Wednesday, November 19, 2008

முகமூடிக்கவிதைகள் - 5

ஜன்னல் கம்பிகளில்
சொருகிய
தீரைச்சீலையாய்
மனது சிக்கிக்கொள்கிறது
ஏதேனும் ஆழத்தில்

வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்



***********************

தவறாகப்புரிந்துகொள்ளப்படுமென்று
விழுங்கிய வார்த்தைகள்
விருட்சமானது

காய்களோ கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.


*******************************


Tuesday, November 18, 2008

இரயில் சிநேகிதம் - இல்லை விரோதம்.


அவர் ஏதாவது பள்ளி தலமை ஆசிரியராய் இருக்கலாம், இல்லை ஏதாவது நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி அதிகாரியாக இருக்கலாம், இல்லை அரசு அலுவலகங்களில் இருக்கும் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக இருக்கலாம். மேலும் பெண்குழந்தைகளற்ற தகப்பனாய் இருக்கலாம். நெற்றியில் சிறியதாய் வைத்திருந்த குங்குமப்பொட்டும், சிறிதே நரைத்திருந்த மெல்லிய மீசையும், சிறிய கண்களும், முழுக்கை வெளிர்நீலச்சட்டையும், அடர் நீலத்தில் அணிந்திருந்த முழு கால்சராயும் எனக்கு இதைத்தான் உணர்த்திக்கொண்டிருந்தன.

எனக்கு நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த மஞ்சளும் நீலமும் கலந்த, கழுத்தில் கருகமணியிட்டிருந்த அந்த சுரிதார் பெண்மணி உரத்த குரலில் ஆட்சேபித்துக்கொண்டிருக்கும் போதுதான் நான் அந்த மனிதரை இத்தனை தீவிரமாகப் பார்த்தேன்.

அவள் மனம் வெகுண்டெழுந்தவளாக தீவிரமாக குரலெழுப்பி கூறிக்கொண்டிருந்தாள். " டோண்ட் லுக் அட் லைக் திஸ், நான் பார்த்ததில் எந்த தவறும் இல்லை, அதற்காக நீங்கள் அவ்வாறு பார்க்க வேண்டிய தேவை இல்லை, முதல் வகுப்பில் பெண்களுக்கென்ற தனி இருக்கையும், அடுத்தது பொதுவான இருக்கையும் தான். இடமிருந்தால் நாங்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம், ஆனால் பெண்கள் என்று எழுதியிருக்கும் இருக்கைகளில் வேறு இடமில்லாதபோது ஆண்கள் அமர்ந்திருப்பது தவறுதான் அதுவும் ஒரு பெண் இடமின்றி நின்று கொண்டு வர அந்த இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து வருவது தவறுதான் அதனால் தான் நான் அவ்வாறு பார்த்தேன் அதற்காக நான் இந்த இருக்கையில் அமர்ந்ததும் நீங்கள் இப்படி பார்க்கவேண்டிய தேவையில்லை. ஆண்களின் இருக்கை என்று குறிப்பிட்டிருந்தால் நாங்கள் இவ்வாறு ஆக்கிரமித்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று கூறிவிட்டு கையிலிருந்த புத்தகத்தில் தன்னை அமிழ்த்திக்கொள்வேதே போன்று அமைதியானாள்.

அன்றென்னவோ அந்த மின்சார வண்டியின் முதல் வகுப்பில் கூட்டம் அதிகம் இல்லைதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கைகள் காலியாகத்தான் இருந்தது. அந்த பெண்மணி இத்தனை உணர்ச்சிவசப்பட்டதில் உடன் பாடு இல்லையென்றாலும் யாரை நோக்கி இங்கணம் பேசுகிறாள் என்பதைக்காணவே நான் அவரை சிறிது ஊன்றிப்பார்த்தேன்.

இந்த நேரடித்தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போலும், மிகவும் தர்ம சங்கடத்துடனும் ஒப்புமையற்றும் உடனே அந்த பெண்கள் எனக்குறிப்பிட்டிருந்த இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லையென்றாலும் அதில் முள்மேல் அமர்வது போல் அமர்ந்திருந்தார். மிகவும் தாழ்ந்த குரலில் அடிபட்ட மனோபாவத்துடன் அருகிருப்பவரிடம் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். இத்தனையையும் நான் மவுனமாக கவனித்துக்கொண்டே இருந்தேன்.

அடுத்த நிலையம் வந்தது மீண்டும் வண்டி கிளம்பியதும் அந்த இருக்கை காலியாக இருந்தது. நானும் அவர் இறங்கி விட்டாரோ என எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க அவரோ வாயிலுக்கு மிகவும் பக்கத்தில் சென்று நின்றுகொண்டே என்னையே நோக்கிக்கொண்டிருந்தார். நான் சிறிதே துணுக்குற்றேன். பின் கையில் இருந்த புத்தகத்துள் ஆழ்ந்து போனேன். மேலும் பல இருக்கைகள் காலியாகிக்கொண்டே போனது ஆனால் அவர் மட்டும் எந்த இருக்கையிலும் அமராமல் நின்றுகொண்டே வந்தார். நான் சிலசமயம் ஏன் இவ்வாறு என எண்ணி அவரைப்பார்த்துவிட்டு என் புத்தகத்தில் மூழ்கிக்கொண்டே இருந்தேன்.

நான் இறங்கும் நிறுத்தத்திற்கு ஒரு நிறுத்தம் முன்பாக அவர் இறங்கிக்கொண்டார். சன்னல் ஓரம் எனைக்கடந்து சென்றபோது பார்த்த பார்வையில் கொஞ்சமும் தோழைமையில்லை மாறாக வெகு விரோதமான கண்களூடே கடந்து போனார்.

அந்தப்பெண்மணியின் பேச்சை விட என் பார்வையே அவருக்கு மிகவும் தர்மசங்கடத்தை தந்திருக்கும் போல.....

Wednesday, November 12, 2008

டெங்கு காய்ச்சலும்- விழிப்புணர்வும்.

ரொம்ப பொறுப்பா பதிவுகள்ள கவனம் செலுத்தி எழுத ஆரம்பிச்சிருந்தேன். ஆனா என்னோட அத்தனை நேரத்தையும் ,கவனத்தையும், முக்கியமா உணர்வுகளையும் கடந்த பத்து நாட்களாக களவெடுத்துக்கொண்டு போனது என் மகனின் சுகவீனம். இது எதுக்கு இந்த டைரி குறிப்புன்னு? கேக்கலாம் ஆனாலும் மத்தவங்களுக்கு இது உபயோகப்படுமேங்கறது தான் முக்கிய காரணம். இரண்டாவது வழக்கம் போல மக்களை நிம்மதியா எவ்ளோ நாளைக்குத்தான் விட்டுவைக்கிறது அதான்.

போன வாரத்துல இரண்டாவது நாள் சின்னவன் பள்ளியில் இருந்து வரும்போது காய்ச்சல் என்று வந்தான் சரி எல்லா இடத்துலேயும் தான் இப்போ வருதேன்னு வழக்கமா குடுக்கற குரோசின், இத்யாதி இத்யாதி மருந்துகளை குடுத்து தூங்க வைச்சா இரவு ஒரு மணிக்கு மேல 103 டிகிரிக்கு காய்ச்சல் பொரிய ஆரம்பிச்சது குறையவே இல்லை. சரின்னு பக்கத்துல இருக்கற ஒரு பெரிய மருத்துவமனையை நோக்கி காலை ஆறு மணிக்கே படையெடுத்தாச்சு அங்க உள்ள அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் பார்த்துட்டு டோலோ 250 யும் இன்னும் சில மருந்து களும் கொடுத்து அனுப்பிச்சார். அந்த டோஸ் குடுத்தும் மூணு மணி நேரம் கழிச்சும் எந்த முன்னேற்றமும் இல்லை, எனக்கு எங்கயோ தப்புன்னு புரிய ஆரம்பிச்சது அதனால அதே மருத்துவமனையோட புறநோயாளிகள் பிரிவின் குழந்தைகள் மருத்துவ பகுதிக்கு போனா
முதல் தவறு புரிஞ்சது. கொடுத்திருந்த மாத்திரையின் அளவு பத்தாது அவனுடைய எடையை கணக்கில் கொண்டு குறைந்த 650வாது கொடுத்திருக்க வேண்டுமாம். அனுபவம் மிக்க அந்த மருத்துவர் அவர்கள் மருத்துவமனையின் தவறுக்காக வருந்தியபடி அளவை மாற்றிக்கொடுத்தார். எங்களுக்கு ஒரு சமாதானம் சரி இதைக்கொடுத்தால் சரியாகிவிடும் என்று, ஆனாலும் அவர் ரொம்ப தீவிரமாய் பரிசோதித்து விட்டு எதற்கும் இரத்தம் மற்றும் மூத்திரம் பரிசோதனைக்கு கொடுத்து விட்டுச்செல்லுங்கள் என்றும், நாங்கள் கொடுத்த மருந்து தவிர்த்து வேறு ஏதும் கொடுக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாய்ச்சொன்னார் (ஒரு வேளை அவர் சொல்லுமுன்னே என்னிடம் இருந்து மருந்து பட்டியலை சொன்னதால் இருக்கலாம் என்றும் எனக்கு தோன்றியது) ஆனாலும் ஏன் அப்படி என்று கேட்டதால் அறிகுறிகளைக்கண்டால் டெங்கு காய்ச்சல் போல் உள்ளது அதனால் டோலோ வைத்தவிர வேறு ஏதும் கொடுத்தால் அதன் வீர்யம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் அதுதானா என்று தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என்றும் அதனால அதுவரை மிக கவனாமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார். (வழக்கமாக எல்லா மருத்துவர்களும் பயப்படுத்தும் வகைதானே இது என்று எண்ணிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்)

ஆனாலும் காய்ச்சல் 103ஐ விட்டு குறையவே இல்லை முகம் வேறு மிகவும் சிவந்து குழந்தை தவிக்க ஆரம்பித்து விட்டான். அதன் காரணமாய் மறுநாள் காலையிலேயே கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமத்தித்து விட்டோம். தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் 103ஐ விட்டு குறையவே இல்லை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய மருத்துவமனையைக்குறித்த சந்தேகம் வர ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் தினமும் இரத்தப்பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக சனிக்கிழமையன்று காய்ச்சல் நிதானத்திற்கு வர ஆரம்பித்தது எங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, ஆனால் மருத்துவர்கள் பரபரக்க ஆரம்பித்தார்கள் உடனே ஒரு இரத்த பரிசோதனைக்கு ஆணையிட்டார்கள் முடிவுகளைப்பார்த்ததும் தான் அந்த விபரீதம் புரிந்தது.

இரத்தின் வெள்ளை அனுக்களில் பிளேட்லட் கவுண்ட் குறந்திருந்தது முந்தைய நாள 2லட்சம் அனுக்கள் இருந்த நிலையில் மறுநாள் 1லட்சத்து 52ஆயிரம் மட்டுமே இருந்தது. அடுத்த 7மணி நேரத்தில் மறுபடியும் சோதிக்க வேண்டும் என்றும் குறைந்திருந்தால் ப்ளேட்லட் டிரான்ஸ்பார்ம் பண்ண வேண்டும் என்றும் அந்த வசதி இந்த மருத்துவமனையில் இல்லை என்றும் சென்னையில் மூன்று மருத்துவமனைகளே இந்த துறையில் சிறந்தது அதனால் அங்கு மாற்ற வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்கள், அப்போது ஆரம்பித்தது எங்கள் மன அழுத்தம்.

இரவு 10மணி சோதனையில் எண்ணிக்கை 82ஆயிரமாக குறைந்திருந்தது. 50ஆயிரத்துக்கும் குறைந்தால் அதன் விளைவுகள் மிகக்கடினம் என்றும், இரத்தம் உறையும் குணம் அதை விட்டுச்சென்று விடும் என்றும், அடி ஏதும் படாமலேயே இரத்தம் உடம்புகளில் கசிய ஆரம்பிக்கும் என்றும் கூறி அந்த மூன்று மருத்துவ மனைகளையும் தொடர்பு கொண்டார்கள் அதில் இரண்டில் இடமில்லை என்று சொல்லி மூன்றாவதில் அனுமதி கொடுத்தார்கள். இரவு 12.30மணிக்கு அந்த மருத்தவ மனையில் இருந்து விடுபட்டு மற்றொரு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தோம் ஆனால் அந்த இடைப்பட்ட 2மணி நேரத்திலேயே 10ஆயிரம் எண்ணிக்கை குறைந்து 72ஆயிரத்து வந்து விட்டது.

உடனே பையனை ஐ.சி.யூ (தீவிர சிகிச்சை பிரிவா)வில் வைத்து வைத்தியம் செய்ய ஆரம்பித்தார்கள் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் அவனது ப்ளேட்லட் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. கூடவே வாந்தி பேதியும் கட்டுக்குள் வந்தது.

இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் ஆனாலும் மருத்து மாத்திரைகளும் கட்டுபாடானா சாப்பாடு முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் பல இடங்களில் இது போன்ற டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாகவும் தமிழகத்தின் மற்ற இடங்களில் இது பரவுவதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள்.

காரணம் - கொசுக்கடி

அறிகுறி
1. தொடர்ந்து அதிக அளவில் காய்ச்சல்
2. உடலில் சிகப்பு தடிமன்களோ அல்லது நிறமாற்றமோ (ரேஷஸ்)
3. இரண்டாவது மூன்றாவது நாளுக்குப்பிறகு வாந்தி பேதி

இது போன்ற அறிகுறிகளைக்காண நேரிட்டால் உடனே மருத்துவரை அணுகி விடவும். தொடர்ந்து டிரிப்ஸ் கொடுப்பதும் உரிய மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமின்றி இரத்தப்பரிசோதனையும் மிகவும் இன்றியமையாதது. காய்ச்சல் குறைந்து விட்டது என்று நாங்கள் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க கூட மனம் அஞ்சுகிறது.

எனவே கவனத்தில் கொள்ளவும் தெரிந்தவர் அறிந்தவர்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கவும்.

Saturday, November 1, 2008

மௌனியின் கதை உலகம் - ஒரு பகிர்வு


நம்மை சுற்றிலும் இருந்த கதை சொல்லிகளின் கதைகளைக்கேட்டே வளர்ந்த பால்யங்களைக் கொண்டிருந்ததாலோ என்னவோ, கதை கேட்பதைக்குறித்தான அலுப்பேதுமின்றியே நான் வளர்ந்திருக்கிறேன்.

தாட் தாட் என குதிரையில் சென்ற இராஜகுமாரன் முதல் பள்ளியின் நான்கு வாசல்களில் எந்த வாசல் வழியே மகன் வந்தாலும் ஏறிச்செல்வதற்கு ஏற்றாவாறு அத்தனை வாசல்களிலும் சாரட் வைத்து காத்திருந்த நேருவின் கதை வரை தந்தை சொல்ல கேட்டதுண்டு, இப்போதும் கதை சொல்லும் என் மகவுகளின் வார்த்தை சரிவிலேயே என் இரவு எப்போதும் கரை தட்டும்.

ஆனாலும் முன் முடிவுகளைத்தராத கதைகளையெதையும் நான் அதிகம் கண்டதில்லை. பல சமயம் சம்பவங்களின் கோர்ப்பு முடிவுகளின், கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்களை தானாக ஈன்றெடுத்து விடும். சிலசமயம் தத்துவ விசாரங்கள் முன் சொன்ன, படித்திருந்த, கேட்டிருந்த, நம் மனம் யோசித்திருந்த தளங்களை கண்முன்னே காட்டிச்செல்லும்.

வாசிப்புகளின் தேர்வு குறித்தான கர்வம் எப்போதும் எந்த வாசகனுக்கும் இருக்காமலிருந்ததில்லை. என்னுள்ளும் எத்தனையோ கர்வங்களை விதைத்துச்சென்றிருந்த புத்தக வரிசைகளுண்டு ஆனாலும், வாசிப்பு முடிந்தும் அடுத்திப்போது என்ன செய்ய வேண்டுமென்ற எந்த யோசனையையும் கொண்டு தராது மின் விளக்குகள் போன நொடியில் ஏற்படும் மையிருட்டுக்கு கண்கள் பழகுவதற்கு முன் ஏற்படும் ஒரு அமைதியையும், குளுமையையும், அதே சமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தியது மௌனியின் கதைகள்.

மொத்தம் 24 கதைகளோடு சிறு பத்திகளும் சேர்ந்து மொத்தம் 336 பக்கங்கள் நம் அகவெளியின் எத்தனையோ அடுக்குகளில் இது வரை புதைந்திருந்த காதலை, குழப்பத்தை, பயத்தை, நகைச்சுவையை, தேடலை, வாழ்க்கை குறித்த முன் முடிவுகளை, மிகவும் நுண்ணிய உணர்வுகளை எந்த ஒப்பனைகளுமற்று என் முன் நடமாட வைத்தது. அடுத்து இது தான் என்ற எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வொட்டாது வெறுமே பார்வையாளனாக நம்மை இருக்க வைத்து கதைகள் தானே நகர்ந்து செல்கிறது என்று சொல்லலாம்.

அவரது கதைகள் வெளிக்கிட முடியாத மனோ உணர்வுகளின் அணிவகுப்பு. நிராகரிப்பும், காதலும், சாவும், வாழ்வும் ஒரே நோக்கில் எந்த பாகுபாடுகளுமின்றி காட்சிப்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் புனிதப்படுத்தப்பட்ட எத்தனையோ உறவுகளை, நிலைகளை கேள்விக்குறியாக்கும் அவரது பார்வைகள் எத்தனையோ வருடங்களுக்குப் பின்பும் விகசிக்கவைக்கிறது. வாழ்க்கை குறித்த சாமானியனின் பார்வையோடு அகத்தேடல்கள் நிறைந்த ஒரு ஞானியின் பார்வையும் இணைந்த நாயகபாவம் அவரின் கதைகளில் கண்கூடாக காணமுடிகிறது. பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்பில் தொக்கி நிற்கும் பால் வேறுபாட்டை மௌனியின் எழுத்துக்களில் நம்மால் தேடினாலும் உணரமுடிவதில்லை. பெண்களைக்குறித்தான அவரது பார்வைகள் அசாதராணமானது. மிகுந்த நிதானமான சிந்தனை மிகுந்த கதா நாயகிகள் இவரது எழுத்துக்களில் பளிச்சிடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கதைகள் எத்தனையோ உண்டு. எப்போது வாசித்தாலும் அப்போது புதியதாய் புரிந்து கொள்ள அடுக்கடுக்கடுக்காய் இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது அவ்வெழுத்துக்கள்.

ஒரு நாயகனின் வாழ்வின் பல்வேறு சம்பவங்களின் தனித்தனி வெளிப்பாடாகவும் இக்கதைகளைக் கொள்ளலாம். முடிவில் ஒவ்வொரு கதைக்கும் உண்டான தொடர்பான சம்பவங்களைக்கொண்டு மற்றொரு கதையை கோர்க்க முயன்றால் அத்தனை கதைகளும் ஒரே சங்கிலியில் வந்து சேரும். நகுலனின் எழுத்துக்களிலும், கோபி கிருஷ்ணணின் எழுத்துக்களிலும் இத்தகைய தன்மையை கண்டிருந்தாலும் மௌனியின் கதைகள் சொல்லும் அகவெளி நமக்கு மிகவும் நெருக்கமாயிருப்பதாகவே படுகிறது. சாமானியனின் மன ஓட்டங்களை பதிவித்து சென்றுள்ளத்ய் இவ்வெழுத்துக்கள்.

ஒவ்வொரு கதைகளும் பிரசுரமாயிருக்கும் ஆண்டுகளின் குறிப்புகளும் இருப்பது நமக்கு அந்தக்கதை நிகழ்வுகளின் கால ஓட்டத்தை உணர்ந்து கொள்ள வெகு எளிதில் ஏதுவாகிறது. அத்தனை கதைகளைப்பற்றியும் எழுதும் ஆசையிருந்தாலும், ஒரு சில கதைகளை குறித்து மட்டுமாவது விரிவாக எழுதும் எண்ணமிருக்கிறது பார்ப்போம்.. எவ்வளவு தூரம் முடிகிறதென்று...