Tuesday, July 5, 2016

குகைப் பெருமாள் ஸ்வாமி - ரெட்டியார் மடம் - பகுதி - 2

ஆளரவமே இல்லாத இடத்தில் ஒரு நாலுக்கும் மேற்பட்டோர் வெகு மும்மராமாக காட்டு வேலை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழையவும் அவர்கள் மதிய உணவுக்காக கரை ஏறி கைகால் அலம்பி வரவும் சரியாக இருந்தது. அங்கு சாய வேட்டியுடன் பூசாரிக் களையில் இருந்த ஒருவரிடம் இந்த சாமியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றதும் 
அவர் இருங்க ஒரு புத்தகம் இருந்திச்சு இருக்கான்னு பாக்கறேன் என்றபடி நகர்ந்து போனார். மதிய உணவு நேரம் தாண்டி இருந்ததால் கையோடு கொண்டு சென்ற உணவை அந்தப் புத்தகம் வருவதற்கு முன் உண்ணலாம் என்றும் முடிவு செய்தோம்.
அப்போது ஒரு வயதானவர் வந்து பேசத்துவங்கினார் நாங்கள் எங்கள் தட்டுகளில் வைப்பது போல அவருக்கும் ஒரு தட்டில் அனைத்து உணவுகளையும் வைத்து குடுக்க அந்தக் கோவிலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கென அங்கிருந்த சமையல் அறையில் சமைத்த உணவோடு அவர்களும் ஒரு பக்கத்தில் அமர்ந்து உண்ணத்துவங்கினார்கள். நாங்கள் அவர்களுக்கும் உணவை பகிர்ந்தளிக்கத் துவங்க அந்தப் பெரியவர் இருங்க எங்க சாமிக்கு வைச்சது நீங்களும் சாப்பிடுங்க என்றபடி பருப்புசாதம் அவர்களது பாத்திரத்தில் இருந்து எங்களுக்கு பரிமாறச் சொல்ல அங்கிருந்த ஒருவர் எங்களுக்கும் தட்டு நிறைய பருப்பு சாதம் பறி மாறினார். புத்தகம் எடுக்கப் போன ஆளைக் காணததால் இந்த வயதானவரிடம் பேச்சுக் கொடுக்கத் துவங்கினோம். இந்த சாமியைப் பற்றித் தெரியுமா கொஞ்சம் சொல்லுங்களேன் என்று சொன்னதும் அவர் தெரியுமாவா... என்று சொல்ல ஆரம்பித்த கதை இது தான்
1800 களின் பிற்பகுதியில் 4 ஆண்சகோதரர்களில் 4 வதாகப் பிறந்தவர் தான் பெருமாள் எனப் பெயர்கொண்ட இந்த ஸ்வாமி. சிறுவயதில் மற்றவர்களைப் போலவே இயல்பாக காடு கழனிக்கு வேலைக்குச் சென்றாலும் நாள் தோறும் காலையும் மாலையும் அங்கிருக்கும் ஓடும் ஆற்று நீரில் இறங்கி நின்றபடி அர்க்யம் செய்யாது (கைகள மூன்று முறை நீர் அள்ளி சூரியனை தியானித்து முன்னோர்களுக்கும் தேவர்களுக்கும் எனப் பிரார்தித்து நீரை விடுவது) உணவு உண்டதில்லையாம். திருமணப் பருவம் வர வீட்டில் உள்ளவர்கள் மாற்றுத் திறனாளியான உறவுக்கார பெண்மணியை மணம் செய்து வைக்க முடிவு செய்ய இவர் தனக்கு திருமணமே வேண்டாமென மறுக்க வேறு வழியில்லாமல் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தார்களாம். இயற்கை உபாதை எனச் சொல்லி வெளியில் தப்பிச் சென்றவர் 20 வருடங்களுக்கு மேல் வடக்கே இருந்ததாகவும் திரும்பி வந்து 15 வருடங்களுக்கு மேல் பழனியில் வாழ்ந்து வந்ததாகவும் பின் அவரது சொந்த ஊரான அர்த்தநாரிப் பாளையத்திற்கு திரும்பி வந்துள்ளார்.
மிக நீண்ட சடை முடியும் ஒளி பொருந்திய கண்களும் வஜ்ரம் போன்ற அவரது உடல் வாகையும் கண்ட உறவினர்களால் அவரை முன்பு போல் நெருங்க முடியவில்லை. அவரும் இப்பொழுது கோவில் இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்து கொள்வதுண்டாம். அங்கிருக்கும் மக்களு சின்ன சின்ன அற்புதங்கள் மூலம் அவர்களை காக்கத்துவங்க கொஞ்சம் கொஞ்சமாக அவர் சடைச்சாமியானார்.
சில வருஷங்களுக்குப் பிறகு அதாவது 1957ல் 22 நாட்கள் தியானத்தில் அமரும் முன் இன்ன தேதியில் இன்ன நடசத்திரத்தில் இந்த மணித்துளிக்குப் பிறகு தன்னை அடக்கம் செய்து விடலாம் என்று கூறியவர்.
அந்த எளிய மக்களுக்கு "பெருஞ்சாமிங்கலாம் செத்தா இப்படிச் செய்வாங்க" என்று ஜீவ சமாதி செய்யும் வழிமுறைகளைக் கூறி நான் இந்த உடம்பு குப்பை இதுக்குள்ள இருக்க உசுருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி அமர்ந்திருக்கிறார்.
அவர் சொன்னபடி பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று அவரை அமர்ந்த நிலையிலே வைத்து அவரைச் சுற்றி விபூதி, மஞ்சள், கற்பூரம், முதலான அனைத்து சித்த வழிபாட்டு பூசனை முறைப்படியான பொருட்களையும் வைத்து அவரைச் சுற்றி அரை அடி இடம் விட்டு 41 வகையான பூசைகள் செய்து முதல் நிலையில் மேடை அமைத்து அதற்கும் 41 வகை பூசை செய்து அதன் மேலே லிங்கமும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள்.
இத்தனையும் நடக்கும் பொழுது 19 வயதான சர்கரைப் பொன்னு என்ற இளைஞர் அந்தப் பணியில் தன்னை இணைத்துக் கொள்கிறார் அன்றிலிருந்து இன்று வரை வருடா வருடம் குருபூஜை செய்வதில் இருந்து கோவிலை பலவகையில் விரிவு செய்வதோடு அதைப் பேணிக்காக்கவும் செய்கிறார். அவர் வேறு யாருமல்ல எங்களோடு பேசிக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் தான். அப்பொழுது கூட கோவிலைச் சுற்றி மேலும் மரம் நடுவதற்காக ஆட்களை அழைத்து வந்து அவர்களுக்கு உணவிற்கு கூட ஏற்பாடு செய்து தன் கடமையை செய்து கொண்டிருக்கிறார்
கேட்கக்கேட்க எங்களுக்குள் ஆச்சர்யம் 20 நிமிடங்களுக்கு ஆளரவமற்ற இடத்தில் இத்தனை மனிதர்களைக் கொண்டுவந்து அவரது பிராசதத்தை உண்ண வைத்து அவரை பற்றி அவரோடு மிக நெருங்கியந்தொடர்பு கொண்ட ஒருவரை எங்களுடன் பேச வைத்து தன்னைப் பற்றிய முழு விபரங்களை மண் வாசனையான மொழியோடு கேட்க வைத்தது அவரது பெருங்க கருணை என்றே எங்களுக்குத் தோன்ற நெகிழ்ந்த மனதோடு அவர் சந்நிதியில் போய் அமர்ந்தால் எண்கோண மேற்கூரையோடு கூடிய அந்த சந்நிதி எங்களை பல கோணங்களில் உள்வாங்கிக் கொண்டது.
எங்களின் எந்த முயற்சியும் இன்றி உயர்ந்த ஆன்மீக அனுபவத்தை எங்களுக்கு பாடமாய் நடத்தி எங்களை மொத்தமாய் தன் கட்டுக்குள் எடுத்துக் கொண்டார். அங்கிருந்த மூன்று மணி நேரங்களுக்கும் மேலான மணித் துளிகள் மின்னலெனப் பறந்தது. எஜமானைச் சுற்றி வரும் வளர்ப்பு நாய் போல் அங்கிருந்து பிரிய மனமின்றி சுற்றி சுற்றி வந்த வண்ணம் இருந்து தயங்கி தயங்கி கிளம்ப யத்தனைக்கையில் மற்றுமொரு 78 வயது முதியவர் தன்னுடைய 13 வயதில் அவரை பார்த்து பின் 17 வயதில் அவரது சமாதி நேரத்தில் உடனிருந்தவர் எங்களை அழைத்து அவரைப் பற்றி மேலும் சில தகவல்களைக் கூறி இந்த மண்ணுல கால் வைச்சாச்சுல்ல பிடிச்சிப்பாரு வருவீங்க திருப்பியும் வருவீங்க போயிட்டு வாங்க என்று கண்கள் மின்ன மனதார வாழ்த்தி அனுப்பினார். எங்கள் மனம் புரிந்து அந்த குகை பெருமாள் சாமியே எங்களுக்கு விடை கொடுத்தது போல் உணர முழுமையாய் அவரை உணர்வில் சுமந்து அங்கிருந்து கிளம்பினோம்.குகைப் பெருமாள் ஸ்வாமி - ரெட்டியார் மடம் - பகுதி - 1இன்று காலை கோடிஸ்வாமிகள் தரிசனம் வேண்டி புரவிப்பாளையம் செல்ல வேண்டியது என்ற முந்தைய நாள் முடிவின் படி காலையில் அங்கு செல்ல ஆயத்தமானோம். மனதெல்லாம் ஒரு கூதுகுலம் ஏனெனில் பகவான் யோகிராம் சுரத்குமார் தன் பக்தர்களை புரவிப்பாளையம் சென்று வரப் பணிப்பதுண்டு என்று அறிந்ததால் மனதில் பகவான் ஆஸ்ரமம் செல்லும் எண்ணமே நிரம்பியிருந்தது.
புரவிப்பாளையத்தில் கோடிஸ்வாமிகள் ஆசிகளையும் அதிர்வுகளையும் உள்வாங்கி நிரம்பித் தளும்பி வரும் போது ரகுவின் சேதி வந்தது முடிந்தால் ரெட்டியார் மடம் வழி கேட்டு சென்று வாருங்கள் என்று. இதுவரை நாங்கள் இந்த ஊர் பற்றி கேள்விப்பட்டதில்லை, கூகுள் ஆணடவரை தேடினாலும் ஒரு பதில் இல்லை ரகுவையே மீண்டும் தொடர்பு கொள்ளலாம் என்றால் அவர் லைனில் இல்லை. சரி வழி கேட்டால் ஆநேகம் பேருக்கு பொள்ளாச்சி அருகில் என்பது மட்டுமே தெரிந்திருந்தது.
எப்படியும் தவறவிடக்கூடாது என்ற உள் மன உந்துதல் ஆனால் நிலமை சாதகமாக இல்லை. இதற்கிடையில் ரகுவிடம் இருந்து அது ஜீவ சமாதி ஆனால் எனக்கு வழி சரியாகத் தெரியாது எனப் பதில் வந்தது. சரி பொள்ளாச்சி வந்து கேட்டதும் ரெட்டியார் மடம் பற்றிக் கேட்டால் வழி சொன்னார்கள் ஆனால் ஜீவ சமாதி என்று கேட்டால் ஏதோ புரியதா மொழியில் கேட்ட மாதிரி விழித்துப் பார்த்தார்கள். கொஞ்சம் நம்பிக்கை மீதம் படபடப்பு என்று ரெட்டியார் மடம் தேடி தோழியர்களும் நானும், ஸ்ரீயும் நன்னுவும் வளைந்து நெளிந்து செல்லும் கிரமாத்துச் சாலையில் பயணிக்கத்துவங்கி ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு தடவை வழி விசாரித்துச் சென்று கொண்டிருந்தோம். ஒரு 3 கிலோமீட்டருக்கு முன்பு கேட்ட ஒருவர் ஒரு நம்பிக்கை தந்தார்.
அவர் பெயர் குகைசாமி என்றும் அவரது கோவில் இந்த வழியாகப் போனால் வரும் என்று சொல்ல. முதல் முறையாக மனதில் அமைதி ஏற்பட்டது. அவர் சொன்ன வழியில் செல்கையில் ஒரு இடத்தில் குகை பெருமாள் சாமி கோவில் என்று ஒரு சிறிய ப்ளக்ஸ் பேனர் வழிகாட்டியது அந்த வழியில் திரும்பிய கொஞ்ச நேரத்தில் ஆட்களே இல்லாத ஒரு கோவில் வர இது தானோ என்றபடி உள்ளே சென்றால் முதல் பார்வையிலேயே பார்க்க அது ஒரு பிள்ளையார் கோவில் போலத் தெரிந்தது அக்கம் பக்கம் யாரும் இல்லை சரி என்று வண்டியை விட்டு இறங்காமலே திருப்பி மேலும் கரடுமுரடான மண் பாதையில் பயணிக்கத்துவங்க ஒரு கட்டத்துக்கு மேல் இனி எந்த ஆள் நடமாட்டமும் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என்ற நிலையில் வந்து நின்றோம். என்ன செய்ய என்று திகைத்து நின்று சுற்றும் முற்றும் பார்க்க எங்கிருந்தோ முள் காட்டில் இருந்து இரண்டு பெண்மணிகள் வர அவர்களிடம் வழி கேட்க அவர் " அந்த ஆத்துக்குப்பக்கத்துல இருக்குங்க" என்று நாங்கள் ஏற்கனவே பிள்ளையார் கோவில் என்று கடந்து வந்த கோவிலின் அடையாளத்தைச் சொன்னார். இது என்னடா சோதனை என்று உருகியபடி அந்த கரடுமுரடான பாதையில் திரும்பி வந்து அந்தக் கோவிலுக்குள் நுழைந்தால் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது