Sunday, July 26, 2009

வா வாவென அழைக்கும் காடு - பகுதி 3



மொழி என்பது பெரும் போதையான விஷயமாயிற்று, அதை வாரி வாரி விழுங்கும்போதாகட்டும், இல்லை எழுத்தெழுதாய் கோர்க்கும் போதாகட்டும் கிடைக்கும் போதையை அத்தனை எளிதல் புறந்தள்ளி விடமுடிவதில்லை. எத்தனையோ மாறுதல்களுக்கிடையில் மிகவும் ஆறுதலான ஒரு நிகழ்வு, இப்போதெல்லாம் அதிகம் வாசிக்கமுடிகிறது. வாசித்ததை பெரும் காதலோடு அசைபோடமுடிகிறது. ஆனால் பதிவுகளில் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை, எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டும் அரிதாகத்தானுள்ளது.


மேலும், வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து முடித்த பின்னரே புதியதோர் பதிவெதுவும் இடவேண்டுமென்ற என்ற தீர்மானத்தையும் உடைத்தெறிவது நான் மேலே சொன்ன மொழி எனும் போதைதான். வார்த்தைகளை மனதுள் கட்டமைத்து அவ்வப்போது கவிதைகளாய் கையில் கிடைக்கும் காகிதங்களில் பொதிந்து கொண்டலும், சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைத்து பின் சமயமில்லையெனும் காரணத்தால் எழுதிநிறைக்காத பதிவின் முடிவுப்பகுதி இது.
இடக்கல் - எடக்கல் (இடைக்கல்) எனும் கல்வெட்டுக்களின் தேசம்


நாங்கள் வயநாடு சென்று தங்கிய நாட்களில் எங்கள் தங்குமிட பாதுகாவலரால் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு இடம். பழங்கால கல்வெட்டுக்கள் பல உள்ளதாகவும் அது ஒரு குகைப்பகுதி என்றும் சொன்னது எங்கள் ஆர்வத்தை தூண்டுவதற்கு போதுமானதாய் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டியிருந்தது. எங்கள் வாகனத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. அதற்குமேல் கேரள சுற்றுல்லாத்துறை ஏற்பாடு செய்து தரும் ஜீப்பில் மட்டுமே செல்லமுடியும். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்குப்பின் அந்த வாகனமும் செல்லமுடியாது நடந்து மட்டுமே செல்லமுடியும். வாகனத்தை விட்டு இறங்கிய நிமிடம் கண்முன் மிகப்பெரியதாய் நின்றது அந்த சிறு குண்று. பெரும் பாறைக்குவியலாய் மட்டுமே உணரமுடிந்தது. சற்றே வளைந்து சென்ற படிகளில் மேலேறிச்சென்றால் அங்குள்ள அனுமதி சீட்டு தரும் சிறு கூண்டில் இருந்த சுற்றுல்லாத்துறை அலுவலர், "இன்னம் நூறு மீட்டர் செல்லனும் " என்ற படியே அனுமதி சீட்டளித்தார். ஆர்வத்துடன் ஏற ஆரம்பித்தோம்.


ஆரம்பத்தில் படிகளோடு இருந்த வழி பின் பாறை இடுக்குகளோடே பயணப்பட வேண்டும் என்பதாயிற்று. சில இடங்களில் காலதடங்கள் பழகிய பாறைகளை கண்ணால் அளவெடுத்து அதைக்கொண்டே முன்னேற முடிந்தது. அது கண்டிப்பாய் நூறு மீட்டர் இல்லை என்பது மட்டும் தெளிவாயிற்று.


ரெங்கமணி தான் பின் தங்கியதோடு மட்டுமல்லாமல், சின்னவனையும் தடுத்து விட்டார். நானும் பெரியவனும் மட்டும் தொடர்ந்து செல்லத்துவங்கினோம். அந்த செங்குத்தான பாறை இடுக்குகளில் சில இடங்களில் இரும்பால் ஏணி செய்து மாட்டியிருந்தார்கள் சில இடங்களில் கைவைத்து ஏறிச்செல்ல வேண்டியிருநது.






