Sunday, February 25, 2018

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - வெண்காயபர் - ஆசீவக சித்தர்

சாலை ஓரத்தில்  கண்ட காட்சியால் காலுக்கு ப்ரேக் போட வேண்டி வந்தது. அது “மாறுகால் தலை” சமணர் சின்னம் என்ற வழி காட்டியபடி நின்றிருந்த அறிவுப்பலகை. பக்கத்து பெட்டிக்கடையில் கேட்டதில் 13 கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும் என்று சொல்ல ஸ்ரீயிடம் 10 கிலோ மீட்டர் தானாம் ரோடு நன்றாக இருக்குமாம். என்று எக்ஸ்ட்ரா பிட் போட சரி என்று கிளம்பி வயல்காடுகளின் நடுவே செல்லத்துவங்கினோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித வாடையே இல்லை. எங்கோ ஓர் இடத்தில் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்க கேட்டதும் இப்படி போங்க சீவலப் பேரி வரும் அங்கபோய் மலக்கோவில்னு கேளுங்க சொல்லுவாங்கன்னு சொல்ல. மேலும் பயணித்தோம்.
இதற்கிடையில் நான் நெட்டில் அது என்ன இடம் என்று தேட ஆர்வம் அதிகம் பற்றிக் கொண்டது ஏனெனில் அது சமணருக்கும் முன்னறேயான ஆசீவகம் என்னும் தொல் மரபு சார்ந்த மதத்தின் மிக முக்கியமான மூவரில் ஒருவரான “வெண் காயபர்” வாழ்ந்து மறைந்த இடம். வாழ்வியல் முறையில் சமணருக்கு ஒத்து இருப்பதால் சமணப் படுகை என்றே அழைக்கப் படுகிறது.











யார் இவர்கள் இவர்களுக்கு என்ன பெயர்.. தேடத் தேட நம் மெய்யியல் மரபின் ஆணிவேரைச் சென்று சேர்க்கிறது தகவல்கள்.
இப்பொழுது இது எவ்வாறு உள்ளது? அதன் பரிமாணங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளது பார்க்க பார்க்க கண்ணைக் கட்டுகிறதுமலையடிவாரம் சென்றதும் விதம் விதமான கிராம தேவதைகளின் சந்நிதிகள்
அங்கிருந்த சிவனனைந்த பெருமாள் சந்நிதியில் இருந்த பெரியவரிடம் சமணர் படுகை எங்கே என்று கேட்க அதா... பின்னா....ஆ...டி இருக்கு இடக்க திரும்பி மலைக்குப் பின்னாடி போனா வரும் என்று சொல்ல அட எப்படி போவது என்று ஒரு நிமிஷம் குழப்பம் வந்ததும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆள் பக்கத்துல தான் மேடம் போகலாம் என்று சொல்லவும் லபக் என்று தாவிப் பிடித்துக் கொண்டேன். கொஞ்சம் கூட்டிடுப் போகறீங்களா என்று கேட்க சரி என்று தலை ஆட்டிவிட்டு கூட வர பின்னாடி யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காது நான் உடன் நடந்தேன். தலையெழுத்தே என்று நவீன் தொடர ஸ்ரீ யும் நித்தாவும் தயங்கி தயங்கி கிளம்பினார்கள்.
கரடுமுரடான மலைப்பாதையில் நடக்க அவர் பேசிக் கொண்டே போனார். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நம்மால் உள்ளே செல்ல முடியும் பார்க்கலாம். என்பதைத் தாண்டி மேலதிக விபரங்கள் இல்லை. பங்குனி உத்திரத்திற்கு அந்த கோவிலில் விசேஷம் அதிக மக்கள் வருவார்கள். மேல உள்ள சாமி சைவம், ஆனா கீழ உள்ள சாமி, சிவனனைந்த பெருமாள் நீங்கலாக மற்ற அனைவரும் அசைவ சாமி. அவங்களுக்கு அசைவம் படைக்கலாம் அதனால மேல போய் பூலுடையார் சாஸ்தாவைப் பார்த்துட்டு வந்து கீழ வந்து படையல் போடுவாங்க.
இத்தனை விஷயம் பேசிக்கொண்டே நடக்க அந்த இடம் வந்தது. பார்வைக்கு ஒரு பெரும் பாறை அதனடியில் ஓராள் உயரத்திற்கு ஒதுங்கக் கூடிய அளவுக்கு இடம் அதனடியில் ஐந்து சமணர் படுக்கை, கூடவே ஒரு முடியாத நிலையில் ஒரு படுக்கை.
அத்தனை இடங்களிலும் ஒராள் அகலத்திற்கு உயரத்திற்கு ஒரு சின்ன பள்ளம், தலை மாட்டில் கொஞ்சம் உயரமாக சின்னதாக செதுக்கப்பட்ட தலையணை போன்ற அமைப்பு. கூடவே இடமெங்கும் கோலம் போன்ற கோடுகள், கட்டங்கள், அதை சித்திரம் என்றோ, அல்லது அல்லது சக்கரம் என்றோ வகைப் படுத்த முடியாத கோடுகள். அவர்கள் காலத்தில் ஏற்படுத்தியதா இல்லை பின்னாளில் ஆடு மேய்க்கும் ஆட்கள் வரைந்து ஆடுபுலி கட்டம் விளையாடியாத என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த பழமையான மற்ற எழுத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பழமை வாய்ந்தது என்றே தோன்றியது. ஆனால் அதைக் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
பாறையின் மேலே “வெண் காசிபன் கொடுப்பித்த கஞ்ச்சனம்” என்று பிரம்மி எழுத்துக்களாலும், “சுவாமி அழகிய அம” என்று எட்டாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களிலும் எழுதிள்ளதாக மட்டுமே தொல்லியல் துறை குறிப்புகள் சொல்கிறது.
அந்த பாறையின் கீழ் உள்ள இடம் சிறிதாக இருந்தாலும் மழை நீர் அங்கு விழாதவாறு குடையின் அமைப்பில் அந்தப் பாறை சிறிதே செதுக்கப் பட்டிருப்பதைக் காண முடிந்தது. பார்க்கப் பார்க்க வியப்பு மேலிட்டது.
சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி அங்கு அமர்ந்து தியானிக்க மனம் சொல்ல கண்மூடி அமர தலையில் வெள்ளை ஒற்றை ஆடையோடு வெள்ளை வெட்டி சகிதம் ஒரு பெரிசு பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த உணர்வு. உள்ளே உள்ளே என அமிழ்த்தியது. அது மிகையுணர்வு அல்ல என்பது தெள்ளத் தெளிவான உணர்தல்.
எங்களை அழைத்து வந்த ஆளும் சிவனே என்று காத்திருக்கக் கண்டு நவீன் மெல்ல தோள் தொட்டு போலாமா என்று கேட்க மீண்டும் மலை அடிவாரத்துக்கு வந்தோம்.

No comments: