Saturday, November 24, 2007

சுயநலம் - ஒரு பரிமாறல்

சென்னை தேதி – 27.10.2007

அன்புள்ள அம்மாவிற்கு, தமயந்தி அன்புடன் எழுதிக்கொள்வது, இங்கு நான், முகுந்தன், என் கணவர், குழந்தைகள், மற்றும் என் மாமியார் அனைவரும் நலம். நீ அங்கு நலமாய் இருப்பாய் என் எண்ணுகிறேன். அப்பா போன பின்பு உனக்கு அந்த வீடு மிகவும் பெரியதாகவும், வெறுமையாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன், என்ன செய்ய? சில சமயங்களில் நாம் எதிர்பாராத விஷயங்களை வாழ்வில் திடீரென எதிர் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

முகுந்தன் வேலைக்குச் சென்று வருகிறான். புதிய அனுபவம் அவனுக்கு சற்று மிரட்சியாய் உள்ளது என்று எண்ணுகிறேன் அவன் அனைத்தையும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த 26 வயதிலாவது ஒரு வேலையில் அவனால் உட்கார முடிந்ததை எண்ணி நான் தினமும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

ஆனால் அம்மா, அவனின் நடவடிக்கைகளில் ஒரு சிறிய மாற்றம், அலுவல் முடிந்து வரும்போது முகம் இறுகி ஏதோ ஒரு மிகப்பெரிய தொல்லையில் இருந்து விடுபட்டு வந்தது போல் ஒரு சிடுசிடுப்பாய் வருகிறான். வீட்டிற்கு வரும்போதே 7.30 மணி ஆகிவிடுகிறது, வந்து ஏதாவது சூடாக குடித்து விட்டால் பின் இரவு சாப்பாட்டிற்கு வரவே மாட்டேன் என்கிறான். அம்மா உனக்கு தெரியாதா, நான் குறைந்தது 9.30 மணிக்குள் என் வேலைகளை முடித்து படுக்க சென்றால் தான் மறுநாள் காலை மீண்டும் 4.45 மணிக்கு உன் பெரிய பேரன் டியூசன் மாஸ்டர் வரும் முன்பு அவர்களுக்கு காப்பி தயாரிக்கவும் அதன் பின்னான தொடர்ந்த வேலைகளையும் முடிக்க முடியும். பின் நானும் வேலைக்கு சென்று 6.30 மணிக்கு வந்தால் உன் பேரன்களின் வீட்டுப்பாடம், மாமியாரின், உடம்பு, இரவுச்சாப்பாடு, உன் மாப்பிள்ளையின் பிசினஸ் நிலவரம் இத்தனையும் பார்க்க வேண்டியுள்ளது, இதில் இவனின் எதிர்பார்ப்புக்கள் எனக்கு கூடுதல் பளுவாக இருக்கும் என்று ஏன் இவனுக்கு புரியமாட்டேன் என்கிறது???. நீ ஜாகை மாறி ஊரைவிட்டு இங்கு வந்து அவனோடு குடித்தனம் நடத்த ஆரம்பிப்பது மட்டுமே இதற்கு ஒரு விடிவாய் இருக்கும் என்று தோன்றுகிறது, அவனுக்கும் ஒரு பொறுப்பு வந்தது போல் இருக்கும் சீக்கிரம் இது பற்றி முடிவு சொல்.

வேறு விஷயங்கள் இல்லை - தமயந்தி।

-----------------------------------------------------------------

­­­­­
சென்னை தேதி – 28.10.2007

அன்புள்ள அம்மாவிற்கு, முகுந்தன் எழுதிக்கொள்வது, நானும் அக்காவின் வீட்டில் அனைவரும் சுகம், நீ அங்கு சுகமாய் இருப்பாய் என்று எண்ணுகிறேன், அப்பா இல்லாத இந்த சமீப காலங்களில் உனக்கு தனிமை மிகவும் கடினமானதாக இருக்கும் என எண்ணுகிறேன், என்ன செய்ய சீக்கிரமே இதற்கு ஒரு வழி பிறக்கும். இங்கு என் வேலை மிகவும் கடினமாக இருக்கிறது. காலை 9.30 மணிக்கு உட்கார்ந்தால் மாலை 6 அல்லது 6.30 மணிக்கு கூட வேலை முடிந்த பாடில்லை, பின் இந்த சென்னை வாகன நெரிசலில் வீட்டிற்கு வந்தால் அக்காவினால் எனக்கு பார்த்து எந்த உபசரிப்பும் செய்ய முடியவில்லை, எனக்கு சற்று ஓய்வெடுக்கக்கூட சமயம் இல்லாமல் உடனே 8 மணிக்கு சாப்பிட அழைக்கிறாள், வரவில்லை என்றல் அவள் முகம் மாறுகிறது.

