
Friday, April 18, 2008
Thursday, April 17, 2008
Wednesday, April 9, 2008
காதல், கல்யாணம், சடங்கு ஒரு பிரதிபலிப்பு

எனக்கும் ரொம்ப ஆசைதான் இப்பெல்லாம் அடிக்கடி தோணரதுதான் நம்ம கொஞ்சம் நல்லா கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கலாமோன்னு அதனாலா அரை மனசா சம்மதிக்கரமாதிரி ரொம்ப சந்தோஷமா முழு மனசா சம்மதிச்சேன். அப்ப வந்தது வினை.
என் பையனோட வருங்கால மனைவி (ஒண்ணா படிச்சாங்க இப்ப தனித்தனியா வேலை பார்க்கறாங்க) ஆண்ட்டி அப்பெல்லாம் என்ன ஆண்ட்டி நார்மல் பொரஸீஜர், முதல்ல எல்லாரும் வந்து வரிசையா பொண்ணு பார்த்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்புறம் தானே கல்யாணம். என்ன ப்ராசஸ் இது ஆண்டி நல்ல வேள நீங்க தப்பிச்சீங்க ஐ ஜஸ்ட் கான் இமாஜின் என்றபடி சுற்றிவந்தாள்.
என்னோட அருமை பொண்ணு வந்து அம்மா நாந்தான் உன்னோட மாமியார் (என் மாமியார் புண்னியவதி ரொம்ப சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்க) அதனால அடக்க ஒடுக்கமா என்கிட்ட நடந்துக்கணும் சரியா நான் மாப்பிள்ளை வீட்டுக்காரி என்று கட்சி பிரிக்கத்தொடங்கினாள். என் மாப்பிள்ளை ஆண்ட்டி மே ஆப்கே சைட் ஹூம் என்றான் (எங்க வீடு ஒரு பாரதவிலாஸ் எல்லாம் காதல் கல்யாணம் தான்). என் சின்னப்பையன் இப்பத்தான் இஞ்சினியரிங் படிச்சிட்டிருக்கான் (இன்னும் ஒருத்தரையும் அதிகார பூர்வமா அறிவிக்கல அதுனால அவனோடு கூட யாரும் இல்ல) அவன் என் பக்கம்னும் பெரியவன் அவங்கப்பா பக்கம்னும் அவனோட காதலி என் பக்கம்னும் அவங்களே ரெண்டு கட்சியா பிரிஞ்சிகிட்டாங்க.
நான் என் பங்குக்கு சொஜ்ஜி, பஜ்ஜி நல்ல டிகிரி காப்பி (உபயம் காபிடே & எலக்டிரிக் காபி பில்டர்) எல்லாம் தயார் செய்து வைச்சாச்சு, எங்க சீனு அதாங்க என் வீட்டுக்காரரு வழக்கமா பண்ற எந்த எடக்கு முடக்கும் பண்ணாம அமைதியா எல்லாத்தையும் இரசிச்சிட்டு இருந்தாரு.
ஜமக்காளம் எல்லாம் விரிச்சி எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டு இருந்தது. நான் சின்னப்பொண்ணு மாதிரி ஏம்பா நீ மொத மொதல்ல திருவனந்தபுரத்துல இருந்து வாங்கிட்டு வந்தியே அந்த இராமர் கலர் பச்சை புடவை கட்டிக்கட்டுமா என்றபடி நிசம்மாவே பொண்ணு பாக்கப்போர மனநிலையில இருந்தேன். எல்லோரும் உட்கார்ந்தாச்சு, என் பொண்ணு ரொம்ப தோரணையா "ம்ம் நல்ல நேரம் தாண்டரதுக்குள்ள பொண்ண அழைச்சுண்டு வாங்கோ என்று சொல்லவும்" என் நாட்டுப்பொண் (அதாங்க வருங்கால) என்னை ரொம்ப மெதுவா கூட்டி வந்து உட்கார வைச்சா, என் பொண்ணு "எங்காத்துப்பிள்ளைக்கு பாட்டுன்னா உசிர், ரொம்ப நன்னா பாடுவான், உங்காத்துப் பொண் பாட்டெல்லாம் பாடுவோல்லியோ" என்றாள். உடனே என் சின்னப்பையன் "ம்ம் பாடுவோ சிட்சையெல்லாம் சொல்லிக்கல கேள்வி ஞானம்தான் உங்காத்துப்பிள்ளை ரொம்ப நல்லா பாடுவாங்கரளே ஒரு பாட்டு பாடச்சொல்லுங்கோளேன் எங்காத்துப்பொண்ணும் பாடுவோ என்றான்". உடனே என் வீட்டுக்காரர்.
