Sunday, February 25, 2018

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 2



ஆசீவகத்தினை நிறுவியவர் எவர், அவர்தம் பெயர்கள் என்ன? என்ற விபரங்களுக்குச் செல்வதற்கு முன் அவர்தம் அடிப்படை கோட்பாடுகளும் அதன் வெளிப்பாடுகளும் எவ்வாறு இருந்தன என்று அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமான ஒன்று.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். அத்துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல்
இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.
ஆசீவகத்தினர்அவரவர் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி,மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர் :
1. கருமை & சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்
2. நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
3. பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு      இருக்கும் நிறம்
4. செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
5. மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
6. வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்
இந்த ஆறு வகைக்குள்ளும் மும்மூன்று உட்பிரிவுகளை கொண்டதாக அமைத்தனர். படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்
1. கரும்பிறப்பில் - 1.கருமை முதல் படி, 2. கருமை இரண்டாம் படி, 3. சாம்பல் மூன்றாம்         படி
2. நீலப் பிறப்பில் - 1.கருநீலம் முதல் படி, 2. நீலம் இரண்டாம் படி, 3. வான்நிறம்              மூன்றாம்    படி
3. பசும் பிறப்பில் - 1. அடர்பச்சை முதல் படி, 2. பச்சை இரண்டாம் படி, 3. வெளிர்பச்சை மூன்றாம் படி
4. செம்பிறப்பில் - 1. செம்மை முதல் படி, 2. இளம்சிவப்பு இரண்டாம் படி, 3. காவி மூன்றாம் படி
5. மஞ்சள் பிறப்பில் - 1. அடர் மஞ்சள் முதல் படி, 2. இளமஞ்சள் இரண்டாம் படி, 3. பொன்மை மூன்றாம் படி
6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்
இந்த 18 படிநிலைகளை கடந்த பின்னரே நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே ஆசீவக நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம்.
நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும். கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம்.
வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே என்ற கருதுகோளும் உண்டு.
தொடரும்....
குறிப்பு - இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின் செய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்
No automatic alt text available.

No comments: