Monday, August 11, 2014

உரத்த சிந்தனை – மொழி – எப்படி சரி செய்யப் போகிறோம்??


மதிய உணவு இடைவேளை என்பது சில சமயம் இயந்திரத்தனமாயும், சில சமயம் ஆசுவாசமாகவும் அமைவதுண்டு. நேற்றைய நாள் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

மதிய உணவை சில நண்பர்களோடு உண்ண நேர்ந்தது. பேச்சு அவர்கள் குழந்தைகளின் புத்திசாலித் தனங்களைப் பற்றியும், விளையாட்டைப்பற்றியும் போய்க்கொண்டிருந்தது. மெதுவாக பாடத்திட்டதைப்பற்றியும் திரும்பியது. எல்லோருமே அவரவர் குழந்தைகளை ICSE/CBSE பாடத்திட்டத்தில்  தான் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது மொழியாக பொதுவில் ஹிந்தியை எடுத்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா, அம்மா இருவருமே ஹிந்தி படித்திருக்கவில்லை ஒரு சிலர் பிள்ளைகளுக்காக தாங்கள் படிப்பதாகவும் சிலர் தனி வகுப்பில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இதில் தெலுங்கர், தமிழர், மலையாளி என கலவையாக எல்லா மாநிலத்தவரும் இருந்தனர். வீட்டில் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகிறார்களாம். ஆனால் இரண்டாம் மொழிப்பாடமாக தாய்மொழியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது .  இதில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது. நம் மாநிலங்களில் உள்ள இது போன்ற பள்ளிகளில் அந்தந்த மாநில மொழியே பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கும். அந்த வகையில் மற்ற மாநிலத்தாருக்கு அதில் ஆட்சேபமும் அசௌகரியமும் இருக்க  வாய்ப்புண்டு.

ஆனாலும் இப்படியே போனால் நம் சந்ததியினர் அவரவர் தாய் மொழியில்  எழுதவோ படிக்கவோ தெரியாமல் பேச மட்டுமே தெரிந்தவராவர். இதுவே ஒரு மொழியின் அழிவின் ஆரம்பம் ஆகாதா? என் குழந்தைகளை எடுத்துகொண்டாலும் அவர்களின் வாசிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே உள்ளது. பல தரப்பட்ட புத்தகங்களை வாசித்தாலும் அவை நம் தாய் மொழியில் இல்லை. இதில் மேலும் வருத்தம் என்னவென்றால் இருவருமே தமிழையே இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்தவர்கள்.

இன்றைய வணிக சூழலில் அவரவர் மாநிலங்களிலேயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் மிகவும் அரிது என்பதாலும், யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்வே மிகவும் சிறந்தது என்றாலும் எழுத்துக்களை தொலைக்கும் மொழியை நாம் எவ்வாறு காப்பது? அரிதாக அரிதாகி மறைந்து போன நம் எத்தனையோ குல/குடும்ப வழக்கங்களைப்போல நாம் நம் மொழியையும் தொலைத்து விடப்போகிறோமா? அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமையை எப்படி சரிசெய்யப் போகிறோம்??

இது போல இன்னும் சில கேள்விகள் உண்டு?......

3 comments:

ஜீவி said...

//அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமை.. //

அந்நிய தேசங்களில் இருப்பவர்கள் அவரவர் தாய்மொழிக்கு நிச்சயம் அந்நியப்பட்டு இல்லை. பலமொழிக் குடும்பங்களைப் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்.

அமெரிக்காவில் இருக்கும் ஏழு வயது என் பேரனுடன் அவன் பெற்றோர்
தாய்மொழி தமிழில் தான் பேசுகிறார்கள். தமிழில் மிகச் சிறப்பாக பேசவும் எழுதவும் தெரியும் அவனுக்கு. எழுதவும் தெரியும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எழுத்துக்களில் உயிர், மெய், உயிர்மெய் என்று எல்லா வற்றையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

வீட்டிலிருக்கும் சிறார்களுக்கான கறும்பலகையில் அனைத்தையும் எழுதுகிறான். இப்பொழுது ஹிந்தி எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொண்டு வருகிறான். பள்ளியில் இருக்கவே இருக்கு ஆங்கிலம்.

ஜீவி said...

அமெரிக்காவிலிருந்து 'தென்றல்' என்று தமிழ் மாத பத்திரிகை ஒன்று வெளிவருகிறது. இலவச இதழ். இந்தியக் கடைகளின் வெளி வாசலில் புத்தக தாங்கிகளில் அடுக்கி வைத்திருப்பார்கள்.

நமது நாலு பிரபல தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டிராத சிறப்பான உள்ளடக்கம் கொண்டது இந்தப் பத்திரிகை. 80 பக்கங்களுக்குக் குறையாமல் கலைமகள், அமுதசுரபி அளவில் வெளிவருகிறது. பல வருடங்களாக ஒவ்வொரு இதழிலும் தமிழ் எழுத்தாளர் ஒருவரைப் பற்றிய இரண்டு பக்கங்களுக்குக் குறையாத விவரக்குறிப்புகளுடன் அவர் கதை ஒன்றையும் வெளியிடுகிறார்கள். இந்த மாத இதழில் எழுத்தாளர் கழனியூரன்.

சமீபத்தில் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். மூன்று பரிசுகளைத் தவிர பிரசுரிக்க தேர்வான கதைகள் என்று நிறைய கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து பலர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு அவர்கள் சிறுகதைகள் தேர்வு பெற்றிருப்பது தான் சிறப்பம்சம்.
நமது தமிழக பத்திரிகைகளுக்கு அறிமுகமில்லாத பலரின் எழுத்துச் சிறப்பை இந்தப் பத்திரிகையில் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் தமிழக தமிழ்ப்பத்திரிகைக்கு அந்நியப்பட்டு போயிருப்பதும் வேதனையாக இருக்கிறது.

இந்தப் பத்திரிகையை இணையத்தில் www.tamilonline.com என்கிற முகவரியில் நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.



கிருத்திகா ஸ்ரீதர் said...

தங்கள் இரண்டு மருமொளிகளுமே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. உண்மைதான் நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். தமிழ் வெளி நாடுகளில் கொண்டாடப்படும் அளவிற்கு இன்னும் இங்கு கொண்டாடப்படவில்லை என்பது தான் ஏன் ஆதங்கமும். அடுத்ததாக தங்கள் பேரன் குறித்து எழுதியது - இது ஒன்று தான் தீர்வாக இருக்க முடியும். நான் இந்த பத்தியை எழுதும் போதே என்னுள் தோன்றியா தீர்வும் இதுதான். ஆனால் எத்தனை பெற்றோர்கள் இதை கடை பிடிப்பார்கள் என்ற கேள்வி மட்டுமே என்னுள் இருந்தது அதற்கான உந்துதலாகத்தான் இதை பகிர்ந்து கொண்டேன். தங்கள் வாரிசல்லாவா? அதனால் தான் எல்லாம் நன்றாகவே நடக்கிறது.
மீண்டும் சம்பாஷிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.. இதற்காகவேனும் ப்ளாக் எழுத வேண்டும் என்று தோன்ற்கிறது.