மெதுவா பாட ஆரம்பிச்சாரர்
அழகே அழகு தேவதை ஆயிரம் காவியம் … (இராஜபார்வைல கமல் பாடுவாரே அந்தப்பாட்டுத்தான்)
அவ்வளவுதான் கூட்டம் களை கட்ட ஆரம்பிச்சிடுத்து. மெல்ல நேயர் விருப்பம் போல் ஒரோர் பாட்டா கேக்க ஆரம்பிச்சி கடைசில
“பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று…….
… ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன காதல் நிறம் மாறுமா…..
(வெற்றி விழான்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு)ன்னு முடிச்சார். எனக்கு ஒரே சந்தோஷமா போயிடுத்து.
உடனே என் பொண்ணு அம்மாடி நீ ஏதாவது சுலோகமாவது சொல்லுங்கவும் எனக்கு ரோசம் வந்துடுத்து எனக்கு நன்னாத்தெரிஞ்ச (ஒரே) பாட்டை எடுத்து விட்டேன்.
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் (கண்ணன்)
எங்கிருந்தோ வந்தான் …….
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமை காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக்காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
எங்கிருந்தோ வந்தான்…….
(என் சீனு பெரியவனோடும் பெண்ணோடும் சின்னவனோடும் இரவுகளில் தாலாட்டு பாடியது, நீ தூங்கு கண்ணா காலேல 4.30 பிளட்டப்பிடிச்சாத்தான் செமினார் அட்டண்ட் பண்ண முடியும் நான் பாத்துக்கறேன்….. இல்ல எனக்கு தூக்கம் அதிகம் வராது அவன் படிச்சு முடிக்கர வரைக்கும் நான் உக்காந்துக்கறேன் டீ வேணா போட்டுத்தரேன் நாளைக்கு உனக்கு நிறைய வேலை இருக்கு நான் வேர பிசினஸ் விஷயமா ஊருக்குப்போரேன் தனியே திண்டாடுவே நீ ரெஸ்ட் எடு… போன்ற பிண்ணணிக்காட்சிகளை கற்பனை செய்து கொள்ளவும்.)
பற்று மிகுந்து வரப்பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
நன்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
(நிறைவான குடும்பம், வீடு, காரு, மனசு நெரஞ்ச சந்தோஷம், -அவர்கள் படத்துல காற்றுக்கென்ன வேலின்னு பாடிண்டு சுஜாதா ரொம்ப வேகமா ட்ராலி போரமாத்ரி ஒரு ஷாட் … அப்புறம். வேலைல ரொம்ப டென்ஷன் ஜாஸ்தியாகிப்போனதும் கண்ணா ரொம்ப முடியலன்னா வேலைய விட்டுட்டு சொந்தமா ஏதாவது தொழில் பண்ணே என்று சொந்த பிசினஸ் தொடங்க செய்த ஊக்கம் இதெல்லாம் பிண்ணனணிக்காட்சிதான்)
இங்கிவனை யான் பெறவே என்னதவம் செய்து விட்டேன்…..
முடிக்கும் போதுதான் எல்லாரும் கவனிச்சோம் நான் அவர் மேல சாய்ஞ்சிட்டு இருக்கேன். என் பொண்ணு மாப்பிள்ளை கையையும் என் பெரிய பையன் அவன் காதலியையும் பார்த்துட்டு இருக்கான். என் சின்னப்பயன் என் மடில படுத்துட்டு இருக்கான். அந்த இடமே ரொம்ப சிவாஜியா (அதாங்க நடிகர் திலகம் சிவாஜி) பாத்திரத்தோட ஒன்றியிருந்தது. ஏதோ நான் ரொம்ப நல்லாத்தான் பாடியிருப்பேன் போல….
சட்டுனு எல்லார் கிட்டயும் அன்பு ததும்பி வழிஞ்சிட்டு இருந்தது. என் நாட்டுப்பொண் மெல்ல எங்கிட்ட வந்து ஐ லவ் யூ ஆண்ட்டி என்று கிஸ்ஸிட்டுப்போனாள். பின் மெதுவா ஆன்ட்டி எண்ட அச்சன் அம்மயிடத்து பரயாம் நிங்களும் எங்கட அகத்திலோக்கி வரணும் என்ன பெண்ணு காணானு. இது ஒரு தனிச்ச எக்ஸ்பீரியன்ஸா அத ஞான் விடாம் பாடில்லா.. கிருஷ்ணா நீ ஆண்ட்டியிடத்துப் பரயடா என்றபடி என் மகனின் தோளில் தொங்கினாள். அதில் ஒரு புரிதல் இந்த வீட்டோடுடனான இணக்கம் இருந்தது. எனக்கு நாம் ஏதோ கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்ற மன நிறவு வந்தது.
ஆனால் என் வீட்டுக்காரரோ.. அடப்போங்கடா ஒரு விஷயத்தையும் ஒழுங்கா செய்யமாட்டேங்க நான் இப்ப வாச்சும் போய் லெட்டர் போடரோம்னு சொல்லலாம்னு பார்த்தா இப்படி சொதப்பிட்டீங்களே என்றபடி கண் சிமிட்டினார்….
Friday, March 28, 2008
கைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்திரம்,

புத்தகத்தின் தலைப்பு குள்ளச்சித்தன் சரித்திரம் என்பதை கேட்டதில்/கண்டதில் இருந்து எனக்குள் ஒரு சிறு உதைப்பு ஒருவேளை இந்திரா பார்த்தசாரதி வகையை சார்ந்து இருக்குமோ என்று ஆனாலும் பரிந்துரைத்திருத்த நன்பரின் வாசிப்பு அலைவரிசை பல நேரங்களில் என்னோடு ஒத்துப்போயிருப்பதால் சிறிதே இருந்த தயக்கத்தை ஒதுக்கி விட்டு வாசிக்கத்துவங்கினேன். என்னை முழுதுமாய் தன்னுள் மூழ்கடித்துக் கொண்டது அப்புத்தகம்.
புனைவிற்குள் புனைவு என்ற வகையில் எழுதப்பட்டிருக்கும் அந்த நாவலின் கதை மாந்தர்கள் துவக்கத்தில் ஒரே சமதளத்தில் பயணிக்கத் துவங்கி பின் இரு பிரிவாகப்பிரிந்து ஒரு பிரிவு பாத்திரங்கள் ஒரு புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதாகவும், மறு பிரிவு அந்த புத்தகத்தை வாசிக்கும் கதாபாத்திரமாகவும் அவரைச்சுற்றி வாழும் கதை மாந்தர்களாகவும் அமைந்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது. அந்தப்புத்தகமும் இரண்டாம் பிரிவு கதாபாத்திரங்களில் ஒன்றாகி விடுகிறது.
ஒரு கட்டத்தில் நாமும் பழனியப்பனோடு அந்தப்புத்தகத்தை வாசிக்கும் வாசகனாக மாறத்துவங்கிவிடுகிறோம். மிக நேர்த்தியான கட்டமைப்போடு கூடிய ஒரு கதைப்பின்னல்.
முத்துசாமியின் (முத்துஸ்வாமி இல்லை என்று அவராலேயே மறுக்கப்படுகிறது புத்தகத்தின் ஆரம்பத்தில்) பார்வைகளும், அனுபவங்களும் எந்த வித மிகைப்படுத்துதல்களும் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவரோடு நட்புறவாடும் ஹாலாஸ்யம் மிக இயல்பாக அதை எதிர் கொள்ளும் பாங்கும் அதைத்தொடர்ந்த முயற்சிகளும் ஒரு நல்ல பார்வையாளனுக்கான விதிமுறகளைக் கற்றுத்தருகிறது.
நம்மை செட்டிநாட்டு செம்மண் தெருக்கெளிலும் விளாத்திகுளத்தின் உப்பேறிய காற்றுக்களிலும், மதுரையின் ரத வீதிகளிலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதைகளிலும், வைத்தீஸ்வரன் கோயில் குளக்கரையிலும் மட்டுமல்லாது சந்தடி மிகுந்த காசி நகர் தெருக்களிலும், யமுனை நதிக்கரைகளிலும் வெகு அநாயசமாக எடுத்துச்செல்லும் திறமை அந்த எழுத்துக்களுக்கு இருந்தது என்றே சொல்ல வேண்டும்..
