Monday, January 28, 2008

பெண் - யாரிவள்? - கேள்விகள் ஒரு சங்கிலித் தொடர் பதிவு - 2


பெண் என்பவள் யார்?
அவளின் குணாதிசயங்கள் யாவை?
அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?
அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? – ஏன்?

இதெற்கெல்லாம் பதில் ஒரு ஆணால் கூறமுடியுமா? அல்லது ஆணை அளவுகோலாகக்கொண்டு பதில் தேட முடியுமா…இரண்டும் இல்லை, நம்மை நம்மால் மட்டுமே வரையருக்க முடியும் இதற்கென ஒரு அளவுகோல் கொண்டு தேட முடியாது,

ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக்கொழுந்தையும் ஒப்பிடமுடியுமா? இரண்டும் இரு வேறான இயல்புகளோடும், இருவேறான பயன்பாடுகளோடும் இருக்கக்கூடியவை ஆனால் இதில் உயர்வென்பதும் தாழ்வென்பதும் உண்டோ, மாமரம் உபயோகப்படும் இடத்தில் வேம்புக்கு தேவை இல்லை அது போல் ஆண் சில இயல்புகளோடும், சில பயன்பாடுகளோடும், பெண் சில குணாதிசயங்களோடும் சில பயன்பாடுகளோடும் படைக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுக்கொண்டு மற்றவர் உலகத்திற்குள் தன்னை திணித்துக்கொள்வது தேவையற்ற அவஸ்தை. எதிரெதிர் உலகத்தைப்பற்றிய புரிதல்கள் மட்டுமே தேவை.

உடுப்பு மாற்றங்கள் கூட தன் சுய சவுகரியங்களுக்காக மட்டுமே இருந்தவரை அதற்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது, அந்தக்காரணங்களாலேயே, தாவணியும் புடவையும், பாவடை சட்டையாகவும், சுரிதாராகவும் மாறியபோது மிக எளிதாக அதிகம் முணுமுணுப்புக்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் அதுவே குட்டை சட்டையாகவும், கட்டை பாவடையாகவும், மொட்டைக்கையாகவும் மாறும்பொழுது தலைப்புச்செய்திகளாகிறது. நம் உடுப்பு சுதந்திரம் என்பதை ஆண்கள் உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து நாம் செய்த தவறான புரிதல்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

அலுவலகப்பணிக்கு செல்வதோ, வியாபாரம் செய்வதோ, ஊர்திகள் ஓட்டுவதோ, காலத்தோடு ஒட்ட வழுவி நம்மை மேம்படுத்தச்செய்யும் உத்திகள் அதாவது அதை கற்றுக்கொள்வதின் நீட்டிப்பு என்றோ கூடுதல் பொறுப்பு என்றோ கொள்ளலாம் அதை விடுத்து நம் அடிப்படை பொறுப்புக்களை நாம் மறந்து தட்டிக்கழிக்க முற்பட்டால் நம்மை நாமே தோற்கடித்துக் கொள்பவர்களாகிறோம்.

முண்டியடித்து முகம்சிவந்து
முந்திச்செல்வதில் சுகம் கண்டதை
புரட்சி எனச்சொல்லாதே
புரட்சி புத்தியில் வரவேண்டியது,

யாரிடமும் நாம் நமக்கான உரிமையை கேட்டுப் பெறவேண்டியதில்லை, சாலையில் நாம் ஊர்திகளோட்டும் போது நமக்கென நாமென்ன தனி சாலை ஒதுக்கீடு கேட்கிறோமா அல்லது வாகன நெரிசலை நிறுத்தச்சொல்கிறோமா, இரண்டும் இல்லை ஊர்திகளோட்டும் திறமையும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் தனியாகச்செல்கிறோம். இதில் சக பயணிகளோடு சண்டைகள் எதற்கு அவரவர் இலக்கு அவரவர் பாதை, குறுக்கே செல்லும் சக பயணியை நமக்கு காயங்கள் இல்லாத வண்ணம் கடந்து செல்வதும் நம் திறமைகளுள் ஒன்று.

மன வளர்ச்சி என்பதும் முதிர்ச்சி என்பதும் பெண்ணிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்று ஏனெனில் அவளைச்சார்ந்தே ஒரு குடும்பமும், சுற்றமும், ஊரும் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை புரிந்து கொண்டு ஆதுரப்படுத்தும் ஒரு மேதமை பெண்களிடம் இயல்பிலேயே குடிகொண்டுள்ளதால் ஆண்களிடம் இந்த சமூகம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்குள் மறைந்திருக்கும் அன்பையும், புரிதல்களையும் வெளிக்கொணர்வது கூட நம் திறமைகளில் ஒன்றானதாகும். இப்பணியை நாம் செவ்வெனே செய்துவிட்டால் ஒத்திசைந்த வாழ்வியல் இசையில் நாமே ஒரு மிகப்பெரும் படைப்பாளி.

சங்க காலங்கள் தொட்டு பெண்களின் மேதமை எப்போதும் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகவே இருந்துவந்துள்ளது, இடைப்பட்ட காலங்களில் நேர்ந்த சமூக சீர்கேடுகளினால் பெண்களும் அவர்களின் மேதமையும், திறமையும் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் தற்போதைய காலங்களில் அதன் விழுக்காடுகள் முன்பெப்போதையும் விட குறைவே. நாம் மிக வேகமாக நமக்குண்டான இயல்புகளை புரிந்து கொண்டு அந்த இலக்கை நோக்கி சென்றுகொண்டுதான் இருக்கிறோம். நம் பாதைகள் சில சமயம் முட்களாலும், பலசமயம் பூக்களாலும் நிரப்பட்டுள்ளது என்பது தான் உண்மை, முட்களை கடந்து செல்லும் வேளயில் அதைப்பற்றிய நம் வீண் கூச்சல்கள் நம் கவனங்களை திசை திருப்பத்தான் பயன்படுமே தவிர நம் இலக்குகளை அடைவதில் அல்ல.

படித்த, படிக்காத, சுய சிந்தனையுள்ள பெண்களின் கருத்துக்கள் பெரும்பான்மையான சமயங்களில் வெற்றிபெறுவது அதை நாம் எவ்வாறு மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்கிறோம் என்பதினால் தானே தவிர கருத்துகளின் மேதமையினால் அல்ல.

இந்த பிரபஞ்சமும் அதன் படைப்புக்களும் எல்லோருக்கும் ஒன்றுதான், ஆண்களின் உலகிலும் முட்களும் இருக்கலாம், பூக்களும் இருக்கலாம், அதை அவரவர் பூத்ததற்கு தக்கபடி கைகொள்ளுவர்.

நாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவேண்டாம், நமக்கான பாதை மிக மிக நீளம்......

Sunday, January 20, 2008

என்ன படிக்கலாம் – 10 வது வகுப்பிற்கு பிறகு - எங்கள் வீட்டு இளவரசனுக்காக


தொலைக்காட்சிகளும், புத்தகங்களும் எத்தனையோ தொகுப்புக்களை வெளியிட்டாலும், ஒரு பெற்றோரின் பார்வையில் அவைகள் முற்றுப்பெறாத செய்திகளாகவே தான் உள்ளது, அவைகள் அந்தந்த ஊடகங்கள் முன்னிறுத்த எண்ணும் கல்வி நிறுவனங்கள் சார்ந்ததாகவே உள்ளது.. (சரி அதுக்கென்ன இப்ப மேட்டருக்கு வாங்கிரீங்களா.. வந்தாச்சு)

