Sunday, June 27, 2010

கற்றுக்கொள்வதற்கான விழைதல்


எத்தனை சொல்லியும் மாளாது இன்னும் இன்னும் என என்னுள் தாகித்துக்கொல்கிறது. மைதானத்தில் உருண்டும் சொல்லும் கால்பந்தின் விசையைப்போல் எல்லாப்பக்கத்திலும் அலைக்கழிக்கப்படுகிற்து மனது. எந்த ஒரு வேலையின் முடிவிலும் ஆரம்பத்திலும் ஏற்படும் ஆசுவாசம் ஏதும் இதில் இல்லை, முடிவின்மையின் மிகத்தெளிவான உருவாக எந்த ஒரு வியூகத்திலும் அடங்காது எல்லா இடங்களிலும் நீக்கமற வியாபித்து நின்று தன் ஆளுமையை உணர்த்திக்கொண்டேயிருக்கிறது கற்றுக்கொள்வதற்கான விழைதல்.


காலை வேளையில் பளீரெனத்துலங்கும் வெள்ளை புள்ளிகளில் துவங்கி முடியும் கோலத்தில் துவங்கி, சமயலறையில் ஏதோ ஒரு சுவையில் ஒளிந்து கொள்கிறது. புதியதென எதையொ வட்டிலில் இட்டு உண்ணக்காத்திருக்கும் மகன்களுக்குத்தரும் வேளையில் ஓங்கி நிற்கிறது, இன்றென்ன உடையென்று எடுத்து காதில் தோடும் கூடச்சேர்ந்த வர்ணங்களில் வளைகளும் இட்டு நறுவி உடுத்தி உதட்டுச்சாயம் இட்டு நெற்றியில் திலகமிடும் வேளயில் கேள்வியாய் நின்று இதை மாற்றி இட்டால் எவ்வாறு இருக்குமென புதியதொரு முயற்சியில் தலை நீட்டிப்பார்க்கிறது.


எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அலைபேசியின் பேச்சினூடே அன்றைய வேலையின் ஆரம்பத்தில் காலூன்றி நிற்கிறது கற்றுக்கொண்டே ஆக வேண்டிய பல ஆகம விதிகள், வீழ்ந்தெழுந்தும், சில சமயம் வீழ்த்தவும் வேண்டியிருக்கும் இந்த உலகமயமாக்கலுக்குள்ளான உலகில் இதுவன்றி தப்பித்தல் இல்லை என்ற முடிவின் விளிம்பில் நம்மை சிறை வைத்துவிடுகிறது.


தாளமும் ராகமும் லயமும் கண்மூடி கிறங்க வைக்கும் குரலும் அதிகம் அறிந்து கொள்ளாத உலகின் வாயில்களை திறந்து வைத்து பாடச்சொல்கிறது, இசையின் வால்பிடித்து மனதை ஆடச்செய்கிறது. வாசிப்பின் வாசனைகளை உணர்த்தும் சஞ்சிகைகள் ஒவ்வொரு நொடியிலும் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்கள் நமக்கு காணக்கிடைக்காத ஒர் பேருலகின் இருப்பை உணரச்செய்கிறது அடுத்தது என்னவெண்று புத்தகங்களை தேடச்சொல்கிறது, பகிர்ந்துகொள்வதற்கென தோழமைகளை உருவாக்கிக்கொள்ளச்செய்கிறது.

உறவுகள் அவரவர் உலகங்களை பகிர்ந்து கொள்ளும் வேளையில் மாற்றுலகில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் நாம் கற்றுக்கொள்வதற்கான வரிசைகளில் கற்களை நட்டுக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.


இத்தனையும் தாண்டி வந்து அன்றைய நாளின் முடிவில் கண்மூடி கணக்கெடுத்தால் ஒவ்வொரு நொடியிலும் காத்திருந்த நமக்கான பாடங்களை வரிசைப்படுத்தக்கூட முடிகிறது ஆனால் வடித்து வைப்பதற்கான வார்த்தைகளின்றி எத்தனை சொல்லியும் மாளாது இன்னும் இன்னும் என என்னுள் தாகித்துக்கொல்கிறது கற்றுக்கொள்வதற்கான விழைதல்.

18 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தொடர்ந்து எழுதுங்கள்!

முன்பு போல் தொடர்ந்து எழுதுவதில்லையே ஏன்?

உங்கள் கவிதைகளை பதிவிடுங்கள்!

சென்ஷி said...

நட்சத்திர வாழ்த்துகள் கிருத்திகா.. :)

கே.என்.சிவராமன் said...

நட்சத்திர வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆடுமாடு said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

முதன் முறையாக உங்கள் வலைப்பூ வருகிறேன் என்றே நினைக்கிறேன்.

நட்சத்திர வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

அருமையான எழுத்து nadai , மிக தாமதாகதான் உங்கள் வலைப்பக்கம் பற்றி அறிந்தமைக்கு வருந்துகிறேன்.

உங்களின் படைப்புகளை வாசிக்க ஆர்வமாய் காத்து இருக்கும் வாசகன்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் கிருத்திகா. நட்சத்திர வாரம் மூலம் உங்களை இன்னும் அறிவதில் மகிழ்ச்சி.
கற்றுக் கொள்வதை நிறுத்திவிட்டால் நம் இயக்கமே நின்றுவிடும்.
நல்ல பதிவு.

செ.சரவணக்குமார் said...

நட்சத்திர வாழ்த்துகள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நாள் கழிச்சு ரீடரில் உங்கள் இடுகையைப் பார்த்தேன். தமிழ்மணத்தைத் திறந்தால், ஓஹ்.. நீங்கதான் நட்சட்திரமா...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

VELU.G said...

கவிதை நடையிலான எழுத்துக்கள் மிகவும் அருமை

தொடருங்கள் வாழ்த்துக்கள்

ஜீவி said...

பெயரிலேயே நட்சத்திரமும், அதன் இயல்பான பிரதிபலிப்பு எழுத்திலும் உண்டெனினும் கூடுதல் ஜொலிப்பிற்கு வாழ்த்துக்கள், கிருத்திகா!

அன்புடன் நான் said...

நல்ல பகிர்வு .... வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

சிதம்பர நினைவுகளுக்கு பிறகு எதையும்காணவில்லை என்று நினைத்திருந்தேன்..
முடிந்த வரைக்கும் அதிகமாக பகிரலாமே கிருத்திகா, இந்த வாரம்.

Unknown said...

//வீழ்ந்தெழுந்தும், சில சமயம் வீழ்த்தவும் வேண்டியிருக்கும் இந்த உலகமயமாக்கலுக்குள்ளான உலகில் இதுவன்றி தப்பித்தல் இல்லை என்ற முடிவின் விளிம்பில் நம்மை சிறை வைத்துவிடுகிறது.//

மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள்

☼ வெயிலான் said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்!!!!

குலசேகரன் said...

அட ஆத்தூரா? நம்மூருக்குப்பக்கலில்.

‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் ...”

என்று சொன்ன இவர் போட்ட வெத்தலை உங்க ஊர் வெத்தலைதாங்க. ஆத்தூர் வெத்தலை. எழுதிய்வர் ஆழ்வார் திருநகரிக்காரர்.(நம்மாழ்வார்)

பருகும் நீர் - உங்காத்து நீர்தான். (தாமிரபரணி நீர்)

சின்ன ஊரிலே பிறந்து வளர்ந்து பெரிய ஊரிலே வாழும் நீங்கள் மென்மேலும்

வாழ்க..வளர்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ்மணநட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதவும் :)