Monday, October 30, 2017

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - ஒரு பார்வை

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

பல இடங்களில், பலராலும், பல காலங்களாக எடுத்தாளப் படும் ஒரு சொற்றொடர். பெரும்பாலும் ஆன்மிகம் சார்ந்த விவாதங்களில் கடவுளை/உண்மையைக் கண்டவர் சொல்வதில்லை, சொல்பவர் கண்டதில்லை எனும் பொருளில் உபயோகப் படுத்தப் படுவது வழக்கம்.
மிக அற்புதமாக திருமூலர் முதல் ரமணர் வரை தனது உணர்தல்களை மக்களுக்காக விட்டுச் சென்ற பின்னும். நாம் எந்தக் காரணத்திற்காக இந்தப் பதத்தை அப்படி ஒரு த்வனியில் பயன் படுத்துகிறோம். என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான வித்தை மூன்று வாரங்களுக்கு முன் என்னுள் விதைத்தவர் பூமா Poomalai Haldorai அவரது ஒரு வித்யா பூர்வமான கேள்வியே இந்த தேடுதலின் ஆதாரம். அது மேலும் நேற்று அவரது பக்கத்தில் ஒரு சிறிய விவாதத்தின் மூலம் வலுப்பெற்று இதைக் குறித்து அறிந்து கொள்ளும் தீவிரத்தை என்னுள் விதைத்தது.
சில வாக்கியங்கள், வார்த்தைகள் இப்படித்தான் என்னை ஆண்டுகொள்ளும் உள்ளுணர்வு சொல்லும் பொருளை தரவுகளோடு கண்டடையும் வரை நான் செலுத்தப் பட்டே வருகிறேன்.  இப்படித்தான் இந்த தேடலும் துவங்கியது.
பல விதமான தேடல்களின் மூலமும், முகநூல் நட்புகளின் உதவியாலும் நான் அறிந்து கொண்டது. இந்தப் பதம் இதே சொற்களின் அணிவகுப்பில் எந்த ஒரு சித்தர் பாடலிலும், பழந்தமிழ் செய்யுள் களிலும் கையாளப் படவில்லை என்பதே. பின் எப்படி இணையம் முழுவதும் சித்தர் பாடல்களில் கூறியது போல் என்று மேற்கோள் காட்டப் படுகிறது என்ற கேள்விக்கான பதில் நாம் அறிந்த ஒரு மாஸ் சைக்காலஜி மட்டுமே.
அப்படியானால் இதன் முழுமையான விளக்கம் என்ன? என்ற என் தேடலின் சில அறிதல்கள் இப்படிப் போகிறது.
"கண்டு " என்பதனை பார்த்து என்ற பொருளில் கொள்ளலாம்.
விண்டு என்பதற்கு அநாதி விளக்கங்கங்கள் குவிந்துள்ளது.
திருமூலர் விண்டலர் என்ற பதத்தை எவ்வாறு உபயோகிக்கிறார் என்று பார்க்கலாம்.
"விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
விண்டு அலர் கூபமும் விஞ்ச்சத்து அடவியும் – பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர் ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக்காட்டையும் கண்டு உணர்வாக கருதியிருப்பார்கள் – தரிசித்து உணர்வுமயாமே எண்ணியிருப்பவர்கள் யிருப்பவர்கள் ....... என்று குறிப்பிடுகிறார்.
.
இங்கு விண்டலர் என்பதை – விண்டு+அலர் - பிளந்து வெளிப்படும் மலர் என்ற அர்த்தத்தில் வருகிறது.
இதைக்கொண்டு விளக்க முற்பட்டால் இந்தப் பதத்தை
"கண்டவர் விண்டலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்லலாம்"
அதாவது தன்னுள் பிளந்து மலர்ந்தவர் கண்டவர், அவ்வாறு மலர்ந்தவர் இவ்வுலகையும் தன் ஆத்மனையும் தனியாகக் கண்டவர்கள் அல்லர் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பதத்தை பட்டினத்தாரும் உபயோகித்திருக்கிறார். எப்படி பார்க்கலாம்.

இந்த பதத்திற்கு நெருக்கமாக பட்டினத்தார் தனது அருள் புலம்பல் பகுதியில் இவ்வாறு கேட்கிறார்.
"கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் 
கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?"
இந்த வரிசையில் விண்டவர் என்பதற்கு – பிளந்து என்ற பொருள் கொண்டால், தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்கள் இறையை கண்டவரோ, இல்லை புறத்தே காட்சியாக கண்டவர்கள் தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்களோ என்று பொருள் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அகமும் புறமும் ஒன்றாய் இருக்கும் ஆத்மனை கண்டு தரிசிக்கும் பேறு பெற்றவர்களே தன்னுள் மலர்ந்தவர்களோ என்று கொள்ளலாம்.
இல்லை நாங்கள் சொற்கள் மாறுபடுவதற்கு ஒவ்வாதவர்கள் என்று சொல்லி அதே பதத்தில்
"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" – என்று நின்றால் நாம் தாயுமானவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதும் தேவை.

தாயுமானவர் தனது தாயுமானவடிகள் திருப்பாடலில்
"காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை
ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே. " -
என்று சொல்கிறார். இதன் பொருள், முன்னவனருளால் முக்காலமும் தங்கருத்தில் உணர்ந்த மூதறிஞர், பொதுமக்களிடையே அவ்வுணர்ச்சியின் பயனாக அவர்களுக்கு நேரப்போகும் நன்மை தீமைகளை தாம் அறிந்திருந்தாலும் கூறார். இவ்வுண்மையினையே "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என உலகோர் கூறுகின்றனர்.
இதை மேலும் விளங்கிக் கொள்ள சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் ஒரு பாடலை பார்க்கலாம்.
"வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்
ஆர் வமுஞ் செற்றமு மகல நீக்கிய
வீர னாகலின் விழுமங் கொள்ளான்"
அதாவது பட்டினப் பாக்கத்தை விட்டு வந்த கோவலன் கண்ணகி வழியில்அ ருக நெறி சாரணர் சிலர் தோன்றினர். அவர்களைக் கண்டதும் கோவலன், கண்ணகி, காவுந்தி ஐயை ஆகிய மூவரும் தம் பண்டைய வினைகள் தீரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு சாரணர் அடிகளைத் தொழுதனர்.
சாரணர் பொருமகன் அவர்கள் மூவரின் பழ வினையையும் அவ்வினைப் பயனால் மூவரும் வந்திருக்கும் காரணத்தையும் தெளிவாகத் தன் சிந்தை என்னும் விளக்கொளியால் உணர்ந்திருந்தனர் என்றாலும், ஆசையும் சினமும் அறவே நீக்கிய வீரர்ன் ஆதலால், தன் உள்ளத்தில் அவர்கள் பால் இருக்கும் துன்பத்தை வெளிக்காட்டாமல், சொல்லத் தொடங்கினான் “ என்று விறிகிறது காதை.
சரி காவியங்களை விடுவோம் நம் சமகாலத்து ஆன்மீக வழிகாட்டி யாராவது இதைப்னை பற்றி பேசி உள்ளார்களா என்று காணலாம்.

இந்தப் பதத்தை ரமண மகரிஷியின் சீடர் முருகனார் தனது குருவாசகக் கோவையிலும் எடுத்தாண்டுள்ளார்.
"கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில்
கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் - மலை போற்றாம்
கண்டவர்கள் விண்டிலை விண்டிலர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை"
அதாவது, கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில் கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் மலைபோல் (குலாச்சீர் – பெருமையான நிலை) தாம் கண்டவர்கள் விண்டிலர், விண்டவர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை (மண்டு – நிறைந்த, மறை – கருத்து)
இங்கும் உணர்ந்தாரே ஆனாலும் வெளியில் சொல்லுவதில்லை என்ற பொருளிலேயே ஆளப் பட்டுள்ளது.
இதுவன்றி மெய்ப்பொருளைக் கண்டவர் விண்டிலர் விண்டவர்எ காணாதவர்ன என நினைப்பது பொருந்தாது. மேலும் அது "கண்ணால் யானுங்கண்டேன் காண்க" என்று திருவாசகம் திரு அண்டப்பகுதியில்(58) உரைக்கப் பட்டிருக்கும் -செந்தமிழ்த் தனித் தமிழ்த் திருமாமறை முடிவுக்கு முற்றும் முரணாகவும் இது அமையும்.
இன்னமும் பார்த்தால் பிங்கல நிகண்டு முதல் பல அகராதிகள் "விண்டு" எனும் சொல்லுக்கு திருமால், அறநூல் பதினெட்டனுள் ஒன்று, வானம், மேலுலகம், மேகம், மலை, மூங்கில், காற்று, தாமரை, செடிவகை. என்று மட்டுமே பொருள் சொல்கிறது.
இதன் படி பார்த்தால் விண்டவர் என்பதற்கு தேவர்கள் என்றும், விண்டிலர் என்பதற்கு காற்று இலாதார் அதாவது தனது வாசியை உச்சியில் செலுத்தியவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
மீண்டும் திருமந்திரத்தையே நான் துணைக்கழைப்பேன்.
"செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
செழுமையான சிரசாகிய மலையில் கொண்டு குதிரை குசை செறுத்தார் – பிராணனாகிய குதிரையை செலுத்தி மனமாகிய கயிற்றை கொண்டு கட்டிவிடுவார்கள். அதாவது, சிரசில் உணர்வினை கருதியிருப்பவர்களுக்குப் பிராணன் (மூச்சு , காற்று) அடங்கி இருக்கும்.
திருநெல்வேலி பக்கம் விண்டு கொடு என்பதை உடைத்துக் கொடு என்ற பொருளில் பயன் படுத்துவதுண்டு.
சோ ... மக்களே.. இனிமே யாராவது கடவுளைக் கண்டவர் விண்டிலை என்று ஆரம்பித்தால் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.

1 comment:

திவாண்ணா said...

ஆதி காலந்தொட்டே வழக்கில் பல உள்லன. சமீப காலமாக சில தோன்றி பழக்கத்தில் இருக்கின்றன. இதில் பொருள் திரிந்து இருப்பனவும் உண்டு. - வைராக்கியம், கல்யாணம் போல. விண்டு என்பது உடைத்து என்ற பொருளில் சின்ன வயதில் இருந்தே பழகி இருக்கிறேன்.