Sunday, August 28, 2011

இயலாமையின் சில விழுதுகள் - வார்த்தை

தரையெங்கும் இறைந்து கிடக்கிறது வார்த்தைகள், காலில் மிதிபடும் இரணம் பொறுக்க முடியாமல் வாரிக்குமித்து குப்பை தொட்டியிலிடச்செல்கையில் தான் கவனித்தேன் அதுவும் நிரம்பி வழிகிறதென. அலுப்பாய் வீதியில் சென்று விசிறலாம் என்று போனால் அங்கேயும் மலைபோல் குமிந்திருந்தது வார்த்தைகள்

போவோர் வருவோரெல்லாம் வழியின்றி தட்டுத்தடுமாறி மிதித்தபடி சென்றுகொண்டிருந்தனர். கொட்டிக்கிடக்கும் பனித்துகள்களின் நடுவே வழுக்கிச்செல்லும் வல்லுனர்களைபோல வாகன ஓட்டிகள் லாவகமாய் கடந்து சென்றனர்.
செய்வதற்கேதுமின்றி சிறியதும் பெரியதுமாய் கூடைகூடையாய் வார்த்தைகளோடு விழித்திருக்கையில் கண்சிமிட்டிச் சிரித்தன சில வார்த்தைகள். எப்போது சிந்திய வார்த்தைகளென்ற பிரஞ்ஞை ஏதுமில்லாத காரணத்தால் என்னால் மையமாய் புன்னகைக்க மட்டுமே முடிந்தது. மறுநிமிடம் அத்தனையும் கொந்தளிப்பாய் குதிக்கத்துவங்கியது. எதற்கிப்படி எங்களை உருவாக்கி உருவாக்கி வீணடிக்கிறீர்கள் என நியாயம் கேட்கையில் பதிலேதுமின்றி இலக்கின்றிப் பார்த்திருந்தேன்.

உருவாக்கியவர்க்கே சொந்தமென்ற பொது புத்தியின் வரம்புகளுக்கடங்காத வார்த்தைகளை மீண்டும் தொலைந்து போகச்செய்யும் திறனிருந்தால் மட்டுமே இனி உருவாக்கினாலென்ன என்ற எண்ணம் மின்னி மறைந்தாலும் சாத்தியங்களின் விளிம்புகளில் கரைதட்டி நின்றதென் எண்ண அலைகள்.

இயலாமையின் உச்சத்தில் கூடைகளுக்கு நடுவே உறங்கச்செல்கையிலும் விழித்திருந்து கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தன வார்த்தைகள், ஆனாலும் அன்று பெய்த பெருமழை அத்தனை வார்த்தைகளையும் ஆற்றோடும் கடலோடும் கொண்டு சேர்த்தது, மறுநாள் கடல் முழுதும் வார்த்தைகள் ஓ என்ற சப்தத்தோடு இப்போதும் சப்திக்கிறது.

மீதமிருந்த கூடைகளின் சில வார்த்தைகளை இதோ இணையத்தில் கொஞ்சம் கொட்டிவிட்டேன் மீண்டும் ஒரு பெரூமழைக்காய் காத்திருக்கிறேன்.

3 comments:

ஜீவி said...

//எதற்கிப்படி எங்களை உருவாக்கி உருவாக்கி வீணடிக்கிறீர்கள் என நியாயம் கேட்கையில் பதிலேதுமின்றி இலக்கின்றிப் பார்த்திருந்தேன்.//

நல்ல தொகுப்பு. நிஜமாகவே வார்த்தைகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் உணர்வு படிக்கையில் ஏற்பட்டது.

எழுத்துக்கள் தாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகள் ரூபத்தில் தங்கள் இருப்பைக் காட்டுகின்றனவோ என்கிற நிதர்சன உணர்வும் நினைப்பில் கிளைத்தது. தட்டச்சு கருவியைப் பார்க்கையில் சில எழுத்துக்கள் மட்டும் அதை இயக்குபவரின் அதிகபட்ச உபயோகத்தில் தேய்ந்திருப்பது தெரிய வரும்.

நினைப்புதான் தன் மொழிப்புலமையில் திளைத்து தனித்தனி எழுத்துக்களைக் கோர்த்து ஆரமாக்கி மகிழ்கின்றனவோ என்கிற நினைவும் கூடவே வந்தது.
அப்படி அழகாகக் கோர்த்த ஆரங்களைப் பார்க்கையிலேயே கண்ணும் மனமும் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள படாத பாடு படுகின்றது. இந்த தவத்திற்காகக்காகத் தான் தாபத்துடன் எழுத்துக்களும் காத்திருக்கின்றன என்கிற உணர்வையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எழுத்தும் அதன் கோர்ப்புகளான வார்த்தைகளும் இல்லையெனில் மனிதன் மெளனியாக தன் எண்ணத்தை வெளிப்படுத்த இயலாது திகைப்பான் என்கிற திடுக்கிடுதலும் நினைவில் தடுமாறியது.

மொழியின் அந்த வரத்தை நினைத்து நினைத்து நீவிர் வாழிய, வாழியவே என்று சிந்து பாட உணர்வுகள் துடிக்கின்றன.

அன்புடன் அருணா said...

ஆஹா ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க....பூங்கொத்து!!

திவா said...

நல்ல கற்பனை! மலர் கொத்து பிடிங்க!