesday, September 24, 2014

ஆன்மீக இறுமாப்பு


கேள்விகள் என்பது நம் வினைச்செயல்,கர்மா அதற்கும் கடவுளே காரணம் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கும்  நம் வினைப்பயனே காரணம்.

நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக் குறைக்க உதவும். அதன் மூலம் நாம் செய்யும் நன்மைகள் அதிகரிக்கும் அப்போதும் அதற்கான கர்த்தா நாம் தான்

இதில் நன்மையை நாம் கடவுளின் பெயருக்கு விடுவதன் காரணம் “நாம் ஒரு நன்மை செய்து விட்டோம்” என்ற ஆணவத்தை அடைந்து விடாமல் இருப்பதற்காகத்தான்.ஏனெனில் இந்த உணர்வு இறுமாப்பையும் அதற்கான பதில் உபகாரத்தையும் (குறைந்த பட்சம் ஒரு சிறிய அங்கீகாரத்தையாவது ) எதிர்பார்க்க வைக்கும். இதன் பயனால் இம்மையில் நாம் மீண்டும் ஒரு செயல் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். மறுமையிலோ மற்றுமோர் வினைச்சக்கரத்தை உருவாக்கிக்கொள்கிறோம். .

இப்போது கேள்விக்கு வருவோம். - எல்லாமும் கடவுள் செயல்தான் என்று சொன்னால் ஒருவர்  செய்யும் தவறையும் கடவுள் செயல் என்று சொல்லமுடியுமா?  அது நாத்திகவாதமாகதா? அது போலத்தான் கேள்விகளும். கேள்விகள் அறியாமையின், இருளின்,  வெளிப்பாடு, இதில் அணுவுக்குள் அனுவானவர்க்கும் ஒளியானவர்க்கும் தொடர்பில்லை.

 

இப்போது பதிலுக்கும் வரலாம் – பதில் எங்கும் எப்போதும் ஓரு  காற்றைப்போல நிலைத்து நிறைந்திருப்பது.  ஆனால் காற்றாடி சுற்றும் போதோ மரங்கள் அசையும் போதோதான் நாம் அதை புரிந்து கொள்கிறோம். இதில் நம் கேள்விகளை சுயம் ஏற்றி அதற்குண்டான பதில்களையும் தொடர்பு படுத்தி நம்மை சுகத்திலோ துக்கத்திலோ ஆழ்த்திக்கொள்கிறோம். தற்குறிப்பேற்றல் அணி உண்டல்லாவா அது போல.  இங்கும் நம் அறியாமை மட்டுமே வியாபித்திருக்கிறது.

கடவுளின் வேலை நம்மில் கேள்விகளை உண்டாக்குவதோ அதற்குண்டான பதில்களை தருவதோ இல்லை. அவரது நாமத்தால் நம்மை கேள்விகளற்ற நிலைக்கு தள்ளுவது மட்டுமே அதை உணர்த்துவது மட்டுமே. இதையும் தாண்டிய ஒரு நிலையில் அவர் வேறு எவரோ இல்லையென்றும், வேறு எங்கோ ஓர் தனி உலகத்தில் பருப்பொருளாய் இருக்கவில்லை என்றும் நம் ஆத்மா அந்த பேருணர்வின் ஒரு துகள் என்றும் புரிந்து கொள்ளும் நொடியில் மற்றுமொரு கடவுள் நமக்குள் உருக்கொள்கிறார்.

இதில் காலம் காலாமாய் நாம் செய்து கொண்டிருக்கும் சாங்கியத்திற்கு எந்த ஒரு கர்வமும் கொள்ளத்தேவையில்லை என்பது என் கருத்து.

Tuesday, September 23, 2014

தூய்மையான இந்தியா – ஜெய விஜயி பவ


கிளீன் இந்தியா ப்ராஜெக்ட் அக்டோபர் இரண்டிலிருந்து ஆரம்பிக்கப் போகிறோம் என்று பெங்களூரில் மோடி உணர்ச்சி போங்க பேசிக்கொண்டிருந்தார்.  உண்மைதான் மிகவும் தேவையான ஒரு முயற்சி. நாம் மற்ற நாடுகளில்  பயணிக்கும் போது அங்குள்ள தெருக்களையும் சாலை ஓரங்களையும் காணும் பொது நம்முள் ஏதோ ஒரு தன்னிரக்கம் சுரந்து கொள்ளும். அதுவே நம் ஊரில் சில வெளிநாட்டவர்களோடு தெருவில் பயணிக்கும் போது மிகப்பெரிய கையாலாகதத் தனமாக மாறி  மிகவும் அருசியான உணர்வுகளை தோற்றுவிக்கும்..


வெளிநாடுகளின் இண்டஸ்ட்ரியல் பார்க் உண்மையில் ஒரு பூங்கா போல இருக்கும் ஆனால் எனக்குத் தெரிந்து இங்கு எந்த ஒரு இண்டஸ்ட்ரியல் பார்க்கும் சாதாரண பகுதியாகக் கூட இருக்காது ஏதோ கைவிடப்பட்ட குப்பைத்தொட்டி போல இருக்கும். சிப்காட் அதிகாரிகள் நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில் ஏதோ அவர்கள் தன்மானம் குறைந்து போவது போல் நடந்து கொள்வார்கள். சில முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களை நம் ஏரியாவிற்கு அழைத்து வரும் போது தான் இதுவரை நாம் தினமும் கடந்து வந்துகொண்டிருக்கும் அவலத்தின் மொத்த விஸ்தீரமும் உரைக்கும்.

