Monday, April 7, 2014

பேசவும் கேட்கவும் திகட்டாத தெள்ளமுது – இசை அதன் பல்வேறு ரூபங்களுடன்


ஆங்கிலத்தில் வாசிக்கவும், எழுதவும், பின் பேசவும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு ஆங்கில பாடல்களை கேட்பதில் ஒரு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. சரியான வழிகாட்டுதல் இல்லாததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவில் நட்புகளும் இந்த வரிசையில் இல்லை. இந்த நிலையில்
Colonial Cousins -  by Hariharan and Leslie Lewis.  நான் முதல் முதலில் கேட்ட ஆங்கில ஆல்பம். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் முன்பு என்று நினைக்கிறேன் (1996), நவீன் (என் பெரிய பையனுக்கு நாலு வயதிருக்கும் ஆனால் எப்போதெல்லாம் இந்த இசைத் தொகுப்பை கேட்க நேருகிறதோ அப்போதெல்லாம்  நான் என் பதின் பருவத்திற்கு சென்று மீள்வேன். I used feel so much of love in me when I hear this album, மேலும் கடவுளையும் இசையையும் பற்றிய மிகப்பெரிய புதியதொரு புரிதலை தந்ததும் இந்தப் பாடல்கள் தான்.
அதிலும் கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்ற இந்த பாடல் ஒரு நேர்த்தியான கோர்வை. ஆங்கில இசையும், கர்நாடக இசையும் கலந்ததோடல்லாமல் இந்துஸ்தானியும், ஹரியின் குரலும் தரும் மயக்கம் எந்நாளும் தீராதது. ஒவ்வொரு பாடலும் தரும் இன்பம் ஒவ்வொரு வகையானது
 
 

இதன் பிறகு தான் ஜான் டென்வரும், லூசியானா சொசாவும், யானியும் கேட்கத்துவங்கினேன் ஆனாலும் இந்த தொகுப்பிற்குண்டான இடம் இன்று வரை மாறாதது. இன்று காலை கேட்கும் போது கூட மொத்த உலகையும் மிகவும் அன்போடும் காதலோடும் பார்க்கத்தூண்டும் இந்த பாடலை பகிர்ந்து கொள்வது என் ஆத்ம திருப்தி.

இவரது மற்றொரு தொகுப்பு காதல் வேதம், இதற்கு முன்பா இல்லை பின்பா ஞாபகம் இல்லை, ஆனால் அதுவும் இதுபோலவே பித்துக்கொள்ள வைக்கும் பாடல்களை கொண்டது...

Thursday, April 3, 2014

இசை எனும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் - இப்போது பாம்பே ஜெயஸ்ரீ

 
 

இசை என்னை ஆக்கிரமிக்கும் விதம் மிகவும் வித்யாசமானது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன் மகவை மட்டுமே நினைப்பது போலவும், மழைக்காலத்திய இரவுகளில் இடைவிடாது நினைவுறுத்தும் குளிரைப்போலவும், கோடை காலத்தின் குளீரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உணர்த்தும் வெப்பத்தைப்போலவும், காதல் வயப்பட்ட மனதைப்போலவும் இடைவிடாது தன்னை நிலைநிறுத்தி என்னை முழுதுமாய் ஆக்கிரகிக்கும்.

சக்கரமணிந்த கால்களைப்போன்ற ஓட்டத்தினிடையேயும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் இசை ஒரு தனி ஸ்துலமாய் அரூபமாய் உடன்வரும்.  யாரும் அறியாமலும் சில சமயம் அறிந்தும் மனதுள் ஓடும் இசை கண்களின் வழியேயும்,  வார்த்தைகளினோடும் வழிந்தோடும். போதை கொண்ட மனதை நெருங்கிய சிலருக்கு அநேக நேரங்களில் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்  மேலும் அந்த நேரங்களில் என் காதுகளில் நிரம்பியிருக்கும் இசை மற்றவர்களையும் கூட தொடக்கூடும். இது ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலத்தைபோல தொடங்கி புயலாய் மாறும். பின் நிலைமை மாறும் மீண்டும் தாழ்வு மண்டலம் உருவாகும் இதுவரை இதன் பின்னிருக்கும் வேதியலை நான் அறிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை.
அதுபோன்ற தொரு இயற்கை சீற்றத்தில் தான் கடந்த சில நாட்களாக நான் பாம்பே ஜெயஸ்ரீ யுடன் வலம்வந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் அதிகமான பாடங்களை கற்றுக்கொண்டிருந்ததொரு காலமது. அதை முழுதாய் அனுபவங்களாய் மாற்றிக்கொள்ளவும் அன்றைய நிதர்சனங்களை பழகிக்கொள்ளவும் முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நான் முதல் முதல் பாம்பே ஜெயஸ்ரீ யை கேட்க நேர்ந்தது.  அன்று முதல் இன்று வரை தியானத்திற்கு ஒப்பான நிமிடங்களை வாரி வாரி வழங்கும் ஒரு அட்சய பாத்திரம் அவரது குரல். பாடல் கேட்டுக்கொன்டிருக்கும் போதே மனம் மிக மிக ஆழத்தில் திம்மென்று அமர்ந்து விடும். பின்பு இது போலஏதாவது வெளியேற்றினாலன்றி நான் நானல்ல.

என்னை முதல் முதலாக வசீகரித்த பாடல்...