என் மூத்த மகன், இந்த வருடம் 10வது தேர்வு எழுதுகிறான், அவன் ஒரு நல்ல கலைஞன், மிக நன்றாக பாடுவான், கீபோர்ட் வாசிப்பான், கணனியில் மிக நன்றாக வரைவான், போட்டா ஷாப் போன்ற சமாசாரங்களில் நல்ல பரிச்சியமும் அது சார்ந்த ஓரிரு தனிப்பயிற்சி வகுப்புக்களிலும் தேர்ந்துள்ளான் அதனால் அந்த துறை சார்ந்த ஒரு படிப்பு அவனின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் என்பது எங்கள் எண்ணம், (he is creative but cant under go heavy stream of studies)மேலும் அவனால் ஒரு தீவிர இயற்பியலிலோ, அல்லது, வேதியலிலோ முழு கவனம் செலுத்தி படிக்க முடியாது அதனால் ஒரு செய்முறை பயிற்சி சார்ந்த கிரியேட்டிவ் பாடங்களே அவனுக்கு ஏற்றதாய் இருக்கும் என்பது எங்கள் எண்ணம். எனவே மீடியா, கம்யூனிகேஷன், அட்வெர்டைசிங் சார்ந்த துறைகளில், 10வது முடித்து ஒரிரு வருடங்கள் ஒரு டிப்ளமோ, பின் மேல் படிப்பு என்பதே எங்கள் திட்டம். (அது அயல் நாடு சார்ந்ததாய் இருந்தாலும் சரி)

என்ன படிக்கலாம் என்று வலையுலகில் தேட ஆரம்பிக்கும் பொழுது தான் தோன்றியது, நமக்கு தான் இப்போது ஒரு மிகப்பெரிய குடும்பம் உள்ளதே (சக பதிவர்களைத்தான் சொல்கிறேன்) பல பதிவர்கள், படித்துக்கொண்டோ, இல்லை படித்து அத்துறைகளில் பணியாற்றிக்கொண்டோ இருப்பீர்கள் தானே அதன் மூலம் அதன் தேவைகளையும் அத்துறை சார்ந்த படிப்புகளையும், அதறகான நல்ல கல்லூரிகளையும் அறிந்திருப்பீர்கள் எனவே உங்கள் ஆலோசனகளும், விபரங்களும் எங்களுக்கு அவனை வழிகாட்ட உதவும்.


எனவே இதனால் அறிவிப்பது என்னவென்றால் எல்லாரும் படிச்சிட்டு வேகமா ஒரு நல்ல பின்னூட்டமிடுங்கப்பா...

Monday, January 14, 2008

நான் ஒரு திறமையற்ற நிர்வாகி..


என்னால் நீ வந்து இப்போது விடுப்பு கேட்டால் மாட்டேன் என்று சொல்ல முடியாது


ஏனெனில் உன் சிற்றூரில் உனக்காகா "யேஞ்சாமி, யே ராசா பொங்கலுக்கு வாரேன்னு சொல்லியிருக்காமுல்ல, அவனையும் கூட்டிகிட்டு உங்கோயிலுக்கு பொங்க வைக்க வந்திருதேன் எங்க அய்யா... எங்களை காப்பாத்து" என்று கடவுளிடம் வேண்டுகோள் வைத்திருக்கும் ஒரு பாட்டியிருக்கலாம்"ஏட்டி அவே வந்தா தொணதொணன்னு தொணக்காம அவன சோரு திங்க விடுங்கடி, பாவம் புள்ள வாயில வைக்க விளங்காத சோத்த தினைக்கும் தின்னு தின்னு நாக்கு செத்துப்போயி வருவா(ன்) வாய்க்கு ருசியா ரெண்டு செய்து போடணும்" என்று சைவமோ அசைவமோ செய்யக்காத்திருக்கும் தாயிருக்கலாம்

"இன்னம் பத்தே நாளு பின்ன எங்க அண்ண வருது எனக்கு மெட்ராஸ்லேர்ந்து சரவணா ஸ்டோர்லேருந்து சுடிதார் வாங்கியாரேன்னு சொல்லிருக்கு இந்த தடவை சாமி கும்பிட அந்த ட்ரெஸ் தான் போடுவேனாக்கும்" என்று காத்திருக்கும் தங்கை இருக்கலாம்.

"எங்க வீட்டு பெரியவன் மெட்ராசிலதான் வேலபாக்கமில்ல நல்ல விவரமான ஆளு அவங்கிட்ட கேட்டா மெட்ராசில யாரைப்பாக்கணும், என்ன செய்யணுமின்னு சொல்லிட்டு போரான் நீரு ஏ கவல படுதீரு" என்று நன்பனை ஆற்றுப்படுத்தும் ஒரு தந்தை இருக்கலாம்

"எங்க அண்ணே எல்லா புது படமும் பாத்திருவாகல்ல, அவியளுக்கு எல்லா ஸ்டாரும் தெரியும் தெனைக்கும் யாரவது ஒரு ஸ்டார மெட்ராசில பாப்பாகளாமில்ல, அவியளும் கடை கண்ணிக்கெல்லாம் வருவாகளாம், இந்த வாட்டி எங்கண்ண யார புதுசா பாத்தகன்னு தெரியல வந்தா எல்லாஞ்சொல்லுவாக" என்று உனக்காக காத்திருக்கும் தம்பி இருக்கலாம்…

"ஏட்டி லட்சுமி, பார்வதி அவுக அண்ண (ன்) எப்ப வாராகளாம் அவ இந்த குதிகுதிக்கா" என்று நாசுக்காக விசாரிக்கும் உனக்காக காத்திருக்கும் ஒரு அண்டை வீட்டு பெண் இருக்கலாம்…

"அங்கனெ நாங்கெல்லா தினைக்கும் பஸ்டாண்டுல நின்னா போதுமில்ல எவ்ளோ பிள்ளைங்க எம்மா… அவிய யாருகிட்ட வேணா பேசுவாளுக என்னா ட்ரெசு, என்னா நடை, செல்போனு.. அதப்பாரு…. அன்னிக்கொருனா…. (நாள்)" என்று உன் கதை அளத்தல்களை வாய்பிளந்து கேட்க காத்திருக்கும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கலாம்

இல்லை இங்கிருந்து கொண்டு செல்லும் பெண்ணின் நினைவுகளை உன்னுள் போட்டு புதைத்து மற்றவர்களோடு சிரித்து பேச வேண்டிய அனுபவங்கள் காத்திருக்கலாம்…

இவையெல்லாம் தெரிந்திருந்தும் நான் எப்படி நீ விடுப்பு கேட்டு என்னிடம் வரும்பொழுது மாட்டேன் என்று சொல்வது, நான் அப்போது ஒரு திறமையான நிர்வாகியாக நிற்பதை விட ஒரு மனிதாபிமான மனுஷியாகவே நிற்க விரும்புகிறேன்.. இப்போது கூறுங்கள் நானொரு திறமையற்ற நிர்வாகி தானே….


(பின் குறிப்பு.. )
என் நிறுவணம் பல இளவயது பனியாளர்களைக் கொண்டு நடத்தும் ஒரு மிகப்பெரியதும் இல்லாத மிகச்சிரியதும் இல்லாத நடுவாந்திர BPO நிறுவணம். அதற்கென புள்ளி இலக்குகளும் மாதந்திர வருடாந்திர வருமான இலக்குகளும் உண்டு, இங்கு பணி செய்பவர்களில் பெறும்பான்மையான பணியாளர்கள், தமிழகத்தின் தென், வட பகுதி சிற்றூர்களில் இருந்து வந்து தங்கி பணி புரிபவர்கள், இவர்களுக்கு, தீபாவளியை விட, தமிழ் புத்தாண்டை விட பொங்கல் பண்டிகையும், விடுமுறையும் மிக முக்கியம்.

எல்லா வருடமும் என் ஜனவரி மாத புள்ளி இலக்குகளையும், மாதந்திர வருமான இலக்குகளையும் நான் என் நிறுவண நிர்வாக சபையின் எதிர்பார்புக்களையும் மீறி மிகவும் குறைவாகவே இலக்கிடுவது வழக்கம். ஏனெனில் (பதிவை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளலாம்…)

Saturday, January 12, 2008

நான் (சரவணன்)வித்யா – வெளியீடு – கிழக்கு பதிப்பகம் – ஒரு பார்வை


இதை இந்த கணம் செய்தே ஆக வேண்டும் என்ற தவிப்புக்களை கடந்து செல்லும் இயல்புகளோடே நான் அதிகம் பழக்கப்பட்டிருந்தாலும்,இந்தப் புத்தகம் என் அத்தனை இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிட்டது. என்னால் இந்த என்னவென்று விவரிக்க இயலாத என்னுள் ஊரும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இந்த இரவை என் தூக்கத்தை எதிர் கொள்ள முடியாது என்ற தவிப்பு மிகுந்த ஒரு உணர்ச்சிப்போராட்டத்தை உருவாக்கி விட்டது இந்த புத்தகம்.

எந்த விதமான பரிதாபத்தையும் யாசிக்காத அதே சமயம் திருநங்கைகளின் உலகம் பற்றிய ஒரு விகசிப்பான புரிதல்களை இந்தப்புத்தகம் ஏற்படுத்திவிட்டது.

மிகவும் சுயம் சார்ந்த உணர்ச்சிகளையும் அதற்கான ஜீவ மரணப்போராட்டத்தையும் எந்த வித சுய பச்சாதாபமும் இன்றி மிகத்தெளிவாக அதே சமயம் புனைவுகளின் சாயல்களின்றி ஓர் கம்பீரமான் எழுத்து நடையில் படைத்துள்ளார். “Non fiction/Autobiography” என்ற பிரிவின் கீழ் இந்தப்புத்தகம் தொகுக்கபட்டிருந்தாலும், இது அவரது சொந்த வாழ்க்கையாக மட்டும் கருதப்படாமல் மொத்த திருநங்கைகளின் ஒரு வாழ்வியல் போராட்டத்தை விளக்கும் விதமாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தின் வெற்றிக்கு ஒரு வித்து.

“ஊழல், வன்முரை, நயவஞ்சகம், ஆபாசம், பேராசை, எல்லாம் இருந்தும் அதுவிலாதது போலவும் பொற்கால வாழ்வு வாழ்வதாகவும் உலகத்தில் பொது மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்”

என்பது போன்ற இடங்களில் அவரது கோபங்களையும்.

“நீங்கள் ஒரு ஆண் உங்களால் புடவை கட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு செல்ல முடியுமா? அல்லது நீங்கள் ஒரு பெண் என்றால் உங்களுக்கு கனமாகக் கருகருவென்று மீசை முளைத்து அப்படியே நீங்கள் வெளியே போக விரும்புவீர்களா? உங்கள் அடையாளம் அதுவல்ல என்று தானே நினைப்பீர்கள்”


என்பது போன்ற இடங்களில் தன் சுயத்துக்கான மறுப்பெதும் எழுப்ப முடியாத வாதத்தையும்..

“சுய பாதுகாப்போடு என் தேவையை முடித்துக்கொள்ளும் எண்ணமில்லை எனக்கு”
என்று தனக்கு சேரவேண்டிய நியாத்திற்காக போராடும் தன் போராட்டகுணத்தையும்..


“சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை, நரகம் வேண்டாமே என்றுதான் மன்றாடுகிறேன் எனக்காகவும் என்னைப்போன்ற திருநங்கைகளுக்காகவும்”

என்ற புரிதல்கள் வேண்டிய விருப்பங்களுடனும் இந்த புத்தகத்தை படைத்துள்ளார்.

கடைவீதிகளிலோ அல்லது மற்ற பொது இடங்களிலோ திருநங்கைகளை எதிர்கொள்ளும் நம் மனப்பாங்கை இப்புத்தகம் முற்றிலுமாக மாற்றிவிடக்கூடிய சாத்தியக்கூற்கள் அதிகம் உண்டு।

புரிதல்களோடும், தேடல்களோடும் வாழ்வியல் சதுரங்களை கடந்து கொண்டிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.

