Sunday, May 14, 2017

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 2


பக்கத்தில் இருந்த சலுனில் கேட்டதில் அவர்கள் ஒரு சாவியைக் கொடுத்து திறந்து கும்பிட்டுட்டு போங்க என்று சொன்னார்கள். கேட்டை திறந்து உள்ளே போனால் ஏதோ பழங்கால தெப்பக்குளத்து படிகள் போல ஒரு பாதை இறங்கிச் செல்ல இடது புறம் ஒரு புதிய மண்டபம் அதற்கு ஒரு கேட் அதுவும் பூட்டியிருந்தது. ஏறிக் குதித்து விடலாமா என்று யோசிக்கும் போதே ஸ்ரீ என் மைன்ட் வாய்ஸ் கேட்ட மாதிரி கேட் உயரம் ஜாஸ்தி என்று சொன்னார். இப்படியே விட்டா ஸ்ரீ திரும்பி போயிடலாம்னு சொல்லிடுவாரோன்னு பயந்துட்டு “நீ இங்கயே இரு நான் போய் இந்த உள் கேட் சாவியை வாங்கிட்டு வரேன்னு” பதிலுக்கு காத்திராமால் வந்த வழியே ஒடினேன். அங்க போய் கேட்டால் அந்தச் சாவி இங்க இல்லங்க பஸ்டாண்டு பக்கத்துல இளவழுதி பூக்கடைன்னு கேளுங்க அங்க இருக்கும்னு சொல்ல கொஞ்ச தூ.....ரத்தில் இருந்த அந்தப் பூக்கடையை நோக்கி ஓடினேன்.
அங்கே போய் கேட்டதும் அதில் இருந்த ஒரு பையன் ஓஹ் சாமி பாக்கணுமா நீங்க போங்க நான் வந்திடறேன்னு சொன்னாப்ல, சரின்னு திரும்பி நடந்து போய் கிட்டிருக்கும் போதே ஸ்ரீ போன் பண்றார். பூசாரி வந்தாச்சு நீ எங்க போயிட்டேன்னு (அவரு எங்கிட்ட சொல்லிட்டு டூ வீலர்ல போயிட்டார்). தோ வந்துட்டேன்னு போனா அதுக்குள்ள அவர் சந்நிதி திறந்து வைத்திருந்தார்.
நன்றாக தரிசித்து விட்டு சாமியைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னதும் அந்தப் பையனுக்கு ஒன்னும் தெரியல, கொலசாமி கும்பிட வருவாங்க, வியாதி தீரும், பிசினஸ் நல்லா வரும், குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பிறக்கும் அப்படின்னு திருப்பி திருப்பிச் சொல்ல சரி இது வேலைக்காவதுன்னு தியானத்துக்கு உட்கார்ந்து விட்டேன்.
அதுவரை இருந்த பரபரப்பு அகன்று நல்ல அமைதி தண்ணென்று உள்ளே அமைய ஆழ்ந்து செல்ல முடிந்தது. நல்ல அனலடிக்கும் வெய்யிலில் புறம் காய்ந்து கொண்டிருக்க குளிர்ச்சியான கிரானைட் மண்டபத்துள் அகம் குளிர்ந்து அடங்கத்துவங்கியது. மனம் ஒன்றி தளும்பி கண் திறக்க அவர் அங்கிருந்த லிங்கத்தின் மேலிருந்த பூமாலையை எடுத்து பிரசாதமாக ஸ்ரீயின் கழுத்தில் இட்டு விபூதி தரவும் கிளம்பத் தயாராகும் போது “கொஞ்சம் இருங்க எங்க அப்பாக்கு போன் பண்ணியிருக்கேன் வந்துகிட்டிருக்காக, அவுக வந்து சாமி பத்தி சொல்லுவாக என்று சொல்லவும் சரி என்று சிறிது நேரம் காத்திருக்கத் துவங்கினோம்.தொடரும் ....





No comments: