
நகர்ந்து செல்லும் மேகங்களைக்காட்டிலும் வேகமாக நாட்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன பெரிதும் சிறிதுமான மாற்றங்களோடு.
நான் புதியதாக பயணிக்கத்துவங்கியிருக்கும் மின் தொடர் வண்டிகள் தரும் அனுபங்கள், ஆச்சரியமும் ஆதங்கமும் நிறைந்ததாக உள்ளது.
ஆச்சர்யம்
01. மின் தொடர் வண்டிகள் வந்து நின்றதும் பசித்திருக்கும் பெரு வயிறோனென பெரும் கூட்டத்தை தன்னுள்ளே வாங்கிக்கொள்ளும் இரயில் நிலையங்கள், அவர்களை நொடியில் தொலைத்துவிட்டு நிற்கும் நடைமேடைகள்.
02. கடந்து செல்லும் தொலைதூர விரைவு வண்டிகளில் எப்போதும் எங்கேயோ பயணப்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதர் கூட்டத்தின் ஒரு பகுதி.
03. எப்போதும் கை பேசியில் பேசிக்கொண்டேயிருக்கும் இளம் பெண்கள்
04. பக்கத்து இருருக்கை கார/காரியின் இருப்பைப்பற்றி கவலைப்படாமல் எதிர்முனையின் இருப்பவரோடு போடும் சண்டைகள்/கொஞ்சல்கள்
05. இதற்கு நேரெதிர் மறையாக அடுத்து இருப்பவர் கூட கேட்க முடியாத அளவிற்கு மிகவும் மெதுவாகப்பேசும் கை பேசி பேச்சுக்கள்.
06. தட்டச்சு இயந்திரத்தை விட மிக வேகமாக கைபேசியில் குறுந்தகவல் அடிக்கும் கைவிரல்கள்.
07. ஓடும் வண்டியில் அனாயசமாக ஏறி இறங்கும் பழம், கைகுட்டை, பாசிமணி ஊசி, கறிகாய், சமோசா, விற்கும் பெண்மணிகள்.
08. காலை 11 மணிக்கெல்லாம் மொத்த இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு சட்டமாய் படுத்துறங்கும் பயணிகள்.
09. ஓடும் இரயிலில் காய்கறியோ, கீரையோ, ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் கத்தியால் நறுக்கியபடி பயணிக்கும் பெண்மணிகள்.
10. இந்த பரபரப்பு எதிலும் ஆட்படாமல் நின்றபடியோ (!!!!) உட்கார்ந்தபடியோ தூங்கும் சில பயணிகள்.
ஆதங்கம்
01. வெளியில் வெறித்துப்பார்த்தபடி எப்போதும் ஆயாசத்தையும் அடுத்த வேளைக்கான வேலைகளையும் சுமந்தபடி பயணிக்கும் நடுத்தர வயதுப்பெண்கள்.
02. யாரோடும் பேச மனமற்று புத்தகங்களில் மூழ்கும் பயணிகள்
03. வயது முதிர்ந்த காலத்திலும் சேமியாவும், அப்பளமும் விற்கும் மூதாட்டி.
04. நிற்க கூட இடமில்லாத வேளைகளில் கொஞ்சமும் பிரஞ்ஞையற்று மாற்றுப்பாதையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் பயணிகள்.
05. இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி கூடவே வரும் இரயில்வே போலீஸ் (ஆர்.பி.எப்)
06. ஏற்றிவிடவோ இறக்கிவிடவோ கூட ஆட்களின்றி தனித்து வரும் வயதானவர்களின் முகங்களில் கவிந்து கிடக்கும் தனிமையும் விரக்தியும்.
07. செல்லும் இடத்தை அரைகுறையாய் கேட்டு ஏற்றிச்சென்று பின் அதிகம் கேட்டு சண்டையிடும் ஆட்டோ ஓட்டுநர்கள்
08. சாயங்கால வேளைகளில் பசிமிகுந்த முகத்தோடு சிப்ஸோ, சமோசாவோ, பேல்பூரியோ கையில் இருக்கும் பேப்பரில் சுருட்டியபடி உண்டுவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் இன்றி சமாளித்தபடி செல்லும் இளம்பெண்கள் (பெரும்பாலும் தனித்து தங்கியிருக்கும் படிக்கும்/பணிக்குச்செல்லும் பெண்களாயிருக்கும் என்பது என் அனுமானம்)
09. எதிர் இருக்கை காலியாய் இருக்கும் பட்சத்தில் தவறாமல் தன் கால்களை வைத்து அழுக்காக்கும் படித்த/படிக்காத பயணிகள்.
10. முதல் வகுப்பில் தவறிப்போய் புயணித்துவிட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக்கொண்டு கையில் உண்மையிலேயே அபராதம் கட்ட காசின்றி தவித்த அப்பாவி பயணிகள் கடைசியில் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே அடுத்த வேலைக்காக நகரவேண்டிய நம் கட்டாயம்.
இந்த ஆச்சர்ய ஆதங்க ஓடையில் என் படகு எந்தப்பக்கம் செல்கிறதென்ற கவனிப்பும் ஒரு சுவாரசியமான அவதானிப்புத்தான்.