நல்ல உயரத்தில் சென்ற பாதை ஒரு இடத்தில் முடிவுற்று கீழே இறங்கவேண்டியதாயிற்று. அந்த நிமிடங்களில் அது வரை இருந்து வந்த வெயில், சூடு, மூச்சு வாங்கியதால் ஏற்பட்ட வியர்வை, அத்தனையும் அகன்று, குளிர்சாதனப்பெட்டியை திறந்துவுடன் முகத்திலைறையுமே அது போன்ற காற்றும் குளிச்சியும் நம்மை தழுவி வரவேற்றது.


மொத்தம் மூன்று மிகப்பெரும் பாறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது நூறடி உயரமிருக்கும் அதன் உச்சியில் பொருத்தி வைத்தது போல் ஒரு வட்டப்பாறை இதனாலேயே இந்தக்குகைக்கு இடைக்கல் எனும் பெயர் ஏற்பட்டதாம். அதன் இடைவெளியில் தெரியும் துல்லிய வானமும் அதனால் வரும் வெயிலின் கடுமையும் அந்த குகையை தொடவேயில்லை ஆனால் வெளிச்சம் மட்டும் திருட்டு கண்ணனாய் அத்தனையையும் ஊடறுத்து வந்து இடத்தை வர்ணமாயமாக்கிக்கொண்டிருந்தது.


மழையாலோ இல்லை, தொடர்ந்து அதிகம் வெயில் படாததாலோ சில பாறைகளில் களிம்பேறிப்போன பச்சை வர்ணம், வெளிச்சம் அதிகம் படும் இடங்களில் பாறைகளுக்கேயுண்டான இளம் சிவப்பு, தரையில் உள்ளங்கால்களில் ஊடுறுவிச்செல்லும் குளிர் பரவியிருக்கும் தவிட்டு நிற பூமி (ஜெமோவின் எழுத்துக்களில் அதிகம் கவர்ந்த வார்த்தை!!!!) . தரையில் இருந்து கிட்டத்தட்ட 3 அடி உயரத்தில் ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் கோடுகள் போல் தெறியும் ஜாலங்கள். மேலே குறைந்தது 15, 20 அடிவரை செல்கிறது, அத்தனை உயர மணிதர்கள் இருந்திருப்பார்களோ எனும் எண்ணமே அந்த இடத்தில் நம்மை நெக்குருகச்செய்கிறது.

விதம் விதமாய் கோடுகள், படங்கள், அபூர்வமாய் சில எழுத்து வடிவத்தடங்கள் இப்படி இரண்டுபக்க பாறைகளிலும் நிரம்பியிருந்த காட்சி பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்திருந்த மூதாதையர்களின் வாழ்வியலை, இறை நம்பிக்கையை, கூட்டு வாழ்வின் அம்சங்களை, காட்டு வாழ்வின் இயல்புகளை பெரும் கிசுகிசுப்போடு நம் காதுகளில் பேசக்கேட்கிறோம்.






பார்க்க வரும் அனைவரும் ஆக அதிக பட்சமாய் 10 நிமிடத்தில் திரும்பிவிட தாயும் மகனும் மட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் திவங்கித்திவங்கி கால்கள் பின்ன,அந்தச்சித்திரங்கள் பேசும் பேச்சுக்களின் சக்தியை தாங்க முடியாமல் குமுறியவண்ணம் கண்கள் பொங்கி வழிய இறை தரிசனம் கண்ட நெகிழ்வில் ஒருவரோடுரொவர் பேச்சற்று இருந்த நிலை அங்கிருந்த சுற்றுல்லாத்துறை ஊழியருக்கு புதியதாய் இருந்திருக்க வேண்டும். தானகவே வந்து அந்தக்குகையின் செவி வழி வரலாற்றைக்கூறினார்.

கடல் மட்டத்திலிருந்து 4000 அடியில் இவ்விடம் உள்ளதென்றும், கிமு 4000 வருடக்கணக்கில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம், அவர்கள் கூட்டமாய் ஓரிடத்தில் வாழும் வாழ்வு முறை கொண்டிருந்ததாகவும். ஆண்களும் பெண்களும் உணவிற்காக அங்குள்ள காடுகளை நம்பியிருந்துதாகவும் கூறினார்.

பெண்களை குறிக்கும் படங்களில் இரு முக்கோணங்களை ஒன்றோடொன்று ஒட்டி வைத்தது போலவும்


அரசனை குறிக்கும் படங்களில் அவன் தலையை சுற்றி ஒரு வட்ட அங்கி இருந்தது போலவும்


மதகுரு என அழைக்கப்படும் சித்திரத்தில் அவர் கைகளை உயர்த்தி ஆசி கூறுவது போலவும்


சிறிதும் பெரிதுமான வட்ட வட்ட சக்கரங்கள் அவர்களின் சக்தி பீடமாயிருக்கவேண்டுமெண்டும் என்றும்



யானையும் அல்லாது புலியும் அல்லாது இருந்த ஒரு உருவமும் இன்னும் பலவும் அந்த ஆயிரமாண்டு கால வாழ்க்கையை நமக்குள் செதுக்கியபடி யிருந்தது

அங்கிருந்த தமிழ் போலவும், பாலி போலவும் தெரிந்த எழுத்துக்களைக்காட்டி அவர் சொன்னதாவது. ஆயிரம் புலிகளை வென்றவன் அவர்களுக்கு அரசனாக வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக்கூறினார்.




இவர்களின் வம்சம் தான் பின்னாட்களில் விஷ்னு வர்மா வம்சங்கள் என்றும் சொன்னார். பிற்காலங்களில் ஆள் நடமாற்றறுப்போன நிலையில் 1894ல் அவ்வழியே வேட்டைக்கு வந்த அந்நிய நாட்டவர் ஒருவரால் இவ்விடம் கண்டு பிடிக்கப்பட்டதென்றும் கூறினார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்த இடமென்றாலும் அதன் அதிர்வுகள் சிறிதும் குறையாமல் நம்மோடு சாந்நித்தியம் கொள்கிறதென்றால் அவர்களின் தூய்மையான வாழ்வியல் எத்துனை வலியதாய் இருந்திருக்க வேண்டும். இத்தனை நாட்கள் கழித்து எழுத முற்படும் வேளையில் என்னுள் பொங்கும் அந்தக்கணங்களின் விகசிப்பை தாங்கத்தான் முடியவில்லை.


இந்த பயணம் எனக்குணர்த்திய மற்றுமொரு சந்தோஷம், என் இத்தனை உணர்வுகளையும் அப்படியே பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அதே போன்று என் பெரியவனும் அனுபவித்த கணங்கள் உணர்த்தியது என்வீட்டில் நான் மட்டும் பைத்தியமில்லை.....எனக்கோர் வாரிசுமுண்டு...


11 comments:

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் நல் அனுபவமாயிருந்திருக்கும்..

வெளிச்சம் திருட்டுக் கண்ணனாய் நுழைவது....அழகு கிருத்திகா..

Ayyanar Viswanath said...

தகவல்களுக்கு நன்றி கிருத்திகா! இங்கிருந்தபடி பெருமூச்சுதான் விடமுடியுது :)

நட்புடன் ஜமால் said...

என்வீட்டில் நான் மட்டும் பைத்தியமில்லை.....எனக்கோர் வாரிசுமுண்டு...
]]

ஹா ஹா ஹா

வல்லிசிம்ஹன் said...

மிக மிக அரிதான தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள்.

தங்களுடைய சென்சிடிவ் நேச்சர் தான் உங்களை இந்த இடத்தை உணர வத்திருக்கிறது.

நானே அங்கே சென்று வந்ததாக உணர்கிறேன். மிக்க நன்றிமா.

திவாண்ணா said...

உங்க பேட்டரி முழுக்க சார்ஜ் ஆயிட்டு இருக்கும் போல் இருக்கு!
நைஸ்!

ஜீவி said...

//என்வீட்டில் நான் மட்டும் பைத்தியமில்லை.....எனக்கோர் வாரிசுமுண்டு... //

ச்சும்மா பிச்சு உதறி இருக்கிறீர்கள்!
நெடுநாள் காத்திருப்பு வீண் போகவில்லை!..

sury siva said...

// நல்ல உயரத்தில் சென்ற பாதை ஒரு இடத்தில் முடிவுற்று கீழே இறங்கவேண்டியதாயிற்று. அந்த நிமிடங்களில் அது வரை இருந்து வந்த வெயில், சூடு, மூச்சு வாங்கியதால் ஏற்பட்ட வியர்வை, அத்தனையும் அகன்று, குளிர்சாதனப்பெட்டியை திறந்துவுடன் முகத்திலைறையுமே அது போன்ற காற்றும் குளிச்சியும் நம்மை தழுவி வரவேற்றது. //

இலக்கை அடைந்தவனும் இறையை உணர்ந்தவனும்
அயர்வை அடைவதில்லை
வியர்வை தெரிவதில்லை.


// தாயும் மகனும் மட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் திவங்கித்திவங்கி கால்கள் பின்ன,அந்தச்சித்திரங்கள் பேசும் பேச்சுக்களின் சக்தியை தாங்க முடியாமல் குமுறியவண்ணம் கண்கள் பொங்கி வழிய இறை தரிசனம் கண்ட நெகிழ்வில் ஒருவரோடுரொவர் பேச்சற்று இருந்த நிலை
//

உங்கள் மன நிலைக்கு என்னையும் இழுத்துச் சென்றிருக்கிறீர்கள். அவ்விடத்தில்,
உங்களோடு சேர்ந்து நானும் இருப்பது போன்ற ஒரு மன நிறைவு ஏற்படுகிறது.

பேசா சித்திரங்கள் பேசுவதும்
பேசும் உயிரனங்கள் பேசா நிற்பதும்
இறையின் உணர்வினில்
நிசமே ! நிசமே !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆம் மலர் மிகவும் நல்ல அனுபவமாயிருந்தது.

அய்யனார்.. வாங்க உங்க ஊரை நினைத்தாலே எனக்கு பெருமூச்சுதான் :)

வாங்க நட்புடன்.. :)

வாங்க வல்லிமா... ரொம்ப நாளாச்சு...நீங்கல்லாம் படிக்கறீங்கங்கறதே சந்தோஷமா இருக்கு...

ஆமா திவா.. நல்ல சார்ஜ் ஆயிருச்சுதான்..

ஜீவி.. நன்றி...நானும் கண்ணெதிரில் உங்கள் பதிவுகளை வைத்துக்கொண்டு வாசிக்க நேரம் பார்த்து நானும் காத்திருக்கிறேன்... வரேன் சீக்கிரமே...

சூரி சார் வழக்கம் போல உங்க வழி தனி வழி...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மேடம் ஊர்ல இருக்கறீங்களா ?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் நெக்குருகி உணர்ந்ததை அப்படியே உங்களின் எழுத்து வடிவில் எங்களுக்கு உணர்த்தியும், படங்கள் மூலம் காணவும் செய்திருக்கிறீர்கள்.

// வெளிச்சம் மட்டும் திருட்டு கண்ணனாய் அத்தனையையும் ஊடறுத்து வந்து இடத்தை வர்ணமாயமாக்கிக்கொண்டிருந்தது.//

இது போல அங்கங்கே வார்த்தைகளால் ஒத்தி எடுத்தியிருக்கிறீர்கள்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் பதிவு மேடம் :D

அமிர்தவர்ஷினி அம்மா said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு, ஆனா படிக்க சிரமமா இருக்கு.

கொஞ்சம் கவனிக்கவும்.