அம்மா அவள் முதலில் வேலைக்கு சென்ற நாட்கள் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது, சாயங்காலம் அவள் வந்ததும் அவளுக்கு நீ அளிக்கும் இனிய வரவேற்பும், உபசரிப்பும் ஆனால் அவள் அதை எல்லாம் மறந்தவளாய் இருக்கிறாள், என்னையும் என் இன்றைய உணர்வுகளையும் சிறிதளவும் புரிந்து கொண்டவளாய் இல்லை அவள் பிள்ளைகளின் படிப்பும், மாமியாரின் பேச்சுக்களும், அத்தானின் கேள்விகளுக்கும் மட்டுமே அவளிடம் நேரம் இருக்கிறது எனக்கென அவளூக்கு நேரமே இல்லை. அம்மா இதற்கெல்லாம் ஒரு நல்ல பதில் நீ இங்கு வந்து என்னோடு தங்குவதாய் மட்டுமே இருக்க முடியும் நாம் ஒரு தனி வீடு எடுத்து தங்கலாம் எனவே நீ சென்னை வருவதை பற்றி சீக்கிரமே ஒரு முடிவு செய்யவும். வேறு விஷயங்கள் இல்லை, உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.

அன்புடன்
முகுந்தன்.

-----------------------------------------------------

ஆத்தூர் தேதி 10.11.2007

அன்பு தமயந்தி உனக்கும், மாப்பிள்ளைக்கும், குழந்தைகளுக்கும் என் ஆசிர்வாதங்கள், உன் கடிதம் கிடைத்து விஷயங்கள் அறிந்து கொண்டேன், நீ நினைப்பது போல் இல்லாமல் இந்த தனிமை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. 30 வருடங்கள் சுயநலமிக்க ஒரு மனிதரோடு வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரும் பரிசாக மட்டுமே எனக்கு தோன்றுகிறது. (நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்) உன் அப்பா விட்டுச்சென்ற இந்த வீடும், தோட்டமும், வங்கிச்சேமிப்பும், அவரின் ஓய்வூதியமும் எனக்கு போதுமாய் இருக்கிறது.

உன் பிரச்சனை எனக்கு புரிகிறது. வேலைக்குச்செல்லும் ஒவ்வொரு குடும்பத்தலைவியும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது, என்ன செய்ய, நீயும் அதற்குப் பழகிக்கொள். உன் தம்பியிடம் அனுசரித்துப் போகத்தொடங்கு “சுய நலம் இல்லாத உறவுகளில் மட்டுமே அன்பு நிலைக்கும்” எனவே சிறு சிறு தியாகங்கள் உன்னை புடம் போடும், அவற்றிற்கு நீ பழகிக்கொள். மேலும், பண்ணையார் வீட்டு ராமநாதன் ஏற்பாடு செய்திருக்கும் 20 நாள் கோவில்களின் தல யாத்திரைக்கு செல்ல முடிவு செய்திருக்கிறேன் தேதி முடிவானதும் எழுதுகிறேன்.

என்னால், இந்த ஊரையும் , கோவிலையும், தாமிரபரணியையும் விட்டு வரமுடியும் என்று தோன்றவில்லை எனவே, அவன் திருமணம் வரையிலாவது, அல்லது வேறு இடத்திற்கு மாற்றல் கிடைக்கும் வரையிலாவது நீ சமாளித்துக்கொள். நான் நம் இஷ்ட தெய்வமான சோமசுந்தரியை வேண்டிக்கொள்கிறேன்.

ஆசிகளுடன் அம்மா.

பின் குறிப்பு
முகுந்திடம் இருந்தும் கடிதம் வந்துள்ளது நான் இதையேதான் வலியுறுத்தி பதில் எழுதியுள்ளேன் மீண்டும் நினைவில் கொள்
“சுய நலம் இல்லாத உறவுகளில் மட்டுமே அன்பு நிலைக்கும்”

6 comments:

ramachandranusha(உஷா) said...

நல்லா இருக்கு

Thekkikattan|தெகா said...

உண்மை :-)

cheena (சீனா) said...

“சுய நலம் இல்லாத உறவுகளில் மட்டுமே அன்பு நிலைக்கும்” எனவே சிறு சிறு தியாகங்கள் உன்னை புடம் போடும், அவற்றிற்கு நீ பழகிக்கொள்."

அருமை அருமை. மூன்று மடல்களில் ஒரு கதை. அது கொடுக்கும் செய்தி - முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியது.

//30 வருடங்கள் சுயநலமிக்க ஒரு மனிதரோடு வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரும் பரிசாக மட்டுமே எனக்கு தோன்றுகிறது. //

ஒருவரின் மன நிலை மற்றவர்க்குத் தெரியாமல் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தாய் மகள் என்றாலும். உலக நியதி.

கிருத்திகா said...

வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி உஷா.

கிருத்திகா said...

உண்மை அது தான் சீனா.. தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

கிருத்திகா said...

தெகா... வாங்க வாங்க.. நீங்க வந்தது. கருத்து சொன்னது ரொம்ப சந்தோஷம்.. (எங்க ஊருல "தெகா" என்றால் நம்ம ஊரு பக்கம் என்று அர்த்தம்.. ஆனால் உங்கள் பக்கதில் பதில் இல்லை)... தாமிரபரணிக்கரையோ....