Wednesday, July 16, 2008

கற்றுக்கொள்ளவும் சிலவுண்டு – நெருப்பிடமிருந்தும்















நெருப்பின் வசீகரம் என்றும் தவிர்க்கவும் தாங்கவும் முடியாததாய், அத்தனையும் கபளீகரிக்கும் அதன் நாவின் பெரும்பசி. திரைச்சீலை, புத்தகங்கள், நிழல்படங்கள், சன்னல் கம்பிகள், கண்ணாடி சட்டங்கள், சில சமயம் எதிராளியின் சந்தோஷங்கள் இவையனைத்தையும் உண்டு விட்டு களைப்பின்றி இன்னும் இன்னும் எனப்பரவும் தீயின் ஆக்கிரமிப்பை ஆச்சர்யத்தோடும் ஆதங்கத்தோடும் நம்மால் பார்க்க மட்டுமே முடியும்.

நாமதை அடித்து துரத்தியபின்னும் விட்டுச்செல்கின்ற அதன் சுவடுகளை காணமுடியாததாய் நம்கண்களை எப்போதும் மறைத்துக்கொண்டேயிருக்கும் நம் துக்கத்தின் கதவுகள். ஏனைனில் அதன் பெரும்பசியின் உணவு நம் சில வருட சேமிப்புக்களாயிருக்கும்.

பிடிவாதமாய் நாமறியமால் பற்றியிழுக்கும் மூர்க்கனின் இறுகிய கரமாய் கனமான ஆக்ரிதியோடு ஆளுயரத்திற்கு எழுந்து நிற்கும் தீயின் கனபரிமானம் கார்த்திகை பண்டிகையன்று கனன்று எரியும் கோயில் பனையடியின் சொக்கபானையையோ, எத்தனையோ ஒளிப்பேழைகளில் கண்டிருக்கும் தீயின் தாண்டவத்தையோ இல்லை இதுவரை நாம் கண்டிருக்கும் எந்த ஒரு முன்நினைவோடும் ஒப்புமை படுத்த முடியாததான தனித்துவமானது.


பலசமயம் பெரும்பாலான நிகழ்வுகளை வெறும் வாசித்தோ, கேட்டோ பழக்கப்பட்ட நம் உள்ளத்திற்கு நிதர்சனமாய் நம்முன் பரவும் உண்மையின் நிகழ்வு பல சமயம் நம் உள்முகத்தை காட்டிச்செல்ல மட்டுமின்றி நாம் கற்றுக்கொள்ளவும் சில தடயங்களை விட்டுச்செல்கிறது.

நெருப்பின் நாவிற்கு ருசி அருசி என்றேதுமில்லை அனைத்தும் ஒன்றுதான் மானுடம் கற்றுக்கொள்ளுமா இந்த பேதமற்ற தன்மையை…….

9 comments:

முஹம்மது ,ஹாரிஸ் said...

சொக்கபானையையோ
ஆக்ரிதியோடு
இந்த இரண்டு வார்த்தைக்கும் பொருள் புரியவில்லை . சொக்கபானையையோ
ஆக்ரிதியோடு
இந்த இரண்டு வார்த்தைக்கும் பொருள் புரியவில்லை

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க தங்கத்தமிழன், சொக்கப்பானைன்னா - கார்த்திகை பண்டிகையன்றும் மற்றும் சில கோவில்களில் வேறு சில விசேஷ நாட்களிலும், நல்ல காய்ந்த பனைமரக்கம்பில் மேலும் நிறைய துளையிட்டு கம்புகளைச்சொருகி, அதன் மேல் பனை ஓலைகளை வேய்ந்து ஒரு கோபுரம் போன்ற உருவத்தை செய்வார்கள். பின் சாமிக்கு விசேஷ பூஜை முடித்துவிட்டு அந்த கற்பூரத்தை கொண்டுவந்து இந்த கோபுரத்தின் அடியில் உள்ள பானையில் தீ வைப்பார்கள் அந்த மொத்த கோபுரமும் கொழுந்து விட்டு இரண்டு பனை உயரத்துக்கு எறியும். மககள் கூடி நின்னு பார்ப்போம் (கடவுள் தீமை அழிக்கின்றார் என்ற பொருள் படும் ஒரு திருவிழா) பின் அந்த சாம்பலையும், எறிந்த கம்புகளையும் வயல்களில் உபயோகம் செய்வார்கள் மிகுந்த விளைச்சலை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

ஆக்ரிதி - என்ற வார்த்தை profile என்ற அர்த்தம் த்வனிக்கும் நல்ல ஆக்ரிதியான உடலமைப்பு என்றால் உயரமும் பருமனும் ஒன்றுபோன்று நல்ல வளர்ந்திருக்கும் உருவம் என்று அர்த்தம் கொள்ளப்படும்.

Madurai citizen said...

வாழ்வில் சிலரும் தீயாய் வந்து போய்விடுவதுண்டு!......
..............
அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை
வாழ்க வளமுடன்!

jeevagv said...

சொக்கபானையின் போது, கயிற்றின் முனையில் நெருப்பின் தணலை, வேகமாக தலையைச் சுற்றிக்கொண்டே சுழன்று வட்டமிடுவதும் ஒரு வழக்கமல்லவா, சிறு வயதில் பார்த்த ஞாபகம் உண்டு. அதன் பெயரோ நினைவில் இல்லை.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆம் ஜீவா, எங்கள் ஊரில் கார்த்திகை அன்று இது கொண்டாடப்படுவதால் பில்ளைகள் அந்த கயிற்றை எடுத்துச்சுற்றிக்கொண்டே "அப்பம் பொரி பொரி" என்று தட்டாமாலை சுற்றுவதுண்டு. ஆனால் இது ஆண்பிள்ளைகளுக்கான விளையாட்டு :) ஆனால் யார் விட்டது நானும் சுற்றிவிட்டு வீட்டில் வந்து வாங்கிக்கட்டிக்கொள்வதுண்டு....

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க மதுரை சிட்டிசன்... உன்மைதான் நாம் கற்றுக்கொள்வதெல்லாம் மனிதர்களிடமிருந்து தானே வலிகளையும் வாழ்க்கையையும்.

jeevagv said...

தட்டாமாலை! - நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
"பொரி பொரி" எனச் சொல்லி தீப்பொறி!

முஹம்மது ,ஹாரிஸ் said...

புதிய தகவல் நன்றி திரு. கிருத்திகா அவர்களே
நானும் புதிதாக இனையதளத்தில் எழுத துவங்கியுள்ளேன்
http://www.nallatamilan.blogspot.com/
உங்கள் வழிகாட்டுதல் வேண்டும் ...
எனக்கு வாசிப்பதற்கு நல்ல நூல்களையும் பரிந்துரை செயுங்கள்.
படிக்க வேண்டும் என்று நிறைய ஆர்வம் இருக்கிறது ஆனால் எதைபடிபது
என்ற குழப்பம். நல்ல சிறுகதை கட்டுரை மற்றும் கவிதைகளின் பெயர்களையும் தந்தாள் உதவியாக இருக்கும் .என்னுடைய மின்னஞ்சல் முகவரி mdharisbinhilmi@gmail.com

தினேஷ் said...

நெருப்பிடமிருந்து கற்றுக்கொள்ள சிலவுண்டு ஆனால் உங்கள் எழுத்துக்களிலிருந்து கற்றுக்கொள்ள பலவுண்டு...

தினேஷ்