Friday, August 15, 2014

உரத்த சிந்தனை – உடை – என்ன செய்யப் போகிறோம்?



சிற்றாடை இடை உடுத்திய சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை இப்போதெல்லாம் கண்களால் காண்பதும் அரிது என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே. இனி கற்பனையில் கூட மனதில் காண முடியாது என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பது  பத பதைப்பிற்கு உள்ளாக்குகிறது.

இப்போதிருக்கும் பெண்களில் மிகப்பெரும் சதவிகிதத்தினர்  சுடிதார் போன்ற உடைகளையே மிகவும் சௌகரியமாக எண்ணும் நிலை உள்ளது. இதற்கான காரணமாக நாம் பலவற்றைச் சொன்னாலும் அடிப்படையான காரணம் பள்ளி கல்லூரி காலங்களில் அதுவே சீருடையாக மாறியதும் ஒரு காரணம் என்பது என் எண்ணம். தொடர்ந்து ஒரே விதமான சௌகர்யமான விதத்தில் உடை அணிந்தவர்களுக்கு கொஞ்சம் அதிக கவனம் தேவைப்படும் வேறு மாதிரியான உடைக்கு (பாவாடை தாவணி, புடவை) மாறுவதில் சிரமம் கண்டிபாய் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த அடிப்படை காரணத்தினாலேயே முப்பது முப்பத்தைந்து வயதிற்கு கீழ் உள்ள இப்போதைய பெண்கள் பெரும்பாலும் புடவை அணியும் வழக்கத்தை தவிர்த்து வருகின்றனர்.

இப்போதைய நவீன நகர்புறப் பள்ளிகள் நம்மை இன்னும் ஒரு படி பின்னுக்கு அல்லது முன்னுக்கு தள்ளுகிறார்கள்.  இது போன்ற பள்ளிகளில் இப்போதெல்லாம் மூன்றாவது வகுப்பு வரை ஆண் பிள்ளைகளைப் போல அரை கால் சராயும் காலர் வைத்த சட்டையுமே  சீருடையாக பெண் குழந்தைகளுக்கும் பின்பற்றப் படுகிறது. பின் மேல் வகுப்பு செல்லும் பொது அது  முழு கால் சராயாக மாறுகிறது. 

இந்தக்குழந்தைகள் இப்போதே கூட பட்டுப்பாவாடை சட்டை, ப்ராக், குட்டை பாவாடை போன்ற உடைகளை விரும்புவதில்லை. விசேஷ வீடுகளுக்கோ, கோவில்களுக்கோ செல்வதற்கு கூட அவர்கள் ஷார்ட்ஸ், டி ஷர்ட், பேன்ட்ஸ், போன்ற உடைகளை அணிவதையே விரும்புவதாக அநேக பெற்றோர்கள் கூற கேட்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால் இன்று பாவாடை தாவணி, புடவைக்கு நேர்ந்தது நாளை சுடிதாருக்கும் நேரும் என்பது என் எண்ணம்.

இது வெறும் உடை சம்பந்தமானது மட்டுமல்ல பெண்களின் நடை, மனம் குணம் மற்றும் அவர்களின் நளினம் சார்ந்ததும் கூட. நானும் கூட எல்லாவிதமான உடைகளையும் அணியும் வழக்கம் உள்ளவள் தான். அதனாலேயே உடை தரும் உள்ளம் மற்றும் உடல்மொழி  மாற்றங்களை வெகு தெளிவாக என்னால் யூகிக்க முடிகிறது.

இந்த பதிவை படித்து விட்டு என்னை பத்தாம் பசலியாகவோ இல்லை கட்டுப்பெட்டியாகவோ நினைக்கத் தோன்றினால் அவரவர் ஆழ் மனைதை கேட்டுப்பாருங்கள்  இந்தக் கவலை உண்மை எனச் சொல்வீர்கள்.

களவையும் கற்று மறக்கலாம் ஆனால் களவு மட்டுமே கற்கலாகதல்லாவா? பெண்மையும் அதன் நளினமும் தொலைந்து போவது ஏற்புடையது தானா? நாம் என்ன செய்யப்போகிறோம்??

Wednesday, August 13, 2014

உரத்த சிந்தனை – உறவுகள் – ஒரு சுய பரிசோதனையின் தேவை


காலம் காலமாய் நம்முள் கனன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அன்றைய கூட்டுக் குடும்ப காலகட்டமாகட்டும், இன்றைய தனிக்குடித்தன காலமாகட்டும் இரத்த சொந்தக்களுக்கிடையேயான பூசல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முகலோபனம் இல்லாத உறவுகளை இன்றும் எத்தனயோ வீடுகளில் நாம் மிகவும் வேதனையோடு எதிர் கொள்ளத்தான் செய்கிறோம். இதில் நம் தவறென்ன அவர் தவறென்ன என்பதை தாண்டி ஒரு சூல் உறவு என்பதை நாம் யோசிக்கின்றோமா? என்பது மட்டுமே நம் கேள்வி, இதையே நீர் அடித்து நீர் விலகுமா என்றும் கேட்பதுண்டு. 

ஒருகுடும்பம் ஒரு குழந்தை என்ற இன்றைய குடும்ப அமைப்பில் நம்மைத் தாண்டி அந்த குழந்தைகளுக்கு உருத்தானவர் யார்? பெரியப்பா, சித்தப்பா, அத்தை பெரியம்மா, சித்தி, மாமா, இவர்தம்  குழந்தைகளை உறவகாவும் உயிராகவும் நினைக்கும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளை வளர்த்திருக்கிறோமா? என்பது நாம் பதிலுறுக்க வேண்டிய ஒரு கேள்வி.

