Saturday, March 26, 2011

"பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்" - அட நாம கொஞ்சம் கூட மாறவேயில்லை.....

இருபத்து மூன்று வருடம் கழித்தும் நிலைமை அப்படியேதான் உள்ளது சொல்லப்போனால் மோசமடைந்து வருகிறது.

எண்பதுகளின் பிற்பகுதில் வந்த கணையாழியின் தொகுப்பொன்று சமீபத்தில் நன்பரின் இல்லத்திற்கு சென்ற போது கிடைத்தது படிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் இருந்த கட்டுரையொன்று தற்போதைய நிலைமைக்கு மிகவும் பொருந்திவரவே பகிர்ந்து கொள்கிறென்கணையாழியின் பக்கங்களில் இருந்து


பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்.


இன்று நாட்டின் மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் அரசியல் நிலை மிகவும் குழப்பமடைந்து காணப்படுகிறது. கொள்கைப்பிடிப்புள்ள தீவிர இடது சாரி , வ்லதுசாரிக்கட்சிகளுக்கு இங்கு ஆதரவில்லை, தேசீயக் கட்சிகளான காங்கிரசும், தேசீய முன்னணியும் எந்தக் கழகத்தின் பின்னால் போனால் அதிக வோட்டுகள் கிடைக்கும் என்று அரசியல் ஆதயத்திற்காக அலைகிறார்கள். கொள்கையின் பேரால் கொள்ளையடித்த பிராந்தியக் கட்சிகளையோ அவற்றின் புதிய அவதாரங்களையோ நம்பி வோட்டுப் போடுவது திருடனின் கையில் பெட்டிச் சாவியைக்கொடுப்பது போலாகும்.


தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் இது ஒரு தவிர்க்கமுடியாத உண்மை என்ன வென்றால் களத்தில் நிற்கும் எந்த அரசியல் கட்சியையும் ஊழக லை ஒழிக்க விரும்புவோர் ஆதரிக்க முடியாது. எல்லாக் கட்சிகளிலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் எல்லாக் கட்சிகளின் தலமைகளும் ஊழலில் சிக்குண்டு பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன.


தமிழ்நாட்டில் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பல அரசியல் சாரா இயக்கங்கள் தோன்றி நல்ல முறையில் பணியாற்றத்தொடங்கியுள்ளன. மக்கள் தூய்மை இயக்கம் மக்கள் சக்தி இயக்கம், ஸ்வச்சித் போன்ற அமைப்புகள் ஊழல் ஒழிப்பு என்ற ஒரே குறிக்கோளில் இணைந்து மக்களை அணுகினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இந்த இயக்கங்கள் உடனடியாகச் செய்யவேண்டிய பணி, தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் தொடர்பில்லாத ஒரு நல்லவரைத்தேர்ந்தெடுத்து அவரை ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் சார்பில் மக்கள் பிரிதிநிதி என்று அறிவித்து நிறக வைக்க வேண்டும்.


மக்கள் பிரதிநிதிக்கு எத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும் என்பதில் ஊழல் ஒழிப்பு இயக்கங்களிடையே கருத்து வேறுபாடு இருக்க இடமில்லை. பொது வாழ்வில் தூய்மையானவர்களை நாணயமானவ்ர்களை, பொது தொண்டில் ஈடுபாடு உள்ளவர்களை ஜாதி மத மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு தொகுதியிலும் தேடிக்கண்டுபிடிக்க முயலுவது இந்த இயக்கங்களின் பொறுப்பாகும். நல்ல பெயர் இல்லதவர்களையும் தவறான வழியில் சொத்து சேர்த்தவர்களையும் அடையாளங்கண்டு அறவே ஒதுக்கி விடவேண்டும்.


நல்லவர்கள் அரசியல் சாக்கடையில் காலைவிடத் தயங்குவார்கள் என்பது உண்மைதான் மேலும் பண வசதி இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால் பொதுமக்கள் உறுதியாகச் செயல்பட்டால் இந்தப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் தொண்டர்கள் கால்நடையாகவும் சைக்கிள்களிலும் தெருத் தெருவாகச் சென்று வீடு வீடாக நுழைந்து ஊழலால் விளைந்த கொடுமைகளைப்பற்றியும் நல்லவர்கள் அரசியலில் ஈடுபட மக்களின் ஆதரவைத்தேடியும் பிரசாரம் செய்ய வேண்டும்


இன்றுள்ள அரசியல் கட்சிகளை விட்டால் வேறு எவருமே ஆட்சி அமைக்க முடியாது என்பது வெறும் பிரமைதான். சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஊழல் ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம், வறுமையை ஒழிக்க பரவலான சிறுவேலை வாய்ப்புத்திட்டங்கள். குடிநீர் வசதி சுற்றுப்புறச் ச்சுழல் பாதுகாப்பு, பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் பெண்டிரும் சமூக நீதியின் அடிப்படையில் மேம்பாடடைய வாய்ப்புகள் போன்ற சில அடிப்படைக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து அவற்றை செயல்படுத்த புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க முடியும்,.


