Tuesday, October 21, 2008

அப்பாவின் நினைவும் - கைச்சோறும்


அப்பாவைப்பற்றி பிறிதொருநாளில் எழுத வேண்டுமென்றிருந்த என் எண்ணத்தை இன்றே என மாற்றியமைத்தது நேற்றய நாள்.

கவளம் கவளாமாய் சுடுசோறு உருட்டித்தந்து கைச்சோறு நான் ஊதி ஊதி உண்ணக்கண்டு மறு கை தருமுன்னே தான் ஊதி தந்தவர் அவர்.
கூடவே அம்மா " அப்படியே வாயிலும் ஊட்டி விடவேண்டியதுதானே என்றால் " "ஊட்டினா ஒரு வாய் தான் இருக்கும் இதில் கூட ரெண்டு வாயிருக்கும் குழந்தை ரெண்டு கை வாங்கிண்டா போறும்" என்று சொல்வார்.

சிறு பிராயத்தின் விடுமுறை நாட்களில் குளித்து விட்டு வந்தால் மட்டுமே காலை உணவு கிட்டும் என்பது என் தாயாரின் கண்டிப்பான கட்டளை. விடுமுறைநாட்களுக்கேயுண்டான பெருந்தூக்கம், சோம்பல், எண்ணைக்குளியல், வீட்டுசுத்தீகரிப்பு, வாய்க்காலில் ஓடும் புதுத்தண்ணீர், இத்தனையும் இல்லையென்றால் கரைதொட்டு ஓடும் அகலமான தாமிரபரணி கூடவே கும்மியடிக்க தோழிகள் என்று எத்தனையோ காரணிகள் எங்கள் காலை உணவிற்கான நேரத்தை தள்ளிப்போடும். ஆனாலும், சுடச்சுட இறக்கிவைக்கும் சமையல் மணம் பசியின் நரம்புகளை மீட்டத்தான் செய்யும். இருந்தும் அம்மாவின் கண்டிப்பை மீற முடியாது.

இதற்கிடையில் இதற்கான மாற்றுவழிதான் அப்பா தரும் கைச்சோறு. அவர் சாப்பிட உட்கார்ந்த பின் தட்டிலிருக்கும் சுடச்சுட சாப்பாட்டில் பெரும் கையாய் இரண்டோ மூன்று கைச்சோறு என் உண்டி நிறைக்கும். எனக்கான உணவு நேரம் வரும்வரை என் பசி தாங்கி நிற்கும் அவர் கொடுக்கும் அந்த கைச்சோறு.

திருப்பி நான் அவர் கையில் கொடுத்திராத கைச்சோற்றை என்னால் அவருக்கு வைக்கவே நேர்ந்தது. ஒரு பிடி சோறும் நெய்யும், பருப்பும் இட்டு மதில் மேல் வைத்துவிட்டு பட்ஷி ரூபத்தில் வந்து உண்ணும் தந்தைக்காக கடந்த சில வருடங்களாக காத்து நிற்கும் தருணங்களின் தவிப்பு எப்போதும் வாய்விட்டு பகிர்ந்து கொள்ள முடியாத பெரும் வலியைக்கொண்டிருக்கும். காலம் மாற்றாத அந்த உணர்வுகளை இன்னும் ஈரமாகவே வைத்திருப்பதில் எனக்கெப்போதும் அலுப்பில்லை.

அவருக்குப்பிடிக்குமென ஏதேதோ சமைத்துவிட்டு அவராக எண்ணி ஏதோ இருவருக்கு உணவிட்டு நிமிர்ந்தாலும் தாளமுடியாத உணர்வின் பெருக்கில் என் அன்றைய உணவு இறங்க மறுக்கிறது.

எனக்கும் ஒரு நாள் பிடிசோறு வைக்க நேரும் ஆனால் என் அப்பாவைப்போல் நல்லதொரு அன்னையாய் என் தாக்கத்தை விட்டுச்சென்றிருப்பேனா?????

இந்தக்கேள்வியையே என்னுள் விதைத்துச்சென்றது இந்த வருடத்திய என் தந்தையின் நினைவு நாள்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

உருக்கம்.

narsim said...

//திருப்பி நான் அவர் கையில் கொடுத்திராத கைச்சோற்றை என்னால் அவருக்கு வைக்கவே நேர்ந்தது//

வரிகள்.. வலிகள்..

நர்சிம்

ஜீவி said...

சில நினைவுகள் எக்காலத்தும் மறக்கக் கூடாதவை. மறந்தின், பிறவி எடுத்ததே வீண். பெற்றெடுத்த தாய்-தந்தையர் தொடர்பான நினைவுகள் அப்படிப்பட்டவை. அவற்றை மறக்கவும் கூடுமோ?
பல சமயங்களில் நமது தவறான சில நடவடிக்கைகளைக் கூட திருத்தும் அளவுக்கு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை
பெருமிதம் தரும்; அதுவே அவர்களின் சிறப்பு.

Aruna said...

//ஒரு பிடி சோறும் நெய்யும், பருப்பும் இட்டு மதில் மேல் வைத்துவிட்டு பட்ஷி ரூபத்தில் வந்து உண்ணும் தந்தைக்காக கடந்த சில வருடங்களாக காத்து நிற்கும் தருணங்களின் தவிப்பு எப்போதும் வாய்விட்டு பகிர்ந்து கொள்ள முடியாத பெரும் வலியைக்கொண்டிருக்கும். //

தந்தையின் ஒவ்வொரு நினைவு நாளும்..இப்படியே வலி கொடுக்கிறது,
அன்புடன் அருணா

த.அகிலன் said...

மனதைப் பிசைந்தது..

Saravana Kumar MSK said...

மனதைப் பிசைந்தது..

பொடியன்-|-SanJai said...

உணர்வுப் பூர்வமான பதிவு..

//கவளம் கவளாமாய் சுடுசோறு உருட்டித்தந்து கைச்சோறு நான் ஊதி ஊதி உண்ணக்கண்டு மறு கை தருமுன்னே தான் ஊதி தந்தவர் அவர்.//

அற்புதம்.. அப்பாவின் பாசத்தை இதைவிட அழகா சொல்லமுடியாது.

கிருத்திகா said...

நன்றி ராமலஷ்மி, நர்சிம். சில உணர்வுகளை வரிகளாக்கினாலும் கூட வலிமிகுந்ததாய்த்தான் உள்ளது

கிருத்திகா said...

உண்மைதான் ஜீவி மறக்க முடியாத உறவுகளில் முதலிடம் அவர்களுக்குத்தானே...

கிருத்திகா said...

ஆம் அருணா என்ன செய்ய கழியும் காலம்தொட்டு கடந்து வரவேண்டிய உணர்வுகள் இது.

நன்றி அகிலன், சரவணகுமார். பகிர்ந்து கொள்ளுதல் சில சமயம் மனதை இலகுவாக்க உதவுகிறது.

கிருத்திகா said...

நன்றி சஞ்சய் சொல்ல சொல்ல முடியாத தொடர்கதை அது...

govindaswami said...

madem ur intrest in art is good.
do u have awerness about eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality.
do u have awerness about male domination supportive psychartist doctors aticles in tamil magazeens. which is oppose to women equality ,democrasy ,and self confidence too.
do u have awernes about tamil cinema,tvserials are occupied and dominated by non tamil womens. they earn ,enjoy in tamil medias.for tamil womens only eve teasing dialougs are supplide by tamil medias.