Monday, October 30, 2017

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - ஒரு பார்வை

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

பல இடங்களில், பலராலும், பல காலங்களாக எடுத்தாளப் படும் ஒரு சொற்றொடர். பெரும்பாலும் ஆன்மிகம் சார்ந்த விவாதங்களில் கடவுளை/உண்மையைக் கண்டவர் சொல்வதில்லை, சொல்பவர் கண்டதில்லை எனும் பொருளில் உபயோகப் படுத்தப் படுவது வழக்கம்.
மிக அற்புதமாக திருமூலர் முதல் ரமணர் வரை தனது உணர்தல்களை மக்களுக்காக விட்டுச் சென்ற பின்னும். நாம் எந்தக் காரணத்திற்காக இந்தப் பதத்தை அப்படி ஒரு த்வனியில் பயன் படுத்துகிறோம். என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான வித்தை மூன்று வாரங்களுக்கு முன் என்னுள் விதைத்தவர் பூமா Poomalai Haldorai அவரது ஒரு வித்யா பூர்வமான கேள்வியே இந்த தேடுதலின் ஆதாரம். அது மேலும் நேற்று அவரது பக்கத்தில் ஒரு சிறிய விவாதத்தின் மூலம் வலுப்பெற்று இதைக் குறித்து அறிந்து கொள்ளும் தீவிரத்தை என்னுள் விதைத்தது.
சில வாக்கியங்கள், வார்த்தைகள் இப்படித்தான் என்னை ஆண்டுகொள்ளும் உள்ளுணர்வு சொல்லும் பொருளை தரவுகளோடு கண்டடையும் வரை நான் செலுத்தப் பட்டே வருகிறேன்.  இப்படித்தான் இந்த தேடலும் துவங்கியது.
பல விதமான தேடல்களின் மூலமும், முகநூல் நட்புகளின் உதவியாலும் நான் அறிந்து கொண்டது. இந்தப் பதம் இதே சொற்களின் அணிவகுப்பில் எந்த ஒரு சித்தர் பாடலிலும், பழந்தமிழ் செய்யுள் களிலும் கையாளப் படவில்லை என்பதே. பின் எப்படி இணையம் முழுவதும் சித்தர் பாடல்களில் கூறியது போல் என்று மேற்கோள் காட்டப் படுகிறது என்ற கேள்விக்கான பதில் நாம் அறிந்த ஒரு மாஸ் சைக்காலஜி மட்டுமே.
அப்படியானால் இதன் முழுமையான விளக்கம் என்ன? என்ற என் தேடலின் சில அறிதல்கள் இப்படிப் போகிறது.
"கண்டு " என்பதனை பார்த்து என்ற பொருளில் கொள்ளலாம்.
விண்டு என்பதற்கு அநாதி விளக்கங்கங்கள் குவிந்துள்ளது.
திருமூலர் விண்டலர் என்ற பதத்தை எவ்வாறு உபயோகிக்கிறார் என்று பார்க்கலாம்.
"விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
விண்டு அலர் கூபமும் விஞ்ச்சத்து அடவியும் – பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர் ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக்காட்டையும் கண்டு உணர்வாக கருதியிருப்பார்கள் – தரிசித்து உணர்வுமயாமே எண்ணியிருப்பவர்கள் யிருப்பவர்கள் ....... என்று குறிப்பிடுகிறார்.
.
இங்கு விண்டலர் என்பதை – விண்டு+அலர் - பிளந்து வெளிப்படும் மலர் என்ற அர்த்தத்தில் வருகிறது.
இதைக்கொண்டு விளக்க முற்பட்டால் இந்தப் பதத்தை
"கண்டவர் விண்டலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்லலாம்"
அதாவது தன்னுள் பிளந்து மலர்ந்தவர் கண்டவர், அவ்வாறு மலர்ந்தவர் இவ்வுலகையும் தன் ஆத்மனையும் தனியாகக் கண்டவர்கள் அல்லர் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பதத்தை பட்டினத்தாரும் உபயோகித்திருக்கிறார். எப்படி பார்க்கலாம்.

இந்த பதத்திற்கு நெருக்கமாக பட்டினத்தார் தனது அருள் புலம்பல் பகுதியில் இவ்வாறு கேட்கிறார்.
"கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் 
கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?"
இந்த வரிசையில் விண்டவர் என்பதற்கு – பிளந்து என்ற பொருள் கொண்டால், தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்கள் இறையை கண்டவரோ, இல்லை புறத்தே காட்சியாக கண்டவர்கள் தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்களோ என்று பொருள் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அகமும் புறமும் ஒன்றாய் இருக்கும் ஆத்மனை கண்டு தரிசிக்கும் பேறு பெற்றவர்களே தன்னுள் மலர்ந்தவர்களோ என்று கொள்ளலாம்.
இல்லை நாங்கள் சொற்கள் மாறுபடுவதற்கு ஒவ்வாதவர்கள் என்று சொல்லி அதே பதத்தில்
"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" – என்று நின்றால் நாம் தாயுமானவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதும் தேவை.

தாயுமானவர் தனது தாயுமானவடிகள் திருப்பாடலில்
"காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை
ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே. " -
என்று சொல்கிறார். இதன் பொருள், முன்னவனருளால் முக்காலமும் தங்கருத்தில் உணர்ந்த மூதறிஞர், பொதுமக்களிடையே அவ்வுணர்ச்சியின் பயனாக அவர்களுக்கு நேரப்போகும் நன்மை தீமைகளை தாம் அறிந்திருந்தாலும் கூறார். இவ்வுண்மையினையே "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என உலகோர் கூறுகின்றனர்.
இதை மேலும் விளங்கிக் கொள்ள சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் ஒரு பாடலை பார்க்கலாம்.
"வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்
ஆர் வமுஞ் செற்றமு மகல நீக்கிய
வீர னாகலின் விழுமங் கொள்ளான்"
அதாவது பட்டினப் பாக்கத்தை விட்டு வந்த கோவலன் கண்ணகி வழியில்அ ருக நெறி சாரணர் சிலர் தோன்றினர். அவர்களைக் கண்டதும் கோவலன், கண்ணகி, காவுந்தி ஐயை ஆகிய மூவரும் தம் பண்டைய வினைகள் தீரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு சாரணர் அடிகளைத் தொழுதனர்.
சாரணர் பொருமகன் அவர்கள் மூவரின் பழ வினையையும் அவ்வினைப் பயனால் மூவரும் வந்திருக்கும் காரணத்தையும் தெளிவாகத் தன் சிந்தை என்னும் விளக்கொளியால் உணர்ந்திருந்தனர் என்றாலும், ஆசையும் சினமும் அறவே நீக்கிய வீரர்ன் ஆதலால், தன் உள்ளத்தில் அவர்கள் பால் இருக்கும் துன்பத்தை வெளிக்காட்டாமல், சொல்லத் தொடங்கினான் “ என்று விறிகிறது காதை.
சரி காவியங்களை விடுவோம் நம் சமகாலத்து ஆன்மீக வழிகாட்டி யாராவது இதைப்னை பற்றி பேசி உள்ளார்களா என்று காணலாம்.

இந்தப் பதத்தை ரமண மகரிஷியின் சீடர் முருகனார் தனது குருவாசகக் கோவையிலும் எடுத்தாண்டுள்ளார்.
"கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில்
கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் - மலை போற்றாம்
கண்டவர்கள் விண்டிலை விண்டிலர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை"
அதாவது, கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில் கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் மலைபோல் (குலாச்சீர் – பெருமையான நிலை) தாம் கண்டவர்கள் விண்டிலர், விண்டவர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை (மண்டு – நிறைந்த, மறை – கருத்து)
இங்கும் உணர்ந்தாரே ஆனாலும் வெளியில் சொல்லுவதில்லை என்ற பொருளிலேயே ஆளப் பட்டுள்ளது.
இதுவன்றி மெய்ப்பொருளைக் கண்டவர் விண்டிலர் விண்டவர்எ காணாதவர்ன என நினைப்பது பொருந்தாது. மேலும் அது "கண்ணால் யானுங்கண்டேன் காண்க" என்று திருவாசகம் திரு அண்டப்பகுதியில்(58) உரைக்கப் பட்டிருக்கும் -செந்தமிழ்த் தனித் தமிழ்த் திருமாமறை முடிவுக்கு முற்றும் முரணாகவும் இது அமையும்.
இன்னமும் பார்த்தால் பிங்கல நிகண்டு முதல் பல அகராதிகள் "விண்டு" எனும் சொல்லுக்கு திருமால், அறநூல் பதினெட்டனுள் ஒன்று, வானம், மேலுலகம், மேகம், மலை, மூங்கில், காற்று, தாமரை, செடிவகை. என்று மட்டுமே பொருள் சொல்கிறது.
இதன் படி பார்த்தால் விண்டவர் என்பதற்கு தேவர்கள் என்றும், விண்டிலர் என்பதற்கு காற்று இலாதார் அதாவது தனது வாசியை உச்சியில் செலுத்தியவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
மீண்டும் திருமந்திரத்தையே நான் துணைக்கழைப்பேன்.
"செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
செழுமையான சிரசாகிய மலையில் கொண்டு குதிரை குசை செறுத்தார் – பிராணனாகிய குதிரையை செலுத்தி மனமாகிய கயிற்றை கொண்டு கட்டிவிடுவார்கள். அதாவது, சிரசில் உணர்வினை கருதியிருப்பவர்களுக்குப் பிராணன் (மூச்சு , காற்று) அடங்கி இருக்கும்.
திருநெல்வேலி பக்கம் விண்டு கொடு என்பதை உடைத்துக் கொடு என்ற பொருளில் பயன் படுத்துவதுண்டு.
சோ ... மக்களே.. இனிமே யாராவது கடவுளைக் கண்டவர் விண்டிலை என்று ஆரம்பித்தால் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.

Wednesday, October 25, 2017

கிரியா - முக்தியின் படிநிலைகள்

சிறிதே முற்றிய தூறல் காரின் முகப்புக் கண்ணாடியில் துளிகளாய் படிகிறது. வண்டியின் வேகத்தில் உருவாகும் எதிர்காற்றில் கண்ணாடியில் தெறிக்கும் நீர்த்துளி கோடாக கீழிறங்காது விந்தனுவைப் போன்ற இயக்கத்தோடு கண்ணாடியில் மேல் நோக்கி நகர்கிறது.

இதை நகரும் கண்ணாடியில் நீர்துளி பட்டால் அது மேலே ஏறும் என்று பொது விதியாக்க முடியாது. ஏனெனில் இங்கு கண்ணாடியின் பரப்பு, காற்றின் வேகம், காரின் வேகம், தூறலின் அளவு இப்படி பல காரணிகள் இந்நிகழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது.

அது போலவே நம் கண்ணெதிரில் அல்லது அனுபவத்தில் காணும் அநேக விஷயங்களுக்கு தியரி கற்பிக்க முடியாது. அவற்றின் காரணிகள் பொது விதிக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக ஆன்மீக அனுபவங்கள்.  a+b=c என்று கணிக்க இது கணித பார்மூலாக்கள் இல்லை.

பறவைகள் - இயற்கையின் காரணிகள்

பறவைகளை இனம் கண்டு கொள்ளுங்கள், அதன் குரலை, வடிவத்தை, அழகை முழுமையாய் உள் வாங்கிக் கொள்ளுங்கள்.

சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கலாம், வெண்டக்காய் வதங்கிக் கொண்டிருக்கலாம், கிரைண்டரில் மாவு அரைபட்டுக் கொண்டிருக்கலாம், எங்கிருந்தோ வரும் ஒரு பறவையின் சப்தம் உங்களை ஈர்க்கும் அளவிற்கு ப்றவையை தியானியுங்கள்.

தான் இருக்கும் மரத்தை, கிளை மறைவுகளை, இலை அசைவுகளை உங்களுக்கு உணர்த்தும். அடுத்து எந்த திசையில் பறக்குமென்று உணர்த்தும். நம் விழிப்புணர்வை கூர்மையாக்கும்.

விழிப்புணர்வே தியானம். அதுவே கடவுளின் இருப்பு.

பறவையை தியானியுங்கள்.

ஓஷோ சொல்லவில்லை நான் தான் :)

பிரம்மத்தின் படிகள்

ஒரு பாதார்த்தத்தை நினைவில் மீட்டெடுக்கும் பொழுது மனம்  சுவையில் இருந்து உருவத்துக்கு தாவுகிறதா இல்லை வரிசை மாறுகிறதா???

Ex. அதிரசம் என்று நினைப்பதற்கு அடிப்படை அதன சுவை மனதில் எழுப்பிய வாசனையா இல்லை பெயர், வடிவம், நிறம், தன்மை இவைகளா??? எது முதல் என்பதே கேள்வி??

கணத்தில் நிகழ்தல் - கர்மயோகம்

உள்ளே எழும் சொற்களை வாயுமிழ்ந்து விடுவதொன்றே நாம் செய்யக் கூடியது. கட்டிவைக்கவோ, கட்டமைக்கவோ உரிமையற்றவர்கள் நாம். சொல்லெழாதா போது கூர்ந்து நோக்கலாம் மீண்டும் சொற்கள் எழும் தோறும் உமிழ்ந்து செல்லலாம். அதுவும் கர்மயோகமே. அதற்கப்பால் ஏதுமில்லை .

வெண்முரசில் என்  வாசிப்பின் திறவுகோல் மேற் கூறிய வரிகள்.

"இப்புவி தோன்றிய காலத்திலிருந்தே. இரண்டுக்குள்ளும் அனல் நிறைந்திருக்கிறது. அவற்றை ஒன்றை ஒன்று உரசி அனல் எழுப்பச் செய்தது அனலோனின் விழைவு மட்டுமே. என்னை அவன் இங்கே ஆணையிட்டு நிறுத்தியிருக்கிறான். இந்த ஊன், இதை உண்ணும் நான் அனைத்தும் அவன் திட்டங்களின் படி நிகழ்பவை” என்றான். ஆம், இந்தச் சொற்களும் அவ்வாறு எழுபவையே” என்று சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் உரக்க நகைத்து “ஐயமென்ன? அத்தனை சொற்களும் அனலில் எழும் பொறிகள் மட்டுமே. பிறிதொன்றுமல்ல” என்றான்"

- நூல் பதினைந்து – எழுதழல் – 34 - ஜெயமோகன்

அஸ்வத்தாமா - குறிதவறிய விழைவுகள்

விழைவுகளை சென்றடையா மனமும், இலக்கினை கண்டடையா அம்பும் மீண்டும் மீண்டும் எய்யப்படும். இங்கு ஒவ்வொருவரும்   அஸ்வத்தாமனே

- வெண்முரசின் தாக்கம்.

Tuesday, October 24, 2017

அசையும் பிரம்மம்

உள்ளிருந்து வெளித்தள்ளுகிறோமா??
இல்லை
உள்ளிழுப்பதையே வெளியேற்றுகிறோமா??
இடையில் தங்கும் அணுவுக்கும் குறைவான வெளி
எங்கு சென்று சேர்க்கிறதோ
அதுவே சிவமோ....

அசையாது தன்னுள் வளியை (காற்றை ) வாங்கி தானே வெளியாகும் (அண்டமாகும்) சிவம்...

மீண்டும் மீண்டும் வெளியை வளியாக்கி உள்கொணரும் சக்தியின் நடனமும் தான் ஜீவனோ...

சிவ சக்தி.... சிவசக்தி என முப்பாட்டன் இதைத்தான் கூத்தாடினானோ.....

உறக்கமற்ற  இரவின் விழிப்பு விடியலைக் காட்டுகிறதோ.

ஆதி யுகத்திலிருந்து

ஆதியுகத்தின் மரப் பொந்துகளிலிருந்து சிறகடித்துப் பறந்த பறவைகள் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் குளிர்சாதன மின்கருவியின் இடுக்குகளிலிருந்து பறந்து செல்கிறது.

இரண்டுக்குமான வித்யாசத்தை அவை அறிந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு முன் அதனால் உனக்கென்ன பயனென்றும் ஒரு பதில் வர மவுனமாய் காட்சியை வார்த்தையாக்கிக் கொண்டிருக்கிறேன். ஓஷோவை புறக்கணித்தபடி.

கிளி - சித்திகளின் குறியீடு

இன்று ஒரு செய்தி அறிந்து கொண்டேன். பறவைகளில் கிளி மட்டுமே தலையைத் திருப்பாது தனக்கு பின்னால் இருக்கும் பொருளை கண்டு கொள்ளும் திறன் பெற்றதாம்.
ஆன்மீக ரீதியாக பார்த்தால் அதை பிடரிக்கண் என்றும் மலர்ந்த பிந்து சக்கரா என்றும் சொல்லலாம்.
அதனால் தான் கிளி எப்பொழுதும் ஆன்மீகத்தோடு தொடர்பு கொண்டு குறிப்பிடப் படும் ஒரு பறவையாகவும். மீனாஷி, ஆண்டாள், காமாஷி என்று பெரும் சக்திநிலைகளைக் குறிக்கும் பெண் தெய்வங்கள் தங்கள் கைகளில் ஏந்தி நிற்பது போலும் படைக்கப் பட்டிருக்கிறதோ என்று தோன்றியது.
ஒரு குறியீடு போல.

உடுப்பி கிருஷ்ணரும் - 2014 தீபாவளியும்

93-ல் உடுப்பி வந்திருக்கிறோம். நன்னு ஒரு வயது குழந்தை அதுவும் ஒரு தீபாவளி சமயம் தான். நீண்ட வரிசையில் நின்று ஜன்னல் வழியே கிருஷ்ணனை பார்த்து விட்டு வந்ததில் ஒன்றும் புரியவில்லை. விளையாடுவதற்கு முன்னரே சட்டென்று உடைந்த குழந்தை கை பலூன் போலானது. சற்றே புலம்பிய படி வந்து சேர்ந்தோம். 21 வருடங்களுக்கு பிறகே மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
மனிப்பாலின் உபயமாய என்று தோன்றுகிறது, பிஸா ஹட்டில் இருந்து ஜோஸ் அலுக்காஸ் வரை இருக்கும் ஒரு ஜோரான குட்டி மெட்ராஸ். போன்ற உடுப்பி கொஞ்சம் வியப்பை தந்தது.
கோவிலுக்கு நடந்து செல்லும் தொலைவில் ஒரு அறை எடுத்து தங்கினோம். சிறிது ஓய்விற்குப் பிறகு கோவிலுக்கு கிளம்பினோம். கோவில் இருக்கும் வழியெங்கும் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் அவரவர் கடைகளில் பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி கோவிலை அடைந்தோம்.
மணி 6.20 கூட்டமே இல்லை நாலைந்து முறை வரிசையில் வந்து கிருஷ்ணனை தரிசித்தோம். விளக்குகளில் திரி இட்டு ஏற்றுவதற்கு தயாராய் இருந்தது எனவே அங்கிருக்கும் ஒருவரிடம் எப்போது ஏற்றுவார்கள் என்று கேட்டதும் இன்னும் 10 நிமிடத்தில் என்று கூறியதோடு நில்லாமல் வெயிட் பண்ணு என்றும் சைகையால் கூறினார்.
குழந்தைகளும் ஶ்ரீ யும் மண்டபத்தில் அமர்ந்து கொள்ள நான் பிரதட்சணம் செய்ய ஆரம்பித்தேன். அதுமுதல் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு என்னை எல்லா பூஜைக்கும் எங்கு அமர்ந்தால் எல்லாமும் நன்றாக பார்க்க முடியுமே அங்கு அமரச்செய்து கூடவே இருந்தபடி அவரது பணிகளையும் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் நேற்று அங்கு தீபாவளியை முன்னிட்டு ஒரு விசேஷ பூஜை யாக பலிந்த்ர பூஜை நடை பெற்றது ( நரகாசுரனை பலியிடும் பூஜை) அதையும் கூட்டிச்சென்று காமித்து விட்டு கடைசியில் போஜன சாலையை காட்டி விட்டு ஒரு நன்றி கூட எதிர் பாராமல் சென்று விட்டார். இத்தனைக்கும் அவர் கோவில் ஊழியர்களுக்கான உடையில் இருந்தார். நம் ஊரில் என்றால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
இந்த வழி காட்டுதல் இல்லாதிருந்தால் அனேகமாக ஏதாவது ஒரு ஆரத்தியை பார்த்து விட்டு கிளம்பியிருப்போம்.
இதன் இடையில் அனேகமாக மொத்த மடத்தையும் சுற்றி வந்திருந்தோம். இருபது வருடங்களுக்கு முன்னால் பார்க்கத்தெரியாமல் பார்த்து விட்டு புலம்பியதற்கு இப்போது பதில் சொன்னது போல் இருந்தது. மனது நெகிழ்ந்து கிடந்தது.
அவனருளாலே அவன் தாழ் பணிந்தேன்....