Sunday, May 14, 2017

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 3

 (இறுதிப் பகுதி)
இதுதான் இணையத்தில் காணக்கிடைக்கும் செய்தி. அங்கு வந்த பெரிய பூசாரி இதில் ஒரு 30% அங்கும் இங்கும் மாற்றிச் சொன்னார்.
1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.
பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர்.
மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்.
அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.
அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார்.
அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது.
இவை தவிர வேறு இடங்களில் நாராயண யோகீஸ்வரரைப் பற்றி செய்திகள் இணையத்தில் இல்லை. ஆனால் வேலாம்பாள் யோகிஸ்வரி என்ற யோகினியைப் பற்றிய குறிப்புகளில் அவரது குரு என நாராயண யோகீஸ்வரரைப் பற்றியும் அவர் காளையார் கோவிலில் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. அவரே யோகினிக்கு வழிகாட்டியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு எந்த சித்த புருஷர்கள் வரிசையிலும் இவரைப் பற்றிய குறிப்பு இல்லை. இவையனைத்தையும் தாண்டி அங்கு இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்து நமக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி ஆன பின்னரும் உயிர்ப்புடன் நம்மை அரவணைக்கும் அந்த பெருங்கருணையின் இருப்பு மிக நன்றாகப் புரிகிறது.
இவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் இன்றும் இவரை குலசாமியாக வந்து வணங்கி மீள்வதாகவும் குடும்ப நிகழ்சிகளை அவரது சந்நிதியில் நடத்துவதாக அந்த பெரியவர் சொன்னதில் இருந்து கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து தொடர்ந்தால் இன்னமும் செய்திகளை சேகரிக்க முடியும் என்று தோன்றுகிறது.
முற்றும்.

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 2


பக்கத்தில் இருந்த சலுனில் கேட்டதில் அவர்கள் ஒரு சாவியைக் கொடுத்து திறந்து கும்பிட்டுட்டு போங்க என்று சொன்னார்கள். கேட்டை திறந்து உள்ளே போனால் ஏதோ பழங்கால தெப்பக்குளத்து படிகள் போல ஒரு பாதை இறங்கிச் செல்ல இடது புறம் ஒரு புதிய மண்டபம் அதற்கு ஒரு கேட் அதுவும் பூட்டியிருந்தது. ஏறிக் குதித்து விடலாமா என்று யோசிக்கும் போதே ஸ்ரீ என் மைன்ட் வாய்ஸ் கேட்ட மாதிரி கேட் உயரம் ஜாஸ்தி என்று சொன்னார். இப்படியே விட்டா ஸ்ரீ திரும்பி போயிடலாம்னு சொல்லிடுவாரோன்னு பயந்துட்டு “நீ இங்கயே இரு நான் போய் இந்த உள் கேட் சாவியை வாங்கிட்டு வரேன்னு” பதிலுக்கு காத்திராமால் வந்த வழியே ஒடினேன். அங்க போய் கேட்டால் அந்தச் சாவி இங்க இல்லங்க பஸ்டாண்டு பக்கத்துல இளவழுதி பூக்கடைன்னு கேளுங்க அங்க இருக்கும்னு சொல்ல கொஞ்ச தூ.....ரத்தில் இருந்த அந்தப் பூக்கடையை நோக்கி ஓடினேன்.
அங்கே போய் கேட்டதும் அதில் இருந்த ஒரு பையன் ஓஹ் சாமி பாக்கணுமா நீங்க போங்க நான் வந்திடறேன்னு சொன்னாப்ல, சரின்னு திரும்பி நடந்து போய் கிட்டிருக்கும் போதே ஸ்ரீ போன் பண்றார். பூசாரி வந்தாச்சு நீ எங்க போயிட்டேன்னு (அவரு எங்கிட்ட சொல்லிட்டு டூ வீலர்ல போயிட்டார்). தோ வந்துட்டேன்னு போனா அதுக்குள்ள அவர் சந்நிதி திறந்து வைத்திருந்தார்.
நன்றாக தரிசித்து விட்டு சாமியைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னதும் அந்தப் பையனுக்கு ஒன்னும் தெரியல, கொலசாமி கும்பிட வருவாங்க, வியாதி தீரும், பிசினஸ் நல்லா வரும், குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பிறக்கும் அப்படின்னு திருப்பி திருப்பிச் சொல்ல சரி இது வேலைக்காவதுன்னு தியானத்துக்கு உட்கார்ந்து விட்டேன்.
அதுவரை இருந்த பரபரப்பு அகன்று நல்ல அமைதி தண்ணென்று உள்ளே அமைய ஆழ்ந்து செல்ல முடிந்தது. நல்ல அனலடிக்கும் வெய்யிலில் புறம் காய்ந்து கொண்டிருக்க குளிர்ச்சியான கிரானைட் மண்டபத்துள் அகம் குளிர்ந்து அடங்கத்துவங்கியது. மனம் ஒன்றி தளும்பி கண் திறக்க அவர் அங்கிருந்த லிங்கத்தின் மேலிருந்த பூமாலையை எடுத்து பிரசாதமாக ஸ்ரீயின் கழுத்தில் இட்டு விபூதி தரவும் கிளம்பத் தயாராகும் போது “கொஞ்சம் இருங்க எங்க அப்பாக்கு போன் பண்ணியிருக்கேன் வந்துகிட்டிருக்காக, அவுக வந்து சாமி பத்தி சொல்லுவாக என்று சொல்லவும் சரி என்று சிறிது நேரம் காத்திருக்கத் துவங்கினோம்.தொடரும் ....





நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 1


வழக்கம் போல அங்க உள்ள ஜீவசமாதி விபரம் பார்த்து வைத்துக் கொண்டேன். முதல் கோவில் (சோமேசர் சந்நிதி ) அர்சகரிடம் கேட்டதில் அவர் அவசர அவசரமாக ஏதோ எலக்ட்ரிகல் கடை பெயர் சொல்லி அதற்கு அருகில் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு போய் விட்டார்.
இரண்டாவது கோவிலை விடுத்து மூன்றாவது கோவில் (சுந்தரேசர் சந்நிதி) அர்சகரிடம் "இங்க ஒரு ஜீவ சமாதி..சித்தர் ..என்று ஆரம்பிக்கவும் அவர் இங்க அப்படில்லாம் ஒன்னும் இல்லிங்க என்று சொல்ல இன்னொருவர் அகத்தியர் கோவிலா என்று கேட்க, மற்றுமொருவர் அருணகிரி நாதர் கோவிலா என்று கேட்க அவர்கள் இருவருக்கும் அகத்தியர் சித்தரா இல்லையா என்ற விஷயத்தில் சண்டை வேறு வந்து விட்டது. எனக்கு தர்மசங்கடமாகப் போயிற்று. இது அநேக இடங்களில் நடப்பது தான். உள்ளூர் மக்களுக்கு பெரும்பாலும் இவை தெரிவதில்லை. அதுவரை "உன் வேலையை ஆரம்பிச்சாச்சா ஸ்திதியில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஜோதியில் ஐக்கியமானார். "சிவகங்கை சமஸ்தானம் மெயின்டெயின் பண்றாங்களாமே, ஏதோ எலக்டிரிகல் கடைக்குப் பக்கத்தில் என்று எடுத்துக் கொடுக்க (நாமதான் வண்டில போகும்போதே அத்தனை வரலாறையும் வாசிச்சு காட்டி இல்லேன்னா சொல்லிடுவோமே.. பெரிய மெமரி ஹெல்ப் ஆகும். சிலசமயம் எனக்கு ஊர் பெயர் திசை எல்லாம் சட்டுன்னு நியாபகத்துக்கு வராது) ஒஹ் அதுவா அது சமஸ்தான சிவன் கோவில்ங்க என்று வழி சொன்னார்கள்...
அங்கு போனால் ஒரு பாழ் மனைக்கு அழி கேட் போட்டு சாவி போட்டு பூட்டியிருந்த இடத்தைத் தான் பார்க்க முடிந்தது...
அப்படியே விட்டு விடுவோமா என்ன??
தொடரும்....

