Tuesday, November 17, 2009

பெண்பால் கவிதைகள் - 3

உள்ளே கனன்று வரும்
பெரு நெருப்பை
அவ்வப்போது விசிறிவிடும்
ஏதோ ஒரு நிகழ்வின்
அடையாளம் தெரியாத
அல்லது
அறிந்து கொள்ள விரும்பாத
அறியாமையின் கணத்தில்
வாழ்கிறது
"பெண்ணென்னும் மாயப்பிசாசு"


**********************


நீவி உடுத்தி
அதரச்சாயமிட்டு
அடர்ந்து
மையெழுதியோ எழுதாமலோ
கண்ணாடி முன்நின்று
அழகிதானடி நீயென
ஒரு முறை பலமுறை
தனக்குள் சொல்லி
பின்
படர்கையில் யாரேனும்
பகர்கையில்
விழியால் செவியுறும்
"பெண்மையின் அழகு"


Saturday, November 14, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 1

"பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வீராக"
சொற்களில் உறைந்திருக்கும் இறைஞ்சுதல்கள் வெளிப்படுத்தும் பாவனைகள் கண்கூடாக இப்பிரயோகத்தில் காணக்கிடைப்பது போல்
உள்ளே உணர்ந்து உறைந்து கிடைக்கும் எண்ணங்களை முழுவதும் காட்சிப்படுத்தும் ஆவலோடுதான் இந்தப்பதிவை
எழுதத்துவங்கியுள்ளேன்.

கடந்த வருட ஆரம்பத்தின் புத்தகத்திருவிழாவில் வாங்கிய கொற்றவையை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலற்று அடுத்து இதைப்படிக்கலாமா அதைப்படிக்கலாமா என்ற எந்த அலம்பலகளும் இல்லது ஆர அமர இருந்த வெற்று மனநிலையின் ஒரு பொழுதில் வாசிக்கத்துவங்கினேன்

பொதுவாக எந்த முன்மதிப்பீடுகளுமற்று படைப்புகளை அணுகுவதே மிகச்சிறந்த வழியென்று அறிந்திருந்தும், பல சமயம் உணர்ந்திருந்தும், ஏனோ "கொற்றவை" யைக்குறித்த நன்பர்களின் விமர்சனங்களும், பொதுவில் எனக்கு அறியக்கிடைத்திருந்த அந்த புத்தகத்தின் மொழி வழக்கு பற்றிய எச்சரிக்கையும் என்னுள் சிறிய இனந்தெரியாத எதிர்பார்ப்புக் கொப்புளங்களை உருவாக்கித்தான் விட்டிருந்தது। கூடவே அப்படி என்ன சொல்லிவிட முடியும் சிலம்பைப்பற்றி? எத்தனை புத்தகங்களைப்படித்திருப்போம், மிகப்பிரியமான என் தமிழாசிரியர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி எங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கென விதம்விதாமய் எத்தனை சொல்லியிருக்கிறார்கள் இதைத்தாண்டி என்ன இருக்கப்போகிறது? என்ற எண்ணத்தோடும், ஏற்கனவே பார்த்திருந்த ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு மனோநிலையோடும் தான் வாசிக்க ஆரம்பித்தேன்

ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். எதைப்பற்றியும் சிந்திக்கவொட்டாது படிக்கும் புத்தகத்தைப்பற்றி மட்டுமே காதலோடு யோசித்த நாட்களுண்டு, இதை இந்தக்கணம் சொல்லியே ஆகவேண்டும் என்ற தவிப்போடு பகிர்ந்து கொண்ட புத்தகங்களுண்டு, மனிதத்தின் மேன்மைகளை மென்மையாய் வருடி விட்டு கவித்துவமான சிந்தனைகளை கிளர்ந்தெழுத்திய புத்தகங்களுண்டு, இப்படிக்கூட சில சாதராண நடைமுறைகளை வெகு சுவாரசியமாக வடிக்கமுடியுமென்று கற்றுக்கொடுத்த புத்தகங்களுண்டு, சில புத்தகங்களை படித்து முடித்ததும் செய்யவேண்டியது இதுவென சில பட்டியல்களை இட வைத்த எழுத்துக்களுண்டு, சில புத்தகங்கள் அடுத்து எந்த புத்தகத்தையும் உடனே படிக்கவொட்டாது அசைபோட வைத்ததுண்டு.. ஆனால் இந்தபுத்தகம் என்ன செய்தது...

சொல்வதற்காகாத்தான் இந்த ஆரம்பம்...