தாமதமான நடவடிக்கை என்றாலும் தேவையான ஒன்று. எல்லா நல்ல திட்டங்களைப்போல இதுவும் தொடங்கி மறைந்து  விடக்கூடாது என்று இந்த நவராத்திரி நன்னாளில் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன். J

ஜெய விஜயி பவ

Thursday, September 11, 2014

எவ்ளோ பெரிய நிம்மதி...

எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கும்  போதே அது குறித்த பார்வையும் விமர்சனமும் எனக்குள்ளேயே  துவங்கி விடும். சில சமயம் அந்த விஷயங்களில் இருந்து என் முயற்சியில் வெளி வருவேன் சில சமயம் காக்கை உட்கார பனம் பழம் விழுவது போல் தானாகவே நடக்கும். சமீபத்தில் நடந்த இரண்டு விஷயங்கள்.
 
ஒன்று  - என்னுடைய விண்டோஸ் போனில் ஒரு வசதி, பேஸ் புக் அப்டேட் எல்லாம் அதற்குள் போகாமலே பார்த்து விட முடியும். என் பக்கத்திற்கு வரும் லைக், கமன்ட் எல்லாம் தனியாக மீ என்ற பக்கத்திலும்  எல்லா பதிவுகளும் பீப்புள் என்ற பக்கத்திலும் வந்து விடும்.  நான் பேஸ்புக் பக்கத்திற்கு வராமலே இதையெல்லாம் பார்த்து விடமுடியும். அதிலும் இந்த பகுதிகள் குறைந்த சிக்னல் இருந்தால் கூட வெகு எளிதில் லோட் ஆகிவிடும். நாங்கள் எல்லாம் ஆரம்ப கால கணணி பயன்பாட்டாளர்கள் என்பதால் டாஸ் பேஸ் லினக்ஸ் பேஸ் போன்ற அவுட்புட் மிகவும் பிடிக்கும்.  இதனால் கை சும்மாவே இருக்காது, எப்பொழுது பார்த்தாலும் போனை புரட்டியபடியே இருக்கும். ஒரு கட்டத்தில் எனக்கே என் மீது விமர்சனம் வர ஆரம்பித்தது.  அப்போது தான் வந்தது ஒரு விடிவு காலம்  சமீபத்திய விண்டோஸ் அப்டேட் செய்ததில் இந்த வசதியை எடுத்து விட்டு நேரடியாக பேஸ்புக் அப்ளிகேஷனுக்கு தொடர்பு கொடுத்து விட்டார்கள். இந்த இன்டர்பேஸ் முறையில் நோட்டிபிகேஷன் வந்து அதைத்  திறந்தால் அது நேரேடியாக நம் எப்.பி பக்கத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் ஆனால் சிக்னல் குறைவாக இருந்தால் எப்.பி பக்கங்கள் ஒப்பன் ஆக தாமதமாகும்  இது கொஞ்சம் எரிச்சல் ஊட்டுவதால் போனை உருட்டுவது கொஞ்சம்.. கொஞ்சம்தான்  குறைந்துள்ளது. ஒரு பக்கம் சந்தோஷம் மறு பக்கம் சிறு அசௌகரியமாக உணர்ந்தாலும் முள் கொஞ்சம் குறைந்த உணர்வு.
இரண்டாவது சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பதினொன்றரை மணி வரை ஏசியா நெட்டில் வரும் மகாபாரத தொடர். அடுத்த வாரம் நாம் தமிழில் பார்க்கப்போகும் பகுதிகள் மொத்தமும் முதல் வாரமே இங்கு முடிந்து விடும்.  எனக்கு மலையாளம் மொழி மிகவும் பிடிக்கும் என்பதாலும் சில சமயம் வார நாட்களில் அலுவல் முடிந்து ஏழு   மணிக்கு முன் வீடு திரும்ப தாமதமாகிவிடும் என்பதாலும் தவறாமல் இந்த சனிக்கிழமை தொடரை பார்த்து விடுவதுண்டு. ஆனால் இப்படி இரண்டரை மணி நேரம் டீவி முன்னாடி கழிப்பது எனக்குள்ளேயே சில வாரங்களாக குற்ற உணர்வை தந்து கொண்டிருந்தது. வந்தது விடி மோசனம். போன வாரம் ஓணத்தை முன்னிட்டு மற்ற நிகழ்ச்சிகள் இருந்ததால் இந்த பகுதி கிடையாது. இதன் படி அவர்கள் நமக்கு ஒரு வாரம் பின் தங்கி விட்டார்கள் எனவே இனிமேல் பார்க்க வேண்டிய தேவை இல்லை... எவ்ளோ பெரிய நிம்மதி....