Thursday, July 31, 2008

அடுத்தவர் உலகம் பற்றிய ஆர்வக்கோளாறு
















அந்த மின்சார தொடர்வண்டியின் கூட்ட நெரிசலில் அவள் எனக்கு வித்யாசமாய் தெரிந்த காரணத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போதே நான் இறங்குவதற்கான நிறுத்தம் வந்துவிட்டது. நான் இறங்கும் போதும் அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் இறங்கினேன், அவள் முகத்திலும் ஒரு குழப்பம். ஒரு வேளை நான் ஏன் மீண்டும் மீண்டும் அவளை உற்றுப்பார்க்கிறேன் என்று நினைத்து குழம்பியிருக்ககூடும் ஆனாலும் அவள் வெகு இயல்பாய்த்தானிந்திருந்தாள்.


வழி நெடுக யோசித்துக்கொண்டே வந்தேன் எதனால் அவளெனக்கு வித்யாசமாய்த் தெரிந்தாள்.

பொது மக்கள் ஏறி இறங்கும் பாதைக்கு மறு புரத்தில் உட்கார்ந்திருந்ததாலா.. இல்லை எல்லோரும் தான் உட்கார்ந்திருந்தார்கள்

உடை ஏதாவது வித்யாசமாய் அணிந்திருந்தாளா இல்லை சொல்லப்போனால் மிகச்சாதரணமாய் மஞ்சள் சிவப்பு பார்டர் பாலியிஸ்டர் பட்டுப்புடவைதான் கட்டியிருந்தாள்.

ஏதாவது புதியதாய் கையில் வைத்திருந்தாளா - இல்லை ஒரு சிலரைப்போல் அவளும் பூக்கட்டிக்கொண்டுதான் இருந்தாள்.

ஆங்க்க்க்க் புரிந்து விட்டது துடைத்தெடுத்தார் போல் பிளீச்சிங் செய்யப்பட்ட அவள் முகம், அதில் இருந்த கொஞ்சம் கீரீம் கலந்த முகப்பூச்சு, மெல்லியதாய் இட்டிருந்த உதட்டுச்சாயம். நாகரீகமான கைப்பை, அதிலிருந்து எடுத்து தன் உதட்டுச்சாயத்தை துடைத்துக்கொள்ள பயன்படுத்திய வெட் டிஷ்யூ பேப்பர். இப்போது புரிகிறது இத்தனை அலங்காரங்களோடும் கையில் பூக்கட்டிக்கொண்டும் தரையில் அமர்ந்து அவள் பயணம் செய்த விதம் தான் எனக்கு அவளை வித்யாசமாய் காட்டியிருக்க வேண்டும்.

பெரும் தலைவலி தீர்ந்தது போல் ஒரு நிம்மதி.

ஆனால் அடுத்த நிமிடம் மற்றொரு கேள்வி குடைய ஆரம்பித்தது, அப்படியானல் அவள் யார? பூக்கட்டி வியாபாரம் செய்பவள் இல்லையா, ஆம் என்றால் இத்தனை ஒப்பனை எதற்கு? ஆசைதான் என்று கொண்டால் பிறகு ஏன் அதை எல்லாம் துடைத்து எடுத்தாள்?…(இப்படி மனது கேட்டுக்கொண்டிருந்தாலும் என்னை நானே கடிந்தும் கொண்டேன் இதென்ன பூர்வாஷா சிந்தனை, பூக்காரி ஒப்பனை செய்து கொள்ளக்கூடாதா!).

ஒரு வேளை செல்லுலாய்ட் உலகில் ஏதாவது சின்ன சின்ன வேடங்கள் செய்து வாழ்பவராய் இருக்குமோ பின் ஏன் இந்த பூக்கட்டும் வேலை - ஓய்வு நேரத்தில் செய்யும் இரண்டாவது வேலையாயிருக்கும்,

இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களில் ஒப்பந்த அடிப்படையில் வரவேற்பாளர்களைக்கூட நியமிக்கிறார்களே அது போன்ற வேலையாய் இருக்குமோ இல்லை சிறிதே வயதானவர் போன்ற தோற்றம் உள்ளதே

ஏதாவது காஸ்மெட்டிக் கம்பெனிகளின் விற்பனை பிரதிநிதியாய் இருக்குமோ அப்படியானல் அந்தப்புடவை ஒத்து வரவில்லை

இப்படி கேள்விகள் பலநாட்கள் அவ்வப்போது தலை தூக்கினாலும் மீண்டும் அவளை காணசந்தர்ப்பம் அமையாததினால் அது மெதுவாக மூளையின் வழக்கமான ஞாபகக்குவியல்களில் ஒன்றாகிப்போனது மீண்டும் ஒரு நாள் அவளைக்காணும் வரை.

இந்த முறையும் அப்படியே ஆனால் அவள் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டாள் புன்னகைக்கவும் செய்தாள் எனக்கு மிகவும் கஷ்டமாகிப்போனது. என் உள் மன ஓட்டங்களை அவள் அறிந்து கொள்வாளோ என்று மிகவும் பயமாய் போனது வலுக்கட்டாயமாய் நெரிசலுக்குள் என்னைத்திணித்தபடி அவள் பார்வையில் இருந்து என்னை மறைத்துக்கொண்டேன்.. ஆனால் கேள்விகள் முன்னெப்போதையும் விட மிக வேகமாக அதுவும் விடைகிடைக்கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாத ஆதங்கத்தோடே எழ த்துவங்கியது..

அடுத்த முறை என்ன செய்வேன்..

Wednesday, July 30, 2008

கடவுளும் - "அவனும்."






















வெள்ளிக்கிழமை தோறும் அவன் செல்லும் கோயில்களின் படிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. கூடவே அவன் வாழ்வின் சுபிட்சங்களும். பெட்டிநிறைய நிரம்பி வழியத்தொடங்கியது சந்தோஷமும், காசும், பணமும்.


செல்வம் சேரச்சேர அவன் மிகுந்த பக்திமானான், எல்லா பூஜைகளையும் சந்துஷ்டியோடும் ஆரவாரத்தோடும் செய்யத்தொடங்கினான், எல்லா கோவில்களுக்கும் மிகுந்த ஆர்வத்தோடு நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் என கணக்கிட்டுச் செல்லத்துவங்கினான். செல்வத்தோடு கூடவே அவன் கர்வமும் வளரத்துவங்கியது.

ஆனால் அப்போது தான் அது நடந்தது. தேர்ந்த பக்தியோடும் மிகுந்த மனக்கிலேசத்தோடும் ஒரு விஷயத்திற்காக அவன் இவ்வாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான்..தெய்வமே.. எனக்கிந்த தடையை நிவர்த்தி செய்து தாரும், நான் கேட்பதெல்லாம் எனக்காக மட்டுமல்ல, ஊருக்காகவும் மற்றும் உமக்காகவும் தான். நீர் எனக்குத்தரும் செல்வங்களை ஏழை எளியவர்களுக்காக நான் செலவு செய்துகொண்டிருப்பதும் இன்னும் எத்தனையோ உதவிகளை செய்யக்காத்திருப்பதும் நீர் அறிந்தது தானே எனவே இந்த காரியத்தை எனக்கு வெற்றிகரமாக முடித்துத்தாரும.

அந்த சமயத்தில் அவன் காதுகளில் மட்டும் ஒலித்த அந்தக்குரலை அவனால் சட்டென்று இனம் கண்டுகொள்ள இயலவில்லை ஆனாலும் ஒலி தொடர்ந்து கொண்டே இருந்தது அதன் சாரம்சாம் இது தான். பக்தனே நீயும், சமூகத்தை குறித்த உன் பேரன்பும் எனக்கு மிகவும் விருப்பமானதாய் உள்ளது. உனக்காகவும், ஊருக்காகவும், பின் எனக்காகவும் நீ சேர்க்கும் செல்வங்களும் அதற்காக நீ செய்யும் பூஜைகளும் எனக்கு மிகுந்த திருப்தியை தருகிறது இதனாலேயே நீ கேட்கும் இந்த உதவியை நான் உனக்கு செய்ய சித்தமாயிருக்கிறேன், மேலும் நான் உன்மூலமாகவே இந்த உலகத்திற்கு மிகுந்த நன்மைகளையும் செய்ய விழைகிறேன் எனக்கூறினார். பின் இதுகாரும் பேசியதாலோ என்னவோ நா வரண்டுபோய் குடிக்கத்தண்ணீர் கேட்டார், பின் அவன் பூஜையில் நெய்வேத்யத்திற்காக வைத்திருந்த பானகத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு மவுனமானார்.


இதுவரை தன் காதில் விழுந்த சப்தங்களை தன் பிரமையென்று எண்ணியிருந்த அவனுக்கு பானகம் காணாமல் போனதும் தான் வந்தது கடவுளென்று முழுவதும் உரைத்தது. சொல்லொண்ணா சந்தோஷம் அடைந்தான், தனக்கொரு புதுவாழ்வையும், வழியையும் காட்டித்தந்த கடவுளுக்கு அனந்த கோடி நன்றி கூறினான். கடவுளும் உலகத்திற்கு நன்மை செய்ய தனக்கோர் உபாயமும் உருவமும் கிடைத்ததென்றெண்ணி அவனோடு மிகவும் நெருக்கமாகத்துவங்கினார், அதன் பின் கடவுள் அடிக்கடி அவனுக்கு கேட்கத்துவங்கினார். அவன் சந்ததி கூட சந்தோஷமாய் வாழும் அளவிற்கு பெருமளவு செல்வம் சேர்ந்து போனது.

அங்கேதான் அவனுக்கு பெரும் நெருக்கடி துவங்கியது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உதட்டளவில் சொன்னாலும் இந்த செல்வங்களை உண்டாக்க தான் செய்த முயற்சிகளை அவன் மறக்கத்தயாரயில்லை. கண் விழித்த இரவுகளை அலைந்து திரிந்த நேரங்களின் வியர்வைகளை அவன் கடவுளுக்கு மட்டுமே சொந்தமான வெற்றியாக முழுவதும் விட்டுத்தர முடியவில்லை. ஆனால் கடவுளோ இயல்பிலேயே அத்தனையும் தனக்குச்சொந்தமானது என்பதினால் வெகு இயல்பாக உரிமை கொண்டாடிக்கொள்கையில் அவன் மனம் வெதும்பித்தான் போனான்.


மற்றெவரையும் அண்டவிடாது கடவுள் அவனோடு கூடவே சதா பேசத்தொடங்கியதும் அவனின் அன்றாட அலுவல்கள் அவரின் ஆணைப்படியே நடக்கத்துவங்கியது. ஆனாலும் அதில் அவனின் தானெனும் ஆளுமைக்கு சிறிதும் விருப்பமற்று போனது. அவன் நினைத்ததை விட பெருமளவு நேரத்தையும், செல்வத்தையும் கடவுளின் கட்டளைக்கிணங்கி செலவிட வேண்டி வந்தது. அதனால் சிலசமயம் கடவுளின் குரலை செவிமடுக்காதவன் போல் தவிர்க்கத்துவங்கினான். அதைக்கண்ட கடவுள் உரத்த குரலோடும் சிலசமயம் தடித்த வார்த்தைகளோடும் அவனோடு சம்பாஷிக்கத்துவங்கினார்.


அப்போதுதான் அவன் முடிவு செய்தான், தான் ஒரு மருத்துவரை ஆலோசிப்பதென்றும் அவரின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொள்வதென்றும். மருத்துவரை சந்தித்த அவனைப்பார்த்த மருத்துவர் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். அப்போது அவன்
எனக்கு காதில் குரல்கள் பேசுவது போல் எப்போதும் ஒரு பிரமை தோன்றிக்கொண்டேயிருக்கிறது, இதிலிருந்து என்னை மீட்டெடுங்கள்" என்று கூறினான். அப்போது அவனோடு பேச வந்த கடவுள் விக்கித்துப்போனார்.

Wednesday, July 16, 2008

கற்றுக்கொள்ளவும் சிலவுண்டு – நெருப்பிடமிருந்தும்















நெருப்பின் வசீகரம் என்றும் தவிர்க்கவும் தாங்கவும் முடியாததாய், அத்தனையும் கபளீகரிக்கும் அதன் நாவின் பெரும்பசி. திரைச்சீலை, புத்தகங்கள், நிழல்படங்கள், சன்னல் கம்பிகள், கண்ணாடி சட்டங்கள், சில சமயம் எதிராளியின் சந்தோஷங்கள் இவையனைத்தையும் உண்டு விட்டு களைப்பின்றி இன்னும் இன்னும் எனப்பரவும் தீயின் ஆக்கிரமிப்பை ஆச்சர்யத்தோடும் ஆதங்கத்தோடும் நம்மால் பார்க்க மட்டுமே முடியும்.

நாமதை அடித்து துரத்தியபின்னும் விட்டுச்செல்கின்ற அதன் சுவடுகளை காணமுடியாததாய் நம்கண்களை எப்போதும் மறைத்துக்கொண்டேயிருக்கும் நம் துக்கத்தின் கதவுகள். ஏனைனில் அதன் பெரும்பசியின் உணவு நம் சில வருட சேமிப்புக்களாயிருக்கும்.

பிடிவாதமாய் நாமறியமால் பற்றியிழுக்கும் மூர்க்கனின் இறுகிய கரமாய் கனமான ஆக்ரிதியோடு ஆளுயரத்திற்கு எழுந்து நிற்கும் தீயின் கனபரிமானம் கார்த்திகை பண்டிகையன்று கனன்று எரியும் கோயில் பனையடியின் சொக்கபானையையோ, எத்தனையோ ஒளிப்பேழைகளில் கண்டிருக்கும் தீயின் தாண்டவத்தையோ இல்லை இதுவரை நாம் கண்டிருக்கும் எந்த ஒரு முன்நினைவோடும் ஒப்புமை படுத்த முடியாததான தனித்துவமானது.


பலசமயம் பெரும்பாலான நிகழ்வுகளை வெறும் வாசித்தோ, கேட்டோ பழக்கப்பட்ட நம் உள்ளத்திற்கு நிதர்சனமாய் நம்முன் பரவும் உண்மையின் நிகழ்வு பல சமயம் நம் உள்முகத்தை காட்டிச்செல்ல மட்டுமின்றி நாம் கற்றுக்கொள்ளவும் சில தடயங்களை விட்டுச்செல்கிறது.

நெருப்பின் நாவிற்கு ருசி அருசி என்றேதுமில்லை அனைத்தும் ஒன்றுதான் மானுடம் கற்றுக்கொள்ளுமா இந்த பேதமற்ற தன்மையை…….

Friday, July 4, 2008

மின் தொடர் வண்டி - ஆச்சர்யம் மற்றும் ஆதங்கம்.


நகர்ந்து செல்லும் மேகங்களைக்காட்டிலும் வேகமாக நாட்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன பெரிதும் சிறிதுமான மாற்றங்களோடு.

நான் புதியதாக பயணிக்கத்துவங்கியிருக்கும் மின் தொடர் வண்டிகள் தரும் அனுபங்கள், ஆச்சரியமும் ஆதங்கமும் நிறைந்ததாக உள்ளது.

ஆச்சர்யம்

01. மின் தொடர் வண்டிகள் வந்து நின்றதும் பசித்திருக்கும் பெரு வயிறோனென பெரும் கூட்டத்தை தன்னுள்ளே வாங்கிக்கொள்ளும் இரயில் நிலையங்கள், அவர்களை நொடியில் தொலைத்துவிட்டு நிற்கும் நடைமேடைகள்.

02. கடந்து செல்லும் தொலைதூர விரைவு வண்டிகளில் எப்போதும் எங்கேயோ பயணப்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதர் கூட்டத்தின் ஒரு பகுதி.

