Friday, July 4, 2008

மின் தொடர் வண்டி - ஆச்சர்யம் மற்றும் ஆதங்கம்.


நகர்ந்து செல்லும் மேகங்களைக்காட்டிலும் வேகமாக நாட்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன பெரிதும் சிறிதுமான மாற்றங்களோடு.

நான் புதியதாக பயணிக்கத்துவங்கியிருக்கும் மின் தொடர் வண்டிகள் தரும் அனுபங்கள், ஆச்சரியமும் ஆதங்கமும் நிறைந்ததாக உள்ளது.

ஆச்சர்யம்

01. மின் தொடர் வண்டிகள் வந்து நின்றதும் பசித்திருக்கும் பெரு வயிறோனென பெரும் கூட்டத்தை தன்னுள்ளே வாங்கிக்கொள்ளும் இரயில் நிலையங்கள், அவர்களை நொடியில் தொலைத்துவிட்டு நிற்கும் நடைமேடைகள்.

02. கடந்து செல்லும் தொலைதூர விரைவு வண்டிகளில் எப்போதும் எங்கேயோ பயணப்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதர் கூட்டத்தின் ஒரு பகுதி.

03. எப்போதும் கை பேசியில் பேசிக்கொண்டேயிருக்கும் இளம் பெண்கள்

04. பக்கத்து இருருக்கை கார/காரியின் இருப்பைப்பற்றி கவலைப்படாமல் எதிர்முனையின் இருப்பவரோடு போடும் சண்டைகள்/கொஞ்சல்கள்

05. இதற்கு நேரெதிர் மறையாக அடுத்து இருப்பவர் கூட கேட்க முடியாத அளவிற்கு மிகவும் மெதுவாகப்பேசும் கை பேசி பேச்சுக்கள்.

06. தட்டச்சு இயந்திரத்தை விட மிக வேகமாக கைபேசியில் குறுந்தகவல் அடிக்கும் கைவிரல்கள்.

07. ஓடும் வண்டியில் அனாயசமாக ஏறி இறங்கும் பழம், கைகுட்டை, பாசிமணி ஊசி, கறிகாய், சமோசா, விற்கும் பெண்மணிகள்.

08. காலை 11 மணிக்கெல்லாம் மொத்த இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு சட்டமாய் படுத்துறங்கும் பயணிகள்.

09. ஓடும் இரயிலில் காய்கறியோ, கீரையோ, ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் கத்தியால் நறுக்கியபடி பயணிக்கும் பெண்மணிகள்.

10. இந்த பரபரப்பு எதிலும் ஆட்படாமல் நின்றபடியோ (!!!!) உட்கார்ந்தபடியோ தூங்கும் சில பயணிகள்.

ஆதங்கம்

01. வெளியில் வெறித்துப்பார்த்தபடி எப்போதும் ஆயாசத்தையும் அடுத்த வேளைக்கான வேலைகளையும் சுமந்தபடி பயணிக்கும் நடுத்தர வயதுப்பெண்கள்.

02. யாரோடும் பேச மனமற்று புத்தகங்களில் மூழ்கும் பயணிகள்

03. வயது முதிர்ந்த காலத்திலும் சேமியாவும், அப்பளமும் விற்கும் மூதாட்டி.

04. நிற்க கூட இடமில்லாத வேளைகளில் கொஞ்சமும் பிரஞ்ஞையற்று மாற்றுப்பாதையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் பயணிகள்.

05. இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி கூடவே வரும் இரயில்வே போலீஸ் (ஆர்.பி.எப்)

06. ஏற்றிவிடவோ இறக்கிவிடவோ கூட ஆட்களின்றி தனித்து வரும் வயதானவர்களின் முகங்களில் கவிந்து கிடக்கும் தனிமையும் விரக்தியும்.

07. செல்லும் இடத்தை அரைகுறையாய் கேட்டு ஏற்றிச்சென்று பின் அதிகம் கேட்டு சண்டையிடும் ஆட்டோ ஓட்டுநர்கள்

08. சாயங்கால வேளைகளில் பசிமிகுந்த முகத்தோடு சிப்ஸோ, சமோசாவோ, பேல்பூரியோ கையில் இருக்கும் பேப்பரில் சுருட்டியபடி உண்டுவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் இன்றி சமாளித்தபடி செல்லும் இளம்பெண்கள் (பெரும்பாலும் தனித்து தங்கியிருக்கும் படிக்கும்/பணிக்குச்செல்லும் பெண்களாயிருக்கும் என்பது என் அனுமானம்)

09. எதிர் இருக்கை காலியாய் இருக்கும் பட்சத்தில் தவறாமல் தன் கால்களை வைத்து அழுக்காக்கும் படித்த/படிக்காத பயணிகள்.

10. முதல் வகுப்பில் தவறிப்போய் புயணித்துவிட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக்கொண்டு கையில் உண்மையிலேயே அபராதம் கட்ட காசின்றி தவித்த அப்பாவி பயணிகள் கடைசியில் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே அடுத்த வேலைக்காக நகரவேண்டிய நம் கட்டாயம்.

இந்த ஆச்சர்ய ஆதங்க ஓடையில் என் படகு எந்தப்பக்கம் செல்கிறதென்ற கவனிப்பும் ஒரு சுவாரசியமான அவதானிப்புத்தான்.

32 comments:

ரசிகன் said...

அருமையா தொகுத்திருக்கிங்க:)

பைத்தியக்காரன் said...

இப்போது 3 ஆண்டுகளாகத்தான் மின்சார ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை. அதற்கு முன் தொடர்ந்து 5 ஆண்டுகள் மின்சார ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். அப்போது நினைத்த விஷயங்களை இப்போது இந்தப் பதிவு அசை போட வைத்திருக்கிறது.

மாஸ் சைக்காலஜியை உருவாக்கும் மின்தொடர் வண்டிகள் மாதிரியான கேந்திரங்கள் முக்கியமானவை. தேர்தல் நேரங்கள் முதல், ரிலிசான புதுப் படத்தின் வர்த்தக வெற்றி வரை அனைத்தையும் இதுமாதிரியான கூட்டுப் பயணங்களே அதிகமும் தீர்மானிக்கின்றன.

மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக காலச்சுவடு இதழில் அம்பை எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. மின்சார ரயில் பயணம் குறித்தும், அந்தப் பயணத்தின் வழியே வாழ்க்கை மீது மும்பை மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளையும் சொல்லியிருப்பார்.

அழகியல் சார்ந்த விஷயங்கள் அதிகமும் உங்கள் பார்வையில் பட்டிருக்கிறது. அதனாலேயே பதிவும் அழகியலுடன் இருக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பைத்தியக்காரன் said...

இப்போது 3 ஆண்டுகளாகத்தான் மின்சார ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை. அதற்கு முன் தொடர்ந்து 5 ஆண்டுகள் மின்சார ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். அப்போது நினைத்த விஷயங்களை இப்போது இந்தப் பதிவு அசை போட வைத்திருக்கிறது.

மாஸ் சைக்காலஜியை உருவாக்கும் மின்தொடர் வண்டிகள் மாதிரியான கேந்திரங்கள் முக்கியமானவை. தேர்தல் நேரங்கள் முதல், ரிலிசான புதுப் படத்தின் வர்த்தக வெற்றி வரை அனைத்தையும் இதுமாதிரியான கூட்டுப் பயணங்களே அதிகமும் தீர்மானிக்கின்றன.

மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக காலச்சுவடு இதழில் அம்பை எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. மின்சார ரயில் பயணம் குறித்தும், அந்தப் பயணத்தின் வழியே வாழ்க்கை மீது மும்பை மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளையும் சொல்லியிருப்பார்.

அழகியல் சார்ந்த விஷயங்கள் அதிகமும் உங்கள் பார்வையில் பட்டிருக்கிறது. அதனாலேயே பதிவும் அழகியலுடன் இருக்கிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நையாண்டி நைனா said...

அருமை...அருமை....
***

இத்தனையும் பார்த்து கொண்டு.. நாளைய பதிவுக்காக நான் .... என்று முடிததிருக்க வேண்டும்.. ..ஹி...ஹி.ஹி..

அது சரி... இவ்ளோ கும்பல்லெ...
இவரு எங்கே வந்தாரு
- ஆட்டோ டைவரு-

/* செல்லும் இடத்தை அரைகுறையாய் கேட்டு ஏற்றிச்சென்று பின் அதிகம் கேட்டு சண்டையிடும் ஆட்டோ ஓட்டுநர்கள் */

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றாக கவனித்து எழுதியுள்ளீர்கள் :)

இதையே கதையாக்கிப் பாருங்களேன், நன்றாக வரக்கூடும்.

Karthik said...

//கடைசியில் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே அடுத்த வேலைக்காக நகரவேண்டிய நம் கட்டாயம்.

Simple yet powerful.

ச்சின்னப் பையன் said...

வேறே வேறே சிச்சுவேஷன் வெச்சு, எழுதக்கூடிய அஞ்சு-ஆறு கதைகளை ஒரே பதிவுலே தொகுத்துட்டீங்க... அருமையோ அருமை... I also miss Chennai Electric Train...

Vetrimagal said...

மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

அறிவன்#11802717200764379909 said...

//முதல் வகுப்பில் தவறிப்போய் புயணித்துவிட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக்கொண்டு கையில் உண்மையிலேயே அபராதம் கட்ட காசின்றி தவித்த அப்பாவி பயணிகள் //

இந்த அனுபவத்தை ஆரம்ப கால சென்னை வாழ்வில் சந்தித்த அப்பாவி நான் !

jackiesekar said...

“மாஸ் சைக்காலஜியை உருவாக்கும் மின்தொடர் வண்டிகள் மாதிரியான கேந்திரங்கள் முக்கியமானவை. தேர்தல் நேரங்கள் முதல், ரிலிசான புதுப் படத்தின் வர்த்தக வெற்றி வரை அனைத்தையும் இதுமாதிரியான கூட்டுப் பயணங்களே அதிகமும் தீர்மானிக்கின்றன.”

பைத்தியகாரனின் மேலுள்ள அந்த வரிகள், மிகவும் அருமை...

கிருத்திகா, மிக அற்புதமான கவனிப்பு, இவ்வளவு அற்புதமாக பெண்கள் கவனிப்பார்களா? மிக அற்புதமான பதிவு.

sury said...

ஒற்றுமை வேற்றுமை.
+++++++++++++++++

வலைப்பதிவின் டெம்ப்ளேட் பாலங்களூடே தண்ணீர் வெள்ளம்.
வலைப்பதிவு சொல்வதோ ரயில் பெட்டிகளூடே மனிதர் வெள்ளம்.

எத்தனை வெள்ளம் வரினும் பாலங்கள் அங்கேயே நிற்கும்.
எத்தனை மனிதர் ஏறினும் பெட்டிகள் ரயிலில் ( rails ) ஓடிக்கொண்டே இருக்கும்.

ஒரு மாறுதல் எனினும் உண்டு.
வெள்ளம் பாலங்களூடே செல்லும்.
ரயில் பெட்டிகளோ வெள்ளத்தினூடே செல்லும்.

பாலங்களும் தியாகிகள். ரயில் பெட்டிகளூம் தியாகிகள்.
தீவிரவாதிகளின் குண்டுகளூக்கு
இரண்டுமே பலியாகின்றன.

பாலங்களுக்கும் ஒரு நாள், ரயில் பெட்டிகளுக்கும் ஒரு நாள்.
திரு நாள்.
பிரபலங்கள் வரும்போது பெயின்ட் அடிக்கப்படுகின்றன.

பாலங்களும் ரயில் பெட்டிகளும்
அண்டி வருவோருக்கு அடைக்கலமளிக்கும்
அமைதி இல்லங்கள்.
ஆண்டவன் இங்கே எப்பவுமே
டிக்கெட் கேட்டுத் தொந்தரவு செய்வதில்லை.

மனமொத்த காதலர்க்கு இவையிரண்டுமே
சுவர்க்க வாசல்கள்.
மனம் நொந்த காதலர்க்கும் இவையே
சுவர்க்க வாசல்கள்.

இவற்றிலிருந்து குதித்துத்தான்
இனிய உடலை நீத்து
இறைவனடி செல்கிறார்கள்.


சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

கிருத்திகா said...

நன்றி இரசிகன்.
வாங்க பைத்தியக்காரன். உண்மைதான் அதிகம் பேசப்படுபவை அரசியலும் சினிமாவும் தான் ஆனால் அது ஆண்கள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டுமே. பெண்கள் பெட்டியில் அன்றாட வாழ்வியல் தான் அதிகம் பேசப்படுகிறது.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கிருத்திகா said...

நையாண்டி நைனா.... ஆட்டோ டைவர் இரயிலை விட்டு இறங்கி நிலையத்தை தாண்டியதும் வரும் தொல்லை. ஆனால் வண்டியில் இருக்கும் போதே இன்னக்கி எந்த ஆட்டோ டிரைவர் அதிகம் கேக்கப்போறாரோ என்ற கவலை துவங்கிவிடும் அதனால இடையிலேயே வந்துட்டாரு.

கிருத்திகா said...

நன்றி சுந்தர். சின்னப்பையன்... கதை எப்போதுமே நாட் மை கப் ஆப் டீ என்பதான ஒரு நினைப்பு உண்டு... கட்டுரைகளே என்னை மிகவும் ஈர்ப்பவை(இப்படித்தான் சொல்லிக்கணும் ஏன்னா கதை எழுத வராது)
வாங்க வெற்றிமகள் பாராட்டுக்களுக்கு நன்றி.
கார்த்திக் - உண்மையிலேயே அது ரொம்ப வருத்தமா இருக்கும்.

கிருத்திகா said...

ஆமாம் அறிவன் அதில் நிர்வாகத்திற்கும் பங்கு உள்ளது பெரும்பாலும் பெண்களே அதிகம் மாட்டிக்கொள்கிறார்கள் ஏனெனில் பெண்கள் பெட்டியும் முதல் வகுப்பும் அடுத்தடுத்து இருப்பதாலும், அதற்கென பிரத்யோக அடையாளங்கள் தனியாய் தெரிவதில்லை என்பதாலும் இந்த தவறுகள் நேருகிறது...

கிருத்திகா said...

ஜாக்கி சேகர் - பார்வைகள் இருபாலருக்கும் ஒன்று தான் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள் இருப்பின் அதிகம் அறியப்படும் அவ்வளவே.

பைத்தியக்காரனின் வரிகள் எதையும் கூர்ந்து நோக்கி பேசுபவை அதனாலாயே அதிகம் நேசிக்கப்படுபவை.

கிருத்திகா said...

சூரி சார்... அருமை... ஒற்றுமை வேற்றுமை இதை ஒப்பு நோக்கும் பொறுமையும், பார்வையும் மட்டுமே அதைத்தாண்டி செல்வதற்கான சகிப்புத்தன்மையைத்தரும் அதை அனுபவம் மட்டுமே கற்றுத்தரும். தங்கள் வரிகளில் பளிச்சிடும் அந்த உண்மை எல்லோர்க்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி.

J J Reegan said...

அருமையான பதிவு...
அருமையான கவிதை...

ஒரு குறும்படத்தில் இருக்க வேண்டியவை அனைத்தும்...

Voice on Wings said...

நான் கூற வந்ததை என்னைவிட சிறப்பாக பலரும் கூறிவிட்டார்கள்.

//03. வயது முதிர்ந்த காலத்திலும் சேமியாவும், அப்பளமும் விற்கும் மூதாட்டி.//

இந்த வரிகள் கொஞ்சம் அதிகமாகவே பாதித்து விட்டன.

தங்கத்தமிழன்ஹாரிஸ் said...

நானும் தான் பலகால மா இராயிலே போறேன் என்ணாக்கு இப்படி எல்லாம் எழுதணும்னு தோனளையே. இதுதான் படைப்பாளின் பார்வைக்கும் சாமாணியன் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் ஒரு குறும்படம் பார்த்த உணர்வை தருகிறது. உங்களுடைய நூல் விமர்சனத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன் ,

தினேஷ் said...

நான் பல வருடங்களாக தொடர்வண்டியில் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். நிங்கள் இந்த பதிவில் பதித்த நிகழ்வுகளை தொடர்வண்டியில் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்ர்ந்தது இல்லை. உங்கள் பதிவை படித்த பிறகு தான் அந்த நிகழ்வுகளை உணர்கிறேன்.

தொடர்வண்டியில் இவ்வளவு நிகழ்வுகளை கவனித்திருகிறிர்கள் அதை அழகாக பதிவாக தொகுத்து இருக்கிறிர்கள் அருமை...

தினேஷ்

கிருத்திகா said...

வாங்க தங்கத்தமிழன்... மிக்க நன்றி தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன் ஆனாலும் விமர்சனம் எழுதும் அளவி
ற்கு புதிய புத்தகங்கள் ஏதுமில்லை. பெரும்பாலும் முன்னரே வெளிவந்த புத்தகங்கள் நான் புரிந்து கொள்ள வேண்டி மீள் வாசிப்பு செய்யும் புத்தகங்கள் இப்படித்தான் அதிகம் உள்ளது. ஆனாலும் சமீபத்தில் வாசித்த

01. எஸ்.ராவின். "என்றார் போர்ஹே" என்ற புத்தகம் மிகவும் அருமையாக ஒரு எழுத்தாளைரைப்பற்றியதாக மட்டுமில்லாமல் அவர் சூழல், காலம் சார்ந்த ஓர் ஆய்வாகவும் இருந்தது. நிச்சயம் மீள் வாசிப்பில் இருக்க வேண்டிய புத்தக வரிசைக்கு சென்றுவிட்டது.

02. விழித்திருப்பவனின் இரவுகள் - லத்தின் அமெரிக்க, ஐரோப்பிய மேலை எழுத்தாளர்களைப்பற்றிய ஒரு தொகுப்பு வாசிப்புக்களின் பல கதவுகளையும் சாத்தியக்கூறுகளையும் எனக்கு அறிமுகப்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.

03. புஷ்கின் கதைகள் ஒரு மொழிபெயர்ப்பு - இரஷ்ய மொழிபெயர்ப்பு சிறுகதைகள் சிறு பிராயத்தில் இருந்து என்னை எப்போதும் ஈர்த்துக்கொண்டிருக்கும் இந்த வகை இலக்கியம் நம் பார்வையை வேறொரு தளத்திற்கு எடுத்துச்சென்று அந்த மனிதர்களோடு வாழ்ந்ததற்கான உணர்வினை விட்டுச்செல்லும் இந்தப்புத்தகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

04. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரம் பிள்ளையின் மலையாள மூலத்தில் இருந்து சுந்தர ராமசாமியின் மொழிபெயர்பில் - மிக நுணுக்கமான புத்தகம். வர்க்கபேத முறைகளையும், அந்த வர்க்கபேதமுறைகளை எதிர்கொள்ளும் நாயகனின் மன்க்கூறுகளையும் பின் அவனே அந்த பித்திற்கு ஆட்படும் அவலத்தையும் மிகத்தெளிவான கதை ஓட்டத்தோடு சொல்லியிருக்கும் பாங்கு மிகவும் அலாதியான வாசிப்பானுபவத்தை தந்தது.

தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆனால் வெறும் பகிர்தலுக்காக மட்டுமே... (மறுமொழி மிகவும் நீண்டுவிட்டது)

கிருத்திகா said...

நன்றி ரீகன், வாய்ஸ் ஆன் விங்க்ஸ், தினேஷ்.

D Richard Abraham said...

Hi, Very impressive blog. Please let me know more about your Interests.

ritchieinfo.blogspot.com

தங்கத்தமிழன்ஹாரிஸ் said...

குறிப்புக்கு நன்றி நானும் இந்த நூல்கலை வாங்க முயற்சிக்கிறேன் .

Madurai citizen said...

பதிவு அருமை...

Bee'morgan said...

வாவ்.. தொடர்வண்டிகளுக்கும் எனக்கும் எப்போதும் ஒரு தொப்புள் கொடி இருப்பதாகவே எனக்குள் ஒரு நினைப்புண்டு. நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்து வாழ்வது அனைத்தும், ஏதேனும் ஒரு ரயில் பாதையின் நிழலிலேயே அமைந்ததால் கூட இப்படி இருக்கலாம். மிக நுணுக்கமான அவதானிப்புடன், தெளிவாக அடுக்கியிருக்கிறீர்கள்.. ஒவ்வொரு வரியிலும், எழுத்துக்களைக்கடந்த, உணர்வுகள் கொண்ட மனிதர்களே எழுந்து நடக்கக்கண்டேன்.. பாராட்டுகள்..

ஜோசப் பால்ராஜ் said...

ரயில் பயணங்களில்...
மிக அருமையான நடையில் மிக இயல்பாக ஏறக்குறைய எல்லாவற்றையும் மிக உன்னிப்பா உள்வாங்கி எழுதியிருக்கீங்க‌.

வாழ்த்துக்கள்.

கிருத்திகா said...

நன்றி மார்கன் மற்றும் பால்ராஜ்..
வருகைக்கும் அதைத் தொடர்ந்த கருத்துக்களுக்கும்.... திறந்திருக்கும் கண்கள் வழி புரிவது மட்டுமே உலகமல்ல என்பதை நாம் எல்லோரும் நம்புவதுதானே அடுத்த கட்ட புரிதல்களுக்கான வழிகாட்டி

வெங்கட்ராமன் said...

02. யாரோடும் பேச மனமற்று புத்தகங்களில் மூழ்கும் பயணிகள்

இத ஏன் ஆதஙக்த்துல சேர்த்தீங்க. . .

நானும் ஒரு வருட காலம் தினமும் சென்னை மின் ரயிலிலே பயணத்திருக்கிறேன். உங்கள் பதிவு அந்தப் பயண அனுபவங்களை அழகாக தொகுத்திருக்கிறது.

கிருத்திகா said...

வாங்க வெங்கட்ராமன்...
இத்தனை நடக்குது எதையும் கண்டுக்காம தனக்கான உலகத்தில் மட்டுமே பயணிக்கறாங்களேங்கற ஆதங்கம் தான்...!!!!

M.Saravana Kumar said...

அருமையான பதிவு..
:)