Friday, November 30, 2007

அக்கா –எனக்கொரு போதிமரம்.

உயிர் ஒன்று ஈருடலாக ஓர் தாயின் இரு மகவாய் பிறந்து, பலவாண்டுகள் சேர்ந்து வாழ்ந்தபின் அவள், நான் என தனித்தனி வாழ்வியல் சதுரங்களில் சிக்கிக்கொண்டபின், ஆண்டுக்கு சில நாட்கள் பார்த்து பின் பிரியும் அந்த தருணங்கள் எப்போதும் வலி மிகுந்தவையே. பல சந்தோஷங்களோடும், சில துக்கங்களோடும் நானும் அவளும் எதிரும் புதிருமாய் அந்த புகைவண்டியின் சன்னலுக்கு இருபுறமுமாய் நின்றபோதுதான் அது நடந்தது. என்னெதிரே நிற்கும் அவளுள்ளும் நானே என்பதான எண்ணமின்னல் தொடர்ந்த நிமிடங்களில் நடந்த உரையாடல்களுக்கு வடிவங்களே இல்லை. ஏதோ ஒர் வெளியிடை கிடந்த ஒர் உடலின் இரு உறுப்புக்களாய் இயல்பான பறிமாற்றம். துக்கம், சுகம் மாறி மாறி வந்து போனபின் எஞ்சிய கணங்களில் வந்த கண்ணீர் திரை மறைக்க இருவருள்ளும் ஒர் போராட்டம். பச்சை விளக்கின் சமிஞ்ஞைக்குப்பின் என்னை விட்டு விலகிச்சென்றது அவள் அமர்ந்திருந்த புகைவண்டியின் சன்னல்.

என்னவரின் விரல் பிடித்து கடந்து வந்த புகைவண்டி நிலைய இரைச்சல்களோ, அவரின் மௌனமோ என்னுள் இறங்கவே இல்லை, இது போன்ற சமயங்களில் தனிமை மிகவும் உசிதமோ என்று வழக்கம் போல் தோன்றியது.

கொட்டிக்கிடந்த நட்சத்திர குவியல்களின் அடியில், அடி முதுகு விரைத்துக்கிடந்த வேளையில் ஒர் நாடகம் போலும் அந்த நிகழ்வுகள் மீண்டும் வந்து போனது. அப்போதுதான் அந்தக் கோள்வி தொக்கி நின்றது, எது வந்து நின்றது எம்மிடையே, எங்கணம் நான் அவளுள் நின்றேன்? கேள்வி வந்த மறுகணம் ஓர் ஒற்றை நட்சத்திரம் உருவி விழுந்தது. அட இது கூட தெரியவில்லையா, உம்மிடையேயுள்ள அன்பின் பரிணாமம் என்று நகைத்துச்சொன்னது. அவளுள் என்னைக்காண அன்பே அடிப்படை என்றால் எல்லோருள்ளும் என்னைக்காண அதுவன்றோ ஆணிவேர்.

ஆஹா, இதுதான் “அன்பே சிவமோ” என்று விரிந்த விகசிப்பில் வழக்கம் போல் அன்றும் தொலைந்து போனதென் தூக்கம்.

Saturday, November 24, 2007

சுயநலம் - ஒரு பரிமாறல்

சென்னை தேதி – 27.10.2007

அன்புள்ள அம்மாவிற்கு, தமயந்தி அன்புடன் எழுதிக்கொள்வது, இங்கு நான், முகுந்தன், என் கணவர், குழந்தைகள், மற்றும் என் மாமியார் அனைவரும் நலம். நீ அங்கு நலமாய் இருப்பாய் என் எண்ணுகிறேன். அப்பா போன பின்பு உனக்கு அந்த வீடு மிகவும் பெரியதாகவும், வெறுமையாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன், என்ன செய்ய? சில சமயங்களில் நாம் எதிர்பாராத விஷயங்களை வாழ்வில் திடீரென எதிர் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

முகுந்தன் வேலைக்குச் சென்று வருகிறான். புதிய அனுபவம் அவனுக்கு சற்று மிரட்சியாய் உள்ளது என்று எண்ணுகிறேன் அவன் அனைத்தையும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த 26 வயதிலாவது ஒரு வேலையில் அவனால் உட்கார முடிந்ததை எண்ணி நான் தினமும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

