Saturday, March 8, 2008

இலக்கியவாதியின் இலக்குகள் எதுவாயிருக்க முடியும்??

எதையும் எழுத வேண்டாமென என் பேனாவின் மை போத்தல்களில் நீர் வார்த்து வைத்திருந்தேன். என் வாசிப்புக்களின் தருணங்களை களவாடிச்செல்லும் இந்த புதிய கயமையில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை என்று என் ஆழ் மனதிற்கு மீள் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தேன்.

மிகுந்த காதலோடு என் கையிருப்பு புத்தகத்தில் கவனம் செலுத்தலானேன். ஒரு பெருத்த விடுதலை தந்த உணர்வோடு நானும் என் புத்தகமுமாய் கரையெதென்று அறிய முடியா ஆற்றுப்படுகைக்குள் அமிழ்ந்திருந்தேன். வகுரனும், சுடலியும், பெத்தம்மாளும், கோப்பமாளும் “கோணங்கியின்” வாயிலாக துணி துவைக்க வரும் வரை. பின் பாலகன் வாசுதேவனை சுமந்து சென்ற வசுதேவனுக்கு வழி விட்ட யமுனை போல் என்னை பிளந்து கொண்டு வார்த்தைகளும், வாக்கியங்களும் வெளியேறத்துடித்தன.

எழுதுவதென்பது வாசிப்புக்களின் விளைபயன்களானால் அது ஆரோக்கியமானதா என்ற கேள்வியை நானும் “தனித்துவத்தின் பங்களிப்புக்களல்லாத படியெடுத்தல்கள் மட்டுமே தவறென்ற” பதிலை என் ஆழ்மனதும் விவாதிக்க தொடங்கியது.

அந்த வனாந்தரத்தில் இருளோடு இயைந்து நான் ஒரு மன உறுதியோடு அந்த பனி மூடிய முகடுகளை நோக்கி முன்னேறிச்சென்றேன். வழியில் காணும் ஜந்துக்களெல்லாம் வழக்காடிச்சென்றன, “நீ என்ன செய்ய முடியும் அந்த பனி மூடிய முகடுகளில் உயிர்சத்தென்று ஏதும் இல்லை நும் பயணம் ஒரு வீணே போகும் ஒரு சக்தி விரயம் என்று பலதும் பகடித்து கடந்தது.” ஜென்ம ஜென்மமாய் உறைந்து கிடக்கும் அந்த முகடுகளில் இருந்து வரும் உயிரின் வாசனை என்னை மீண்டும் மீண்டும் பயணிக்கத்தூண்டியது. இரண்டல்லாத ஒன்று உண்டென்று நானறிவேன் அதற்கு உண்மை என்ற பெயர் உண்டென்றும் நானறிவேன் அதன் தளங்களைத் தட்டிபார்க்கும் வைராக்கியத்தை மட்டுமே துணை கொண்டு நான் மெல்ல மெல்ல அந்த பனி படர்ந்த உச்சியை நோக்கிய என் பயணத்தை தொடர்ந்தேன்.

வழியில் கண்ட

பூனைகள் எனக்கு கயமையையும்
முதலைகள் நீக்குப்போக்கையும்
மான்கள் காதலையும்
கரடிகள் கனவுகளையும்
குள்ளநரிகள் வஞ்சனையையும்
நரிகள் இருமையும்
பெண் சிங்கங்கள் ஆளுமைகளையும்
கற்றுத்தந்தது. அவைகளை கற்று பின் மறந்து விட்டு

பின்னர் வந்த

எறும்புகள் கற்றுத்தந்த ஒத்திசைவையும்
நாய்கள் சொல்லித்தந்த நன்றியையும்
காகங்களின் நட்பையும்
மீன்களிடமிருந்து அன்பையும்
ஆந்தைகளிடமிருந்து பொறுமையையும்
பட்டாம்பூச்சிகளின் மாறுதல்களையும்
கழுகுகள் கற்றுத்தந்த ஆத்ம தேடலையும்
கொக்கின் தனிமையையும்
வவ்வால்களிடம் இருந்து கர்மயோகத்தையும்
எருமைகளிடமிருந்து புனிதத்தன்மையையும்
தவளைகளிடமிருந்து இருத்தலையும்

கற்று கைகொண்டு அந்த சிகரங்களை அடைந்த போது நானும் இரண்டில்லாத ஒன்றானா அத்வைத ஏகாந்தத்தில் கரைந்து போனேன். என்னில் இருந்து நெகிழ்ச்சி, வலிமை, வெற்றி, பாசம், நேசம், பக்தி, பரிவு, பற்றுறுதி, நம்பிக்கை, அழகுணர்ச்சி, சுதந்திரம், எனும் குதிரைகள் பிறந்து கிளர்ந்து இந்த உலகு நோக்கி வரத்துவங்கியது நான் எல்லாவற்றிற்கும் சாட்சியாய் அந்த பனி படர்ந்த முகடுகளுக்குள்…………

மனிதத்தின் மேன்மைகளை வெளிக்கொணரும் எழுத்தின் எந்த ரூபமும் அதை எழுதியவனின் மேன்மைகளுக்கு ஒப்பாகும். எனவே “கோணங்கிக்கு” என் அனந்த கோடி வந்தனங்கள்.

13 comments:

பாச மலர் said...

தொடர்ந்து இந்த நடையில் கலக்குகிறீர்கள்...மீண்டும் ஒரு புத்தகம் படித்தாயிற்றா?..ம்ம்

தமிழ்நதி said...

“தனித்துவத்தின் பங்களிப்புக்களல்லாத படியெடுத்தல்கள் மட்டுமே தவறென்ற”

நன்றாய் சொன்னீர்கள். கோணங்கியின் எழுத்துக்கள் அடுத்த தளம்... நான் இன்னும் நகராத பகுதி என்று வாசிப்பைப் பின்தள்ளிவைத்திருந்தேன். ஆனால்,அது என் கற்பனையோ என எண்ண வைக்கின்றன நீங்கள் எடுத்துப்போட்ட வரிகள். புத்தகம் குறித்துக்கொண்டேன். நன்றி.

கிருத்திகா said...

மலர் - சில சமயம் அங்கணம் நேர்வதுண்டு.. ஆமாம் " கோணங்கியின் "கொல்லனின் ஆறு பெண்மக்கள்" வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

கிருத்திகா said...

தமிழ்நதி - அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருக்கிறேன் ஆனாலும் அதையே ஒரு தொகுப்பாக வாசிக்கும் பொழுது ஈடு செய்ய முடியாத மலைப்பையும் ஒரு சக பிரயாணின் சகவாசத்தையும் உணர்த்துகிறது. வாசித்துப்பாருங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கோணங்கியின் மதினிமார்கள் கதையும் கொல்லனின் ஆறு பெண் மக்கள் தொகுதியும் ஒரு தளத்தில் இருக்கும். மூன்றாவது தொகுதியிலிருந்து அவரது மொழி வேறு பரிமாணத்தை அடைந்திருக்கும்.

மிக நல்ல கதைகள் உள்ள தொகுதி கொல்லனின் ஆறு பெண் மக்கள். உங்கள் வாசிப்பிற்கு வாழ்த்துகள்.

ஜீவி said...

//மனிதத்தின் மேன்மைகளை வெளிக்கொணரும் எழுத்தின் எந்த ரூபமும் அதை எழுதியவனின் மேன்மைகளுக்கு ஒப்பாகும்.//

எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!..
பிரமிக்கிறேன்.

காட்டாறு said...

கிருத்திகா, தனிமையின் இசையின் பின்னூட்டங்களில் உங்கள் பதிவை படிக்க ஆவல் எழும். அதுவும் அடங்கிப் போகும். இன்று முதன் முறையாக உங்கள் பதிவில் காலடி எடுத்து வைத்தேன். அருமையான நடை.

வாழ்த்துக்கள் கிருத்திகா!

கிருத்திகா said...

அதைத்தானே நாம் உணரமுடிகிறது இல்லையா ஜீவி. அவரின் எழுத்துக்களின் தாக்கம் தகர்க்க முடியாததாக இருக்கிறது.

வாருங்கள் காட்டாறு தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வரும்படி எழுத ஆசைதான்.... வாழ்த்துக்கள்.

காட்டாறு said...

// கிருத்திகா said...
வாருங்கள் காட்டாறு தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வரும்படி எழுத ஆசைதான்.... வாழ்த்துக்கள்.
//

என்னங்க இது? எனக்கு இப்போ எதுக்கு வாழ்த்துக்கள்? அது உங்க சிக்னேச்சர் மாதிரி எல்லா பின்னூட்டங்களிலும் (மற்றவர்களின் பதிவுகளில்) இருக்குதே. :)

கிருத்திகா said...

ஆமாம் காட்டாறு என் வாக்கியங்களை முடிந்த வரையில் வாழ்த்துக்களுடனே முடிக்க முயற்சிக்கிறேன். நம் எல்லோருக்குமே நல்ல மனதின் வாழ்த்துக்கள் எப்போதுமே தேவையாய் உள்ளது தானே.. அடிக்கடி சொல்லும்போது ஒரு 40% சமயமாவது உண்மையாய் வாழ்த்த வாய்ப்புள்ளதல்லவா அதனாலேயே இந்த முயற்சி.

இசக்கிமுத்து said...

எழுத்து நடை நன்று! வாசிக்கும் போது அலுப்பு தோன்றாத வகையில் எழுதியிருக்கிறீர்கள்!

ஜோதிபாரதி said...

வரிகளை அழகாகப் புனைகிறீர்கள்
நன்றாக இருக்கின்றன உங்கள் பதிவுகள்
இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்

அன்புடன்,
ஜோதிபாரதி.

கிருத்திகா said...

நன்றி இசக்கிமுத்து.
வாருங்கள் ஜோதிபாரதி. நன்றி..