ஏதேனும் எழுதி நாட்களாகிறது
பிரசவத்திற்கென
சுமந்திருக்கும் கருவென
உள்ளே ஊறிக்கிடக்கிறது
வார்த்தைகள்
....

மீண்டும் வருகிறேன்...

Saturday, September 26, 2009

முகமூடிக்கவிதைகள் - 9

உடுப்பிட்ட வார்த்தைகளை
உப்பிட்டு நீர் வார்த்து வைத்தேன்
என்றேனும்
நிஜமுணர்த்தக்கூடுமென்று.

***********

யாரோடும் பேசவியலாத
வார்த்தைகளை
மௌனக்கரைசலில்
கரைக்கத்துவங்கினேன்
நீர்த்துப்போன கரைசலின்
நிறம் மட்டும்
மாறியபடியே உள்ளது.


***********

ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சியாடும்
வார்த்தைகளின்
களியாட்டத்தின்
முடிவில் நின்றிருக்கும்
உண்மை

Sunday, August 23, 2009

நாதப்பிரம்மம் - பிரம்மம் நாதம்....

குட்டிகளா யாரு இது வெங்கட்ராமன் பொண்களா? பாட்டுச்சொல்லிக்கறளோ? ரொம்ப நன்னாப்பாடறேளே?
இல்லே பாட்டி சும்மா கேட்டுதான் படிச்சுண்ட்டோம்..
ஷேமமாயிருக்கனும்...ஆசீர்வாதம் கோந்தேளா...

அப்பா இன்னக்கி பாகிபெரிம்மாவாத்து கொலுல, முத்துப்பொண் பாட்டி நாங்க பாட்டு கத்துக்கறோமான்னு கேட்டா, எங்களை பாட்டு சேத்துவிடறேளா?
இப்ப என்னத்துக்கு பாட்டும் கூத்தும், சும்மா அம்மாட்ட ஸ்லோகம் கத்துக்கோங்கோ போறும். அதுக்கு பதிலா ஹிந்தி கிளாஸ் சேர்ந்தாலாவது பிரயோசனம்.

அப்ப என்ன ஹிந்தி சேக்கறேளா? இப்ப உனக்கென்ன அவசரம்? முதல்ல அக்கா சேரட்டும் உனக்கு கொஞ்சம் பெரிய கிளாஸ் ஆகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.

இப்படித்தான் ஆனது என்னுடைய இசைக்கான முதல் ஆரம்பம்.

"லம்போதர லகுமிகரா... அம்பா சுத அமர.....
லம்போதர லகுமிகரா..."

ஏன்க்கா இந்த ரமணி சும்மாவே இருக்க மாட்டாளா இல்லை யாராவது இவ கிட்ட சொல்ல மாட்டாளா இவ கர்ணகடுரமா பாடறான்னு...

"ஸ்ரீ விக்ன ராஜம் பஜே...ஸ்ரீ விக்ன ராஜம் பஜே ஏஏஏ"
ஆனா இந்த லதா சுதா நன்னா பாடறா இல்லே.. எப்படி இவா ரெண்டு பேர் குரலும் ஒரே மாதிரி இருக்கு.

"வேங்கடேசர் கொலுவிருக்கும் திருமலை திருப்பதி வேண்டும் வரம் தந்திடுவார் வெங்கடாஜலபதி".... தேரெழுந்தூர் சகோதரிகள் மாதிரி பாடவே முடியாதில்லையாக்கா...

"மருதமலை ஆண்டவனே..... மனம் குளிர பாடிட வந்தோமே"... சூலமங்கலம் சகோதரிகள் பாட்டு கேக்க தனி களைதான் இல்லேக்கா...

இப்படித்தான் என்னோடு என் இசைக்கான தேடலும் வளர்ந்தது.

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்... உன் கையில் என்னைக்கொடுத்தேன்".....அக்கா இந்த சகாயராணி எப்டி பாடறா தெரியுமா.
ஏட்டி நீங்கதான் நல்லா பாட்டு படிப்பீக இல்ல.. பின்ன ஏங்கி நீ பாடமாட்டேங்கே?
அப்போது சொல்லத்தெரியவில்லை எனக்கான இசையை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேனென்று.

மெல்ல என்னோடு இழையாய் வந்த இசையை அவ்வப்போது இனம் கண்டு கொண்டிருந்தாலும், இதுதானென்று முடிவுசெய்யும் உத்தேசம் ஏதுமின்றி இருந்திருந்தோனோ என இப்போது எண்ணத்தோன்றுகிறது.

"பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே.... இன்று......ஜென்ம ஜென்மங்களானுலும் என்ன ஜீவன் உன்னோடுதான்..... " மற்றொரு வர்ணம் கலந்து இழைகள் தடிக்கத்துவங்கியது.அக்கா இன்னக்கி ஆபிஸ்ல ஒருத்தன் ரொம்ப நன்னா பாடினான். எப்பபாரு பாடிண்டே இருக்காங்கா... ரொம்ப நன்னா பாடறான்... இப்படித்தான் வாழ்க்கை துணையை கூட என்னால் இனம் கண்டுகொள்ள முடிந்தது... தேடலின் அடுத்த கட்டம்.

வெள்ளி இழையோடு மஞ்சளும் கலந்தது.

"அம்மா அழகே.. உயிரின் ஒளியே..."
"ரவி வர்மன் எழுதாத கலையோ... ரதிதேவி வடிவான சிலையோ".... எப்படி இப்படி பாடறீங்க.. எப்பவும் பாடிண்டேதான் இருப்பேளா?.. சினிமா பாட்டு மட்டும் தான் பாடுவேளா இல்லை எல்லாப்பாட்டுமா?...
எல்லாமும்னா என்ன அர்த்தம்.. நான் பாட்டு படிச்சிக்கலை.. ஆனா எ.ஸ்.பி.பின்னா ரொம்ப பிடிக்கும்.. ஆரம்பகால எ.ஸ்.பி,பாட்டு பாடிண்டேயிருப்பேன்...
உங்க வீட்ல வேற யார் பாடுவா?.
எங்க அம்மா பாடுவா..."சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மானிடரே... ஜீவனுள்ள பெண்மனதை வாழ்விட மட்டீரா" ன்னு அம்மா பாடினா எனக்கு என்னோமோ செய்யும்..."சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி...." எனக்கொரு அக்கா இருந்தா ஆனா ரொம்ப சின்ன வயசில செத்துபோய்ட்டா எனக்கென்னமோ அம்மா அவளை நினைச்சுதான் இந்த பாட்டை அழுதுண்டே பாடுவான்னு தோணும்..

முகம் தெரியாத வயதான அந்த ஆறடிக்கும் அதிகமுள்ள பெண்மணி மனதுள் மிகவும் நெருக்கமானாள். அம்மா நீங்க பாடுங்கோளேன்... என் திருமணத்திற்கு பின் அவளிடம் பேசிய முதல் பேச்சு.. என்னை அவளோடு அதிகம் நெருங்க வைத்திருக்கும் என எண்ணுகிறேன்.

"மாமாங்கம் பல குறி கொண்டாடி நிலையுடே சீலங்கள் நாவாயி".....
"கிளிமகளே வாசாறிகே... கவி மகளே..."
"வலம்பிரி சங்கில் துளசி தீர்த்தம்...."....இது என்ன பாட்டு மாமா?

ஜேசுதாஸ்.. வசந்த கீதங்கள்.. என்னை பயித்தியம் பிடிக்க வைச்ச கேசட்... என்னையும்...

வர்ணங்களின் அடர்த்தியும் எண்ணிக்கையும் அதிகரித்து இழை தடித்துக்கொண்டே சென்றது. ஆனாலும்

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாட்டு கேசட் வாங்கியிருக்கேன் பார்த்தியா...
அய்யோ நீ அது வாங்கியிருக்கயா நான் பாரதியார் பாடல்கள் வாங்கியிருக்கேன்...
மாமா நீ கேக்காட்டா பரவாயில்லை எனக்காக ஒ.எஸ் அருண் கசல் வாங்கிகுடேன்...
பங்கஜ் உதாஸோட நாஷா கேட்டப்புறமும் உனக்கு ஒ.எஸ் அருண் வேணுமா?
அது வேற இது வேற.. இதை நான் எடுத்தக்கறேன்..

மஞ்சளும் பச்சையும் நீலமுமாய் சகலமானதும் இசையாய் உள்ளே இழைகள் பின்னிக்கிடந்தாலும் நிறைவற்ற தேடலின் தொடர்ச்சியை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மாமா..பாம்பே ஜெயஸ்ரீ குரல் கேட்டயா.. அப்படியே உள்ளுக்குள்ள ஆழமா இறங்கறது...
ஆனா எனக்கென்னமோ ஜேசுதாஸ் மாதிரி வரலை..
சும்மா அங்கயே நிக்காத மாமா..அருணாசாய்ராம் கேட்டுப்பாரு...கேட்டா ரொம்ப துக்கமா சந்தோஷமா என்னமோ பண்றது மாமா..

"புற்றில் வாழ் அரவம் கேட்டேன்" மாமா இந்த இளையராஜா குரல்ல இருக்கறது என்னது? "நற்றுணையாவதென்றும் நமச்சிவாயமே..." வெறும் தாபமும் ஏக்கமும் மட்டுமில்ல எதையோ தீர்க்கமா தெரிஞ்சிண்ட உறுதியும் இருக்கில்ல...

நன்னு நீ யாவது பாட்டு படிச்சுக்கோடா...
ஏண்டா இப்படி பாட்டு கிளாசுக்கு போக அழறே.. எங்களையெல்லாம் படிக்க வைக்க ஆளில்லை.. இப்ப உனக்கு கசக்கறதா...
நீ சும்மா சும்மா குழந்தையை படுத்தாதே.. உன்னோட ஆசையை அவன் மேல திணிக்காதே.. விடு அவனுக்கு ஆசையிருந்தா கத்துப்பான்.

அக்கா நீ பாடறயா இப்பல்லாம்?
இல்லடி டீச்சர் பொரபஷ்ன்ல இருந்துண்டு பாடெல்லாம் முடியாது...

நவீனுக்கு ஒரு கீ போர்ட் வாங்கி குடுக்கலாம்..
நன்னு சார் இன்னக்கி என்ன சொல்லி கொடுத்தார்?
கண்ணா இந்த இடம் ரொம்ப நன்னாருக்கு.. இன்னோர்தரம் வாசியேன்..
போம்மா எனக்கு கை வலிக்கறது....
ஏண்டா நன்னு கீ போர்ட் கிளாசுக்கும் போகமாட்டேங்கற.... இந்தப்பையன் ஏன் இப்படி சொதப்பறான்.?
நீ சும்மா நை நைன்னு அவனை படுத்தாதே.. விடு அவனுக்கு இண்டரஸ்ட் இருந்தா வரும்...
எப்படி மாமா இப்படி இருக்க.. பின்ன என்ன உன்ன மாதிரி பின்னாடி அலையசொல்றியா?

சின்னவனுக்கும் வயசாச்சு அவனை ஏதாவது இன்ஸ்டுருமெண்ட் சேர்க்கலாமா..?
ஆரம்பிச்சிட்டயா.. உன் வேலையை பாரு.. உன்னோட பாட்டு பைத்தியத்தை தயவுசெய்து குழந்தைகள் மேல திணிக்காதே..

அது பாட்டு பைத்தியமா... இசை என்பதும் பாட்டென்பதும் ஒன்றா????

இன்னக்கி ஜேசுதாஸ் கச்சேரி... மிஸ் பன்ணக்கூடாது மாமா... திருப்பணித்துறா ராதாகிருஷ்ணன் கடம், திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம்.. சரி காம்பினேஷன்...
நாகை முரளிதரன் வயலின் கூட அருமை இல்ல...
இன்னக்கி தனி ஆவர்த்தனம் அற்புதம்..
டிசம்பர் மாதங்கள் இப்படித்தான் கழிந்தது...

அம்மா நான் மிருதங்க கத்துகட்டுமா...
நீ இவ்ளோ எமோஷனல் ஆகாதே ... அவனுக்கு ஏதோ ஆசைல கேக்கறான் கடைசிவரைக்கும் கத்துபானான்னு தெரியாது.. நம்ம கடமை சேர்த்துவிடுவோம்..
அப்புறம் பார்க்கலாம்.
அவன் கொஞ்சம் புஷ்டியா இருக்கான் மாமா அதனால கொஞ்சம் பெரிய மிருதங்கமாவே வாங்கிகொடு...
பாப்பா இன்னக்கி மாஸ்டர் வந்தாரா.. என்ன கத்துகொடுத்தார்...

தும் கிடு தக தரிகிட தக
தும் கிடு தக தரிகிட தக
தக தரிகிடதக
தரிகிட தக தரிகிடதக
தக தரிகிடதக


அம்மா எங்க ஸ்கூல் கீ போர்ட் மாஸ்டர் அப்பா ஆபிஸை ஞாயிற்றுக்கிழமை மட்டும் கிளாசுக்கு யூஸ் பண்ணிக்கலாமான்னு கேட்டார்.
அப்ப நீ கிளாஸ் போவயா? அப்படின்னா சரி சொல்லு நான் அப்பாகிட்ட பேசிக்கறேன்.
அம்மா இங்க வா.. இது என்ன பீஸ் சொல்லு...
ஏய் இது அந்த பச்சைகிளி முத்துச்சரத்துல வருமே அந்த பீஸ்டா.. எப்படி நன்னு...
உனக்கு பிடிக்குமேன்னு படிச்சுண்டேம்மா...
வசீகரா வாசிக்கட்டா...இல்லை "ராஜ ராஜ சோழன் நான்".. வாசிக்கட்டா?
இரு இரு இன்னோன்னு கத்துண்டேன்..."ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்..." அம்மா அந்த லிரிக்ஸ் புரியலை கொஞ்சம் பாடிகாட்டேன்...