ஆனால் அம்மா, அவனின் நடவடிக்கைகளில் ஒரு சிறிய மாற்றம், அலுவல் முடிந்து வரும்போது முகம் இறுகி ஏதோ ஒரு மிகப்பெரிய தொல்லையில் இருந்து விடுபட்டு வந்தது போல் ஒரு சிடுசிடுப்பாய் வருகிறான். வீட்டிற்கு வரும்போதே 7.30 மணி ஆகிவிடுகிறது, வந்து ஏதாவது சூடாக குடித்து விட்டால் பின் இரவு சாப்பாட்டிற்கு வரவே மாட்டேன் என்கிறான். அம்மா உனக்கு தெரியாதா, நான் குறைந்தது 9.30 மணிக்குள் என் வேலைகளை முடித்து படுக்க சென்றால் தான் மறுநாள் காலை மீண்டும் 4.45 மணிக்கு உன் பெரிய பேரன் டியூசன் மாஸ்டர் வரும் முன்பு அவர்களுக்கு காப்பி தயாரிக்கவும் அதன் பின்னான தொடர்ந்த வேலைகளையும் முடிக்க முடியும். பின் நானும் வேலைக்கு சென்று 6.30 மணிக்கு வந்தால் உன் பேரன்களின் வீட்டுப்பாடம், மாமியாரின், உடம்பு, இரவுச்சாப்பாடு, உன் மாப்பிள்ளையின் பிசினஸ் நிலவரம் இத்தனையும் பார்க்க வேண்டியுள்ளது, இதில் இவனின் எதிர்பார்ப்புக்கள் எனக்கு கூடுதல் பளுவாக இருக்கும் என்று ஏன் இவனுக்கு புரியமாட்டேன் என்கிறது???. நீ ஜாகை மாறி ஊரைவிட்டு இங்கு வந்து அவனோடு குடித்தனம் நடத்த ஆரம்பிப்பது மட்டுமே இதற்கு ஒரு விடிவாய் இருக்கும் என்று தோன்றுகிறது, அவனுக்கும் ஒரு பொறுப்பு வந்தது போல் இருக்கும் சீக்கிரம் இது பற்றி முடிவு சொல்.

வேறு விஷயங்கள் இல்லை - தமயந்தி।

-----------------------------------------------------------------

­­­­­
சென்னை தேதி – 28.10.2007

அன்புள்ள அம்மாவிற்கு, முகுந்தன் எழுதிக்கொள்வது, நானும் அக்காவின் வீட்டில் அனைவரும் சுகம், நீ அங்கு சுகமாய் இருப்பாய் என்று எண்ணுகிறேன், அப்பா இல்லாத இந்த சமீப காலங்களில் உனக்கு தனிமை மிகவும் கடினமானதாக இருக்கும் என எண்ணுகிறேன், என்ன செய்ய சீக்கிரமே இதற்கு ஒரு வழி பிறக்கும். இங்கு என் வேலை மிகவும் கடினமாக இருக்கிறது. காலை 9.30 மணிக்கு உட்கார்ந்தால் மாலை 6 அல்லது 6.30 மணிக்கு கூட வேலை முடிந்த பாடில்லை, பின் இந்த சென்னை வாகன நெரிசலில் வீட்டிற்கு வந்தால் அக்காவினால் எனக்கு பார்த்து எந்த உபசரிப்பும் செய்ய முடியவில்லை, எனக்கு சற்று ஓய்வெடுக்கக்கூட சமயம் இல்லாமல் உடனே 8 மணிக்கு சாப்பிட அழைக்கிறாள், வரவில்லை என்றல் அவள் முகம் மாறுகிறது.

அம்மா அவள் முதலில் வேலைக்கு சென்ற நாட்கள் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது, சாயங்காலம் அவள் வந்ததும் அவளுக்கு நீ அளிக்கும் இனிய வரவேற்பும், உபசரிப்பும் ஆனால் அவள் அதை எல்லாம் மறந்தவளாய் இருக்கிறாள், என்னையும் என் இன்றைய உணர்வுகளையும் சிறிதளவும் புரிந்து கொண்டவளாய் இல்லை அவள் பிள்ளைகளின் படிப்பும், மாமியாரின் பேச்சுக்களும், அத்தானின் கேள்விகளுக்கும் மட்டுமே அவளிடம் நேரம் இருக்கிறது எனக்கென அவளூக்கு நேரமே இல்லை. அம்மா இதற்கெல்லாம் ஒரு நல்ல பதில் நீ இங்கு வந்து என்னோடு தங்குவதாய் மட்டுமே இருக்க முடியும் நாம் ஒரு தனி வீடு எடுத்து தங்கலாம் எனவே நீ சென்னை வருவதை பற்றி சீக்கிரமே ஒரு முடிவு செய்யவும். வேறு விஷயங்கள் இல்லை, உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.