Entropy Vs Enlightenment – பகுதி 4

 (நிறைவுப் பகுதி - ஒரு வழியா முடிச்சிட்டேன் :) )
அந்த மரத்துண்டு கையில் இருந்து கிழே விழும் பொழுது ஏதேனும் தடை ஏற்பட்டு இடையில் ஒரு தளத்தில் தங்க நேரும் பொழுது சில சமயம் அது குவாண்டம் டனலிங் (Quantum Tunneling) கான்செப்ட் படி சுற்றி இருக்கும் ஆற்றல் சக்தியை பயன் படுத்திக் கொள்வதன் மூலம் தனது இருப்பைச் சென்று அடைகிறது. அவ்வாறு செயலாற்றும் பொழுது அதன் எடையற்ற தன்மையே இந்த டனலிங் முயற்சியின் முதல் காரணி.
இதில் மரக்கட்டைக்குப் பதில் பந்து ஒன்றை உருவகப் படுத்திக் கொள்வோம் என்றால் இன்னமும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் -( a ball which is lacking the energy to penetrate a hurdle will become still. However In quantum mechanics, these particles can, with a very small probability, tunnel to the other side, thus crossing the barrier. Here, the "ball" could, in a sense, borrow energy from its surroundings to tunnel through the obstacle)
இப்பொழுது ஞானமடைதல் (enlightenment) என்ற நிலையில் நாம் எடையற்று இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்புகளை முழுவதும் அறிந்து விலகும் முயற்சியில் உண்டாகும் தடைகளை இந்த பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக தாண்டி பிரபஞ்சத்தின் இருப்பினோடு ஒன்றிணைந்து விடுகிறோம்.
அப்பொழுதும் இந்த இருப்பு உள்ளது அனால் இந்த பிரபஞ்சத்தினோடு கலந்த ஒத்திசைவாக எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலைக்குச் சென்று விடுகிறது.
எனவே இருக்கிறது... ஆனால் இல்லை, அதாவது ஆன்மா தன் எண்ட்ரோபி நிலையை அடைந்து விடுகிறது.
அறிவியலாளருக்கு அது அறிவியல் ஆன்மீகர்களுக்கு அது ஆன்மீகம் அவ்வளவே.

Entropy Vs Enlightenment – பகுதி 3

ஒரு கை அகல மரக்கட்டையை எடுத்துக் கொள்வோம். அதை நாம் நம் மற்றொரு கையால் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கென செயல்படும் விசை இல்லை ஆனால் அதற்குள் பொட்டேன்ஷியல் எனர்ஜி (திறன்படும் செயல்) (Potential Energy - the energy possessed by a body by virtue of its position relative to others, stresses within itself, electric charge, and other factors) உள்ளது.
நாம் நம் கையில் இருந்து அதை விடுவிக்கும் பொழுது கைநெடிக் எனர்ஜியின் மூலம் (இயங்கு ஆற்றல்) (Kinetic Energy - energy which a body possesses by virtue of being in motion ) தரையைச் சென்று ஓய்வடைகிறது. ஆங்கிலத்தில் அதை Resting (be placed or supported so as to stay in a specified position ) என்று சொல்லலாம்.
அதாவது அதன் செயலற்ற தன்மைக்குள் செல்கிறது. இன்னமும் சொல்வதென்றால் அது தனது எண்ட்ரோபி நிலையை அடைகிறது. இன்னொரு விசை அதை இயக்குமானால் அது மீண்டும் இயங்கு நிலைக்கு மாறும் அதுவரை அது அந்த நிலையில் நீடித்திருக்கும்.
அதுவே அந்த மரக்கட்டையை நாம் ஒரு அரவை இயந்திரத்தில் இட்டு அரைக்கும் பொழுது அது துகள் துகளாக மாறி எடையற்ற நிலைக்குச் செல்கிறது இனி அது மரக்கட்டை இல்லை மரத்துகள், அதன் எடை மாற்றம், கொள்கிறது. . இதுதான் என்று தனித்து ஒரு துகளாக காணும் அடையாளமற்று அணு அளவு ஆகிறது. இப்பொழுது அந்தத் துகள் தரையைச் சென்று அடைந்ததும் அது காற்றுடனோ நீருடனோ, பூமியுடனோ (பஞ்ச பூதங்களில்) கலந்து விடுகிறதே தவிர மீண்டும் அது தனித்து இன்னொரு பொருளாக உருக் கொள்வதில்லை.
இதில் மற்றொரு பரிணாமமும் உள்ளது.....
தொடரும்....