அம்மா சின்னது என்னமா வாசிக்கறது தெரியுமா...
ஸ்கூல்ல மிருதங்கம் மாஸ்டர் பயங்கர பெட்.. பிரீ டைம் கிடைச்சா மியூசிக் ரூமுக்கு போயிடறான் அங்க உக்கார்ந்து மிருதங்கம் வாசிக்கறான்...
தினமும் ராத்திரி வாசிக்கறச்ச கவனிக்கறயா அவனுக்கு ரொம்ப இண்டரஸ்ட் இருக்குமா...

பாப்பா உனக்கு கை நன்னா திருந்தி வந்திருக்கு...
நன்னு நீயும் குழந்தையோடே சேர்ந்து கீபோர்ட் வாசியேன்.. எப்படி இருக்குன்னு கேக்கறேன்....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... போலோ போலோ சத்குருநாதா.....
எப்படி நன்னு இப்படி ஸ்ருதியெல்லாம் எடுக்க கத்துண்டே... எப்போ?
இல்லமா கீபோர்ட்ல சில சமயம் நானா பாட்டு கத்துப்பேனா.. அப்ப கத்துண்டது....

என்னில் இசை பருத்த கொடியாய் விரிந்து பரந்தது...
மெல்ல மெல்ல அதனுள் மஞ்சள் பச்சை, நீலம், சிகப்பு என வர்ணம் கூடியது....

மிருதங்கத்தின் லயம் ஆரஞ்சும் சிவப்பும் கலர்ந்த வர்ணம்,
வயலினின் நாதம் அடர் ஆகாய வர்ணம்
புல்லாங்குழலின் இசை இளம் ஆகாய வர்ணம்
ஆழ் மனத்திலிருந்து வரும் வளமான குரலோசை அடர் பச்சை வர்ணம்..
ஜலீர் ஜலீர் என வழிந்தோடும் கடத்தின் லயம் அடர் ரோஜாவின் வர்ணம்..
ஆர்மோனியத்திலிருந்து வழியும் இசை இளம் ரோஜாவும், சூரியகாந்திப்பூவின் நிறமும் கொண்ட கலவை
மின்சாரத்திலியங்கும் கீபோர்டிலிருந்து எழும்பி அலையும் இசையின் நிறம் அடர் நீலமும் ரோஜாவர்ணமும் கலந்தது..

என்னுள் ரீங்கரிக்கும் இசையில் எனக்கான இசையை அடையாளம் கண்டுகொள்வது பேரவஸ்தையாயிற்று....
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா...அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியம்..." பாவி இதைத்தான் சொன்னாயா...
"ஆக பல பல நல் அழகுகள் படைத்தாய்" அய்யோ எனக்கின்னும் அந்த அழகு புரியவரலையே...

உள்ளுக்குள் தேம்பல் விளிம்பு தட்டியது..

எது எனக்கான இசை.. ரமணி, லதா சுதா, சகாயராணி, மீனாராணி, வீரலட்சுமி, ஸ்ரீதர், ஜெயலஷ்மி, எஸ்,பி,பி, ஜேசுதாஸ், சுசீலா, ஜானகி, சித்ரா, எல்.ஆர் ஈஸ்வரி, எம்.எஸ், வித்யா திருமலை, அனுராதா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, ஒ.எஸ் அருண், சௌம்யா...திருப்பணித்துறா...திருவாரூர், இளையராஜா மற்றும் பெயர் சொல்ல மறந்த எத்தனையோ கலைஞர்களில் எது எனக்கான இசை...

"எத்தனை கோடி இனபம் வைத்தாய் எங்கள் இறைவா".... - ஓரோர் இசையின் வடிவமும் உள்ளே அலை எழுப்பியது
"சித்தினை அச்சித்துடன் இணைத்தாய்
சேருமை பூதத்து வியனுலகம் அமைத்தாய்" - எங்கெங்கோ மனதைக்கொண்டு சொறுகியது விசும்பி அடங்கும் மனம் தன்னிடம் அறியாமல் தவித்தது
"அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியம்" உள்ளே இசையின் பல வர்ணங்கள் நிகழ்த்தும் வர்ணஜாலம் மெல்ல சிறு சுருளாய் எழும்பி, விரிந்து கிளைபரப்பி எங்கும் வியாபித்து பரந்து விரிந்து வெடித்துச் சிதறியது...
"ஆகப்பல பல நல் அழகுகள் சமைத்தாய்...." இறுதியாய் வர்ணங்களின் கீழ் அடுக்கடுக்காய் நீலம்... நீலம்.. கடல் நீலம்... மெல்லப்படர அடி ஆழமான மவுனத்துள் நான்.

தேடல்களற்று.....விசும்பல்களற்று... "நான்" என்பதற்கற்ற இசை ஒற்றை வர்ணமாய். பிரம்மம் நாதம்


Sunday, July 26, 2009

வா வாவென அழைக்கும் காடு - பகுதி 3



மொழி என்பது பெரும் போதையான விஷயமாயிற்று, அதை வாரி வாரி விழுங்கும்போதாகட்டும், இல்லை எழுத்தெழுதாய் கோர்க்கும் போதாகட்டும் கிடைக்கும் போதையை அத்தனை எளிதல் புறந்தள்ளி விடமுடிவதில்லை. எத்தனையோ மாறுதல்களுக்கிடையில் மிகவும் ஆறுதலான ஒரு நிகழ்வு, இப்போதெல்லாம் அதிகம் வாசிக்கமுடிகிறது. வாசித்ததை பெரும் காதலோடு அசைபோடமுடிகிறது. ஆனால் பதிவுகளில் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை, எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டும் அரிதாகத்தானுள்ளது.


மேலும், வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து முடித்த பின்னரே புதியதோர் பதிவெதுவும் இடவேண்டுமென்ற என்ற தீர்மானத்தையும் உடைத்தெறிவது நான் மேலே சொன்ன மொழி எனும் போதைதான். வார்த்தைகளை மனதுள் கட்டமைத்து அவ்வப்போது கவிதைகளாய் கையில் கிடைக்கும் காகிதங்களில் பொதிந்து கொண்டலும், சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைத்து பின் சமயமில்லையெனும் காரணத்தால் எழுதிநிறைக்காத பதிவின் முடிவுப்பகுதி இது.
இடக்கல் - எடக்கல் (இடைக்கல்) எனும் கல்வெட்டுக்களின் தேசம்


நாங்கள் வயநாடு சென்று தங்கிய நாட்களில் எங்கள் தங்குமிட பாதுகாவலரால் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு இடம். பழங்கால கல்வெட்டுக்கள் பல உள்ளதாகவும் அது ஒரு குகைப்பகுதி என்றும் சொன்னது எங்கள் ஆர்வத்தை தூண்டுவதற்கு போதுமானதாய் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டியிருந்தது. எங்கள் வாகனத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. அதற்குமேல் கேரள சுற்றுல்லாத்துறை ஏற்பாடு செய்து தரும் ஜீப்பில் மட்டுமே செல்லமுடியும். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்குப்பின் அந்த வாகனமும் செல்லமுடியாது நடந்து மட்டுமே செல்லமுடியும். வாகனத்தை விட்டு இறங்கிய நிமிடம் கண்முன் மிகப்பெரியதாய் நின்றது அந்த சிறு குண்று. பெரும் பாறைக்குவியலாய் மட்டுமே உணரமுடிந்தது. சற்றே வளைந்து சென்ற படிகளில் மேலேறிச்சென்றால் அங்குள்ள அனுமதி சீட்டு தரும் சிறு கூண்டில் இருந்த சுற்றுல்லாத்துறை அலுவலர், "இன்னம் நூறு மீட்டர் செல்லனும் " என்ற படியே அனுமதி சீட்டளித்தார். ஆர்வத்துடன் ஏற ஆரம்பித்தோம்.


ஆரம்பத்தில் படிகளோடு இருந்த வழி பின் பாறை இடுக்குகளோடே பயணப்பட வேண்டும் என்பதாயிற்று. சில இடங்களில் காலதடங்கள் பழகிய பாறைகளை கண்ணால் அளவெடுத்து அதைக்கொண்டே முன்னேற முடிந்தது. அது கண்டிப்பாய் நூறு மீட்டர் இல்லை என்பது மட்டும் தெளிவாயிற்று.


ரெங்கமணி தான் பின் தங்கியதோடு மட்டுமல்லாமல், சின்னவனையும் தடுத்து விட்டார். நானும் பெரியவனும் மட்டும் தொடர்ந்து செல்லத்துவங்கினோம். அந்த செங்குத்தான பாறை இடுக்குகளில் சில இடங்களில் இரும்பால் ஏணி செய்து மாட்டியிருந்தார்கள் சில இடங்களில் கைவைத்து ஏறிச்செல்ல வேண்டியிருநது.






நல்ல உயரத்தில் சென்ற பாதை ஒரு இடத்தில் முடிவுற்று கீழே இறங்கவேண்டியதாயிற்று. அந்த நிமிடங்களில் அது வரை இருந்து வந்த வெயில், சூடு, மூச்சு வாங்கியதால் ஏற்பட்ட வியர்வை, அத்தனையும் அகன்று, குளிர்சாதனப்பெட்டியை திறந்துவுடன் முகத்திலைறையுமே அது போன்ற காற்றும் குளிச்சியும் நம்மை தழுவி வரவேற்றது.


மொத்தம் மூன்று மிகப்பெரும் பாறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது நூறடி உயரமிருக்கும் அதன் உச்சியில் பொருத்தி வைத்தது போல் ஒரு வட்டப்பாறை இதனாலேயே இந்தக்குகைக்கு இடைக்கல் எனும் பெயர் ஏற்பட்டதாம். அதன் இடைவெளியில் தெரியும் துல்லிய வானமும் அதனால் வரும் வெயிலின் கடுமையும் அந்த குகையை தொடவேயில்லை ஆனால் வெளிச்சம் மட்டும் திருட்டு கண்ணனாய் அத்தனையையும் ஊடறுத்து வந்து இடத்தை வர்ணமாயமாக்கிக்கொண்டிருந்தது.


மழையாலோ இல்லை, தொடர்ந்து அதிகம் வெயில் படாததாலோ சில பாறைகளில் களிம்பேறிப்போன பச்சை வர்ணம், வெளிச்சம் அதிகம் படும் இடங்களில் பாறைகளுக்கேயுண்டான இளம் சிவப்பு, தரையில் உள்ளங்கால்களில் ஊடுறுவிச்செல்லும் குளிர் பரவியிருக்கும் தவிட்டு நிற பூமி (ஜெமோவின் எழுத்துக்களில் அதிகம் கவர்ந்த வார்த்தை!!!!) . தரையில் இருந்து கிட்டத்தட்ட 3 அடி உயரத்தில் ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் கோடுகள் போல் தெறியும் ஜாலங்கள். மேலே குறைந்தது 15, 20 அடிவரை செல்கிறது, அத்தனை உயர மணிதர்கள் இருந்திருப்பார்களோ எனும் எண்ணமே அந்த இடத்தில் நம்மை நெக்குருகச்செய்கிறது.

விதம் விதமாய் கோடுகள், படங்கள், அபூர்வமாய் சில எழுத்து வடிவத்தடங்கள் இப்படி இரண்டுபக்க பாறைகளிலும் நிரம்பியிருந்த காட்சி பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்திருந்த மூதாதையர்களின் வாழ்வியலை, இறை நம்பிக்கையை, கூட்டு வாழ்வின் அம்சங்களை, காட்டு வாழ்வின் இயல்புகளை பெரும் கிசுகிசுப்போடு நம் காதுகளில் பேசக்கேட்கிறோம்.






பார்க்க வரும் அனைவரும் ஆக அதிக பட்சமாய் 10 நிமிடத்தில் திரும்பிவிட தாயும் மகனும் மட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் திவங்கித்திவங்கி கால்கள் பின்ன,அந்தச்சித்திரங்கள் பேசும் பேச்சுக்களின் சக்தியை தாங்க முடியாமல் குமுறியவண்ணம் கண்கள் பொங்கி வழிய இறை தரிசனம் கண்ட நெகிழ்வில் ஒருவரோடுரொவர் பேச்சற்று இருந்த நிலை அங்கிருந்த சுற்றுல்லாத்துறை ஊழியருக்கு புதியதாய் இருந்திருக்க வேண்டும். தானகவே வந்து அந்தக்குகையின் செவி வழி வரலாற்றைக்கூறினார்.

கடல் மட்டத்திலிருந்து 4000 அடியில் இவ்விடம் உள்ளதென்றும், கிமு 4000 வருடக்கணக்கில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம், அவர்கள் கூட்டமாய் ஓரிடத்தில் வாழும் வாழ்வு முறை கொண்டிருந்ததாகவும். ஆண்களும் பெண்களும் உணவிற்காக அங்குள்ள காடுகளை நம்பியிருந்துதாகவும் கூறினார்.

பெண்களை குறிக்கும் படங்களில் இரு முக்கோணங்களை ஒன்றோடொன்று ஒட்டி வைத்தது போலவும்


அரசனை குறிக்கும் படங்களில் அவன் தலையை சுற்றி ஒரு வட்ட அங்கி இருந்தது போலவும்


மதகுரு என அழைக்கப்படும் சித்திரத்தில் அவர் கைகளை உயர்த்தி ஆசி கூறுவது போலவும்


சிறிதும் பெரிதுமான வட்ட வட்ட சக்கரங்கள் அவர்களின் சக்தி பீடமாயிருக்கவேண்டுமெண்டும் என்றும்



யானையும் அல்லாது புலியும் அல்லாது இருந்த ஒரு உருவமும் இன்னும் பலவும் அந்த ஆயிரமாண்டு கால வாழ்க்கையை நமக்குள் செதுக்கியபடி யிருந்தது

அங்கிருந்த தமிழ் போலவும், பாலி போலவும் தெரிந்த எழுத்துக்களைக்காட்டி அவர் சொன்னதாவது. ஆயிரம் புலிகளை வென்றவன் அவர்களுக்கு அரசனாக வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக்கூறினார்.




இவர்களின் வம்சம் தான் பின்னாட்களில் விஷ்னு வர்மா வம்சங்கள் என்றும் சொன்னார். பிற்காலங்களில் ஆள் நடமாற்றறுப்போன நிலையில் 1894ல் அவ்வழியே வேட்டைக்கு வந்த அந்நிய நாட்டவர் ஒருவரால் இவ்விடம் கண்டு பிடிக்கப்பட்டதென்றும் கூறினார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்த இடமென்றாலும் அதன் அதிர்வுகள் சிறிதும் குறையாமல் நம்மோடு சாந்நித்தியம் கொள்கிறதென்றால் அவர்களின் தூய்மையான வாழ்வியல் எத்துனை வலியதாய் இருந்திருக்க வேண்டும். இத்தனை நாட்கள் கழித்து எழுத முற்படும் வேளையில் என்னுள் பொங்கும் அந்தக்கணங்களின் விகசிப்பை தாங்கத்தான் முடியவில்லை.


இந்த பயணம் எனக்குணர்த்திய மற்றுமொரு சந்தோஷம், என் இத்தனை உணர்வுகளையும் அப்படியே பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அதே போன்று என் பெரியவனும் அனுபவித்த கணங்கள் உணர்த்தியது என்வீட்டில் நான் மட்டும் பைத்தியமில்லை.....எனக்கோர் வாரிசுமுண்டு...


Monday, June 15, 2009

முகமூடிக்கவிதைகள் - 8


ஆணுக்கான அடையாளமாய்
காமத்தையும்
பெண்மையின் குறியீடாய்
காதலையும்
சொல்லியாயிற்று

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்குமென்பது மாறி
இணையெதிர் துருவங்களுக்கு
நிரூபிப்பதற்கும்
என்றாயிற்று


பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....

Friday, June 5, 2009

தொலைந்து போவது பற்றி

தொலைந்து போவது பற்றி
அதிகம் தோன்றுவதுண்டு
அலுவலகம் வந்து
திரும்பாமல் பொகலாம்

நடந்து போகும் பாதையில்
திரும்பியும் போய்
தொலைந்து போகலாம்

பேச்சறவமற்று
அரையிருட்டில்
அமர்ந்தும் தொலையலாம்

அதிர்ந்து தொலைக்கும்
தொல்லைபேசியினை
ஒளிரமட்டும் வைத்துவிட்டும்
தொலைந்து போகலாம்


நாம்
தொலைந்து போனதை
குறைந்த பட்சம்
நாமாவது
அறிந்துகொண்டு
மீண்டும் வெளிக்கிடலாம்

தொலைந்து போவதை
மீண்டும் ஒரு நாள்
தள்ளிப்போடலாம்...

இப்போதிருக்கும் வணிகச்சூழலில் தொடர்ந்து நான் செய்துகொண்டிருந்த தொழிலைச்செய்து வருவது கொஞ்சம் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சிறிதே மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு நன்னாளில் பணியாளர்களுக்கு நானே சில நல்ல நிறுவணங்களில் அமர்வதற்கான ஆயத்தங்களை செய்து தந்துவிட்டு தற்காலிகமாக மங்களம் போர்டு மாட்டிவிட்டேன்.

சும்மாயிருக்க முடியுமா??? நானும் ஒரு பன்னாட்டு நிறுவணத்தில் பணியெடுத்து அமர்ந்தும் விட்டேன். அதனால் வழக்கமான இணையநேரம் இருந்தாலும் தனிப்பட்ட வலை வாசிப்புகள் முடியவில்லை.. வார இறுதி நாட்களில் மட்டுமே முடியுமென்று எண்ணுகிறேன்...

மக்களே மறந்துடாதீங்க... மீண்டு வருவேன்... மீண்டும் வருவேன்...