கதைக்கருவின் சாத்தியக்கூறுகளை தனிமனித நம்பிக்கைகளுக்கு விடுத்துவிட்டாலும் நாவல் படைப்பின் கட்டமைப்பினால் அந்தப் புத்தகம் நம் கைகளில் சுவாசிக்கத்தொடங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.
புத்தகத்தின் முடிவில் பாத்திரப்படைப்புக்களிலும், நிகழ்ச்சிகோர்ப்புக்களிலும் உள்ள சிறிதளவு ஒற்றுமை எஸ்.ராவின் யாமத்தை நினைவூட்டத்தவறுவதில்லை. ஆனால் இந்த புத்தகம் 2002ல் யாமத்திற்கு முன்னரே வெளிவந்துள்ள காரணத்தினால் யாமம் ஒரு எதேச்சையான ஒற்றுமையாகவோ அல்லது எப்பொழுதுமே நல்ல புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த புத்தகமும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது.
ஆசிரியர் – யுவன் சந்தரசேகர் – தமிழினி பதிப்பகம் – 2002 வெளியீடு.
Sunday, March 23, 2008
தே.மு.தி.க – தேயும் நம்பிக்கை – அதனால் உதயம் வ.மு.மு.க
ஒரு வணிகரீதியான வெற்றிப்பட (முன்னாள்) நாயகனாக இருந்தபோது கூட ஒரு சினிமா கதாநாயகனாக எம்மைப் போன்றவர்களை கவரமுடியாத தே.மு.தி.க தலைவர் அவர்கள் அரசியலுக்கு வந்த போது இடைவேளைக்குப் பிறகு வரும் சுவராசியத் திருப்பம் போல் நம்மை எல்லாம் முதுகு நிமிர்ந்து உட்கார வைத்தார் என்பது தான் உண்மை. அரசியல் என்றாலே ஆறு காத தூரம் ஓடும் என்போன்றவர்களுக்கு கூட ஒரு சின்ன நம்பிக்கை (தமிழகத்தை உய்விக்க வந்த நான் லீனியரோ – உபயம் ஜ்யோவ்ராம் சுந்தர் (டைட்டில் மட்டும்))) தந்துதான் வைத்தார்.
ஆனால் இப்போது அவரைச்சுற்றிப் பெருகி வரும் வழக்கமான அரசியல் பந்தானங்களைப் பார்க்கும் போது முளைத்த நம்பிக்கைகள் பொய்யானவையோ என்று தோன்ற வைக்கிறது இங்கு அணிவகுக்கும் கட்டவுட் காலாசாரங்கள்.

அதனனல ஒன்னு செய்யலாம்னு தோணுது நம்ம பதிவுலகலதான் நல்ல பழுத்த அரசியல் வாதிகள்!!!! இருக்காங்களே நாம ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்க கூடாது????? என்ற கேள்வியில் எழுந்தது தான் இந்த புதிய கட்சி.
பெயர் – வலைப்பதிவர் முற்போக்கு முன்னேற்றக் கழகம்.
உறுப்பினர் ஆகத்தகுதி – ஹீ ஹீ இதெல்லாம் சொல்லியா தெரியணும்..
சின்னம் – வேற என்ன கணணிதான்
கொள்கை – இன்னபிற தேவையற்ற இத்யாதிகளை நீங்கதான் சொல்லுங்களேன் ஆலோசித்து முடிவு செய்யலாம்
ஆனால் இப்போது அவரைச்சுற்றிப் பெருகி வரும் வழக்கமான அரசியல் பந்தானங்களைப் பார்க்கும் போது முளைத்த நம்பிக்கைகள் பொய்யானவையோ என்று தோன்ற வைக்கிறது இங்கு அணிவகுக்கும் கட்டவுட் காலாசாரங்கள்.

அதனனல ஒன்னு செய்யலாம்னு தோணுது நம்ம பதிவுலகலதான் நல்ல பழுத்த அரசியல் வாதிகள்!!!! இருக்காங்களே நாம ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்க கூடாது????? என்ற கேள்வியில் எழுந்தது தான் இந்த புதிய கட்சி.
பெயர் – வலைப்பதிவர் முற்போக்கு முன்னேற்றக் கழகம்.
உறுப்பினர் ஆகத்தகுதி – ஹீ ஹீ இதெல்லாம் சொல்லியா தெரியணும்..
சின்னம் – வேற என்ன கணணிதான்
கொள்கை – இன்னபிற தேவையற்ற இத்யாதிகளை நீங்கதான் சொல்லுங்களேன் ஆலோசித்து முடிவு செய்யலாம்
Thursday, March 20, 2008
சொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.

என் ஆபிஸ் மாறினப்புறம் மொதல்ல கொஞ்ச நாளைக்கு ரொம்ப பொறுப்பா என்னோட 2 வீலர்ல என் வீட்டில் இருந்து புறப்பட்டு பிரதான சாலை வழியாக (ஏன்னா மத்த வழி எல்லாம் தெரியாது) எல்லா சிக்னலிலும் நின்று ஒரு 40 நிமிஷ நேரத்தில் அலுவலகத்திற்கும். பின் அலுவலகத்தில் இருந்து 50+ நிமிஷத்தில் வீட்டிற்கும் போவது வழக்கம். சில சமயம் இரங்கமணி கொண்டு விடுவது வழக்கம் அது போன்ற சமயங்களில் காரில் ஏறியவுடன் ஒரு முடிவு செய்து கொள்வேன் “இவர் போகும் வழிகளை நன்கு பார்த்து வைத்துக்கொள்ளவேண்டும்”(ஏன்னா எப்படியோ சிக்னலே இல்லாத ரோட்டுல போயி வேகமா கொண்டு விடுவது வழக்கம்) பின் நாமும் அது போல போகலாம் என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் வழக்கம் போல் ஏதாவது பேச ஆரம்பிப்பேன் இல்லேன்னா அவர் ஏதாவது பாட ஆரம்பிப்பார் (எங்க வீட்டு இரங்கமணி அவ்ளோ நல்லா பாடுவாரு) நான் என் பிரதிஞ்ஞைகளையெல்லாம் மறந்து பேச்சு/பாட்டில் மும்மராமாகி ஆபிஸ் வாசல் வந்ததையே அவர்தான் சொல்லித் தெரிஞ்சுக்கரமாதிரி ஆயிடும்.
ஆனால் இப்பெல்லாம் (அதான் 3 வருஷம் ஆயிடுச்சே) தி.நகருக்குப்போகும் அத்தனை குறுக்குச்சந்தும் எனக்கு மனப்பாடம். நான் திருப்ப வேண்டிய அவசியமே இல்லாம என் வண்டி தானே திரும்பி போற அளவுக்கு பழக்கம் ஆயிடுச்சு. எங்க ஹார்ண் அடிக்கணும் எங்க மெதுவா போகணும் இது போன்ற இன்னபிற நுணுக்கங்களுக்கு கூட என் மூளையின் கட்டளைகளை என் வண்டியோ என் கைகளோ எதிர்பார்பதேயில்லை ஒரு தானியங்கி சாதனம் மாதிரி போயிகிட்டே இருக்கும். ஆனா இதுல இருக்கற ஒரு பெரிய தொல்லை பத்திதான் இந்த பதிவே (தலைப்புக்கு வரவேண்டாமா அட்லீஸ்ட் தமிழ் சினிமா மாதிரி கடைசிலயாவது சொல்லித்தானே ஆகணும்.)
இப்படி வர முட்டுச்சந்துகளின் மொத்த அகலத்தில்
01. இரண்டு இரு சக்கர வாகனங்கள் எதிரும் புதிருமா ரொம்ப வசதியா போகலாம், (ஏன்னா எல்ல சந்திலேயும் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் அது வாசல்ல அவங்கவங்க 2 வீலர் இருக்கும்)
02. ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு புறமாக போக மட்டுமெ செய்யலாம். (அதுவும் மாருதி ஆல்டோ, 800, பழைய மாருதி ஜென், மாருதி ஆம்னி போன்றவைகள் மட்டுமே , ப்ரிமியர் பத்மினிய இதுல சேர்க்க மாட்டேன் ஏன்னா திடீர்னு திருப்பணும்னா ஓட்டுநர் ஒரு ஹெவி வெகிக்கிள் லைசன்ஸ் வைச்சிருந்தார்னாத்தான் முடியும்)
03. ஒரே ஒரு மீன்பாடி வண்டி (சென்னை நகரவாசிகளுக்கு இதன் மகத்துவம் நல்லாவே தெரியும்) ஒரு புறமாக போக மட்டுமே முடியும்.
04. ஒரு ஆட்டோ போகலாம்( இவங்களுக்கு ஒரு/மறு புறமெல்லாம் கிடையாது எங்க வேணா எப்ப வேணா திரும்புவாங்க பின்னாடி வர்ரவங்க அதை அனுசரித்து ஒட்டினா அவங்கவங்களுக்கு நல்லது).
ஒரு முக்கியமான் விஷயத்தை விட்டுட்டேன், ஒவ்வொரு சந்துலேயும் ஒரு மாநகராட்சி குடிதண்ணீர் தொட்டி இருக்கும் அதற்கு தண்ணி வினியோகம் செய்ய எப்ப வேணா மாநகராட்சி வாகனங்கள் வரும் அந்த நேரங்களில் எந்தப்பக்கமும் வாகன போக்கு வரத்து இருக்காது (ஏன்னா மொத்த தெருவையும் அந்த வாகனம் தான் அடைச்சு நிக்குமே).
இந்த அழகில பல 4 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த தெருக்களை தாண்டிச்செல்வதையே குறிக்கோள்களாகக்கொண்டு வருவது வழக்கம் அப்பெல்லாம் எனக்கென்னமோ அவங்கள பார்த்த கோட்டு சூட்டு போட்டு கிட்டு பஞ்சுமிட்டாய் சாப்பிடர மாதிரியும், மடிசார் புடவை கட்டிகிட்டு மீன் வாங்கற மாதியும் தோணும். இன்னக்கி எல்லாத்தையும் தூக்கி சாப்டுவது போல இது போன்ற ஒரு குறுக்குச்சந்தில் ஒரு நல்ல ஹுண்டாய் சொனாட்டா கோல்ட் கார ஒட்டிகிட்டு வந்தார் ஒரு கனவான். கரெக்டா இவரு நடு தெருவுக்கு வரவும் மாநகராட்சி தண்ணி வாகனம் வரவும் ரொம்ப சரியா இருந்தது. பின்னாடி வந்த எங்களைப்போன்றவங்க ரொம்ப சமயோசிதமா இந்த சொனட்டா கோல்டை தாண்டி போகலாம்னு முயற்சி பண்ணினா இதையெல்லாம் முன்னமே உணர்ந்த ஆட்டோ எங்களை முந்திகிட்டு தாண்டிப்போக முயற்சித்து அந்த அடுக்குமாடி குடியிருப்புக்காரரின் 2 வீலரை இடிச்சு ஒரே ரகளை டிராபிக் நின்னாச்சு, சரி பின்னாடி போயிடலாம்னு பார்த்தா , ஆட்டோ, ஒரு காரு, நிறைய 2 வீலர், அப்புறம் ஒரு மினிலாரி, எங்க திரும்பறது ஒரு 15 நிமிஷம் எந்த வழியும் இல்லாம நின்னு மாநகராட்சி வண்டிக்காரனை கெஞ்சி கூத்தாடி பின்னாடி போக வெச்சு (அதுக்குள்ள அது பின்னாடி ஒரு 10 /25 வண்டி வந்தாச்சு – ஆனா இந்த மாதிரி சமயத்தில சில திடீர் பரோபகாரிகள் வந்துருவாங்களே) நாங்க அந்த இடத்தவிட்டு வர்ரதுக்குள்ளே வந்த எரிச்சல்ல தமிழ்மணத்துக்கு ஒரு பத்து பக்க மொக்க போடனும்போல ஆச்சு.
தி மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்… இதனால் யாவருக்கும் சொல்லவருவது என்னவென்றால் இவ்வளவு பெரிய காரையெல்லாம் எந்த காரணத்துக்காகவும் இந்த மாதிரி சின்ன சந்துக்கு கொண்டு வராதீங்க அது உங்க காருக்கும் மரியாதை இல்ல எங்க மாதிரி பொது ஜனத்துக்கும் நல்லதில்ல.
Saturday, March 8, 2008
இலக்கியவாதியின் இலக்குகள் எதுவாயிருக்க முடியும்??
எதையும் எழுத வேண்டாமென என் பேனாவின் மை போத்தல்களில் நீர் வார்த்து வைத்திருந்தேன். என் வாசிப்புக்களின் தருணங்களை களவாடிச்செல்லும் இந்த புதிய கயமையில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை என்று என் ஆழ் மனதிற்கு மீள் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தேன்.
மிகுந்த காதலோடு என் கையிருப்பு புத்தகத்தில் கவனம் செலுத்தலானேன். ஒரு பெருத்த விடுதலை தந்த உணர்வோடு நானும் என் புத்தகமுமாய் கரையெதென்று அறிய முடியா ஆற்றுப்படுகைக்குள் அமிழ்ந்திருந்தேன். வகுரனும், சுடலியும், பெத்தம்மாளும், கோப்பமாளும் “கோணங்கியின்” வாயிலாக துணி துவைக்க வரும் வரை. பின் பாலகன் வாசுதேவனை சுமந்து சென்ற வசுதேவனுக்கு வழி விட்ட யமுனை போல் என்னை பிளந்து கொண்டு வார்த்தைகளும், வாக்கியங்களும் வெளியேறத்துடித்தன.
எழுதுவதென்பது வாசிப்புக்களின் விளைபயன்களானால் அது ஆரோக்கியமானதா என்ற கேள்வியை நானும் “தனித்துவத்தின் பங்களிப்புக்களல்லாத படியெடுத்தல்கள் மட்டுமே தவறென்ற” பதிலை என் ஆழ்மனதும் விவாதிக்க தொடங்கியது.
அந்த வனாந்தரத்தில் இருளோடு இயைந்து நான் ஒரு மன உறுதியோடு
அந்த பனி மூடிய முகடுகளை நோக்கி முன்னேறிச்சென்றேன். வழியில் காணும் ஜந்துக்களெல்லாம் வழக்காடிச்சென்றன, “நீ என்ன செய்ய முடியும் அந்த பனி மூடிய முகடுகளில் உயிர்சத்தென்று ஏதும் இல்லை நும் பயணம் ஒரு வீணே போகும் ஒரு சக்தி விரயம் என்று பலதும் பகடித்து கடந்தது.” ஜென்ம ஜென்மமாய் உறைந்து கிடக்கும் அந்த முகடுகளில் இருந்து வரும் உயிரின் வாசனை என்னை மீண்டும் மீண்டும் பயணிக்கத்தூண்டியது. இரண்டல்லாத ஒன்று உண்டென்று நானறிவேன் அதற்கு உண்மை என்ற பெயர் உண்டென்றும் நானறிவேன் அதன் தளங்களைத் தட்டிபார்க்கும் வைராக்கியத்தை மட்டுமே துணை கொண்டு நான் மெல்ல மெல்ல அந்த பனி படர்ந்த உச்சியை நோக்கிய என் பயணத்தை தொடர்ந்தேன்.
வழியில் கண்ட
பூனைகள் எனக்கு கயமையையும்
முதலைகள் நீக்குப்போக்கையும்
மான்கள் காதலையும்
கரடிகள் கனவுகளையும்
குள்ளநரிகள் வஞ்சனையையும்
நரிகள் இருமையும்
பெண் சிங்கங்கள் ஆளுமைகளையும்
கற்றுத்தந்தது. அவைகளை கற்று பின் மறந்து விட்டு
பின்னர் வந்த
எறும்புகள் கற்றுத்தந்த ஒத்திசைவையும்
நாய்கள் சொல்லித்தந்த நன்றியையும்
காகங்களின் நட்பையும்
மீன்களிடமிருந்து அன்பையும்
ஆந்தைகளிடமிருந்து பொறுமையையும்
பட்டாம்பூச்சிகளின் மாறுதல்களையும்
கழுகுகள் கற்றுத்தந்த ஆத்ம தேடலையும்
கொக்கின் தனிமையையும்
வவ்வால்களிடம் இருந்து கர்மயோகத்தையும்
எருமைகளிடமிருந்து புனிதத்தன்மையையும்
தவளைகளிடமிருந்து இருத்தலையும்
கற்று கைகொண்டு அந்த சிகரங்களை அடைந்த போது நானும் இரண்டில்லாத ஒன்றானா அத்வைத ஏகாந்தத்தில் கரைந்து போனேன். என்னில் இருந்து நெகிழ்ச்சி, வலிமை, வெற்றி, பாசம், நேசம், பக்தி, பரிவு, பற்றுறுதி, நம்பிக்கை, அழகுணர்ச்சி, சுதந்திரம், எனும் குதிரைகள் பிறந்து கிளர்ந்து இந்த உலகு நோக்கி வரத்துவங்கியது நான் எல்லாவற்றிற்கும் சாட்சியாய் அந்த பனி படர்ந்த முகடுகளுக்குள்…………
மனிதத்தின் மேன்மைகளை வெளிக்கொணரும் எழுத்தின் எந்த ரூபமும் அதை எழுதியவனின் மேன்மைகளுக்கு ஒப்பாகும். எனவே “கோணங்கிக்கு” என் அனந்த கோடி வந்தனங்கள்.
