Tuesday, June 29, 2010

அடையாளங்களைத்தொலைத்தவர்கள் - பெயர்களிலும்


அடையாளங்களுக்கென உருவான பெயர்களுக்கென்றதோர் அடையாளங்கள் உண்டென்பெதில் ஒத்த கருத்துடையவர்கள் பலருண்டு.

ஒலி கொண்டுணர்ந்து வாழ்வை கடந்த பொழுதுகளில் நம் ஆதி குடிகளுக்கென பெயர்களெதுவும் இருந்திருக்குமா என்பது சந்தேகம தான்.
நிலம் விட்டு குலம் விட்டு வாழ்வின் வெம்மையை உணர்ந்தோ இல்லை நாமதனை பரிணாமமென்றோ அழைத்த பொழுதுகளில் தான் அவரவருக்கான பெயர்கள் தோன்றியிருக்க முடியுமல்லவா அது கூட ஒரு குடியின் பெயராகவோ, நிலத்தின் பெயராகவோ அல்லது அவரறிந்த பொருட்களின் பெயராகவோதான் இருந்திருக்க முடியும்.

பின்வந்த நாட்களில் பெயர் என்பது அவர் பிறந்த நிலம் குலம் சார்ந்தோ சிலசமயம் கொள்கை சார்ந்தோ இருப்பது என்றாயிற்று
என் பள்ளிக்காலங்களில் எங்கள் தமிழாசிரியர் குடும்பப்பெயர்கள் எல்லாமே தேசப்பற்று மிக்க பெயர்களாயிருக்கும் (சுதந்திர தேவி, விடுதலை, குருநாதன்....) காரணம் கேட்ட பொழுது தந்தையார் விடுதலைப்போராட்ட காலகட்டங்களில் மிகவும் தீவிரமாக போராட்டாங்களில் ஈடுபட்ட காரணத்தினால் நாடு சுதந்திரம் அடைந்த ஆனந்தில் அங்கணம் பெயர்சூட்டினார் என்று சொல்வதுண்டு.

பிறகு வந்த காலங்களில் மிக அழகான தமிழ்பெயர்கள் பழக்கத்தில் வந்தது அதில் என்னை மிகவும் கவர்ந்த பெயர் இளம்பிறை, இதை ஒரு பெயராக வைக்கத்தோன்றுவதற்குண்டான காரணம் என்னாவாயிருக்கும் என்று இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளைகளில் கூட கேள்வி எழுகிறது. அதற்கான பதில் வழக்கம் போல பலவந்து விலகிச்செல்லும் போதும் அந்தப்பெயரில் இருக்கும் நளினமும் கம்பீரமும் கலந்த கலவை என்னை வசீகரிக்கத்தான் செய்கிறது.

பின் சில பெயர்கள் மிகவும் பொதுவாக செல்லப்பிராணிகளுக்கென வைக்கத்தான் என்பது போலவும் உண்டாயிற்று. இவையெல்லாவற்றையும் தாண்டி
இப்பொழுதுள்ள பெயர்களுக்கென தனித்த அடையாளமோ,கொள்கை சார்ந்த விழிப்புணர்வோ, நிலம், குலம், குடும்பம் சார்ந்த பின்புலமோ இருப்பதாக தெரியவில்லை.
மிக எளிதாக சினிம கலைஞர்கள் பெயர் பழக்கத்தில் வந்து விட்டது. அதையும் தாண்டி வடமாநிலப்பெயர்கள் பெரிய அளவில் மக்களின் மனதை ஆக்கிரமிக்கத்துவங்கி விட்டது. அதுதான் நாகரீகம் என்பது பொலவும் ஒரு உணர்வும் தோன்றிவிட்டது.

பொதுவில் அலுவலகத்தில் புழங்கு மொழி என்பது பெரும்பாலும் ஆங்கிலமாய் போனதால் பெயர்களென்பது தன் அடையாளங்களை முற்றிலும் அழித்துக்கொண்டது.

இப்பொழுதெல்லாம் பெயர்கள் வெறும் உடல்களின் அடையாளமாய் தானுள்ளது பின் நம் பண்டைய நாகரீகத்தின், தொலைத்துக்கொண்டிருக்கும் மானுடத்தின், அடையாளம் என்பது என்னவாயிருக்கும்?

9 comments:

சுரேகா.. said...

மிக அருமையான சிந்தை தூண்டும் பதிவு!

நட்சத்திர வாழ்த்துக்கள்!

சகாதேவன் said...

குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி பெயரை வைத்துவிட்டு, இஷ்டப்பட்ட பெயர் சொல்லிக் கூப்பிடாதீர்கள் என்று சொல்லி என் மாமா பேத்திகளுக்கு சுபத்ரா, வாசுகி என்று பெயரிட்டார். எத்தனை அழகான பெயர்கள்?
சகாதேவன்

யாதவன் said...

நல்ல படைப்பு

துளசி கோபால் said...

நட்சத்திரத்துக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

புதுகைத் தென்றல் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு. ஆனால் நீங்கள் ஒரு முக்கியமான கருத்தை விட்டு விட்டீர்கள்.

