Thursday, January 12, 2012

மேடேறிச்செல்லும் நீர்நிலைகள் - 19 டி.எம்.சாரோனிலிருந்து



ஒரு புத்தகம் பத்தொன்பொது கட்டுரைகள் உள் மனதில் மிகப்பெரும் வன்முறையை நிகழ்த்த முடியுமா?


முடியும் என்கிறது பவா செல்லத்துரையின் “19 டி.எம்.சாரோனிலிருந்து”. இன்றோடு சரியாய் மூன்று நாட்களாகிறது மீண்டும் மீண்டும் அந்தப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன் அதிலிருந்து மீளமுடியாமல் பேரவஸ்தையில் மிதந்து கொண்டிருக்கிறேன். சரி புலம்பி முடித்தாலாவது அடுத்த புத்தகத்தை எடுக்கமுடிகிறதா பார்ப்போம் என்கிற சிறு முயற்சி தான் இத்தனை நாள் சோம்பேறித்தனத்தையும் மீறி எழுத வைக்கிறது.
என் போன்றவர்களை பொறாமைப்பட வைக்கிறது பவாவின் வாழ்வும் பார்வைகளும். கடந்து போன பால்யத்தின் மீதான நினைவாய், அடையாளமிழந்தாலும் எப்போதும் ஒளிந்திருக்கும் முதல் காதலாய், பொய்மையின், விளம்பரங்களின் பெரும் கூச்சலில் அடங்கிப்போகும் உண்மையின் குரலாய் பொங்கி வழிகிறது நிகழ்வாழ்வின் நிதர்சனங்கள். போதும் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு எழுந்தோடும் விழைவிருந்தும் அந்த நொடிக்கான துணிவின்றி அத்தனையும் கட்டி இழுத்து கூடவே நகர்ந்து செல்லும் வாழ்வின் பொய்மையை,அதற்காக நாம் கற்பித்துக்கொள்ளும் காரணங்களை எள்ளி நகயாடுகிறது பவாவின் அறிமுகங்கள்.

ஆளுமைகள் என்று அடையாளப்படுத்துப்படும் அனைவரையும் மீறி நம் பார்வைகளே அதை சாத்தியப்படுத்துகிறது என்பதை நிருபிக்கின்றார்கள் துக்கத்தின் தேவதை- யின் லட்சுமியும் குரல் விற்றுப்பிழைக்கத்தெரியாத கலைஞனின் சுகந்தனும்.



விமான நிலையத்தில் காரின் சாவியை தூக்கிப்போட்டு விட்டு விமானம் ஏறும் பினு பாஸ்கரும், அம்மச்சி மரத்தடியின் – வல்சன் கூர்ம கொல்லேரியும் நம்மால் எட்ட முடியாத உயரத்தை மிக எளிதாய் சுட்டிக்காட்டுகிறார்கள், மிகுந்த வேதனையோடு ஒப்புக்கொள்கிறோம் நம் இயலாமையை.



வாழ்வைக்கொண்டாடிய கலைஞனாய் வரும் சந்தானராஜின் கட்டுரையை முன்பே படித்தது போன்ற உணர்விருந்தும் மீண்டும் பலமுறை வாசிக்க வைக்கிறது அதனுள்ளே புதைந்திருக்கும் ஆத்ம தரிசனம், இடப்பெயர்வை நிராகரித்து இயற்கைக்கு திரும்புதலின் காயத்ரி கேம்யூஸ் சொல்ல வொண்ணா பெருந்துயரத்தையும் கூடவே கலவாழ்வின் அற்புதத்தையும் காட்டுகிறார்.

மாயலோகத்தின் – அபுல்கலாமின் வேட்டியைப் பற்றி வாசிக்க நேர்ந்த பொழுதின் பெரும் சிரிப்பு பின்னிரவின் அமைதியை கிழித்து அருகே உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீதரை எழுப்பவைத்தது. மிக இலகுவாய் வந்திருந்த அந்த நகைச்சுவை மிகுந்த வரிகள் வேறு எந்தப் பக்கத்திலும் காணக்கிடைக்காதவை.



