Monday, October 13, 2008

இது ஒரு மழைக்காலம்

எல்லா மழைக்காலங்களும் தனக்குள் வசீகரத்தை புதைத்துக் கொண்டிருப்பவைதான். எல்லா வயதினருக்கும் தரக்கூடிய ஆச்சர்யத்தை அதிசயத்தை மட்டுமின்றி ஆயசத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது மழைக்காலம்.

பால்ய வயதுகளின் மழை நேரங்களில் வாசல் திண்ணைகளை ஒட்டிய கதவருகில் நின்றுகொண்டு கம்பி அழிகளின் வழியே வெளியே வைர ஊசியாய் தரையிரங்கிக் கொண்டிருக்கும் மழையை வேடிக்கை பார்ப்பதுண்டு. மட்டப்பா வீடுகளின் திண்ணை விளிம்புகளில் முத்து முத்தாய் தெறித்தோடும் மழை, சாய்ந்த மலபார் ஓடுவேய்ந்த வீடுகளின் திண்ணைகளின் கம்பி அழிகளுக்கு இணையாக வெள்ளிக் கம்பிகள் போன்றே தரையிரங்கும். தெருவின் ஏதோ ஓரங்களில் இருந்து கொணரும் வண்டல் மண் படுகைகள் ஒரு சிறிய நீரோடைகளை சிருஷ்டிக்கும். அந்தப்படுகைகளின் முடிவில் தெரியும் சரளைக்கற்கள் என்றோ இந்த தெருவில் போட்டிருந்த செம்மண் பாதையை நினைவுற்த்தும்.

ஓடிவரும் சிற்றோடையில் விடுவதற்கென கப்பலோ, கத்திக்கப்பலோ செய்து தர தனையன் இல்லாதபோதும், தந்தை செய்து தரும் கப்பல்களின் அளவும் வசீகரமும் மற்றெந்த தோழர்களின் கப்பலை விட விஸ்தீரணமாயிருக்கும். கரைதட்டும் கப்பலை எடுத்துவிடும் நோக்கில் சிறுமழையை தலையில் வாங்கிவந்த நாட்களில் மழை இன்னும் நெருக்கமாய் உடனமர்ந்து கொள்ளும். தெருவின் கடைசியில் வழிந்தோடும் சிற்றோடை அடுத்திருக்கும் வெற்றிலைக்கொடிக்காலுக்கோ இல்லை தென்னந்தோப்பிற்கோ சென்று விழும். தெருவின் மற்றொரு கோடியில் இருக்கும் பெருங்குளத்துள் வந்து விழும் மழைத்தண்ணீரின் உபயத்தில் குளம் நிறந்து தளும்பும் செங்கழுநீர் நிறத்தில். மூழ்கியோ, வெளித்தெரிந்தோ இருக்கும் படிகள் மட்டுமே சொல்லும் மழையின் அளவெதுன்று. எப்போது பார்த்தாலும் சலிக்காதா அந்தக்குளக்கரையில் தான் எங்கள் வீடுவிட்ட பாதங்கள் அடுத்து நிற்கும். யார் முதலில் குளம் பார்த்தனர் என்பதில் கிடைத்த சந்தோஷத்தை இப்போதும் ஏதேதோ வழிகளில் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்.

கல்யாணம் வரை உடன் வந்த கிராமத்து மழையின் முகம் மாறித்தான் போனது பட்டனத்தில். அடுக்குமாடி குடியிருப்புகளின் அடுத்ததடுத்த மதில்சுவர்கள் வெளிச்சத்தை மட்டுமல்ல மழையையும் கண்காணாமல் மறைக்கத்தான் செய்தது. வெளிச்சத்தை ஈடுகட்டும் வெண்குழல் விளக்குகள் போல் மழைக்கேதும் இல்லாது போனதில் யாருக்கும் வருத்தமில்லை. கான்கிரீட் சுவர்களுக்குப்பின்னிருந்து மழையின் சப்தத்தை கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. அப்படியும் பிடிவாதமாய் வாயிற்கதவு திறந்து மழைபார்க்க வந்தமர்ந்தால் திறந்திருக்கும் கதவுகளினூடே சுதந்திரமாய் நுழைந்து எங்கும் வியாபித்துவிடும் மழையின் பதியன்கள். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மழைக்கும் உண்டான நிரந்தர விரோதங்களில் மனம் வெதும்பித்தான் போனது. ஈர நமுப்போடு எப்போதும் இருக்கும் துணிகள் மட்டுமே சொல்லிக்கொள்ளத்துவங்கியது மழை காலத்தை.

மாடியும் கீழுமாய் சற்றே விரிந்திருக்கும் இந்த தனித்த வீடெனுக்கு என் கிராமத்து மழையின் நினைப்பை அதிகம் கொண்டுவருகிறது. சாய்ந்திருக்கும் மலபார் ஓடுகள் வழியே மழை இங்கு வெள்ளிக்கம்பியாய் தரை இறங்குகிறது. கீழ் வீட்டின் மட்டப்பாவில் இருந்து முத்தாய் தெறிக்கிறது ம்ழை. வீட்டின் எப்புறமும் தெறிகிறது சிறு தூரலும். தணுத்த தரைகள் கால்களின் கீழ் குளீரூட்டி கிசுகிசுக்கிறது இன்று ஒரு மழை நாள் என்று. மழைநாளின் துணி உணர்த்த தனித்த கொடி ஒன்று மேல்மாடியின் மறைவில் கட்டி அதன் முணுமுணுத்த புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாயிற்று. மழை மீண்டும் என்னுள் நெருக்காமாய் அமர்ந்து என் பால்ய கதைகளை மீ்ட்டெடுக்கிறது.