அன்புடன்
முகுந்தன்.

-----------------------------------------------------

ஆத்தூர் தேதி 10.11.2007

அன்பு தமயந்தி உனக்கும், மாப்பிள்ளைக்கும், குழந்தைகளுக்கும் என் ஆசிர்வாதங்கள், உன் கடிதம் கிடைத்து விஷயங்கள் அறிந்து கொண்டேன், நீ நினைப்பது போல் இல்லாமல் இந்த தனிமை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. 30 வருடங்கள் சுயநலமிக்க ஒரு மனிதரோடு வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரும் பரிசாக மட்டுமே எனக்கு தோன்றுகிறது. (நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்) உன் அப்பா விட்டுச்சென்ற இந்த வீடும், தோட்டமும், வங்கிச்சேமிப்பும், அவரின் ஓய்வூதியமும் எனக்கு போதுமாய் இருக்கிறது.

உன் பிரச்சனை எனக்கு புரிகிறது. வேலைக்குச்செல்லும் ஒவ்வொரு குடும்பத்தலைவியும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது, என்ன செய்ய, நீயும் அதற்குப் பழகிக்கொள். உன் தம்பியிடம் அனுசரித்துப் போகத்தொடங்கு “சுய நலம் இல்லாத உறவுகளில் மட்டுமே அன்பு நிலைக்கும்” எனவே சிறு சிறு தியாகங்கள் உன்னை புடம் போடும், அவற்றிற்கு நீ பழகிக்கொள். மேலும், பண்ணையார் வீட்டு ராமநாதன் ஏற்பாடு செய்திருக்கும் 20 நாள் கோவில்களின் தல யாத்திரைக்கு செல்ல முடிவு செய்திருக்கிறேன் தேதி முடிவானதும் எழுதுகிறேன்.

என்னால், இந்த ஊரையும் , கோவிலையும், தாமிரபரணியையும் விட்டு வரமுடியும் என்று தோன்றவில்லை எனவே, அவன் திருமணம் வரையிலாவது, அல்லது வேறு இடத்திற்கு மாற்றல் கிடைக்கும் வரையிலாவது நீ சமாளித்துக்கொள். நான் நம் இஷ்ட தெய்வமான சோமசுந்தரியை வேண்டிக்கொள்கிறேன்.

ஆசிகளுடன் அம்மா.

பின் குறிப்பு
முகுந்திடம் இருந்தும் கடிதம் வந்துள்ளது நான் இதையேதான் வலியுறுத்தி பதில் எழுதியுள்ளேன் மீண்டும் நினைவில் கொள்
“சுய நலம் இல்லாத உறவுகளில் மட்டுமே அன்பு நிலைக்கும்”

Monday, November 19, 2007

சென்னை மழை

இன்று காலை எழுந்தது முதலே ஒரு எண்ணம்
உன்னோடு எனக்கான நாள் இதென்று,
சன்னலின் தக்கை கதவுகளை
திறந்து வைக்கச்சொன்னேன்
நொடிக்கு, நிமிடத்திற்கு பின் மணிக்கொருதரம்
தலைநிமிர்ந்தேன்.. நீ
வந்துவிட்டாயா என்று பார்பதற்கு
அலுவல் முடியும் நேரம் வந்ததும் – எனக்கு
ஆயாசம் வந்தது – நீ
என்னோடு இன்றில்லை என்று…
உண்டியலுக்குள் இருக்கும் சேமிப்பாய்
அடுக்கு மாடி குடியிருப்பின்
கம்பளியாய் போர்த்திய சுவர்களுக்குள்..
கேட்கும் உன் சப்தம்..
இரவு உணவிற்கும்…
இன்றைய வீட்டுப்பாடங்களுக்கும் மத்தியிலுமான
உன் வரவில் எனக்கத்தனை மகிழ்சியில்லை – என்று
மனதுள் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தால்…
ஆயிரமாயிரம் வைர ஊசிகளின் ஜொலிப்போடு
நீ தரையிரங்கிக் கொண்டிருக்கிறாய்..
நன்றி…
நான் என் வாகனம்…நீ என
நமக்கான இந்நேரம் தொடங்கிவிட்டது…