03. எப்போதும் கை பேசியில் பேசிக்கொண்டேயிருக்கும் இளம் பெண்கள்

04. பக்கத்து இருருக்கை கார/காரியின் இருப்பைப்பற்றி கவலைப்படாமல் எதிர்முனையின் இருப்பவரோடு போடும் சண்டைகள்/கொஞ்சல்கள்

05. இதற்கு நேரெதிர் மறையாக அடுத்து இருப்பவர் கூட கேட்க முடியாத அளவிற்கு மிகவும் மெதுவாகப்பேசும் கை பேசி பேச்சுக்கள்.

06. தட்டச்சு இயந்திரத்தை விட மிக வேகமாக கைபேசியில் குறுந்தகவல் அடிக்கும் கைவிரல்கள்.

07. ஓடும் வண்டியில் அனாயசமாக ஏறி இறங்கும் பழம், கைகுட்டை, பாசிமணி ஊசி, கறிகாய், சமோசா, விற்கும் பெண்மணிகள்.

08. காலை 11 மணிக்கெல்லாம் மொத்த இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு சட்டமாய் படுத்துறங்கும் பயணிகள்.

09. ஓடும் இரயிலில் காய்கறியோ, கீரையோ, ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் கத்தியால் நறுக்கியபடி பயணிக்கும் பெண்மணிகள்.

10. இந்த பரபரப்பு எதிலும் ஆட்படாமல் நின்றபடியோ (!!!!) உட்கார்ந்தபடியோ தூங்கும் சில பயணிகள்.

ஆதங்கம்

01. வெளியில் வெறித்துப்பார்த்தபடி எப்போதும் ஆயாசத்தையும் அடுத்த வேளைக்கான வேலைகளையும் சுமந்தபடி பயணிக்கும் நடுத்தர வயதுப்பெண்கள்.

02. யாரோடும் பேச மனமற்று புத்தகங்களில் மூழ்கும் பயணிகள்

03. வயது முதிர்ந்த காலத்திலும் சேமியாவும், அப்பளமும் விற்கும் மூதாட்டி.

04. நிற்க கூட இடமில்லாத வேளைகளில் கொஞ்சமும் பிரஞ்ஞையற்று மாற்றுப்பாதையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் பயணிகள்.

05. இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி கூடவே வரும் இரயில்வே போலீஸ் (ஆர்.பி.எப்)

06. ஏற்றிவிடவோ இறக்கிவிடவோ கூட ஆட்களின்றி தனித்து வரும் வயதானவர்களின் முகங்களில் கவிந்து கிடக்கும் தனிமையும் விரக்தியும்.

07. செல்லும் இடத்தை அரைகுறையாய் கேட்டு ஏற்றிச்சென்று பின் அதிகம் கேட்டு சண்டையிடும் ஆட்டோ ஓட்டுநர்கள்

08. சாயங்கால வேளைகளில் பசிமிகுந்த முகத்தோடு சிப்ஸோ, சமோசாவோ, பேல்பூரியோ கையில் இருக்கும் பேப்பரில் சுருட்டியபடி உண்டுவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் இன்றி சமாளித்தபடி செல்லும் இளம்பெண்கள் (பெரும்பாலும் தனித்து தங்கியிருக்கும் படிக்கும்/பணிக்குச்செல்லும் பெண்களாயிருக்கும் என்பது என் அனுமானம்)

09. எதிர் இருக்கை காலியாய் இருக்கும் பட்சத்தில் தவறாமல் தன் கால்களை வைத்து அழுக்காக்கும் படித்த/படிக்காத பயணிகள்.

10. முதல் வகுப்பில் தவறிப்போய் புயணித்துவிட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக்கொண்டு கையில் உண்மையிலேயே அபராதம் கட்ட காசின்றி தவித்த அப்பாவி பயணிகள் கடைசியில் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே அடுத்த வேலைக்காக நகரவேண்டிய நம் கட்டாயம்.

இந்த ஆச்சர்ய ஆதங்க ஓடையில் என் படகு எந்தப்பக்கம் செல்கிறதென்ற கவனிப்பும் ஒரு சுவாரசியமான அவதானிப்புத்தான்.