இப்போது கப்பலோ கத்திக்கப்பலோ செய்து தந்தாலும் ஓடிவரும் நீரோடையில் விட்டு விளையாட ஆர்வமில்லை பிள்ளைகளுக்கு அவர்கள் பட்டணத்து மழையை பழகிக்கொண்டார்கள்। நான் இப்போதுதான் சொல்ல ஆரம்பிக்கிறேன் என் கிராமத்து மழையை இருவரும் அப்போதுதான் மழையை கண்ணுயர்த்தி காண்கின்றனர். மழை ஒரு கனிந்த காதலி யாரையும் விட்டு வைக்க மாட்டாள் தானே...



9 comments:

கே.என்.சிவராமன் said...

மழை சகி
மழை ரட்சகி
மழை ராட்சஷி

என்ற தாமிராவின் (இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'இரட்டைச்சுழி' என்ற படத்தை இயக்கப்போகிறார்) கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது...

coolzkarthi said...

"கல்யாணம் வரை உடன் வந்த கிராமத்து மழையின் முகம் மாறித்தான் போனது பட்டனத்தில். அடுக்குமாடி குடியிருப்புகளின் அடுத்ததடுத்த மதில்சுவர்கள் வெளிச்சத்தை மட்டுமல்ல மழையையும் கண்காணாமல் மறைக்கத்தான் செய்தது. வெளிச்சத்தை ஈடுகட்டும் வெண்குழல் விளக்குகள் போல் மழைக்கேதும் இல்லாது போனதில் யாருக்கும் வருத்தமில்லை. கான்கிரீட் சுவர்களுக்குப்பின்னிருந்து மழையின் சப்தத்தை கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது"

அருமையான வரிகள்...எனக்கும் அந்த ஏக்கம் உண்டு....

கிருத்திகா ஸ்ரீதர் said...

உண்மைதான் மழை எல்லாமுமாய், எல்லாருமாய் நம்மை ஆக்கிரமிப்பவள் தான்.வருகைக்கு நன்றி :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி கார்த்தி...

ஜீவி said...

கட்டுரை பூரா அங்கங்கே விரவித் தெளித்த நட்சத்திர பூக்களென மினுமினுக்கிப் பளிச்சிடும் சொல்லாட்சிகள்.. மழை! ஓ!.. அதைப்பற்றி சொல்ல நிறையத் தான் இருக்கிறது.. அது 'தொடித்தலை விழுத்தண்டினார்' நினைப்பு போல,
கடந்த கால பசுமைநிறைந்த நினைவுகள்.. அடை மழையின் 'ஜோ'வென்ற ஓசை, உள்ளத்தில் பாடிப்பழகிய கீதம்!..
இப்பொழுதெல்லாம், மழை என்றாலே
தெருக்களின் இருபக்கமும் குட்டையாய்த் தேங்கும் நீரும், சேறையும் சகதியையும் வாரி வீசித் தெறிந்து விட்டுப் போகும் வாகனங்களும் தாம் நினைவுக்கு வந்து சலிப்பு மேலோங்குகிறது..
நல்ல கட்டுரை; நல்ல நினைவுகள்.. வாழ்த்துக்கள்..

கபீரன்பன் said...

// மூழ்கியோ, வெளித்தெரிந்தோ இருக்கும் படிகள் மட்டுமே சொல்லும் மழையின் அளவெதுன்று. எப்போது பார்த்தாலும் சலிக்காதா அந்தக்குளக்கரையில் தான் எங்கள் வீடுவிட்ட பாதங்கள் அடுத்து நிற்கும். யார் முதலில் குளம் பார்த்தனர் என்பதில் கிடைத்த சந்தோஷத்தை இப்போதும் ஏதேதோ வழிகளில் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்.//

ஹூம் (ஏக்கப் பெருமூச்சு).” இன்னும் ரெண்டு படிதாண்டா பாக்கி” ”நாளைக்கும் மழை வந்தா அவ்வளுவுதான் வெள்ளம் வந்திடும்” இப்படிப்பட்ட பால்ய வயது உரையாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

Kavinaya said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. காதோடு கிசுகிசுப்பா பேசும் மழை போலவே... ரகசியத்தை பகிர்ந்து கொள்ளும் தோழியின் தொனியுடன்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க கபீரன்பர். சில சிறுவயது சந்தோஷங்களுக்கு அளவுகோல் என்பதே இல்லை.. எப்போது நினைத்தாலும் சப்புக்கொட்டவைக்கும் தேனின் இனிப்பு போல....

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி கவிநாயா தோழி என்றொதொரு த்வனி ஒலித்திருக்கிறது என்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அன்பை பகிர்ந்து கொள்வதைத்தவிர நாம் வேறெதெற்கு இருக்கிறோம்...