Tuesday, June 29, 2010

இசையெனும் இன்பவெள்ளம்

சில சமயம் சில பாடல்கள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டுவிடும் மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டபொழுதும் இன்னும் இன்னும் என கேட்கத்தூண்டும்

சமீபத்தில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக என்னை அலைக்கழித்த இரண்டு பாடல்களுண்டு.
படம் - இருவர் - பாடியவர்கள் - உன்னிக்கிருஷ்ணண், பாம்பே ஜெயஸ்ரீ.

நருமுகையே நருமுகையே நீயொரு நாழிகை நில்லாய், செங்கனி ஊரிய வாய் திரந்து நீயொரு திருமொழி சொல்லாய், அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரல நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா? திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் வென்னிரப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய், அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன பாண்டினாடனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன, நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும், இளைத்தேன் துடித்தேன் பொருக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை.

யாயும் யாயும் யாராகியரோனென்ரு நேர்ந்ததென்ன யானும் நீயும் எவ்வழியரிதும் உரவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன,
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்புவந்த பாடல்தானென்றாலும் அதை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது அதன் மொழிக்கட்டு எத்தனை முறை கேட்டபோதும் "யாயும் யாயும் யாரகியரும்" என்று பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கேட்கும் பொழுது நமையறியாமல் உள்ளே ஒரு விசும்பலும் காரணமில்லாமலே அவ்வைக்கிழவியும் கூடவே பாரதியும் உள்ளே தோன்றுவதை ஒவ்வொருமுறையும் தவிர்க்க முடியவில்லை.

அடுத்த பாடல் படம் - என்னைத்தெரியுமா- பாடியவர்கள் - கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
என்ன மாற்றமோ, நம்ப வில்லையே, ஆனலும் என் நெஞ்சம் இதனை நம்ப சொல்லுதே, அவளை பார் என்றதே, அழகாய் ஆபத்தில் அது மாடிக் கொண்டதே, இது என்ன சந்தோஷமோ இருந்தாலும் சந்தேகமோ.

உன்னை முன்பே தெரியுமென்று மனது சொல்வதும் யேனோ, உனை நானும் பார்த்து நொடியில நெஞ்சோட்ய் கலவரமோ, எந்தன் விழியில் நுழைந்து புது வழியை காட்டி
பல கனவை கொடுத்து நீ போகிராய். வரும் காலை ஒளி அதனை மாலை இருள் தடுத்து நிறுத்த முடிந்ததில் நியாயம் ஏதுமல்லையே.

காலம் நதியை போல கடந்து போக கல்லென கிடந்தனே எந்தன் பாதை போவாய் கேட்கையில் என் கையில் விடைகள் இல்லை நீ விழுந்த இடத்தை விட்டு
எழுந்து நடந்து செல்ல அந்த இடத்தில் ஏன் நிற்கிறாய்

கடும் புயலில் மாட்டிக் கோன்டு படகு தத்தளிக்கும் வழியை காட்டி விடு கரயில் ஏற்றி விட வா. அடியடி நீ யே உந்தன் கேள்வியாய் ஏன் உனக்குள் தேடிப் போகிராய்
உன் தனிமை உனக்கு புடிக்குதா என்னிடம் பகிர்ந்து கோள் தொடு வானம் சொந்தமின்றி கரையும் சொந்தமின்றி குழம்பும் மலை போல மனதில் குழப்பம் ஏனோ


இந்தப்பாடலின் தனித்தன்மைக்கு காரணம் பல உண்டு. முதன்மையாய் வரிகளை ஆங்கில மொழியின் அசைவுகளைக்கொண்டு கட்டமைத்திருந்தாலும் தமிழின் இனிமை கொஞ்சமும் குறையாமல் சிறு முனை கூட முறியாமல் கொண்டு வந்து தந்திருக்கும் பாடகியின் ஆழமான குரலசைவு,. எந்த வரிகளும் ஒரு முறைக்கு மேல் மீண்டு வராத கட்டமைப்பு, வாத்தியக்கருவிகளின் இசையைக்கொண்டே பல்லவி சரணம் இவைகளை மிக நேர்த்தியாக இணைத்திருக்கும் பாங்கு இவையெல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு நொடியில் சட்டென் முடியும் பாடல் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தப் பாடல் முடியும் தருவாயில் மனமெங்கும் ஒற்றை ஆர்மோனியத்தோடும் ஓங்கிய குரலோடும் அமர்ந்து கொண்டிருப்பார் மெல்லிசை மன்னர். ஏன் என்ற கேள்விக்கு என்னிடம் விடையேதும் இல்லை. சில நல்ல உணர்வுகளை இனம் பிரிக்க கற்றுக்கொள்ளாது அப்படியே அனுபவித்துக்கொள்வதுகூட வாழ்வின் இனிமையை கூட்டத்தான் செய்கிறது.