Friday, January 11, 2008

என் சமீபத்திய பயணம் – ஒரு பகிர்தல் - பகுதி -1


பயணங்களும், பயணக்கட்டுரைகளும் என்வரையில் மிகவும் சுவாரசியமானவை. அதுவும் சில கட்டுரைகள் நம்முள் அவர்களது பயண அனுபவங்களை விதைப்பதாக அமையும் அளவிற்கு மிகவும் கோர்வையாக ஒரு பார்வையாளர் நிலையில் இருந்து படைக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் என் முதல் முயற்சியாக என் மிக சமீபத்திய பயண அனுபங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம்.

எனது இந்த மொத்த பயண நேரங்களிலும் நம் சக பதிவர்களும் என்னோடு பயணித்தனர் என்று சொன்னால் மிகையாகாது. எனவே இந்த பதிவில் அவ்வப்போது வந்து சென்ற சக பதிவர்களின் நினைவுகளையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

இந்த விடுமுறைக்கு (25/12 – 01/01) வெளியூர் செல்வது என்று முடிவெடுத்த தருணம் மோகன்தாஸின்” காஷ்மீர் பயணம் பற்றிய பதிவு. அதைப்பார்த்த கணம் தான் இந்த பதிவிற்கான வித்து.

எங்கள் பயணங்கள் எப்போதும் முன்பே பதிவு செய்யப்பட்டோ அல்லது திட்டமிட்டோ அமையக்கூடியது அல்ல முதல் நாள் முடிவு செய்து மறுநாள் செல்வது போல் தான் அமையும். அது போல் எங்கு செல்வது, தங்குவது என்பவைகளையும் முடிவு செய்வதே இல்லை அந்தந்த நாள்களின் இயல்புக்கு தக்கபடி விட்டுவிடுவது வழக்கம். இந்த முறையும் வழக்கப்படி எந்த ஒரு முஸ்தீபும் இல்லாமல் தொடங்கியது எங்கள் பயணம் ஆனால் என் சொந்த ஊருக்குச்சென்று அங்குள்ள கோவிலுக்கு செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு திட்டமிடல் மட்டும் இருந்தது.

25.12.07.அன்று சென்னை இசைவிழாக்காலங்களில் பாடகர் யேசுதாசின் மிக முக்கியமான கச்சேரி ஒன்று உண்டு, பாரம்பரியம் மிக்க இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் ஜெர்மன் ஹாலில் நடைபெறும் அந்த கச்சேரியை மட்டும் நாங்கள் எந்த வருடமும் தவறவிடுவதே இல்லை எனவே மறுநாள் (26.12) கிளம்பினால் போதும் என்ற முடிவு திங்கள் காலை (24.12)வரை இருந்தது, பின் எங்கள் ஊர் கோவில் விஷயமாக எங்கள் கிராமத்தில் பேசியபோது தான் வியாழக்கிழமை (27.12) எங்கள் கிராமத்தின் மிக முக்கிய, எங்கள் பால்யவயதின் அதிமுக்கிய நிகழ்வாகக் கருதப்பட்ட “சாஸ்தாங்கோவில் (ஐய்யப்பன் கோவில்) மண்டல பூஜை” இருப்பது தெரியவந்தது எனவே அதன் முக்கியத்துவம் கருதியும் அந்த அனுபவத்தை என் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள தீர்மானித்தும் யேசுதாஸ் கச்சேரியை விடுத்து 25.12 புறப்படத்தீர்மானித்தோம்

முன்பெல்லாம் இரவு முழுவதும் வண்டி ஓட்டிச்செல்வது வழக்கம் துணையாக பாடகர் யேசுதாஸ், மற்றும் எம்.எஸ், பி.சுசீலா பாடல்களோடு எங்க வீட்டு ரங்கமணி (அப்படி விளிப்பது தானே நம் பதிவுலக வழக்கம்) காரோட்ட நான் அருகிருந்து ஏதோ நானே காரோட்டுவது போல் சாலையை விட்டு கண்ணை எடுக்காமல் இசையை அனுபவித்தபடி செல்வோம். இடையிடயே ஒரு தேனிருக்காக எங்காவது நிறுத்தும் வழக்கம் உண்டு, பிள்ளைகள் பின்னிருக்கையில் உறங்கிவிடுவர். ஆனால் இப்போதெல்லாம் இரவு காரோட்ட முடிவதில்லை எனவே எங்கள் பயணங்கள் விடியற்காலையில் துவங்கிவிடும், இம்முறையும் விடியற்காலை 6 மணிக்கு இட்லி, மிளகாய் பொடி, கத்தரிக்காய் வத்த குழம்பு, சாதம், (சிப்ஸ் போர வழியில வாங்கிக்கலாம்) சகிதம் கிளம்பியாச்சு, முதல் இலக்கு இரவு 7 மணிக்குள் தூத்துக்குடி (ஒரு காலத்தில் மிகச்சிறந்த பாண்டிய துறைமுகமான கொற்கையிடம் இருந்து அதன் தனிச்சிறப்பை தனதாக்கிக்கொண்ட, முன்னொரு காலத்தில் முத்துக்குளித்தலுக்கு பெயர்பெற்ற, இப்பொழுது பவழப்பாறை தீவுகளுக்கும், புரோட்டாவிற்கும், இலங்கையுடனான தோணி போக்குவரத்திற்கும் பெயர் பெற்ற முத்துநகரம்) என்று துவங்கியது….................................(தொடரும்)

(பி.கு) தொடரலாம் தானே…….

Thursday, January 10, 2008

சில கவிதைகள்........


ஆதிக்கம்


குறிப்புகளுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
அடங்க மறுக்கும்
என் (உன்) இயலாமைகளுக்கு
மறைப்பாய் என் (உன்)ஆதிக்க முகமூடிகள்


நொடியில் மரணம்


ஆயத்தங்களில்லாத புறப்பாடுகளில்
எனக்கு ஆர்வம் அதிகம்
எந்த கடைசி கணங்களின்
பரபரப்புமின்றி
விடைபெறுதல்களின் தொந்தரவுகளின்றி
யாருக்காகவும் எழுதாத வரிகளாய்
எதற்காகவும் காத்திராத
அந்த தனித்தன்மை மிகுந்த பயணங்களில்
எனக்கென்றுமே
ஆச்சரியம் அதிகம்


ரௌத்திரம் பழகு


ரௌத்ரத்தின் வேர்களுக்கு
என்றும் உயிருண்டு – ஆனாலும்
அதன் பாசன மதகுகளின்
தாழ்களுக்கு பெயர்களும் பலவுண்டு
காதல், அன்பு, பொறுமை, பணிவு
இன்னும் புதியதாய்..”தேடல்”
ஆனாலும் ஆணிவேர்களை அசைத்துப்பார்த்து
பேருண்மைகளை வெளிக்கொணரும்
வெள்ளந்தி துரோகங்கள்
என் அத்தனை முகமூடிகளையும்
களவெடுத்து போகும்.

Tuesday, January 8, 2008

பால்ய நகரங்களின் மீதான என் மறுபார்வைகள்


மூளையின் ஞாபகக்குவியல்களில்
முகங்களுக்கான பெயர்களைத்
தேடித்தேடி அலைந்த வேளையில்
இருப்பின் தொடர்புகள் அறுந்துபோனது

நிஜங்களின் தொடர்பில்லாத
சுவடுகளின் மெய்யிருப்பு – என்
தேடுதல்களுக்கான வேட்கையில்
துணை செய்ய மறுத்தது

எழுத மறந்த கவிதைவரிகளில்
தொலந்துபோன உணர்வுகளாய்
தொடர்பில்லாத் தேடல்கள்
அர்த்தமற்றதானது

தேடல்களின் கணங்கள்
விடுபட்ட அந்நிமிடம் மட்டுமே
முழுமையாய்
இருப்புடன் ஒன்ற முடிந்தது


மீண்டும் புதியதாய்
என் ஞாபகத்திவலைகள் – இம்முறை
பெயர்களோடோ – இல்லை
முகங்களோடோ இணையாது
வெறும் இருப்பினோடு மட்டுமே

இனி தொடர்புமை இல்லாத
என் தேடல் வழிகளில்
அவ்வப்போதய இருப்புகளே
சுவைகளாய்.