Friday, November 30, 2007

அக்கா –எனக்கொரு போதிமரம்.

உயிர் ஒன்று ஈருடலாக ஓர் தாயின் இரு மகவாய் பிறந்து, பலவாண்டுகள் சேர்ந்து வாழ்ந்தபின் அவள், நான் என தனித்தனி வாழ்வியல் சதுரங்களில் சிக்கிக்கொண்டபின், ஆண்டுக்கு சில நாட்கள் பார்த்து பின் பிரியும் அந்த தருணங்கள் எப்போதும் வலி மிகுந்தவையே. பல சந்தோஷங்களோடும், சில துக்கங்களோடும் நானும் அவளும் எதிரும் புதிருமாய் அந்த புகைவண்டியின் சன்னலுக்கு இருபுறமுமாய் நின்றபோதுதான் அது நடந்தது. என்னெதிரே நிற்கும் அவளுள்ளும் நானே என்பதான எண்ணமின்னல் தொடர்ந்த நிமிடங்களில் நடந்த உரையாடல்களுக்கு வடிவங்களே இல்லை. ஏதோ ஒர் வெளியிடை கிடந்த ஒர் உடலின் இரு உறுப்புக்களாய் இயல்பான பறிமாற்றம். துக்கம், சுகம் மாறி மாறி வந்து போனபின் எஞ்சிய கணங்களில் வந்த கண்ணீர் திரை மறைக்க இருவருள்ளும் ஒர் போராட்டம். பச்சை விளக்கின் சமிஞ்ஞைக்குப்பின் என்னை விட்டு விலகிச்சென்றது அவள் அமர்ந்திருந்த புகைவண்டியின் சன்னல்.

என்னவரின் விரல் பிடித்து கடந்து வந்த புகைவண்டி நிலைய இரைச்சல்களோ, அவரின் மௌனமோ என்னுள் இறங்கவே இல்லை, இது போன்ற சமயங்களில் தனிமை மிகவும் உசிதமோ என்று வழக்கம் போல் தோன்றியது.

கொட்டிக்கிடந்த நட்சத்திர குவியல்களின் அடியில், அடி முதுகு விரைத்துக்கிடந்த வேளையில் ஒர் நாடகம் போலும் அந்த நிகழ்வுகள் மீண்டும் வந்து போனது. அப்போதுதான் அந்தக் கோள்வி தொக்கி நின்றது, எது வந்து நின்றது எம்மிடையே, எங்கணம் நான் அவளுள் நின்றேன்? கேள்வி வந்த மறுகணம் ஓர் ஒற்றை நட்சத்திரம் உருவி விழுந்தது. அட இது கூட தெரியவில்லையா, உம்மிடையேயுள்ள அன்பின் பரிணாமம் என்று நகைத்துச்சொன்னது. அவளுள் என்னைக்காண அன்பே அடிப்படை என்றால் எல்லோருள்ளும் என்னைக்காண அதுவன்றோ ஆணிவேர்.

ஆஹா, இதுதான் “அன்பே சிவமோ” என்று விரிந்த விகசிப்பில் வழக்கம் போல் அன்றும் தொலைந்து போனதென் தூக்கம்.

3 comments:

ஆயில்யன் said...

//கொட்டிக்கிடந்த நட்சத்திர குவியல்களின் அடியில், அடி முதுகு விரைத்துக்கிடந்த வேளையில் ஒர் நாடகம் போலும் அந்த நிகழ்வுகள் மீண்டும் வந்து போனது.//

ரசிக்கும்படியான வரிகள்

ரசித்தேன்...!

மங்களூர் சிவா said...

//
வாழ்வியல் சதுரங்களில் சிக்கிக்கொண்டபின், ஆண்டுக்கு சில நாட்கள் பார்த்து பின் பிரியும் அந்த தருணங்கள் எப்போதும் வலி மிகுந்தவையே.
//
நானே ரொம்ப பெரிய ஃபீலர். என்னைய விட ஓவரா பீல் ஆவுறீங்களே கிருத்திகா இதுதானே வாழ்க்கை!!

நல்ல பதிவு!!

பாச மலர் / Paasa Malar said...

வார்த்தைகளின் வனப்பு
காட்சியக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது..வாழ்த்துகள்