Entropy Vs Enlightenment – பகுதி 2


இந்தப் பிறப்பில் நாம் என்பது இரண்டாக உள்ளது அதாவது உடல், மற்றும் அதனுள் இருக்கும் ஆன்மா. இதில் இந்த உடல் என்ட்ரோபியை அடைவதற்கு முன் அதனுள் இருக்கும் ஆன்மா என்ட்ரோபி அடைந்து விடுவதே என்லைட்மென்ட்.
அவ்வாறு அடைந்து விடுமென்றால் இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்பு விடுபட்டு இந்த உடலின் கர்ம வினைகளோடான தளைகள் அற்றுப் போகிறது. அப்பொழுது இந்த ஆன்மா ஒரு துகளாக துளியாக இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கிறதே அன்றி இன்னொரு பிறப்பிற்கு ஏதுவாவதில்லை.
இங்கு வள்ளலார் ஒளி உடம்பாக ஜோதியில் கலந்ததை ஒரு புரிதலுக்காக நினைவு படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறில்லாத பட்சத்தில் இந்த உடலின் எடையோடு கூடி அதன் கர்ம தளைகளை ஏற்று மற்றொரு பிறப்பிற்கு ஆட்படுகிறது.
இதை ஒரு சிறிய எடுத்துக் காட்டின் மூலமாக பார்க்கலாம்.
தொடரும்...

Entropy Vs Enlightenment - பகுதி - 1

பெரும்பாலும் எங்கள் வீட்டில் அம்மா மகன்களுக்குள்ளான உரையாடலில் ஆன்மீக அறிவியல் விசாராங்கள் அதிகம் இருக்கும். அவர்கள் அறிவியலாக அறிந்து கொண்டதை பகிரும்போது நான் அதை ஆன்மீகப் பார்வையில் விளக்குவேன். சிலசமயம் அவர்களே அதை ஆன்மீகப் பார்வையில் ஒப்புமைப் படுத்தி என்னிடம் கொண்டு வருவார்கள்.
இன்றும் அதுபோல நித்தா ஒரு வார்த்தைக்கான ஒப்புமையோடு வந்தான். அவன் அறிவியல் சொல்ல நான் ஆன்மீகம் சொல்ல பேசிப் பேசி ஒரு நிலையை அடைந்தோம்.
அந்த அறிவியல வார்த்தை Entropy. அதை  Enlightenment உடன் ஒப்புமைப் படுத்தி ஒரு விசாரம்.
எண்ட்ரோபி என்றால் இயற்பியல் பிராகாரம் “ a thermodynamic quantity representing the unavailability of a system's thermal energy for conversion into mechanical work, often interpreted as the degree of disorder or randomness in the system” இப்படித்தான் சொல்கிறது
அதாவது ஒரு பொருள் தனது செயல்படக்கூடிய ஆற்றல் சக்தியை விடுப்பதன் மூலமாக அடுத்து இயங்குவதற்கான நிலையற்று ஒரு பொருளாக தங்கி விடுகிறது. As per quantum physics, every body has to reach its ground state or vacuum state or ultimate resting stage. அதாவது ஒவ்வொரு பொருளும் தன்னுடைய சரிஇயல்பு நிலைக்கு, அதன் கடைசி இருப்பு நிலைக்கு சென்றாக வேண்டும்.
இன்னமும் சொல்லப் போனால் இந்த உடலின் பிறப்பு என்பது இறப்பாக மாறும் பொழுது அது எண்ட்ரோபி என்று சொல்லலாம். அதாவது உடல் இருக்கிறது ஆனால் அதனால் இயங்க முடியாது. எனவே எல்லா உயிர்களும் பிறப்பு இறப்பு சுழலில் ஒரு கட்டத்தில் என்ட்ரோபியை அடைகிறது. இது அறிவியல். இப்பொழுது ஆன்மீகப் பார்வைக்குச் செல்வோம்.

தொடரும்....