Wednesday, July 25, 2012

வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர் – ஒரு பகிர்வு

சில புத்தகங்கள் ஒரு சில பெயர்களைப்போலே நம் ஞாபக அடுக்குகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும், இப்போதில்லை, இப்போதில்லை என்று சில சந்திப்புக்களைத் தவிர்ப்பதைப்போல, சில புத்தகங்களை கையிலெடுத்து விட்டு இப்போதில்ல்லையென தள்ளிவைத்து விட்டு அடுத்த அடுக்குக்கு கை தாவும், ஆனாலும் சதா எண்ணத்தில் தங்கிய படியே இருக்கும். சிறு வயதில் உணவில் மிகவும் பிடித்த காய் கறியை கடைசியாக தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோமே அது போல் ஒரு நீண்ட காத்திருப்புக்கு நம்மை தயார் செய்துகொள்ள வைக்கும். அப்படி ஒரு புத்தகம் தான் யுவன் சந்திரசேகரின் “வெளியேற்றம்”.

இரண்டாயிரத்து பத்தின் முடிவில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் தான் வாங்கும் முனைப்பு வந்து இணையத்தின் மூலம் வாங்கினேன். ஆனால் மேலே சொன்னதுபோல் ஒவ்வொரு முறையும் இதை முடித்து விட்டு, அதற்குப்பின் என்று ஏதேதோ காரணங்களை உருவாக்கிக்கொண்டு நானே ஒரு நீண்ட காத்திருப்புக்குள் சிக்கிக்கொண்டேன்.

எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு முடிவு வந்தாகத்தானே வேண்டும், கடந்த சில நாட்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கினேன், வழக்கம் போல் அந்தப்புத்தகத்தோடு வசிக்கத்தொடங்கினேன்.விஷ்ணுபுரம் வாசித்த போது அந்நாவலின் கட்டமைப்பைக்கண்டு ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் வியப்பைப்போல, இந்தப்புத்தகத்தின் கட்டமைப்பும் மிக நேர்த்தியான ஓட்டத்துடன் ஒழுங்குடனும் மிகப்பெரும் வியப்பைத்தருகிறது. எந்த ஒரு இடத்திலும் சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் அதே சமயம் அதற்கென எந்த ஒரு மெனக்கெடலும் தெளிந்து செல்லும் நீரோடையென கதையோட்டம் நகர்ந்து செல்கிறது.இதை வெறும் கதையென்று சொல்ல முடியுமா என்றும் ஒரு தர்க்கம் மனதுக்குள் ஓடி மறைகிறது, சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் தருணங்களில் கதை மாந்தர்களில் ஒருசில பெயர்கள் மட்டுமே மனதில் தங்கும் அநேகமாய் அவர்களின் பாத்திரங்களின் மூலமாகவே என்னால் அடையாளப்படுத்த முடியும், ஆனால் வெளியேற்றத்தின் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவருவரும் மிகவும் நெருக்கமாய் இத்தனை நாட்களாய் நம்மோடு பழகிவரும் வெகுநாளைய நன்பர்களைப்போல் அவரவர்கள் பெயர்களோடே நினைவோட்டதில் கலந்து விடுகிறார்கள் ஆதியில் வரும் வேதமூர்த்தியின் குருவானவரைத்தவிர. குருவிற்கு பெயரென்ன அவ்வளவு முக்கியமா??

மிக இளம் வயது முதற்கொண்டே மற்றவர்களின் தொடர்பை தொழிலாக/தன் வளர்ச்சியாக மாற்றும் தன்மைகொண்ட ஆயுள்காப்பீட்டு முகவர் சந்தானம் சில வாரங்களுக்கு எந்த ஒரு பயனும் எதிர்பாராது தொடர்ச்சியாக எதையோ யாரையோ தேடிக்கொண்டு செல்லும் போதும் தனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக்கொள்ளும் போதும் சில சமயம் சந்தானாமாகவும் சில சமயம் நாமாகவும் உணர்கிறோம்.

கோவர்த்தனம் சொல்வது போல், அவரவர் தொடர்பான வினைகளில் இருந்து வெளியேறி அதற்கு எதிர்மறையான பாதைகளில் செல்கிறார்கள் குற்றாலிங்கம், கோவர்த்தனம், சந்தானம் போல்,

மற்றும் சிலரோ புற உலகிற்கு அதிகம் வெளிப்படாத அதே சமயம் உள்ளுக்குள் பெரும் மாற்றத்தை உணர்ந்து தன் சுயங்களிலிருந்து வெளியேறுகிறார்கள், சிவராமன், இராமலிங்கம் போல.

ஆனால் மன்னாதியும் பாண்டியும் சந்தர்ப்பங்களிலிருந்து வெளியேறி ஒருவித இலக்கின்மைக்குள் புகுந்து கொள்கிறார்கள். ஜய்ராமோ அவருடைய அனுமானங்களிலிருந்து வெளியேறி ஒரு வித சமத்துவத்திற்குள் அமர்ந்து கொள்கிறார்.

இன்னும் அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டும் ஆசானின் பாத்திரமும், தீர்த்தபதியின் உரையாடலும்… இப்படி தேடித்தேடி பேச வைக்கிறது.


குரு, தேடல், சந்நியாசம், வாழ்க்கை இவற்றிற்கான விகிதாசாரங்களை நம்முள் மாற்றிவிடுகிறது இந்தப்புத்தகம். ஆனாலும், இந்த நாவலின் ஈர்ப்பு சகிதியின் மையம் என்று கொண்டால், ஒவ்வொருவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் வெளியேறுதலுக்கான இரகசிய வேட்கையும் அதிகம் பேசப்படாத அதற்கான முயற்சிகளும் தானோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் நம்மால் விடுபட முடியாத குடும்பம் என்ற கட்டமைப்பின் சக்தி சித்ராவைப்பற்றியும் அவளுடைய உளைச்சல்கள் பற்றியும் நம்மை அனுதாபப்படவைக்கிறது. வெளியேற்றத்திற்கான நம்முடைய தயார்தன்மையை சோதித்துக்கொள்ளும் ஒரு அளவுகோலாகிறது.

இதில் மிகவும் யோசிக்க வைத்த ஒரு சில வரிகள் இதோ…

… வஸ்துக்களாலெ ஆன உலகம் ஒண்ணு இருக்கு அதை என் புலன்களாலே நான் அறிஞ்சிக்கிறேன் ஒங்க உப்லன்களாலே நீங்க, அவங்கவங்க புலன்கள் இருக்கற ஸ்திதியைப்பொறுத்து அவங்கங்க அறிஞ்சிக்கிறோம்…” இப்படியாகத்தொடரும் பத்தி நாம் ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்ளும் செய்திப்பரிவர்த்தனைகளின் அடிப்படையைக்குறித்து யோசிக்க வைக்கிறது.

குள்ளச்சித்தன் சரித்திரம் போல, அதிகம் மாயவிநோதங்கள் ஏதுமின்றி இயல்பு வாழ்க்கையை ஒட்டியிருப்பதும், கடைசியில் ஆசிரியர் கூறியிருக்கும் புனைவின் சதவிகிதத்தையும் கணக்கில் கொள்ளும் போது அடுத்த முறை நம் திருவண்ணாமலை பிராயணத்தில் மன்னாதியை மனம் தேடினாலும் தேடும்.

Friday, July 20, 2012

உறவாடும் வாக்கியங்கள்

எழுத்துக்களும், வார்த்தைகளும், வாக்கியங்களும் மனிதர்களைப் போலவே உடன் உறவாடுகிறது, உள்ளத்தை உறு மாற்றுகிறது. உற்றுப்பார்த்தால் நான் எண்ணியிருந்தது போல் இவை உணவோ இரையோ இல்லை சூட்சுமமாக நம்மோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டும் உறவாடிக்கொண்டுமிருக்கிறது.சில வார்த்தைகள், மிக நெருக்கமான சிறுபிரயாத்து நட்பைப்போல் நினைவுகளை கிளறிப்போடுகிறது, சில வாக்கியங்கள் மிகப்பிரியாமானவர்களைப்போல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அன்றைய நாட்களின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. மற்ற சில வாக்கியங்களோ அடங்க மறுக்கும் பிள்ளைகளென பிடிவாதமாய் போராடி சில மணித்துளிகள் வேறொன்றையும் சிந்திக்கவொட்டாமல் ஆதிக்கம் செலுத்துகிறது.

சில பத்திகளை வாசிக்கும் நேரங்களில், ஜேசுதாஸ் “நகுமோ கனலே நினஜாலி தெலிசி” என்று திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கதோடும், திருப்பணித்துரா இராதகிருஷ்ணன் கடத்தோடும், நாகை முரளிதரன் வயலினோடும் பாடி முடித்ததும், சபை நிறந்து ஆகர்ஷிக்குமோ அது போல் கூட்டமாய் நம்மை சூழ்ந்து நிற்கும். அதே சமயம் சில பக்கங்கள் வெகு ஆழத்தின் மோனத்திலிருந்து வரும் ஒ.எஸ் அருணின் “எப்படித்தான் என் உள்ளம் திறந்து என்னை அடிமை கொண்டீரோ ஸ்வாமி” என்று பாடி முடித்ததும் கை தட்டக்கூட திராணியற்று கூட்டாமாய் தன்னுள்ளே அமிழ்ந்திருப்பவர்களைப்போல் ஆழத்தில் கொண்டு நிறுத்துகிறது.

அப்பா, அம்மா, அக்கா, கணவர் குழந்தைகள், நன்பர்கள் போலவே ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வாக்கியங்களும் குணமும் நிறமும் ஒரே மாதிரி இருப்பதில்லை, பல சமயம் இதன் நிறங்களும் குணங்களும் மாறிக்கொண்டேயிருக்கிறது. அநேக சமயங்களில் என்னையும் மீறி தறிகெட்டு வந்து விழும் சில வார்த்தைகளை உணருகையில் யாருக்கும் அடங்க மறுக்கும் என் வீட்டு கடைக்குட்டியை உருவகப்படுத்துகிறது.

சில சமயங்களில் ஒவ்வொரு கணத்துளிகளிலும் தேடித்தவிக்கும் ஒரு குருவின் அருகாமையை அளிக்கிறது, மீண்டும் சில சமயங்களில் இவ்வளவுதான் போதும் முடிந்து விட்டது ஆட்டம், என்று அத்தனையும் உதறிவிட்டு செல்லத்துடிக்கும் நானாகவும், இத்தனையையும் மீறி தினமும் உழலும் வாழ்வைக்கொண்டாடி மகிழும் சுகவாசியாகவும் தோன்றுகிறது.உறவுகளை விட்டு விலகுவது எவ்வளவு துக்கமோ அது போல் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் விட்டு இருப்பதும் என்றே தோன்றுகிறது. சில பேர் அதிகம் பேசுவதும், அதிகம் வாசிப்பதும் கூட இதனால் தானோ….

Wednesday, July 11, 2012

அசைபோடுகிறேன்- பழைய புதிய பருவகாலங்கள்மழை தொடங்கிவிட்டது, இரவெல்லாம் இடி இடித்து பெய்த மழையின் மிச்சங்கள் காலயிலும் சற்றே தொடர்கையில், உள்ளே மட்டும் மழையடித்துப் பெய்துகொண்டே இருக்கிறது. ஓயமறுக்கும் மழையின் திவலைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது சிறு சிறு குழிகளாய். கடந்து வந்த சிறுவயது கிராமத்து வாழ்க்கையின் மைல்கற்களில் தடவிப் பார்க்கிறேன், முன்பெல்லாம் இதுபோல் மழைக்காலம், வெயில் காலம் என்றெல்லாம் நமக்குத் தெரியுமா? தோண்டித்தோண்டிப் பார்க்கிறேன் எதுவும் தோன்றவில்லை, இல்லையென்று சொல்லாமல் காற்றுக்காலம் தெரியும், ஆடிமாசமும், அதனோடு கூடிய அடிப்பிரதட்சணமும் தெரியும் மற்றபடி வருடத்தின் பகுதிகளை பண்டிகைகளால் மட்டும் அடையாளப்படுத்திக்கொண்டதாய் ஞாபகம்.


பங்குனித்திருநா – கோவிலுக்கு வெள்ளையடிச்சாச்சு, திருச்செந்தூர் செல்வம் கடை போட்டாச்சு, ராட்டு வந்தாச்சு, ஐஸ் வண்டிக்காரன் இன்னும் வரலை, பாயசக்கடையும் ஜவ்வுமிட்டாய்க்காரனும் சாயங்காலம் வந்துருவான், வாகனக்காரா வந்தாச்சு, கச்சேரி லிஸ்டுல இந்த தடவை பிராபகர் கச்சேரி இல்லை, இன்னும் பல


வைகாசி விசாகம் வரப்போறது – காலைல பார்த்தா புளிய மரத்தடி பூரா வில்லு வண்டி, சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்தா எந்த வண்டியும் இல்ல சமைச்ச அடுப்புக்கரியும் அங்கங்க மாட்டுச்சாணியும், கொஞ்சமா வைக்கப்பிரியுமா இருக்கும், அன்னிக்கெல்லாம் பொன்னுக்குட்டி அத்தைக்கும் அவாத்து உமாக்கும் கூடுதல் வேலை.


ஆடி மாசம் பொறந்தச்சு, காத்து தொடங்கியாச்சு, அடிப்பிரதட்சணம்,பின்ன ஆவணித்திருநா, அப்படி ஒன்னும் பங்குனித்திருநா மாதிரி திமிலோகப்படாது, புரட்டாசி வந்தா கொலு, லட்சார்ச்சனை, கூடவே ஐப்பசில தீவாளி, திருகார்த்திகையும் சொக்கப்பானையும் முடிச்சு திரும்பினா உடனே மார்கழி மாசம், திருவாதிரையும் வைகுண்ட ஏகாதசியும், பின்ன இருக்கவே இருக்கு தைமாசப்பொறப்பு பொங்கலும், மாட்டுப்பொங்கலும், . மாசிமாசம் நோம்பும் பின்ன மறுபடியும் பங்குனித்திருநா.


இதுல வேனலும், மழையும், எங்க இருந்ததுன்னு இப்பவும் ஞாபகம் வரலை.

தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – பாரதி என்றோ கேட்ட கேள்வி இன்றும் தினம் தினம் நெஞ்சில் அலையடித்து அலைக்கழிக்க நாள் கடத்தும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இப்போது வேனலும் மழையும் மட்டுமே பருவ காலங்கள்