Tuesday, December 11, 2007

பெண்ணியம்


அப்படி ஒரு தொலைபேசி அழைப்பை நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லைதான். தினமும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலான அரைமணி நேரம் மட்டுமே எங்கள் கணவன் மனைவிக்கான நேரம். பிறகு என்னவள் தன் 7 மணி பேருந்தில் அலுவலகம் சென்றால் இரவு 8 மணிக்குத்தான் திரும்புவாள். என் அலுவலகம் 9 மணிக்குத்தான் என்றாலும் நானும் 7.20 பேருந்தை பிடித்துச் சென்றால்தான் காலை உணவை அலுவலக சிற்றுண்டிச்சாலையில் முடித்துவிட்டு சரியான நேரத்தில் பணியிடத்தில் அமர முடியும். இருவரில் ஒருவர் எங்களுக்கான இரவுச்சாப்பாட்டை வாங்கிக்கொண்டு இருவரும் வீடு வந்து சேர எப்படியும் மணி இரவு ஒன்பதைத்தொட்டுவிடும். இதனால் எங்கள் வீட்டில் சமையல் என்னும் ஒரு நிகழ்ச்சி அநேகமாக மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்று. எனவே எங்கள் வீடு எனக்கு ஒரு தங்கும் விடுதியாக மட்டுமே தோன்றியது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லது வீட்டுச்சூழலில் வளர்ந்த எனக்கு இது கொஞ்சம் புதியதாய் தோன்றியதில் தவறில்லைதானே. வார இறுதி நாட்கள் அநேகம் நாங்கள் நன்பர்களின் வீட்டிலோ அல்லது அருகிலிருக்கும் கேளிக்கை தளங்களுக்கோ சென்று எங்கள் இல்வாழ்க்கையை கழித்து வந்தோம்.

எங்கள் திருமண வாழ்வின் இரண்டாம் வருடம் கூட இப்படியே ஒரு மாற்றமுமில்லாமல் செல்வதில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு ஆனாலும் அவளிடம் இதைப்பற்றி பேசுவதற்கு சில தயக்கங்களும் உண்டு, ஏனெனில் அவள் நல்ல திறமைசாலி, அவள் திறமையை புரிந்துகொண்டு கொண்டாடும், நல்ல சம்பளம் தரும் ஒரு அலுவலகத்தில் பணி புரிவதால் அந்த வேலயை விடுவதற்கோ, அல்லது பணிமாற்றத்திற்கு தலைப்படுவதோ அவளால் முடியாததாய் இருந்தது, அதனால் என் எதிர்பார்ப்புக்களை சில சமயம் சாடை மாடையாய் சொல்லத்தலைப்பட்ட போதும் அவள் உடனே தன்னுடன் பணிபுரியும் மற்ற பெண்களின் கணவர்மார்களின் ஆளுமைத்தன்மை பற்றியும் அதனால் அவர்கள் படும் இன்னல் பற்றியும் பேச ஆரம்பித்து விடுவதால் நான் என் “நல்ல” பெயரை தக்க வைத்துக்கொள்ளவாவது வாளாயிருந்துவிடுவது என் வழக்கம்.

ஆனாலும் ஒரு மாற்றத்திற்காக, ஒரு குழந்தைக்காக, ஒரு இனிய வீட்டுச்சூழலுக்காக நான் மிகவும் எதிர்பார்க்க தொடங்கிய வேளயில்தான் அந்த தொலைபேசி வந்தது. பேசியது அவளின் தாயார், அவளின் தந்தையார் உடல் நிலை காரணமாக இங்கு சென்னையில் தங்கி 6 மாதத்திற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றும் அதனால் எங்களுடன் தங்குவதே ஒரே வழி என்றும் சொன்னபோது மிகவும் மகிழ்ந்து போனேன். இது தான் ஒரே வழி இந்த தருணத்தில் அவளின் வேலை மாற்றத்தை பற்றி ஒரு முடிவுக்கு வரச்சொல்லலாம், எங்கள் வீடு ஒரு தங்கும் விடுதி என்ற தளத்தில் இருந்து இல்லம் என்ற தளத்திற்கு வரும் என்ற எண்ணத்தோடு அவளிடம் இது பற்றி சொன்னபோது அவள் முற்றிலும் எதிர்பாராத ஒரு தீர்வைச்சொன்னாள்.

அதாவது அவளின் தாய் தந்தையரை தங்கும் விடுதி வசதிகளோடு கூடிய மருத்துவ மனையில், செவிலியர்கள் துணையோடு சேர்த்து பார்த்துக்கொள்வது???? என்றும், நாங்கள் இருவரும் வாரம் இருமுறையோ அல்லது முடியும் போதெல்லாமோ சென்று பார்த்து வருவது என்றும் சொன்னாள்। அதற்கான நியாயமான! காரணங்களாக அவள் ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே சென்றபோதும் என் நாட்டுப்புற மூளைக்குள் எதுவுமே பதியவில்லை.


அவர்கள் முதியவர்கள் வீட்டுச்சூழல் மட்டுமே அவர்களுக்குப்பொருந்தும், இது தான் நாம் அவர்களுக்கு உதவி செய்யும் தருணம் போன்ற என் எந்த சமாதனங்களுக்கும் அவள் செவி சாய்ப்பதாய் இல்லை, அதிகம் சொன்ன போது அவர்கள் என் பெற்றோர் தான் எனவே என்னைப்புரிந்து கொள்வார்கள் என்று என்னை சமாதனம் வேறு செய்தாள்.

இந்த சூழலில் தான் வேறு வழியில்லாமல் நான் இந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதாயிற்று.

01. என் தற்போதைய வேலயில் இருந்து என்னை விடுவிக்கச் சொல்லி கடிதம் எழுதிவிட்டு ஒரு பகுதி நேர வேலயை தேடிக்கொண்டேன்.
02. ஒரு நல்ல மகளீர் தங்கும் விடுதிபார்த்து அவளுக்கு 6 மாத முன் பணம் செலுத்தி தங்கும் அறை ஏற்பாடு செய்தேன்.
03. அவள் அம்மா அப்பாவிடம் அவள் 6 மாதங்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் தங்க வேண்டியுள்ளதால் வேறு ஊரில் இருப்பதாயும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வாள் என்றும் பொய் சொல்ல துணிந்தேன்.
04. என் மாமனார் மாமியாருக்கு மகனாய் இருக்க துணிந்தேன்.
05. நான்கு சுவர்களாலான கட்டிடத்தை சிறு சிறு தியாகங்களோடு கூடிய ஒரு அன்பான வீடாக்க முடிவுசெய்தேன்.

“தங்கும் விடுதிகளும், விதிமுறைகளும் அனுபவங்களும் எல்லோர்க்கும் ஒன்றுதானே” அவளும் புரிந்துகொள்வாள். நான் முன் கை நீட்டிவிட்டேன்… முழங்கை நீளும் தானே…..

25 comments:

பாச மலர் said...

அருமையான கதை...பெண்ணியத்தின் மறுபக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள்..அருமை.

கிருத்திகா said...

வாங்க பாசமலர்.. நன்றி…கதை தேறுமா???

மங்களூர் சிவா said...

கதையென்று பார்த்தால் சூப்பர்.

ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு இந்த முடிவு ஒத்துவருமா?

சான்ஸே இல்லை!

வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்க.

கிருத்திகா said...

ம்ம்ம்ம்..வாங்க சிவா.. ஒரு பழமொழி உண்டு “வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினால் போல” என்று அது போல ஒரு நாளாவது உங்ககிட்ட இருந்து முழுமையான பாராட்டு வாங்கமாட்டேனா என்ன? எனக்கு நம்பிக்கை இருக்கு..

வினையூக்கி said...

:) :) நல்லா இருக்குங்க . வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்புடன்
"வினையூக்கி" செல்வா
www.vinaiooki.com

கிருத்திகா said...

நன்றி வினயூக்கி … அந்த பேய் வீடு கதையை ஒரு மாதிரி வில்லத்தனமா முடிப்பீங்கன்னு பார்த்தா, கவிதையா முடிச்சீட்டீங்களே.

இலவசக்கொத்தனார் said...

வித்தியாசமான சிந்தனைதான். ஆனா சிவா சொல்வது போல் ஜீரணிக்க கொஞ்சம் சிரமமாகவே இருக்கு.

கிருத்திகா said...

ஏன் கொத்ஸ் (அப்படி விளிக்கலாம் இல்லையா??) பால் சார்ந்த மரபு சிந்தனைகள் தடுக்கிறதா????

புதுகைத் தென்றல் said...

அருமையான கதை...பெண்ணியத்தின் மறுபக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள்..அருமை.

நானும் வழிமொழிகிறேன்.

கிருத்திகா said...