அடையாளங்களைத்தொலைத்தவர்கள் - பெயர்களிலும்


அடையாளங்களுக்கென உருவான பெயர்களுக்கென்றதோர் அடையாளங்கள் உண்டென்பெதில் ஒத்த கருத்துடையவர்கள் பலருண்டு.

ஒலி கொண்டுணர்ந்து வாழ்வை கடந்த பொழுதுகளில் நம் ஆதி குடிகளுக்கென பெயர்களெதுவும் இருந்திருக்குமா என்பது சந்தேகம தான்.
நிலம் விட்டு குலம் விட்டு வாழ்வின் வெம்மையை உணர்ந்தோ இல்லை நாமதனை பரிணாமமென்றோ அழைத்த பொழுதுகளில் தான் அவரவருக்கான பெயர்கள் தோன்றியிருக்க முடியுமல்லவா அது கூட ஒரு குடியின் பெயராகவோ, நிலத்தின் பெயராகவோ அல்லது அவரறிந்த பொருட்களின் பெயராகவோதான் இருந்திருக்க முடியும்.

பின்வந்த நாட்களில் பெயர் என்பது அவர் பிறந்த நிலம் குலம் சார்ந்தோ சிலசமயம் கொள்கை சார்ந்தோ இருப்பது என்றாயிற்று
என் பள்ளிக்காலங்களில் எங்கள் தமிழாசிரியர் குடும்பப்பெயர்கள் எல்லாமே தேசப்பற்று மிக்க பெயர்களாயிருக்கும் (சுதந்திர தேவி, விடுதலை, குருநாதன்....) காரணம் கேட்ட பொழுது தந்தையார் விடுதலைப்போராட்ட காலகட்டங்களில் மிகவும் தீவிரமாக போராட்டாங்களில் ஈடுபட்ட காரணத்தினால் நாடு சுதந்திரம் அடைந்த ஆனந்தில் அங்கணம் பெயர்சூட்டினார் என்று சொல்வதுண்டு.

பிறகு வந்த காலங்களில் மிக அழகான தமிழ்பெயர்கள் பழக்கத்தில் வந்தது அதில் என்னை மிகவும் கவர்ந்த பெயர் இளம்பிறை, இதை ஒரு பெயராக வைக்கத்தோன்றுவதற்குண்டான காரணம் என்னாவாயிருக்கும் என்று இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளைகளில் கூட கேள்வி எழுகிறது. அதற்கான பதில் வழக்கம் போல பலவந்து விலகிச்செல்லும் போதும் அந்தப்பெயரில் இருக்கும் நளினமும் கம்பீரமும் கலந்த கலவை என்னை வசீகரிக்கத்தான் செய்கிறது.

பின் சில பெயர்கள் மிகவும் பொதுவாக செல்லப்பிராணிகளுக்கென வைக்கத்தான் என்பது போலவும் உண்டாயிற்று. இவையெல்லாவற்றையும் தாண்டி
இப்பொழுதுள்ள பெயர்களுக்கென தனித்த அடையாளமோ,கொள்கை சார்ந்த விழிப்புணர்வோ, நிலம், குலம், குடும்பம் சார்ந்த பின்புலமோ இருப்பதாக தெரியவில்லை.
மிக எளிதாக சினிம கலைஞர்கள் பெயர் பழக்கத்தில் வந்து விட்டது. அதையும் தாண்டி வடமாநிலப்பெயர்கள் பெரிய அளவில் மக்களின் மனதை ஆக்கிரமிக்கத்துவங்கி விட்டது. அதுதான் நாகரீகம் என்பது பொலவும் ஒரு உணர்வும் தோன்றிவிட்டது.

பொதுவில் அலுவலகத்தில் புழங்கு மொழி என்பது பெரும்பாலும் ஆங்கிலமாய் போனதால் பெயர்களென்பது தன் அடையாளங்களை முற்றிலும் அழித்துக்கொண்டது.

இப்பொழுதெல்லாம் பெயர்கள் வெறும் உடல்களின் அடையாளமாய் தானுள்ளது பின் நம் பண்டைய நாகரீகத்தின், தொலைத்துக்கொண்டிருக்கும் மானுடத்தின், அடையாளம் என்பது என்னவாயிருக்கும்?

Monday, June 28, 2010

முகமூடிக்கவிதைகள் - 12


கவிதை யெழுதவென தனியான
நேரமென்றெதுவும் இல்லாது போனது
நீ என்னோடுடனான நாட்களில்

பேனாவின் மசிகளில்
எப்போதும் ஒளிந்துகொண்டேயிருந்தது
கவிதைக்கான வரிகள்
என்னுள் ஒளிர்ந்துகொண்டிருக்கும்
உணர்வின் வாசல்களில்
தோரணமாடிக்கொண்டிருந்தது
தமிழின் சில வரிகள்

முகமூடிகளுக்குப்புறம்பான
இவ்வுலகில்
இதற்கென பெயரெதுவும் இடாது போனாலும்
இட்ட பல பெயர்களில்
பொருந்திக்கொண்ட உன் வடிவங்களுக்கு
நாங்கள்
இரசனை, ஆர்வம், உறவு, உணர்வு, காதலென
அடையாளமளித்துக்கொண்டோம்.

சிறு பூவின் வாசத்தில்
பனியின் ஸ்பரிசத்தில்
நேசத்தின் பிணைப்பில்
அழகின் ஆக்ரமிப்பில்
நரம்புகளில் வழிந்தோடும்
இசையின் லயத்தில்
என்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
மொழியின் கரங்களுக்குள்
நான் எனைப்புதைத்து கொண்டேயிருக்கிறேன்

ஓசையின்றி ஒளிரும் நிலவின்
குளுமையைப்போல்
எனை நிரப்பும்
உன் நினைவுகளுக்கும்
நானிடும் கடிவாளமென
என் முகமூடியின் நிறம்மட்டும்
மாறிக்கொண்டேயிருக்கிறது.

Sunday, June 27, 2010

காத்திருத்தல், கடந்து போதல் மற்றும் வாழ்க்கை


காத்திருத்தல் என்பதும் கடந்து போதல் என்பதும் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகள். சில சமயம் உறவுகளுக்காகவும் நிகழ்வுகளுக்காகவும் காத்திருத்தல் தாண்டி வாழ்விற்கான காத்திருத்தலை உணர்ந்து கொள்ளும் தருணத்தில் தான் வாழ்க்கை தன் வான வேடிக்கையை நிகழ்த்தத்துவங்குகிறது. தெளிந்து தவழும் நீரோடை குறுகி இறங்கும் பொழுது பொங்கி வரும் பேரருவியென வீழுகின்ற அற்புதம் போலத்தான் வாழ்வும். பல சமயம் தெளிந்து தவழ்ந்து வந்துகொண்டிருக்கும் வாழ்வு காலமெனும் சமவெளியின் பாறைகளில் எங்கோ ஒன்று தாழ்ந்தும் மற்றது உயர்ந்தும் இருக்க அதில் நாமறியாமலே நம்மை கொண்டு செல்கிறது. குமுறி பொங்கி விழும் காட்டருவியென நிகழ்வுகள் நமையிழுத்துச்செல்லுகிறது உயர்வும் தாழ்வுமான வாழ்க்கைப்பாறைகளில் ஒரு நாள் சரிந்து கலந்து மண்ணோடு உறவாடுவோம் என்ற நினைப்பேதுமின்றி நாம் அருவி மட்டுமேயெனவும், வீழுதலோடு வாழ்வு முடிந்ததெனவும் கொண்டால் மீண்டு வரும் பொழுதில் நமெக்கான வாழ்விற்கான காத்திருத்தல் தான் அதுவென்ற உணர்வேதுமிண்றி வீணே கலங்கிச் சேறாகவும் கூடும். அதுவன்றி இதுவும் இருத்தலுக்கான இயல்பென்ற உணர்வோடு கடந்து போக முற்படுகையில் மட்டுமே நமக்கான கடலைச்சென்று சேரும் வரை வாழ்வின் பல்வேறு உருசிகளை உணர்ந்தும் உருவேற்றியும் செல்ல முடிகிறது.

உறவுகளுக்கான காத்திருத்தல் தரும் ஏமாற்றத்தையும் நிகழ்வுகளுக்கான காத்திருத்தல் தரும் எதிர்பார்ப்பையும் மீறிய பார்வையை கற்றுத்தருகிறது வாழ்வெனும் புத்தகம். இதைக்கற்றுக்கொள்வதற்கு திறந்த கண்களும் மனதும் மட்டுமின்றி நம்பிக்கையெனும் வெளிச்சமும் இருந்தால் மட்டுமே காத்திருத்தலையும் கடந்து போதலையும் அனுபவமாக்கிக்கொள்ளமுடிகிறது.

கற்றுக்கொள்வதற்கான விழைதல்


எத்தனை சொல்லியும் மாளாது இன்னும் இன்னும் என என்னுள் தாகித்துக்கொல்கிறது. மைதானத்தில் உருண்டும் சொல்லும் கால்பந்தின் விசையைப்போல் எல்லாப்பக்கத்திலும் அலைக்கழிக்கப்படுகிற்து மனது. எந்த ஒரு வேலையின் முடிவிலும் ஆரம்பத்திலும் ஏற்படும் ஆசுவாசம் ஏதும் இதில் இல்லை, முடிவின்மையின் மிகத்தெளிவான உருவாக எந்த ஒரு வியூகத்திலும் அடங்காது எல்லா இடங்களிலும் நீக்கமற வியாபித்து நின்று தன் ஆளுமையை உணர்த்திக்கொண்டேயிருக்கிறது கற்றுக்கொள்வதற்கான விழைதல்.


காலை வேளையில் பளீரெனத்துலங்கும் வெள்ளை புள்ளிகளில் துவங்கி முடியும் கோலத்தில் துவங்கி, சமயலறையில் ஏதோ ஒரு சுவையில் ஒளிந்து கொள்கிறது. புதியதென எதையொ வட்டிலில் இட்டு உண்ணக்காத்திருக்கும் மகன்களுக்குத்தரும் வேளையில் ஓங்கி நிற்கிறது, இன்றென்ன உடையென்று எடுத்து காதில் தோடும் கூடச்சேர்ந்த வர்ணங்களில் வளைகளும் இட்டு நறுவி உடுத்தி உதட்டுச்சாயம் இட்டு நெற்றியில் திலகமிடும் வேளயில் கேள்வியாய் நின்று இதை மாற்றி இட்டால் எவ்வாறு இருக்குமென புதியதொரு முயற்சியில் தலை நீட்டிப்பார்க்கிறது.


எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அலைபேசியின் பேச்சினூடே அன்றைய வேலையின் ஆரம்பத்தில் காலூன்றி நிற்கிறது கற்றுக்கொண்டே ஆக வேண்டிய பல ஆகம விதிகள், வீழ்ந்தெழுந்தும், சில சமயம் வீழ்த்தவும் வேண்டியிருக்கும் இந்த உலகமயமாக்கலுக்குள்ளான உலகில் இதுவன்றி தப்பித்தல் இல்லை என்ற முடிவின் விளிம்பில் நம்மை சிறை வைத்துவிடுகிறது.


தாளமும் ராகமும் லயமும் கண்மூடி கிறங்க வைக்கும் குரலும் அதிகம் அறிந்து கொள்ளாத உலகின் வாயில்களை திறந்து வைத்து பாடச்சொல்கிறது, இசையின் வால்பிடித்து மனதை ஆடச்செய்கிறது. வாசிப்பின் வாசனைகளை உணர்த்தும் சஞ்சிகைகள் ஒவ்வொரு நொடியிலும் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்கள் நமக்கு காணக்கிடைக்காத ஒர் பேருலகின் இருப்பை உணரச்செய்கிறது அடுத்தது என்னவெண்று புத்தகங்களை தேடச்சொல்கிறது, பகிர்ந்துகொள்வதற்கென தோழமைகளை உருவாக்கிக்கொள்ளச்செய்கிறது.

உறவுகள் அவரவர் உலகங்களை பகிர்ந்து கொள்ளும் வேளையில் மாற்றுலகில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் நாம் கற்றுக்கொள்வதற்கான வரிசைகளில் கற்களை நட்டுக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.


இத்தனையும் தாண்டி வந்து அன்றைய நாளின் முடிவில் கண்மூடி கணக்கெடுத்தால் ஒவ்வொரு நொடியிலும் காத்திருந்த நமக்கான பாடங்களை வரிசைப்படுத்தக்கூட முடிகிறது ஆனால் வடித்து வைப்பதற்கான வார்த்தைகளின்றி எத்தனை சொல்லியும் மாளாது இன்னும் இன்னும் என என்னுள் தாகித்துக்கொல்கிறது கற்றுக்கொள்வதற்கான விழைதல்.