Wednesday, June 18, 2008

கந்தர்வ நகரம் - பகுதி 1

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி தொடங்கியது அந்தப்பயணம், மகனின் பத்தாவது பரீட்சை ஆயத்தங்கள் இருந்ததால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வெளியூர் பயணங்களை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தோம். பின் தேர்வுகள் முடிந்ததும் புது வீடு புகு மனைவிழா எல்லாம் கொண்டாடி வீடும் மாற்றியபின் கணவரின் அலுவலகம் மாற்றும் பணி தொடங்கியது. அத்தனையும் முடிந்தபின் எங்காவது சென்று வரவேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருந்ததே தவிர வழக்கம் போன்றே எங்கு செல்வது என்ற குழப்படிகள் இருந்த நேரத்தில் ரங்கமணியின் நண்பருடன் பேசும் போது இதைப்பற்றி சொல்லியிருப்பார் போலிக்கிறது அவர் மிகவும் அக்கறையாக எல்லா ஏற்பாடும் செய்து விட்டு சொன்னபின் தான் எங்கள் பயணம் ஆரம்பித்தது.

மதியம் 2 மணிக்கு மேல் சென்னையில் இருந்து (உச்சிவெயில் மண்டைய பிளந்தது) கிளம்பி இரவு 8.30 மணிவாக்கில் எங்களின் மிகவும் அபிமான நகரமான பெங்களூரை அடைந்தோம். வேற எங்குமே போக வேண்டாம் என்று தோன்றுமளவிற்கு ஊர் மிகவும் குளுமையாகவும் இனிமையாகவும் இருந்தது. (ஆனால் ஆச்சரியம் மெஜஸ்டிக் அலங்கார் பிளாசால கூட்டமே இல்லை – மொத்த மெஜஸ்டிக் ஏரியாவுமே கூட்டமே இல்லாத மாதிரிதான் இருந்தது) அங்கயும் துணை நகரம் ஆரம்பிச்சிரலாம் போல இருக்கு பெங்களூருக்குள் உள்ளே நுழையும் முன்னரே (ஹோசூர் ரோட்டில்) பிரம்மாண்டமான மால்களும் மக்கள் கூட்டமும் சேர்ந்துவிட்டது.. பெங்களூர் மெல்ல இடம் மாறுகிறதோ…
மறுநாள் காலை ஜே।பி நகரில் எங்களுக்கு மிகவும் ப்ரியமான “தாவன்கரே தோசா” ஹோட்டலில் காலை உணைவை முடித்துவிட்டு (அங்கு தயாரிக்கும் தோசை பெங்களூருவில் பொதுவில் கிடைக்கும் ஜவ்வரிசிமா தோசை போலல்லாமல் மிகவும் மொறு மொறுவென்று வெண்ணை தடவி உருளைக்கிழங்கு மாசாலை வைத்து தொட்டுக்கொள்ள காரமாக (!!!) தேங்காய் சட்னியும் தருவார்கள் ஒரு தோசைக்கு மேல் சாப்பிட முடியாதென்றாலும் வழக்கமாய் ஆசைப்பட்டு இரண்டாவது தோசை ஆர்டர் செய்து வீண் செய்வது வழக்கம் - அவ்வளவு நல்லா இருக்கும்.)நண்பரின் சுமோவில் கனகபுரா என்ற ஊரை நோக்கி புறப்பட்டோம் அப்போது கூட நாங்கள் நினைக்கவில்லை அந்த இடம் இத்தனை அழகாய் அமைதியாய் இருக்குமென்று.

கனகபுராவைத்தாண்டி சாத்தனூர் என்ற இடத்தை அடைந்து பிராதனச்சாலையில் இருந்து மெல்ல பிரிந்து சில கிராமங்களைத்தாண்டி சுமோ கரடுமுரடான பாதைகளில் ஏறத்துவங்கியது. பாதை இப்படித்தான் இருந்தது…

இருப்பதிலேயே இது மிகவும் நல்ல பாதை 80 சதவிகிதப்பாதை இதைவிட கரடுமுரடாக இருந்தது பழக்கமுள்ள மற்றும் தாரளமனதுள்ளவர்களால் மட்டுமே இந்தப் பாதையில் காரை எடுத்துக்கொண்டு வரமுடியும்। பல இடங்களில் நாங்கள் சுமோவிட்டு இறங்கிக்கொண்டு நடந்து செல்ல வேண்டியிருந்தது। வண்டியோட்டி மட்டுமே காரை எடுத்துக்கொண்டு சில அடிதூரம் முன்னேறி பின்னர் நாங்கள் போய் சேர்ந்து கொள்வோம்.
பதிவு மிகவும் பெரிதாக உள்ள காரணத்தால் அடுத்த பதிவில் தொடர்கிறேன்

2 comments:

வடுவூர் குமார் said...

சென்னைக்கும் வேண்டும் துணை நகரம். இப்பவே போக்குவரத்து விழிபிதுங்கிறது.

தினேஷ் said...

பயணத்தை படிக்கும் போது பயணம் செய்வது போல் உணர்வை ஏற்ப்படுத்துகிறது உங்கள் எழுத்து...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்