எழுபது என்பது வருடங்களுக்கு முன் ஒரே வீட்டில் பிறந்து நகமும் சதையுமாய் வளர்ந்து காலச்சூழலில் ஒருவருக்கு ஒருவர் அந்நியமாய் ஆனா சகோதர சகோதரியின் உறவு அவர்கள் இறப்பிலும் இணையவில்லை. இந்த விலகலின் காரணங்கள் மட்டும் கதை கதையாய் இருவர் குடும்பங்களிலும் பேசுவது தாண்டி உண்மையான காரணம் புரியாமலே இரு குடும்பமும் இன்று வரை தனித்திருக்கும் எத்தனையோ கதை நாம் அறிந்ததே. ஆனால் இருவரில் கடைசியாய் எஞ்சியவர் இறக்கும் தருவாயில் சொன்ன சில நெகிழ்வான வார்த்தைகளில் இன்றைய தலைமுறை உறவுகளை புதுப்பிக்க விழையும் சாத்தியக்கூறுகளும் நாம் அறிந்ததே. மிக்க சந்தோஷம், ஆனால் காலம் கடந்த இந்த ஞானத்தின் இடையில் நாமும் நம் தலைமுறைகளும் எத்தனை உணர்வு பூர்வமான  நிகழ்வுகளை,  சந்திப்புகளை இழந்திருப்போம்?  குறைந்த பட்சம் நாமாவது அந்த தவறை செய்யாதிருக்க என்ன செய்கிறோம்? நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி இது.

உறவுகளை சுயலாபம் தாண்டிப் பார்க்கும் மனோபாவம் நம்மில் உள்ளதா? அதையும் தாண்டி கருத்து வேறுபாடுகள் எழும் சமயங்களில் அந்த கசப்புக்களை வரும் தலைமுறைக்குள்ளும்  செலுத்தாதிருக்கிறோமா? ஒருவருக்கொருவர் விலகாதிருக்கிறோமா? இவைகளுக்கான பதிலை நாம் யாரோடும் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை ஆனால் நம்முள் ஒரு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

Monday, August 11, 2014

உரத்த சிந்தனை – மொழி – எப்படி சரி செய்யப் போகிறோம்??


மதிய உணவு இடைவேளை என்பது சில சமயம் இயந்திரத்தனமாயும், சில சமயம் ஆசுவாசமாகவும் அமைவதுண்டு. நேற்றைய நாள் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

மதிய உணவை சில நண்பர்களோடு உண்ண நேர்ந்தது. பேச்சு அவர்கள் குழந்தைகளின் புத்திசாலித் தனங்களைப் பற்றியும், விளையாட்டைப்பற்றியும் போய்க்கொண்டிருந்தது. மெதுவாக பாடத்திட்டதைப்பற்றியும் திரும்பியது. எல்லோருமே அவரவர் குழந்தைகளை ICSE/CBSE பாடத்திட்டத்தில்  தான் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது மொழியாக பொதுவில் ஹிந்தியை எடுத்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா, அம்மா இருவருமே ஹிந்தி படித்திருக்கவில்லை ஒரு சிலர் பிள்ளைகளுக்காக தாங்கள் படிப்பதாகவும் சிலர் தனி வகுப்பில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இதில் தெலுங்கர், தமிழர், மலையாளி என கலவையாக எல்லா மாநிலத்தவரும் இருந்தனர். வீட்டில் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகிறார்களாம். ஆனால் இரண்டாம் மொழிப்பாடமாக தாய்மொழியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது .  இதில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது. நம் மாநிலங்களில் உள்ள இது போன்ற பள்ளிகளில் அந்தந்த மாநில மொழியே பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கும். அந்த வகையில் மற்ற மாநிலத்தாருக்கு அதில் ஆட்சேபமும் அசௌகரியமும் இருக்க  வாய்ப்புண்டு.

ஆனாலும் இப்படியே போனால் நம் சந்ததியினர் அவரவர் தாய் மொழியில்  எழுதவோ படிக்கவோ தெரியாமல் பேச மட்டுமே தெரிந்தவராவர். இதுவே ஒரு மொழியின் அழிவின் ஆரம்பம் ஆகாதா? என் குழந்தைகளை எடுத்துகொண்டாலும் அவர்களின் வாசிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே உள்ளது. பல தரப்பட்ட புத்தகங்களை வாசித்தாலும் அவை நம் தாய் மொழியில் இல்லை. இதில் மேலும் வருத்தம் என்னவென்றால் இருவருமே தமிழையே இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்தவர்கள்.

இன்றைய வணிக சூழலில் அவரவர் மாநிலங்களிலேயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் மிகவும் அரிது என்பதாலும், யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்வே மிகவும் சிறந்தது என்றாலும் எழுத்துக்களை தொலைக்கும் மொழியை நாம் எவ்வாறு காப்பது? அரிதாக அரிதாகி மறைந்து போன நம் எத்தனையோ குல/குடும்ப வழக்கங்களைப்போல நாம் நம் மொழியையும் தொலைத்து விடப்போகிறோமா? அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமையை எப்படி சரிசெய்யப் போகிறோம்??

இது போல இன்னும் சில கேள்விகள் உண்டு?......