ஊக்கம் தரும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பு.தென்றல்

வினையூக்கி said...

<< அந்த பேய் வீடு கதையை ஒரு மாதிரி வில்லத்தனமா முடிப்பீங்கன்னு பார்த்தா, கவிதையா முடிச்சீட்டீங்களே>>

நன்றி கிருத்திகா

நக்கீரன் said...

பெண்ணியத்தின் ஒருபக்கத்தைத்தான்
காட்டியிருக்கீங்க. இன்னும் பல பக்கங்கள் இருக்கு.அதையும் எழுதுங்க.
கதை நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்.

கிருத்திகா said...

நன்றி நக்கீரன். நன்று தீது என பல்வேறு குணங்களுடன் கூடியது தானே எந்த உயிரனமும் அதில் இது ஒரு விதம் இன்னும் தேடலாம்…

இப்னு ஹம்துன் said...

அருமையான கதைக்கரு...
சரளமான நடையும், நல்ல முடிவும்.
பாராட்டுகள்.

கிருத்திகா said...

"மரணம் என்பது தத்துவமாகவே இருக்கிறது-நெருங்கியவர்களுக்கு வரும்வரை" ஆழமான வரிகள் தங்களைப்பற்றி அறிந்து கொள்ள எண்ணி தங்கள் பதிவிற்குச்சென்றதில் சில நல்ல இடுகைகளை வாசிக்க நேர்ந்தமைக்கு நன்றி..

கீதா சாம்பசிவம் said...

"கதையென்று பார்த்தால் சூப்பர்.

ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு இந்த முடிவு ஒத்துவருமா?

சான்ஸே இல்லை!

வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்க."

சிவா சொல்வது தான் நிஜம், என்றாலும் இம்மாதிரியான ஆண்களையும் பார்க்கலாம், இவ்வளவு தியாகம் இல்லாட்டியும், ஓரளவாவாது செய்பவராய் நடை முறை வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கிறவர்களில் ஒருவராய் இருக்கத் தான் செய்கிறார்கள்.

கிருத்திகா said...

நன்றி கீதா.. நான் அப்படி ஒன்னும் ரொம்ப முன் மாதிரி கதாபாத்திரத்தை சித்தரிக்க முயலவில்லை. இந்த முடிவுகளில் அந்த பாத்திரத்தின் சுய எதிர்பார்புக்களை நிறைவு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நினப்பதாகவே கூற முனைந்துள்ளேன்.

அரை பிளேடு said...

வாழ்க்கை எதைத்தேடி என்ற அர்த்தமே இல்லாமல் ஒரு இயந்திரத்தனமாய் பெற்றோர்களையே விலக்கி தூரத்தில் வைத்து....

ஆனால் உங்கள் முடிவு இடறுகிறது.

அவர்களை வீட்டிலேயே வைத்து பராமரித்து வீட்டோடு செவிலியர் ஒருவரை ஏற்பாடு செய்ய முடியாதா ? இரவு 8 மணியிலிருந்து மறுநாள் 8 மணிவரையிலான 12 மணிநேரத்தில் ஒரு அரை மணிநேரத்தை அவர்களுக்கு ஒதுக்க முடியாதா.

சென்ஷி said...

//வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்க.//

repeateyyyyyy

senshe

from sharjah

சென்ஷி said...

வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்க.

.:: மை ஃபிரண்ட் ::. said...

கதை நன்றாக இருக்கிறது. :-)

Nithya A.C.Palayam said...

பெண்ணியத்தின் மறுபக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள்??!!

வெட்டிப்பயல் said...

நடை நல்லா இருக்குங்க... தொடர்ந்து எழுதுங்க.

மங்கை said...

நடை நல்லா இருக்கு..தொடர்ந்து எழுதுங்க...இதுல ஒரு விஷயம் இப்பவும் நடந்துட்டு தான் இருக்கு.. இன்னொரு விஷயம்..அங்கங்கதான் நடக்குது..:-)))..விசு பட கதாநாயகனை நினைவுபடுத்துகிறது...

நிறைய எழுதுங்க கிருத்திகா

கிருத்திகா said...

வாங்க மங்கை.. நன்றி.. எழுத்துக்கள் எப்பொழுதுமே எதார்த்தம்+புனைவுகள் தானே.... ஆமா இல்ல இப்பத்தான் எனக்கும் தோணுது.. கதாநாயகனுக்கு விசு ஹீரோவோட சின்ன சாயல் இருக்கு...