Sunday, February 25, 2018

எண்ண அலைகள்- ஆன்ம அரசியல் - - 2

இறை சார்பு, மறுப்பு இந்த இரண்டில் எது சரி, தவறு, இல்லை இரண்டுமே தவறா என்று விவாதிப்பதற்கு முன்பு நம்முடைய பரிணாம வளர்ச்சி உடல் மற்றும் மனம் சார்ந்து இத்தனை காலங்களாக எதன் அடிப்படையில் நடை பெற்றுள்ளது என்பதைக் குறித்த ஒரு பார்வை அவசியம். ஏனென்றால் இன்றைய கட்டமைப்பின் அடித்தளம் அது.
ஒரு வசதி படைத்த பெரும் தொழிலதிபரின் வாரிசுக்கு தன்னுடைய குடும்ப தொழிலை தொடரவோ அல்லது புதியதாக தொழில் தொடங்கவோ இயல்வது எளிதானது. ஏனெனில் அவர் வளர்ந்து வந்த சூழல் அவருக்கு அந்த பொருளாதார, அறிவு சார் பின்புலன்களை அமைத்து கொடுத்துவிட்டது.
அதாவது நாம் கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து கொண்டு மேல் மாடியை எவ்வாறு கட்டுவது என்று யோசிப்பது எப்படியோ அப்படி. ஏனெனில் அந்த தரை தளத்திற்கான அடிக்கல் மிகவும் ஆரோக்கியமாக அமைக்கப் பட்டு விட்டது. இதற்கு மேல் நாம் எப்படி வேண்டுமானாலும் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
அது போல மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சி சில நூறு வருடங்களுக்கு முன்பு வரை ஏதோ ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே நிகழ்ந்துள்ளது. அது இயற்கையாக இருக்கலாம், கடவுள் எனும் உணர்வாக இருக்கலாம், ஆனாலும் தனக்கு புறம்பான ஒரு பெரும் சக்தி குறித்த எண்ணமே அதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது. அதுவே மனித மனங்களின் கீழ்மைகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு தடுப்பாக அமைந்தது. ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் தீமையில் இருந்து மக்கள் நன்மையை நோக்கி பயணிக்க, தன்னுடைய உள்ளார்ந்த நல்ல குணங்களை பெருக்கிக் கொள்ள இந்த கட்டமைப்பு பயன் பட்டது.
இன்னமும் சொல்லப் போனால் இந்த சக்தியை மீறும் பொருட்டே தனது அறிவுப் பயணத்தைக் கூடத் துவக்கினான். நெருப்பைக் கையாள்வதின் மூலம் நெருப்பு குறித்த அச்சத்தில் இருந்து வெளி வர முயன்றான். இது போலவே நமது ஒவ்வொரு அறிவு சார் பரிணாமத்துக்கான அடிப்படையும் தனக்கு அப்பாற்பட்ட அந்த பெரும் சக்தி குறித்தான விழிப்புணர்வும் அச்சமுமே காரணம்.
அவ்வாறான ஒரு அடிப்படையாக திகழும் ஒன்றை முற்றிலும் எவ்வாறு நிராகரிக்க முடியும், கட்டிடத்தின் தரை தளத்தில் நின்று கொண்டு அதற்கான அஸ்திவாரத்தை நிராகரிப்பது போலாகாதா.
அப்படியானால் அந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில்தான் நாம் மேற்கொண்டு சென்றாக வேண்டுமா???
இன்னும் யோசிக்கலாம்.

No comments: