Monday, November 6, 2017

பெண்ணின் பெருந்தக்க யாவுள - குறளின் மறுபக்கம்


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின். - திருக்குறள் 

இவ்வுலகின் அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்ச முலத்தின் சிறு துளியே. கடலைச் சென்று சேரவேண்டிய மழைத்துளி போல், ஆறு குளங்களில் தங்கி கடலோடு சேர்ந்து பின் மீண்டும் மழைத்துளியாகி மண்ணில் விழ்வதொன்றே செயலென மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுக்கும் இப்பிறப்பிற்கும் மிகப் பெரும் பேதமேதுமில்லை.

அதிலும் இப்பிரபஞ்சம் பெண்களுக்கென பெரும் கருணையை கையளித்திருக்கிறது உடல், மற்றும் உளக்கூறுகளின் படி பெண்மையின் இயல்பு ஞானத்தின் படிகளுக்கு மிக எளிதில் சென்று சேர்க்கும் வண்ணமே அமையப் பெற்றுளது. வாலை அன்னையின் பிடிகளை எளிதில் தளர்த்தி மயக்கங்களின் பாற்பட்டு மேலெழும்பி பராசக்தியென மூலத்தில் ஒன்றுவதற்கு பெண்மையின் இயல்பான கருணையும், அன்பும் தாய்மையும் பேருதவி செய்யும். அதன் காரணமாகவே பிற உயிர்கள் ஆண்டாண்டு காலமாக சாதகம் செய்தும் எட்டியிராத படி நிலைகளை யோகினிகள் மிக எளிய செயல்களின் மூலம் எட்டியிருக்கிறார்கள். இதுவே “பெண்ணின் பெருந்தக்க யாவுள” இதுவே பெண்ணுக்கு அளிக்கப் பட்டிருக்கும் பெருங்கொடை. ஆனால் அவள் “கற்பென்னும் தின்மையுன்டாகப் பெறின்” அல்லாது போனால் இந்த கொடைக்கான நோக்கம்  சிதைந்து போகிறது.

அது என்ன கற்பு, உடலொழுக்கம் பேணுதல் என்று மட்டும் கொள்ளத்தகாது. கற்பு என்பதற்கு “அடிப்படை நோக்கத்தை மீறாதிருத்தல்” என்றும் கொள்ளலாம். அதனாலேயே நட்புக்கும் கற்பு உண்டு என்றும். செய் நேர்த்தி விழையும் அனைத்து செயல்களுக்கும் பொருந்தும் ஒரு சொல், ஒரு செயல் என்றும் கருதப் படுகிறது.  அது  ஒரு விதத்தில்  ஒழுக்க நெறி. எது ஒழுக்கம்? என்று ஆராய்ந்தால் மூலத்தின் நோக்கம் சிதையாது வாழ்தல் ஒழுக்கம். இங்கு நாம் வந்த நோக்கம் மீண்டும் துளியென மழை மேகமாய் சென்று சேர்வதே. அதன் ஒழுக்கம் மாறாது நம்மில் இருத்திச் செயல் படுவோமேன்றால், அதாவது கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்றால் ஞானத்தின் வாயில் அத்தனை உயிர்களுக்கும் எளிதாகக் கடக்கக் கூடிய ஒன்றே.

இந்தக் கற்பென்னும் விழுமியத்தை கடை பிடிக்க முடியாது ஒரு பெண்ணை கட்டும் மூலக் கயிறுகள் அவளது கொடைகளே. அதாவது அவளது பெண்மையும், பிறப்பிலிருந்து கொள்ளும் கருணையும், மென்மையும்,  தாய்மையும்  எவ்வாறு ஞானத்தை அடையத் தூண்டுகோலாக, ஊன்றுகோலாக ஆகிறதோ,  அதுவே பின்னர் தடைக் கற்களாகவும் ஆகிறது. இந்தப் பேருண்மையை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஞானத்தின் ஊன்று கோலை இருகப் பற்றியபடி இந்தக் கட்டுக்களை கடந்து,  வந்த நோக்கம் நிறைவேறும் திண்மை கொண்டிருந்தால் அவளே இப் பிரபஞ்சத்தின் பெருந்தெய்வம்.



#குறளின்_மறுபக்கம்

No comments: