வெள்ளிக்கிழமை தோறும் அவன் செல்லும் கோயில்களின் படிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. கூடவே அவன் வாழ்வின் சுபிட்சங்களும். பெட்டிநிறைய நிரம்பி வழியத்தொடங்கியது சந்தோஷமும், காசும், பணமும்.
செல்வம் சேரச்சேர அவன் மிகுந்த பக்திமானான், எல்லா பூஜைகளையும் சந்துஷ்டியோடும் ஆரவாரத்தோடும் செய்யத்தொடங்கினான், எல்லா கோவில்களுக்கும் மிகுந்த ஆர்வத்தோடு நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் என கணக்கிட்டுச் செல்லத்துவங்கினான். செல்வத்தோடு கூடவே அவன் கர்வமும் வளரத்துவங்கியது.
அந்த சமயத்தில் அவன் காதுகளில் மட்டும் ஒலித்த அந்தக்குரலை அவனால் சட்டென்று இனம் கண்டுகொள்ள இயலவில்லை ஆனாலும் ஒலி தொடர்ந்து கொண்டே இருந்தது அதன் சாரம்சாம் இது தான். “பக்தனே நீயும், சமூகத்தை குறித்த உன் பேரன்பும் எனக்கு மிகவும் விருப்பமானதாய் உள்ளது. உனக்காகவும், ஊருக்காகவும், பின் எனக்காகவும் நீ சேர்க்கும் செல்வங்களும் அதற்காக நீ செய்யும் பூஜைகளும் எனக்கு மிகுந்த திருப்தியை தருகிறது இதனாலேயே நீ கேட்கும் இந்த உதவியை நான் உனக்கு செய்ய சித்தமாயிருக்கிறேன், மேலும் நான் உன்மூலமாகவே இந்த உலகத்திற்கு மிகுந்த நன்மைகளையும் செய்ய விழைகிறேன்” எனக்கூறினார். பின் இதுகாரும் பேசியதாலோ என்னவோ நா வரண்டுபோய் குடிக்கத்தண்ணீர் கேட்டார், பின் அவன் பூஜையில் நெய்வேத்யத்திற்காக வைத்திருந்த பானகத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு மவுனமானார்.
இதுவரை தன் காதில் விழுந்த சப்தங்களை தன் பிரமையென்று எண்ணியிருந்த அவனுக்கு பானகம் காணாமல் போனதும் தான் வந்தது கடவுளென்று முழுவதும் உரைத்தது. சொல்லொண்ணா சந்தோஷம் அடைந்தான், தனக்கொரு புதுவாழ்வையும், வழியையும் காட்டித்தந்த கடவுளுக்கு அனந்த கோடி நன்றி கூறினான். கடவுளும் உலகத்திற்கு நன்மை செய்ய தனக்கோர் உபாயமும் உருவமும் கிடைத்ததென்றெண்ணி அவனோடு மிகவும் நெருக்கமாகத்துவங்கினார், அதன் பின் கடவுள் அடிக்கடி அவனுக்கு கேட்கத்துவங்கினார். அவன் சந்ததி கூட சந்தோஷமாய் வாழும் அளவிற்கு பெருமளவு செல்வம் சேர்ந்து போனது.
மற்றெவரையும் அண்டவிடாது கடவுள் அவனோடு கூடவே சதா பேசத்தொடங்கியதும் அவனின் அன்றாட அலுவல்கள் அவரின் ஆணைப்படியே நடக்கத்துவங்கியது. ஆனாலும் அதில் அவனின் தானெனும் ஆளுமைக்கு சிறிதும் விருப்பமற்று போனது. அவன் நினைத்ததை விட பெருமளவு நேரத்தையும், செல்வத்தையும் கடவுளின் கட்டளைக்கிணங்கி செலவிட வேண்டி வந்தது. அதனால் சிலசமயம் கடவுளின் குரலை செவிமடுக்காதவன் போல் தவிர்க்கத்துவங்கினான். அதைக்கண்ட கடவுள் உரத்த குரலோடும் சிலசமயம் தடித்த வார்த்தைகளோடும் அவனோடு சம்பாஷிக்கத்துவங்கினார்.
அப்போதுதான் அவன் முடிவு செய்தான், தான் ஒரு மருத்துவரை ஆலோசிப்பதென்றும் அவரின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொள்வதென்றும். மருத்துவரை சந்தித்த அவனைப்பார்த்த மருத்துவர் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். அப்போது அவன் “எனக்கு காதில் குரல்கள் பேசுவது போல் எப்போதும் ஒரு பிரமை தோன்றிக்கொண்டேயிருக்கிறது, இதிலிருந்து என்னை மீட்டெடுங்கள்" என்று கூறினான். அப்போது அவனோடு பேச வந்த கடவுள் விக்கித்துப்போனார்.
10 comments:
வித்தியாசமான முயற்சி. இன்னும் கொஞ்சம் செழுமைப் படுத்தியிருக்கலாம் :(
நல்ல அறிவுரைக் கதை, மிக்க நன்றி.
நன்றி சுந்தர், உண்மைதான் பயிற்சியில்லை அதற்கான பொறுமையும் இல்லை.. ஆசை மட்டும் உண்டு..:)
ஆம் ஜீவா இது அறிவுரைக்காக மட்டுமல்ல ஒரு சிலரின் ஒரு சுய முகங்களைக்கண்ட்பின் எழுந்த ஆதங்கம் கூடத்தான்...
எம்.வி. வெங்கட்ராமன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.'காதுகள்' என நினைக்கிறேன். சாகித்ய அகடமி விருது கிடைத்ததாகவும் நினைவு. இதே சிக்கலைதான் அவரும் அதில் தொட்டிருப்பார்.
தொடர்ந்து எழுதுங்கள். பயிற்சி என்பது அதுதானே :)
சிந்தனையை சிர்ப்படுத்தும் சிறுகதை மட்டும்மல்ல...மனிதனின் மன ஒட்டத்தையும் நன்றாக பதித்திருக்கிறிர்கள்.
வாழ்த்துக்களுடன்,
தினேஷ்
interesting!
நன்றி தினேஷ்... தினம் தினம் நம்மை சுற்றி மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள் தானே... கவனிக்கத்தவறுமோ...
வாங்க திவா...
நன்றி
// கிருத்திகா said...
நன்றி சுந்தர், உண்மைதான் பயிற்சியில்லை அதற்கான பொறுமையும் இல்லை.. ஆசை மட்டும் உண்டு..:)//
தொடர்ந்து எழுதுங்கள்..
You Can.. And You Should..
:)
Post a Comment