ஆரம்ப காலத்தில் (இப்போதும் கூட) இறைவனை சார்ந்த பெயர்கள் உள்ளது நிறைய. ராமன், சிவன், முகமத், ஜோசப், யாகூப், மேரி , லச்சுமி, ஐஸ்வர்யா என்று.
ஒருவேளை படைத்த இறைவனுக்கு நன்றி என்ற அடிப்படையில் வந்திருக்கலாம்.

அதே போல் தானே வாழ்வதற்கு உதவியாக இருக்கும் நிலா , சூரியன் சார்ந்த பெயர்கள்- இளம் பிறை, இன்ப நிலவன், உதய சூரியன், சூரிய நைனார், மல்லிகை, தாமரை..

அந்த நன்றி நவிலல் அடிப்படை தான் பின்னாளில் தனக்கு பிடித்த தலைவர், தனக்கு செல்வமும், பதவியும், பேறும் வாங்கி தந்த தலைவர்கள் பெயர் வரக் காரணம் என நினைக்கிறேன்.
உதாரணம்= சங்கரன்கோயில் கருப்பசாமி சட்ட மன்ற உறுப்பினர் - அவர் சொல்லுவார் ஒரு சாதாரண விவசாயியை ச ம உ, மந்திரி என்று அழகு பார்த்தவர் ஜெயலலிதா- எனவேதான் அவர் குடும்பத்தில் சிலரது பெயர்கள்- ஜெயலிதா, சந்தியா.

தூத்துக்குடி ஆறுமுக நன்யினார் பெண் பெயர் கூட ஜெயலலிதா தானே.

கலைஞர் சொல்வார் - ஸ்டாலினது பேச்சுக்களும், அழகிரியின் பாடல்களும் தான் எனக்கு இளம் வயதில் மேடைபெச்சில் கைதட்டல் கிடைக்க உதவின .

கருணாநிதி, அண்ணாதுரை, ஸ்டாலின், அழகிரி போன்ற பெயர்கள் கூட இந்த மாதிரி நன்றி நவிலல் முறையில் அமைந்த பெயர்கள தானே.

தமிழ் மதுரம் said...

நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் சகோதரி!

பெயர் வைப்பதில் இத்தனை விடயங்களா? கடந்த வருடம் நான் இது தொடர்பாக ஒரு குரல் பதிவு போட்டிருந்தேன். நேரமிருந்தால் கேட்டுப் பாருங்கோ.

http://melbkamal.blogspot.com/2008/12/blog-post_16.html

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்ல பதிவு.

ஜீவா (Jeeva Venkataraman) said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் கிருத்திகா மேடம்!

பழையது கழிதலும் புதியது புகுதலும் இயல்பு தானே. பழையது எல்லாமே போற்றத்தக்கதுமல்ல!

புதியது எல்லாமே இகழத் தக்கதுமல்ல!
காலத்தின் ஓட்டத்தில் அடித்துச் செல்லாமல், தங்கிப்போகவும், அவை விழுமியங்களாக ஒட்டிக்கொள்ளவும் திறன் கொண்டவற்றால் தான் அது சாத்தியமாகிறது. சொல்லப்போனால், அத்திறனுக்காக அவை பாரட்டப்பட வேண்டியதே.

அடையாளம் என்று நாம் சொல்லிக் கொள்வது - நமது அசை போடலில் விளைவே. நாளைய, எதிர்காலத்தை யோசித்துப் பார்த்தால் - அது நாம் அடைய வேண்டிய அடையாளத்தை உணர்த்தும். அது நல்ல அடையாளம் என்று நம் மனம் விருப்பப் படும்போது, அதை அடைய முனைவதில் தவறில்லை. அதே சமயத்தில் பொய்யான புகட்டுக்காகவும், நாகரீக மோகத்தினாலும், தற்காலிகப் பயன்களுக்காவும், ஏற்படும் மாற்றங்கள் கண்டிக்கத் தக்கவையே. நீங்கள் இவற்றில் இரண்டாவது சாரியினைச் சாடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சிலர் மாற்றத்திற்குபின் 'அக்கரைப் பச்சையில்லை' என உணர்கிறார்கள். சிலருக்கோ அவ்வளவு சீக்கிரம் அவ்வுணர்வு வருவதில்லை, என்ன செய்வது!

//இப்பொழுதுள்ள பெயர்களுக்கென தனித்த அடையாளமோ,கொள்கை சார்ந்த விழிப்புணர்வோ, நிலம், குலம், குடும்பம் சார்ந்த பின்புலமோ இருப்பதாக தெரியவில்லை.//
ஒருவரின் பெயரைக் கேட்டவுடனேயே, எனது தந்தை - அவர் இந்த மாவட்டத்துக்காரர் என்று சொல்லி விடுவார். நீங்கள் சொல்லுவதுபோல, அவ்வடையாளம் மறைந்து கொண்டுதான் இருக்கிறது. சிலருக்கு அவ்வடையாளத்தால் நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். வேறு சிலரை அவ்வடையாளமே குறிகிய வட்டத்திற்குள் சிக்கவும் வைத்திருக்கலாம்!