இரு மகாகவிகளும் ஒரு சின்னஞ் சிறுவனும் – வேலுசரவணைக்குறித்த கட்டுரை என் குழந்தைகள் மீதான என் வன்முறையை முகத்திலறைந்தாற் போல் காட்டிக்கொடுத்தது. அந்த கொடூரமான உண்மையை தாங்கும் மனநிலையற்று குழந்தைககளைக்காணும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் பேச்சற்று போகவைக்கிறது. ஆனாலும் வெளிப்படையாய் மாறத்தயங்கும் குணநிலை தலைமுறை தலைமுறையார் நம்முள் விதைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மீதான ஆதிக்க மனநிலையை வலியோடு உணர்த்திக்காட்டுகிறது.



எல்லாவற்றயும் தாண்டி ஒவ்வொருமுறை திருவண்ணாமலை மண்ணைத்தொடும் போதும் பொங்கிவரும் உணர்வை அப்படியே படம்பிடித்துக்காட்டுகிறது பேரொளியும் ஒரு துளியும். அங்கிருக்க நேரும் அத்தனை மணி நேரமும் பேச்சற்று ஒரு தவிப்பான மனநிலைக்குத்தள்ளப்படும் கணங்களை அப்படியே விவரிக்கிறது. இங்கேயே புதைந்து போகமாட்டோமா என ஏங்கவைக்ககும் ஏக்கத்தின் பின்னிருக்கும் தவிப்பைச்சொல்கிறது. இனிமேல் வரும் கார்த்திகைகளில் மன பாரமற்று வாயிலில் விளக்கு வைக்கமுடியுமா எனத்தெரியவில்லை. பவாவின் அப்பா பற்றிய கட்டுரையின் வாசிப்பிற்குப்பின்பு. கூட்டத்திற்கு அஞ்சியும் குடும்ப வழமையின் தேவையினாலும் கார்த்திகை தீபம் பார்க்கும் ஆசை எப்போதும் என்னில் வந்தில்லை ஆனால் இப்போது முற்றிலும் மாறிவிட்டது அடடா இன்னும் 11 மாதங்கள் காத்திருக்க வேண்டுமே எனும் ஆயாசத்தைத்தருகிறது.


இதுவரை கண்டும் கேட்டுமிராத மகேஷ் என்கிற மகேஸ்வரியும், ஜெயஸ்ரீயும், கேட்டுமட்டுமேயிருந்த கோணங்கியும், ஷைலாஜுவும் ஜென்மஜென்மாந்திரமாய் உறாவைடியதைப்போன்ற நெருக்கத்தை தந்துவிட்டார்கள்



இந்தப்புத்தகத்தை நான் தேடி வாங்க காரணமாயிருந்த யோகியைப்பற்றிய கட்டுரைகள் எனக்கு ஒரு புதிய தரிசனத்தை தந்துள்ளது. தெய்வமாய்க்கொண்டாடும் அனைவரிடையேயும் அவரை உன்னதமான நன்பராய் காட்டியிருக்கும் பவாவின் நெருக்கம் தரும் ஆன்ம உணர்வு அளவிடமுடியாதது. இதைத்தானோ யோகி எப்போதும் சொல்ல முயன்றுகொண்டிருந்தாரோ என எண்ணத்தோன்றுகிறது. யாருமற்ற சன்னதித்தெரு தரைகள் தரும் நெருக்கத்தை உள்ளே உணரவைக்கிறது.


முடிவாய் கோணங்கியின் ஆறு பெண்மக்கள் முடித்துவிட்டு தவித்த தவிப்பை விடவும் மேலாய் தவிக்க வைத்த பாவாவை மிகப்பெரும் வன்முறையாளரென சொல்லலாமோ எனக்கூடத்தோன்றுகிறது. – சொல்லலாமா??????