Showing posts with label குறள் குறளின்_மறுபக்கம். Show all posts
Showing posts with label குறள் குறளின்_மறுபக்கம். Show all posts

Tuesday, November 7, 2017

குறியெதிர்ப்பை நீர துடைத்து - குறளின் மாற்று முகம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இணையத்தில் கண்ட உரை. கிட்டத்தட்ட எல்ல உரைகளும் இதையொட்டியே அமைகிறது.

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

இந்தக் குறளை ஜெமோவின் குறளினிது உரையின் படி பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அதன் படி நேற்றிலிருந்து இந்த ஒரு குறள் மட்டுமே உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

இக்குறள் அறத்துப்பாலில், இல்லறவியலில், ஈகை எனும் அதிகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. ஜெமோவின் ஆய்வின் கருத்துப் படி இந்த தொகுத்தல்கள் பிற்காலத்தில் நிகழ்ந்தவை. எனவே இதை அறத்துப் பாலில் மட்டும் வைத்துப் பார்க்கலாம்.

வறியார்க்கொன்றை ஈவதே ஈகை - தேவையான ஒருவர்க்கு கொடுப்பது அறம், இதை தேவையுள்ள இடத்தில் ஆற்றும் செயலாகக் கொண்டால் அதுவும் அறம்.

மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து -

மற்றெல்லாம் - மற்ற எல்லா வினைகளும், அதாவது தேவையற்ற அனைத்து செயல்களும்(கர்மங்களும்) , இங்கே ஈகையை மட்டும் எனக் கொள்ளாதிருத்தல் வேண்டும்

குறியெதிர்ப்பை - எனும் சொல்லுக்கு கொடுத்த அளவே மீண்டும் வாங்கும் முறைமை என்ற பொருள் உள்ளது. எனவே நம்முடையை தத்துவப் பார்வையின் படி நாம் செய்யும் எல்லா வினைகளுக்கும் அதே விதமான எதிர்வினை உண்டு. எனவே இதை கர்மாவோடு தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.

நீரது உடைத்து - உன்னுடைய உடமையாகும்.

இப்பொழுது மொத்தமாக பொருள் கொண்டால்.

தேவை இருக்கும் இடத்தில் மட்டும் செயலாற்றுவதே அறம், மற்றெல்லா கர்மங்களும் எதிர்வினையையே தோற்றுவிக்கும்.

இதுக்கு பழந்தமிழ் ஆசான்களெல்லாம் வந்து அடிச்சா தாங்கிக்க வேண்டியதுதான் வேற வழி இல்ல.

ஆனால் அந்த உறையின் தாக்கம் மிக அதிகம் அதைப் பற்றி ஒரு தனித்த பதிவே எழுத வேண்டும்.

குறளின் மாற்று முகம்

கல்யாண வீடுகளில், அல்லது மிகப் பெரும் சமையல் கூடங்களில் இனிப்புக்கு என்று தனித்த மாஸ்டர் உண்டு. பெரும்பாலும் சமையல் செய்பவர்கள் அதைச் செய்வதில்லை. ஸ்வீட் மாஸ்டர், இது போலவே சில தனித்த பதார்த்தங்களுக்கான ஸ்பெஷாலிட்டி கலைஞர்கள் உண்டு. 

மேலும் ஒரு இலக்கிய வாதியைக் கொண்டு விளையாட்டையோ சமையலையோ அதன் நுணுக்கங்களை மைய்யப்படுத்தி எழுத வைத்தால் அவரால் முழுமையாக எழுத முடியாது. விளையாட்டு வல்லுனாரால் இலக்கியமும்.
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.....

அதைப் போலத்தான் பழந்தமிழ் சித்தர் பாடல்களையும் அதற்கான பொழிப்புரைகளையும் வாசிக்கும் பொழுது இவைகள் பெரும்பாலும் தமிழுக்கு தமிழ் மொழி பெயர்ப்புக்களாகவே அணுகப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது. மிக மிக உண்மையான ஆன்மீக தளத்தில் அணுகி பொழிப்புரை செய்திருப்பது ஒரு சிலரே.

அதிலும் இணையத்தமிழின் உபயத்தில் பெரும்பாலான பாடல்கள் மிகவும் தவறாகவே பதம் பிரித்து எழுதப் படுகிறது. வாசிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பதம் பிரிக்கும் அனைவரும் அந்த பாடல்களின் உள்ளார்ந்த அனுபவம் அதனால் முற்றிலும் சிதைந்து போவதை அறிந்து கொள்வதில்லை.

திருக்குறளும் அது போன்றதொரு பெரும் பொக்கிஷம். முழுமையாக அந்த தளத்தில் நின்று பொருள் கண்ட பொழிப்புரையை நான் இன்னமும் காணவில்லை. அது ஒரு சமய நூலல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட காரணத்தினாலேயே ஆன்மீகமாக குறள் அணுகப் படவில்லையோ என்று தோன்றுகிறது. சமணம் பேசும் ஆன்மீகம் மிகவும் ஆழமானது அதை அணுகி அறிவதென்பது பேரின்பம்


No automatic alt text available.

இல்வாழ்வான் யார் - குறளின் மறுபக்கம்

துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.
துறந்தார் – 
1. இல் வாழ்க்கையை துறந்தார், பிரம்மசர்யத்தை மேற்கொண்டார், 2. சாதிவருண சமய குறிகளை, நெறிகளை துறந்தார்

துவ்வா தவர் – அனுபவிக்காதவர், துய்க்காதார் - 
1. இல்வாழ்க்கையில் இருந்தாலும் சிற்றின்பமாக அனுபவிக்காது இல்லற தர்மத்தில் வாழ்பவர்கள். 2. சாதி சமய நெறிகளை மிக முக்கியமாக கருதாதவர், கடை பிடிக்காதவர்

இறந்தார் - 
1. இந்த உடலின் இறப்பை எய்தியவர்,  2. சாதி சமய நெறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இறந்தாரைப் போல் வாழ்பவர்

இல்வாழ்வான் என்பான் துணை – இந்த இடத்தில் என்பான் எனும் சொல்லே நமக்கு இக்குறளின் நுணுக்கங்களை ஆராய வழி வகுக்கிறது. இல்வாழ்வான் துணை என்று இருந்திருக்கலாம். அனால் இல்வாழ்வான் என்பான் துணை என்று சொல்வது இல்வாழ்கிறான் என்று சொல்பவனே துணை என்று பொருள் கொள்ள வேண்டும்.
இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் யார் – உள்ளே வாழ்பவன் எல்லோருள்ளும் வாழ்பவன் யார் அந்தப் பரம்பொருள் அவனே துணை.
இதை மற்றொரு கோணத்திலும் பொருள் கொள்ளலாம்.
ஒருவர் இந்த மூன்று நிலைகளில் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுள் இருக்கும் பரம்பொருளின் நிலை மாறுவதில்லை எனவே எந்த நிலையிலும் முயன்றால் அவனைச் சென்றடைய தடை இல்லை.

Monday, November 6, 2017

பெண்ணின் பெருந்தக்க யாவுள - குறளின் மறுபக்கம்


பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் 
திண்மையுண் டாகப் பெறின். - திருக்குறள் 

இவ்வுலகின் அனைத்து உயிர்களும் இப்பிரபஞ்ச முலத்தின் சிறு துளியே. கடலைச் சென்று சேரவேண்டிய மழைத்துளி போல், ஆறு குளங்களில் தங்கி கடலோடு சேர்ந்து பின் மீண்டும் மழைத்துளியாகி மண்ணில் விழ்வதொன்றே செயலென மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுக்கும் இப்பிறப்பிற்கும் மிகப் பெரும் பேதமேதுமில்லை.

அதிலும் இப்பிரபஞ்சம் பெண்களுக்கென பெரும் கருணையை கையளித்திருக்கிறது உடல், மற்றும் உளக்கூறுகளின் படி பெண்மையின் இயல்பு ஞானத்தின் படிகளுக்கு மிக எளிதில் சென்று சேர்க்கும் வண்ணமே அமையப் பெற்றுளது. வாலை அன்னையின் பிடிகளை எளிதில் தளர்த்தி மயக்கங்களின் பாற்பட்டு மேலெழும்பி பராசக்தியென மூலத்தில் ஒன்றுவதற்கு பெண்மையின் இயல்பான கருணையும், அன்பும் தாய்மையும் பேருதவி செய்யும். அதன் காரணமாகவே பிற உயிர்கள் ஆண்டாண்டு காலமாக சாதகம் செய்தும் எட்டியிராத படி நிலைகளை யோகினிகள் மிக எளிய செயல்களின் மூலம் எட்டியிருக்கிறார்கள். இதுவே “பெண்ணின் பெருந்தக்க யாவுள” இதுவே பெண்ணுக்கு அளிக்கப் பட்டிருக்கும் பெருங்கொடை. ஆனால் அவள் “கற்பென்னும் தின்மையுன்டாகப் பெறின்” அல்லாது போனால் இந்த கொடைக்கான நோக்கம்  சிதைந்து போகிறது.

அது என்ன கற்பு, உடலொழுக்கம் பேணுதல் என்று மட்டும் கொள்ளத்தகாது. கற்பு என்பதற்கு “அடிப்படை நோக்கத்தை மீறாதிருத்தல்” என்றும் கொள்ளலாம். அதனாலேயே நட்புக்கும் கற்பு உண்டு என்றும். செய் நேர்த்தி விழையும் அனைத்து செயல்களுக்கும் பொருந்தும் ஒரு சொல், ஒரு செயல் என்றும் கருதப் படுகிறது.  அது  ஒரு விதத்தில்  ஒழுக்க நெறி. எது ஒழுக்கம்? என்று ஆராய்ந்தால் மூலத்தின் நோக்கம் சிதையாது வாழ்தல் ஒழுக்கம். இங்கு நாம் வந்த நோக்கம் மீண்டும் துளியென மழை மேகமாய் சென்று சேர்வதே. அதன் ஒழுக்கம் மாறாது நம்மில் இருத்திச் செயல் படுவோமேன்றால், அதாவது கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்றால் ஞானத்தின் வாயில் அத்தனை உயிர்களுக்கும் எளிதாகக் கடக்கக் கூடிய ஒன்றே.

இந்தக் கற்பென்னும் விழுமியத்தை கடை பிடிக்க முடியாது ஒரு பெண்ணை கட்டும் மூலக் கயிறுகள் அவளது கொடைகளே. அதாவது அவளது பெண்மையும், பிறப்பிலிருந்து கொள்ளும் கருணையும், மென்மையும்,  தாய்மையும்  எவ்வாறு ஞானத்தை அடையத் தூண்டுகோலாக, ஊன்றுகோலாக ஆகிறதோ,  அதுவே பின்னர் தடைக் கற்களாகவும் ஆகிறது. இந்தப் பேருண்மையை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் ஞானத்தின் ஊன்று கோலை இருகப் பற்றியபடி இந்தக் கட்டுக்களை கடந்து,  வந்த நோக்கம் நிறைவேறும் திண்மை கொண்டிருந்தால் அவளே இப் பிரபஞ்சத்தின் பெருந்தெய்வம்.



#குறளின்_மறுபக்கம்