தொடர்ச்சி..
இத்தனை அழகான மெழுகு சிலை ஒரு கட்டத்தில் உருகி ஒழுகி மண்ணோடும் கலந்து மீண்டும் இறுகி களிமண்ணைப் போலாகும் என்று சொன்னதும் வாழ்க்கையெனும் வட்டம் கொஞ்சம் புரிந்தது.
இந்த மெழுகு சிலைகளின் மேல் வண்டல் மண் கலவையை முதலில் அதே கலைநயத்தோடு பூசுகிறார்கள், பின் அது காய்ந்தபின் அதன் மேலும் நல்ல அடர்வான சுடுமண் பூசி காயவைக்கிறார்கள். இப்பொழுது முழுவதும் மெழுகுசிலையோ அதன் உருவங்களோ அற்று அது ஒரு மண் பொதி போல் ஆகிறது. காய்ந்து இறுகி இருக்கும் அந்தப் போதிகளின் அடிப்பாகத்திலோ, மேல் பாகத்திலோ உருவங்களுக்குத் தக்கவாறு நேர்த்தியாக துளையிடுகிறார்கள்.
பின் இந்த மண் பொதிகளை நல்ல சூளை போன்ற அடுப்புகளில் வைத்து சூடு செய்ய ஒரு பதத்தில் உள்ளே இருந்த மெழுகுச் சிலைகள் அந்த வண்டல் மண்ணில் தன் அடையாளங்களை விட்டு விட்டு போட்டிருக்கும் ஓட்டைகள் வழியே வெளியே உருகி வழிகிறது.
நிலையென நாம் நினைத்திருக்கும் அத்தனையும் ஒரு நாள் கலைவது போல......
அடுத்தபடிக்கு தயாராகிறது அந்தக்கூடுகள்.
மேலும் மேலுமென அக்னியின் வெம்மையை சரியாகத் தன்னுள் உள்வாங்குமளவுக்கு அந்தக்கூடுகள் ஒரு புறம் சூட்டில் கனன்று கொண்டிருக்க..
மறுபுறம் பித்தளையும், செம்பும், இன்னம் சில உலோகங்களையும் குவை/குகை யெனும் குடுவையில் இட்டு அது கிட்டத்தட்ட நீர்மையின் நிலையை எட்டும் வரை அனல் குழம்பாகக் கொதிக்க கொதிக்க மிகப் பெரும் இடுக்கிகளின் துணைகொண்டு அந்த வெம்மையில் கனிந்திருக்கும் அந்தக்கூடுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வெம்மையோடு வெம்மை சேற கடவுளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவங்களுக்குள் ஒருங்கிக்கொள்கிறார்கள்.
நம்முள் தன்னை நிரப்பியிருக்கும் கடவுளர்கள், உருகி ஒழுகி அந்தக் கூடுகளுக்குள் தன்னை நிரப்பிக் கொள்கிறார்கள்.
கூடுகள் பாதுகாப்பானது தான் அருமையானதுதான், நமக்கென அனலும் வெப்பமும் தாங்கி நம்மோடு ஒட்டி உறவாடியவைதான் ஆனாலும் ஒரு நாள் விட்டு, வெட்டி விலகுவதே நியதி லௌகீக வாழ்விற்கு மட்டுமல்ல ஞான வாழ்விற்கும் அதுவே அடிப்படை.
ஏன் இப்போது இந்தக்கூட்டைப் பற்றிய விசாரம்...சொல்கிறேன் அடுத்த பதிவில்
No comments:
Post a Comment