மிகுந்த காதலோடு என் கையிருப்பு புத்தகத்தில் கவனம் செலுத்தலானேன். ஒரு பெருத்த விடுதலை தந்த உணர்வோடு நானும் என் புத்தகமுமாய் கரையெதென்று அறிய முடியா ஆற்றுப்படுகைக்குள் அமிழ்ந்திருந்தேன். வகுரனும், சுடலியும், பெத்தம்மாளும், கோப்பமாளும் “கோணங்கியின்” வாயிலாக துணி துவைக்க வரும் வரை. பின் பாலகன் வாசுதேவனை சுமந்து சென்ற வசுதேவனுக்கு வழி விட்ட யமுனை போல் என்னை பிளந்து கொண்டு வார்த்தைகளும், வாக்கியங்களும் வெளியேறத்துடித்தன.
எழுதுவதென்பது வாசிப்புக்களின் விளைபயன்களானால் அது ஆரோக்கியமானதா என்ற கேள்வியை நானும் “தனித்துவத்தின் பங்களிப்புக்களல்லாத படியெடுத்தல்கள் மட்டுமே தவறென்ற” பதிலை என் ஆழ்மனதும் விவாதிக்க தொடங்கியது.
அந்த வனாந்தரத்தில் இருளோடு இயைந்து நான் ஒரு மன உறுதியோடு

வழியில் கண்ட
பூனைகள் எனக்கு கயமையையும்
முதலைகள் நீக்குப்போக்கையும்
மான்கள் காதலையும்
கரடிகள் கனவுகளையும்
குள்ளநரிகள் வஞ்சனையையும்
நரிகள் இருமையும்
பெண் சிங்கங்கள் ஆளுமைகளையும்
கற்றுத்தந்தது. அவைகளை கற்று பின் மறந்து விட்டு
பின்னர் வந்த
எறும்புகள் கற்றுத்தந்த ஒத்திசைவையும்
நாய்கள் சொல்லித்தந்த நன்றியையும்
காகங்களின் நட்பையும்
மீன்களிடமிருந்து அன்பையும்
ஆந்தைகளிடமிருந்து பொறுமையையும்
பட்டாம்பூச்சிகளின் மாறுதல்களையும்
கழுகுகள் கற்றுத்தந்த ஆத்ம தேடலையும்
கொக்கின் தனிமையையும்
வவ்வால்களிடம் இருந்து கர்மயோகத்தையும்
எருமைகளிடமிருந்து புனிதத்தன்மையையும்
தவளைகளிடமிருந்து இருத்தலையும்
கற்று கைகொண்டு அந்த சிகரங்களை அடைந்த போது நானும் இரண்டில்லாத ஒன்றானா அத்வைத ஏகாந்தத்தில் கரைந்து போனேன். என்னில் இருந்து நெகிழ்ச்சி, வலிமை, வெற்றி, பாசம், நேசம், பக்தி, பரிவு, பற்றுறுதி, நம்பிக்கை, அழகுணர்ச்சி, சுதந்திரம், எனும் குதிரைகள் பிறந்து கிளர்ந்து இந்த உலகு நோக்கி வரத்துவங்கியது நான் எல்லாவற்றிற்கும் சாட்சியாய் அந்த பனி படர்ந்த முகடுகளுக்குள்…………
மனிதத்தின் மேன்மைகளை வெளிக்கொணரும் எழுத்தின் எந்த ரூபமும் அதை எழுதியவனின் மேன்மைகளுக்கு ஒப்பாகும். எனவே “கோணங்கிக்கு” என் அனந்த கோடி வந்தனங்கள்.
Subscribe to:
Posts (Atom)