Tuesday, November 13, 2007

இயற்கையின் மொழி

வழி எங்கும் பூக்கள்
முன்னோ பின்னோ
திசை தெரியாது சென்ற
ஊர்வலத்தின் சுவடுகள்

மொழி அறியா பூக்கள்
மெளனமாய் சொன்னது
இழப்பின் அனுபவத்தை

மெளனத்தை உணர்ந்து கேட்கும்
காதுகளுக்கு
இங்கு ஓராயிரம் மொழிகள்

Sunday, November 4, 2007

எது காரணம்?

நான் எழுத எது காரணம்?

என்னை எழுதத்தூண்டும்
தமிழ் பதிவுகளா? -
புதியதாய் கிடைத்திருக்கும்
தமிழ் எழுதும்
மென்பொருளா? -
என் கனவிலும்
எனைத்துரத்தும் - என்
கணணியின் விசைப்பலகயா? -

இல்லை

இணையத்தில் பரந்து கிடக்கும்
தமிழ் மொழியின் தாக்கமன்றி
வேறேதும் இல்லை.

Saturday, November 3, 2007

புரட்சி - உண்மையில் என்ன?

முட்டி மடக்கி முகம் சிவந்து
முண்டிச்செல்வதில்
சுகம் கண்டதை
புரட்சி என்று சொல்லாதே
புரட்சி
புத்தியில் வரவேண்டியது.

Thursday, November 1, 2007

சுய அறிமுகம்

என்னை எழுதத்தூண்டிய தமிழ் வலைப்பக்கங்களுக்கும், இடுகைகளுக்கும், அதன் பதிவர்களுக்கும்…. என் வணக்கம்…

எதற்கெடுத்தாலும் தனக்கென ஒரு கருத்துண்டு என தலையில் இறகு சொருகிய கூட்டமொன்றுண்டு, அதிலே நானும் ஒரு அங்கம்। எது செய்தாலும் எனக்கென ஒரு தனித்துவம் உண்டு என்னும் எண்ணமும் அதிலுண்டு, என்ன செய்ய? நாம் கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் பிறந்து விட்டோம், நம் தனிப்பட்ட எண்ணத்திற்கு தடை விதிப்பார் யாருண்டு. அடைந்து விட்ட சிகரங்கள் சில உண்டு, ஆனாலும் தொட்டுப்பார்க்க துடிக்கும் முகடுகளும், சிகரங்களும் பல உண்டு என்பதுதானே வாழ்கை சுவாரசியத்தின் ரகசியமே. என்னை நடத்திச்செல்லும் நடைவண்டி அதுவே.

சில சமயம் நான் சமயவாதி, சில சமயம் நான் இலக்கிய வாதி சில சமயம் நான் தொழிற்சங்க வாதி, சில சமயம் நான் முதலாளி, என நான் ஒரு பன்முகவாதி ஆனாலும் எப்போதும் உண்மைக்கு மட்டுமே அருகிருக்கும் ஒரு பிடிவாதக்காரி, அதனாலேயே பல சமயம் நான் தனித்து போராடும் ஒரு போராளி. என் போர்கள் எப்போதுமே தனிமனித உணர்வுகளோடு மட்டுமே ஏனெனில், சீர் செய்யப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள் சமன் செய்யப்பட்ட சம்பவங்கள் தானே.

எனக்கென பொய்யான முகமூடியோ, கற்பனை செய்யப்பட்ட உணர்வுகளோ இல்லை, நான் பேச முற்படுவதெல்லாம், இன்று பற்றி மட்டுமே, நாளை நாம் நடந்து செல்லும் போது சீர் செய்யப்படும்।

கேட்கின்ற காதுகள் இருந்தால் மட்டுமே, பேசுகின்ற சப்தங்களுக்கு, உயிருண்டு, நான் பேச உங்கள் காதுகளைத்தாருங்கள், விமரசனங்களுக்கு நானும் விலக்கல்ல………. உங்களில் ஒருத்தி….