Monday, June 28, 2010

முகமூடிக்கவிதைகள் - 12


கவிதை யெழுதவென தனியான
நேரமென்றெதுவும் இல்லாது போனது
நீ என்னோடுடனான நாட்களில்

பேனாவின் மசிகளில்
எப்போதும் ஒளிந்துகொண்டேயிருந்தது
கவிதைக்கான வரிகள்
என்னுள் ஒளிர்ந்துகொண்டிருக்கும்
உணர்வின் வாசல்களில்
தோரணமாடிக்கொண்டிருந்தது
தமிழின் சில வரிகள்

முகமூடிகளுக்குப்புறம்பான
இவ்வுலகில்
இதற்கென பெயரெதுவும் இடாது போனாலும்
இட்ட பல பெயர்களில்
பொருந்திக்கொண்ட உன் வடிவங்களுக்கு
நாங்கள்
இரசனை, ஆர்வம், உறவு, உணர்வு, காதலென
அடையாளமளித்துக்கொண்டோம்.

சிறு பூவின் வாசத்தில்
பனியின் ஸ்பரிசத்தில்
நேசத்தின் பிணைப்பில்
அழகின் ஆக்ரமிப்பில்
நரம்புகளில் வழிந்தோடும்
இசையின் லயத்தில்
என்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
மொழியின் கரங்களுக்குள்
நான் எனைப்புதைத்து கொண்டேயிருக்கிறேன்

ஓசையின்றி ஒளிரும் நிலவின்
குளுமையைப்போல்
எனை நிரப்பும்
உன் நினைவுகளுக்கும்
நானிடும் கடிவாளமென
என் முகமூடியின் நிறம்மட்டும்
மாறிக்கொண்டேயிருக்கிறது.





7 comments:

சென்ஷி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க.

அன்புடன் அருணா said...

நல்லாயிருக்கு கிருத்திகா!

ராம்ஜி_யாஹூ said...

கவிதை அருமை.

நான் இப்போதுதான் உங்களை பற்றிய அறிமுகம் படித்தேன், நெல்லை/ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள ஆத்தூர் என்று.
நான் முதலில் நீங்கள் சலம் அஆதூர் என்று நினைத்து இருந்தேன்.

ஆத்தூரில் பழைய கிராமம் , கணபதி ராமன் (குமார், ராசு, ரமணி) , ராஜாராமன் வீடு வரிசையில் கடைசி வீடு என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.

KABEER ANBAN said...

நட்சத்திர வாழ்த்துகள் கிருத்திகா. தங்கள் இலக்கியப் பணி தொடரட்டும்

ஜீவி said...

//பேனாவின் மசிகளில்
எப்போதும் ஒளிந்துகொண்டேயிருந்தது
கவிதைக்கான வரிகள்
என்னுள் ஒளிர்ந்துகொண்டிருக்கும்
உணர்வின் வாசல்களில்
தோரணமாடிக்கொண்டிருந்தது
தமிழின் சில வரிகள்.//

-- Claps, கிருத்திகா!.. இந்தக் கண்ணியில் 'தோரணமாடிக் கொண்டிருந்தது' என்கிற வரி, என்னுள் நிழல் படமாய் விரிந்து அந்தக் காட்சியையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டது!

முதலில் ஒளிரும் அந்த உணர்வின் வாசல்களில் தோரணமாடிக் கொண்டிருக்கிற தமிழின் வரிகளை ஓர்ந்து ஒன்று சேர்த்து, கவிதைக்கான வரிகளாய் சமைக்க வேண்டும். சமைத்ததைப் பெயர்த்து பேனாவின் மசியின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
வேடிக்கையாய் இருக்கிறது!
இந்தக் கவிஞர்கள் தாம், வார்த்தைகளில் இந்திரஜால வித்தையல்லவா நடத்துகிறார்கள்!
அழகான அருமை!

Muruganandan M.K. said...

"சன்னலை திறந்து வை காற்று வரட்டும் ..."
என்று வாழ்வில் நம்பிக்கை கொள்ளும் இவ்வார நட்சத்திரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை.. ரொம்ப மனசுக்கு பிடித்திருக்கிறது.