ஊழலை அறவே வெறுக்கும் பைத்தியக்காரர்களும் நேர்மையை நம்பும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று பட்டால் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே காப்பாற்றிவிடலாம்.


நன்றி - 24-08-88 தினமணி

7 comments:

அறிவன்#11802717200764379909 said...

இன்றைக்கும் பொருந்தும் நிலை என்று பாராட்டுவதா அல்லது தமிழகம் 25 ஆண்டுகளாக இந்த அரசியில் தொ(கு)ண்டர்களின் பிடியிலிருந்து வெளிவர இயலவில்லை என்பதை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை...

கனையாழி என்று எழுதியிருக்கிறீர்கள்,கீழோ தினமணிக்கு நன்றியுடன் என்றிருக்கிறதே,சிறிய குழப்பம்!

கிருத்திகா said...

அறிவன்

ஸ்வசித் சிந்தனைகள் என்ற தலைப்பில் கணையாழியில் வந்துள்ள தலையங்க கட்டுரையாக இது உள்ளது. கீழே தினமணி பற்றிய இந்தக்குறிப்பும் உள்ளது. நாளிதழில் வந்ததை மீள்பிரசுரம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

அகநாழிகை said...

இன்றைக்கும் பொருந்துகிற சரியான பகிர்வு.

கஸ்தூரிரங்கன் கணையாழி ஆசிரியராக இருந்த போது தினமணி தலையங்கத்தை கணையாழியிலும் நிறைய இதழ்களில் வெளியிட்டிருக்கிறார்.

திவா said...

ஸோ நிலமை மாறவேயில்லை!
:-(

subburathinam said...

ஊழல் என்பது ஒரு பக்கம். ( தமிழ் நாட்டில் இன்னமும் பஸ் டிக்கட் லஞ்சம் கொடுக்காமல் கிடைக்கிறது. ) தமிழ் நாட்டையே குடியில் முழுகடித்து விட்டார்கள். தமிழக பொருளாதாரமே
சாராய விலையில் சார்ந்திருக்கிறது. ஒரு குவார்ட்ட்டருக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், தமிழ்க மக்கள்
யாவருக்குமே அரிசி ஒரு மாதம் 20 கிலோ ( ரேஷன் அரிசிதான் !! ) இலவசமாகத் தர முடியும் என்ற நிலை
ஏற்பட்டு இருக்கிறது.

இன்னமும் எந்த கட்சியும், தனது தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் பட்டியலில், தினமும் ஒரு
குவார்ட்டர் பாட்டில் தரப்படும் அதையும் டோர் டெலிவரி தரப்படும் என்று சொல்லவில்லை என்பதுவே
ஆச்சரியம். !!

சுப்பு

subburathinam said...

ஊழல் என்பது ஒரு பக்கம். ( தமிழ் நாட்டில் இன்னமும் பஸ் டிக்கட் லஞ்சம் கொடுக்காமல் கிடைக்கிறது. ) தமிழ் நாட்டையே குடியில் முழுகடித்து விட்டார்கள். தமிழக பொருளாதாரமே
சாராய விலையில் சார்ந்திருக்கிறது. ஒரு குவார்ட்ட்டருக்கு ஒரு ரூபாய் விலை ஏற்றினால், தமிழ்க மக்கள்
யாவருக்குமே அரிசி ஒரு மாதம் 20 கிலோ ( ரேஷன் அரிசிதான் !! ) இலவசமாகத் தர முடியும் என்ற நிலை
ஏற்பட்டு இருக்கிறது.

இன்னமும் எந்த கட்சியும், தனது தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் பட்டியலில், தினமும் ஒரு
குவார்ட்டர் பாட்டில் தரப்படும் அதையும் டோர் டெலிவரி தரப்படும் என்று சொல்லவில்லை என்பதுவே
ஆச்சரியம். !!

சுப்பு

goma said...

காலங்கள் மாறலாம் கட்சிகள் மாறலாம் அரசியல்வாதிகளின் அராஜகம் ஜகத்தை நாற அடிப்பது மாறவே மாறாது