Wednesday, September 24, 2014

ஆன்மீக இறுமாப்பு


கேள்விகள் என்பது நம் வினைச்செயல்,கர்மா அதற்கும் கடவுளே காரணம் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கும்  நம் வினைப்பயனே காரணம்.

நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக் குறைக்க உதவும். அதன் மூலம் நாம் செய்யும் நன்மைகள் அதிகரிக்கும் அப்போதும் அதற்கான கர்த்தா நாம் தான்

இதில் நன்மையை நாம் கடவுளின் பெயருக்கு விடுவதன் காரணம் “நாம் ஒரு நன்மை செய்து விட்டோம்” என்ற ஆணவத்தை அடைந்து விடாமல் இருப்பதற்காகத்தான்.ஏனெனில் இந்த உணர்வு இறுமாப்பையும் அதற்கான பதில் உபகாரத்தையும் (குறைந்த பட்சம் ஒரு சிறிய அங்கீகாரத்தையாவது ) எதிர்பார்க்க வைக்கும். இதன் பயனால் இம்மையில் நாம் மீண்டும் ஒரு செயல் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். மறுமையிலோ மற்றுமோர் வினைச்சக்கரத்தை உருவாக்கிக்கொள்கிறோம். .

இப்போது கேள்விக்கு வருவோம். - எல்லாமும் கடவுள் செயல்தான் என்று சொன்னால் ஒருவர்  செய்யும் தவறையும் கடவுள் செயல் என்று சொல்லமுடியுமா?  அது நாத்திகவாதமாகதா? அது போலத்தான் கேள்விகளும். கேள்விகள் அறியாமையின், இருளின்,  வெளிப்பாடு, இதில் அணுவுக்குள் அனுவானவர்க்கும் ஒளியானவர்க்கும் தொடர்பில்லை.

 

இப்போது பதிலுக்கும் வரலாம் – பதில் எங்கும் எப்போதும் ஓரு  காற்றைப்போல நிலைத்து நிறைந்திருப்பது.  ஆனால் காற்றாடி சுற்றும் போதோ மரங்கள் அசையும் போதோதான் நாம் அதை புரிந்து கொள்கிறோம். இதில் நம் கேள்விகளை சுயம் ஏற்றி அதற்குண்டான பதில்களையும் தொடர்பு படுத்தி நம்மை சுகத்திலோ துக்கத்திலோ ஆழ்த்திக்கொள்கிறோம். தற்குறிப்பேற்றல் அணி உண்டல்லாவா அது போல.  இங்கும் நம் அறியாமை மட்டுமே வியாபித்திருக்கிறது.

கடவுளின் வேலை நம்மில் கேள்விகளை உண்டாக்குவதோ அதற்குண்டான பதில்களை தருவதோ இல்லை. அவரது நாமத்தால் நம்மை கேள்விகளற்ற நிலைக்கு தள்ளுவது மட்டுமே அதை உணர்த்துவது மட்டுமே. இதையும் தாண்டிய ஒரு நிலையில் அவர் வேறு எவரோ இல்லையென்றும், வேறு எங்கோ ஓர் தனி உலகத்தில் பருப்பொருளாய் இருக்கவில்லை என்றும் நம் ஆத்மா அந்த பேருணர்வின் ஒரு துகள் என்றும் புரிந்து கொள்ளும் நொடியில் மற்றுமொரு கடவுள் நமக்குள் உருக்கொள்கிறார்.

இதில் காலம் காலாமாய் நாம் செய்து கொண்டிருக்கும் சாங்கியத்திற்கு எந்த ஒரு கர்வமும் கொள்ளத்தேவையில்லை என்பது என் கருத்து.

4 comments:

ஜீவி said...

அருமையான பதிவு.

ஆனால் நன்கு புரிதலுக்காக சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.

கஷ்டப்பட்டு கேட்காமல் அடக்கிக் கொள்கிறேன்.

Kiruthika Sridhar said...

வாங்க ஜீவி உங்கள் கேள்விகளால் நானும் கற்றுக்கொள்ள முடியும் இது ஒரு உரத்த சிந்தனை மட்டுமே ஆன்மீகத்தில் எதுவுமே இதுதான் என்று இல்லை தானே

ஜீவி said...

//நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக் குறைக்க உதவும். //

கர்ம வினை என்றால்--

கர்மம் - காரியம், செயல்
வினை - வினையாற்றுதல், செயல்படுதல்

என்பது என் எண்ணமாயிருந்தது.

மேலே எடுத்தாண்ட வரியில், நல்லோர் நட்பும், கடவுள் நாமமும்
நம் கர்மவினைகளைக் குறைக்கும் என்றால் 'கர்மவினை' என்பதனை
தீவினை என்று பொருள் கொள்ள வேண்டுமோ என்று சந்தேகம்.

இது தான் என்னில் எழுந்த கேள்வி.


Kiruthika Sridhar said...

ஜீவி கர்ம வினைகள் பொதுவில் இரண்டு வகைப்படும் ஒன்று நன்மை மற்றொண்டு தீமை.

நல் கர்மாக்கள் நம்மை நல்லது செய்ய வைக்கும் அதம் மூலம் நாம் அடைவது என்ன புண்ணியம் மற்றொரு அர்த்தத்தில் பிறவாமைக்கான படியில் ஒரு முன்னேற்றம் அல்லவா?

அதே சமயம் தீய கர்மாக்கள் நம் பிறப்பிற்கான காரணிகள்.

கர்மாவை நம்பும் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை நம் மறு பிறப்பு நம் கர்மாவை பொறுத்தே என்பதை இதன் அடிப்படையில் பார்த்தால் கர்ம வினைகள் பெரும்பாலும் தீமையே ஏனெனில் நம்மை மற்றொரு பிறவிக்கு ஆட்படுத்துகிறது ஆனால் நாம் விழைவதோ பிறவாமையை ஏனெனில் நம் சுயம் அதற்க்கான வீட்டை அடைவது பிறவாமையில தானே

மற்றொரு பாஷையில் சொல்ல வேண்டுமானால் ஜீவாத்மா ப்ரமாத்வாவில் ஒன்றும் தருனத்திற்காகத்தானே நாம் தவமியற்றுகிறோம் அல்லது காத்திருககிறோம்