














துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.
துறந்தார் –
1. இல் வாழ்க்கையை துறந்தார், பிரம்மசர்யத்தை மேற்கொண்டார், 2. சாதிவருண சமய குறிகளை, நெறிகளை துறந்தார்
துவ்வா தவர் – அனுபவிக்காதவர், துய்க்காதார் -
1. இல்வாழ்க்கையில் இருந்தாலும் சிற்றின்பமாக அனுபவிக்காது இல்லற தர்மத்தில் வாழ்பவர்கள். 2. சாதி சமய நெறிகளை மிக முக்கியமாக கருதாதவர், கடை பிடிக்காதவர்
இறந்தார் -
1. இந்த உடலின் இறப்பை எய்தியவர், 2. சாதி சமய நெறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இறந்தாரைப் போல் வாழ்பவர்
இல்வாழ்வான் என்பான் துணை – இந்த இடத்தில் என்பான் எனும் சொல்லே நமக்கு இக்குறளின் நுணுக்கங்களை ஆராய வழி வகுக்கிறது. இல்வாழ்வான் துணை என்று இருந்திருக்கலாம். அனால் இல்வாழ்வான் என்பான் துணை என்று சொல்வது இல்வாழ்கிறான் என்று சொல்பவனே துணை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் யார் – உள்ளே வாழ்பவன் எல்லோருள்ளும் வாழ்பவன் யார் அந்தப் பரம்பொருள் அவனே துணை.
இதை மற்றொரு கோணத்திலும் பொருள் கொள்ளலாம்.
ஒருவர் இந்த மூன்று நிலைகளில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுள் இருக்கும் பரம்பொருளின் நிலை மாறுவதில்லை எனவே எந்த நிலையிலும் முயன்றால் அவனைச் சென்றடைய தடை இல்லை. |
சிறிதே முற்றிய தூறல் காரின் முகப்புக் கண்ணாடியில் துளிகளாய் படிகிறது. வண்டியின் வேகத்தில் உருவாகும் எதிர்காற்றில் கண்ணாடியில் தெறிக்கும் நீர்த்துளி கோடாக கீழிறங்காது விந்தனுவைப் போன்ற இயக்கத்தோடு கண்ணாடியில் மேல் நோக்கி நகர்கிறது.
இதை நகரும் கண்ணாடியில் நீர்துளி பட்டால் அது மேலே ஏறும் என்று பொது விதியாக்க முடியாது. ஏனெனில் இங்கு கண்ணாடியின் பரப்பு, காற்றின் வேகம், காரின் வேகம், தூறலின் அளவு இப்படி பல காரணிகள் இந்நிகழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது.
அது போலவே நம் கண்ணெதிரில் அல்லது அனுபவத்தில் காணும் அநேக விஷயங்களுக்கு தியரி கற்பிக்க முடியாது. அவற்றின் காரணிகள் பொது விதிக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக ஆன்மீக அனுபவங்கள். a+b=c என்று கணிக்க இது கணித பார்மூலாக்கள் இல்லை.
பறவைகளை இனம் கண்டு கொள்ளுங்கள், அதன் குரலை, வடிவத்தை, அழகை முழுமையாய் உள் வாங்கிக் கொள்ளுங்கள்.
சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கலாம், வெண்டக்காய் வதங்கிக் கொண்டிருக்கலாம், கிரைண்டரில் மாவு அரைபட்டுக் கொண்டிருக்கலாம், எங்கிருந்தோ வரும் ஒரு பறவையின் சப்தம் உங்களை ஈர்க்கும் அளவிற்கு ப்றவையை தியானியுங்கள்.
தான் இருக்கும் மரத்தை, கிளை மறைவுகளை, இலை அசைவுகளை உங்களுக்கு உணர்த்தும். அடுத்து எந்த திசையில் பறக்குமென்று உணர்த்தும். நம் விழிப்புணர்வை கூர்மையாக்கும்.
விழிப்புணர்வே தியானம். அதுவே கடவுளின் இருப்பு.
பறவையை தியானியுங்கள்.
ஓஷோ சொல்லவில்லை நான் தான் :)
ஒரு பாதார்த்தத்தை நினைவில் மீட்டெடுக்கும் பொழுது மனம் சுவையில் இருந்து உருவத்துக்கு தாவுகிறதா இல்லை வரிசை மாறுகிறதா???
Ex. அதிரசம் என்று நினைப்பதற்கு அடிப்படை அதன சுவை மனதில் எழுப்பிய வாசனையா இல்லை பெயர், வடிவம், நிறம், தன்மை இவைகளா??? எது முதல் என்பதே கேள்வி??
உள்ளே எழும் சொற்களை வாயுமிழ்ந்து விடுவதொன்றே நாம் செய்யக் கூடியது. கட்டிவைக்கவோ, கட்டமைக்கவோ உரிமையற்றவர்கள் நாம். சொல்லெழாதா போது கூர்ந்து நோக்கலாம் மீண்டும் சொற்கள் எழும் தோறும் உமிழ்ந்து செல்லலாம். அதுவும் கர்மயோகமே. அதற்கப்பால் ஏதுமில்லை .
வெண்முரசில் என் வாசிப்பின் திறவுகோல் மேற் கூறிய வரிகள்.
"இப்புவி தோன்றிய காலத்திலிருந்தே. இரண்டுக்குள்ளும் அனல் நிறைந்திருக்கிறது. அவற்றை ஒன்றை ஒன்று உரசி அனல் எழுப்பச் செய்தது அனலோனின் விழைவு மட்டுமே. என்னை அவன் இங்கே ஆணையிட்டு நிறுத்தியிருக்கிறான். இந்த ஊன், இதை உண்ணும் நான் அனைத்தும் அவன் திட்டங்களின் படி நிகழ்பவை” என்றான். ஆம், இந்தச் சொற்களும் அவ்வாறு எழுபவையே” என்று சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் உரக்க நகைத்து “ஐயமென்ன? அத்தனை சொற்களும் அனலில் எழும் பொறிகள் மட்டுமே. பிறிதொன்றுமல்ல” என்றான்"
- நூல் பதினைந்து – எழுதழல் – 34 - ஜெயமோகன்
விழைவுகளை சென்றடையா மனமும், இலக்கினை கண்டடையா அம்பும் மீண்டும் மீண்டும் எய்யப்படும். இங்கு ஒவ்வொருவரும் அஸ்வத்தாமனே
- வெண்முரசின் தாக்கம்.
உள்ளிருந்து வெளித்தள்ளுகிறோமா??
இல்லை
உள்ளிழுப்பதையே வெளியேற்றுகிறோமா??
இடையில் தங்கும் அணுவுக்கும் குறைவான வெளி
எங்கு சென்று சேர்க்கிறதோ
அதுவே சிவமோ....
அசையாது தன்னுள் வளியை (காற்றை ) வாங்கி தானே வெளியாகும் (அண்டமாகும்) சிவம்...
மீண்டும் மீண்டும் வெளியை வளியாக்கி உள்கொணரும் சக்தியின் நடனமும் தான் ஜீவனோ...
சிவ சக்தி.... சிவசக்தி என முப்பாட்டன் இதைத்தான் கூத்தாடினானோ.....
உறக்கமற்ற இரவின் விழிப்பு விடியலைக் காட்டுகிறதோ.
ஆதியுகத்தின் மரப் பொந்துகளிலிருந்து சிறகடித்துப் பறந்த பறவைகள் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் குளிர்சாதன மின்கருவியின் இடுக்குகளிலிருந்து பறந்து செல்கிறது.
இரண்டுக்குமான வித்யாசத்தை அவை அறிந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு முன் அதனால் உனக்கென்ன பயனென்றும் ஒரு பதில் வர மவுனமாய் காட்சியை வார்த்தையாக்கிக் கொண்டிருக்கிறேன். ஓஷோவை புறக்கணித்தபடி.