Tuesday, December 16, 2014

மார்கழியும் – ஆத்தூரும் - ஜெயதேவரின் அஷ்டபதியும் – ராதையும்



சிறு வயதில் மார்கழி மாதம் படு கொண்டாட்டமான மாதம். அதிக விடுமுறைநாட்கள், சாஸ்தா கோவிலில் ஐய்யப்ப மண்டல பூஜை, காலை வீதி பஜனை, சிவனுக்கு திருவாதிரைத் திருநாள், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, கூடவே கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் என்று மிகவும் சந்துஷ்டியான மாதங்களில் ஒன்று மார்கழி.

இதையெல்லாம் தாண்டி அநேகமாக அனைவரும் காலையில் கோவிலுக்குப் போகும் பழக்கமும் உண்டு. ஒரு சிலர் கோவிலுக்குப் போகுமுன் வீட்டில் பூஜை முடித்து விட்டு செல்வதும் உண்டு. அம்மா கண்டிப்பாக பூஜை முடித்துவிட்டுத் தான் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பார்கள். எனவே எல்லா நாளும் காலையில் குறைந்தது நாலு மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு (அக்காவின் வேலை)  வீடு துடைத்து மெழுகி கோலமிட்டு (என் வேலை), குளித்த பின் விளக்கேற்றி விட்டு நான் அக்கா அம்மா மூவரும் திருப்பாவையும், அஷ்டபதியும் பாடி பூஜை செய்து விட்டு கோவிலுக்கு செல்வோம். இருபத்து நாலு அஷ்டபதியும் முடிந்தவுடன் ராதா கல்யாணமும் உண்டு. சில சமயம் கிராமத்தில்  பலர் சேர்ந்தும் செய்வதுண்டு இல்லையென்றால்  தனித்து எங்கள் வீட்டு மட்டத்தில் செய்வதும் உண்டு. மொத்தத்தில் மார்கழி எங்களுக்கு கீத கோவிந்த மாதம்.

அஷ்டபதி பாடுவதில் பல பாணி உண்டு, அம்மா கற்றுக்கொண்டது மிகவும் எளிமையாக இருக்கும். இதனால் அம்மாவிடம் எங்கள் கிராமத்தில் இருந்து அனேகம் பேர் வந்து கற்றுக்கொள்வதுண்டு.  நானும் அக்காவும் எந்த ஸ்லோகமும் அம்மாவிடம் நேரடியாக கற்றுக்கொண்டது கிடையாது ஆனால் அம்மா பாடப்பாட எங்களுக்கும் பாடமாகிவிட்டது. அது மிகப்பெரும் கொடை. அதில் ஜெயதேவரின் அஷ்டபதி சிறு வயதிலிருந்தே மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

திருமணத்திற்கு பின் இந்த மாதத்தில் ஸ்ரீ வீட்டு வழக்கப்படி திருப்பாவையும் கீதையும் உரையுடன் ஸ்ரீ வாசிப்பதுண்டு. அஷ்டபதி நின்று போனது. கடந்த சில வருடங்களாக (நமக்கும் வயசாகிவிட்டதில்லையா) இது ஒரு குறையாகத் தோன்றத் துவங்கவே பாடம் மறந்து போகாமலிருக்க அவ்வப்பொழுது பாடிப் பார்ப்பதுண்டு.

இன்று அதிர்ஷ்டவசமாக நாங்கள் கற்றுக்கொண்ட பாணியில் இணையத்தில் காணொளி கிடக்கவும் ஒரு சிறு முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.

இன்றிலிருந்து ஒவ்வொரு அஷ்டபதியாக வரிகளோடும் தமிழ் அர்த்தத்தோடும் இசையோடும் பதிய முயற்சிக்கின்றேன் பெருங்கருணையின் துணைகொண்டு எப்பொழுது முடிக்க முடிகிறதோ பார்க்கலாம்.

கோவிந்தா, கிருஷ்ணா வாசுதேவா, ரிஷிகேசா பத்மநாபா, தாமோதரா  ஜெயதேவருக்கு அருளியது போல் என்னோடும் இரும்.

- எனக்குள்  எப்பொழுதும் ஒளிந்திருக்கும் ராதை இப்போது அதிகம் ஆக்கிரமிக்கிறாள்.

2 comments:

Unknown said...

What is the link for listening Astha Padhi?

Raju said...

2 ashtapathiku appuram onnume varaliye