Showing posts with label கவிதை - அனுபவங்கள். Show all posts
Showing posts with label கவிதை - அனுபவங்கள். Show all posts

Saturday, July 3, 2010

விடைபெறுதல் குறித்தான வார்த்தைகள்

விடைபெறுதல் குறித்தான வார்த்தைகளை
விதம்விதமாய்
படைக்கத்துவங்கினேன்
கூர்தீட்டியும் மழுக்கியும்
வளைக்கவும் செய்தேன்
குயவன் கை மண்பானை என
வடிவம் கூடி வந்தன வார்த்தைகள்
மிருதுவாய், தூறலாய், மிடுக்காய்
அடுக்கடுக்காய் மலர்ந்து விழுந்தன
தேன் தடவிய வார்த்த்தைகள்
ஒவ்வொன்றாய் கையளிக்கையில்
பொருத்தமாய் சென்று சேர்ந்த்தது

உன்முறை வந்தபோது
உனக்கான ஓர் வார்த்தை
என்னோடு இல்லாது போயிற்று
தொலைந்த வார்த்தைகளை
தேடும் திராணியற்று
சிறிதே நிம்மதியோடு
விடைபெறாமலே போகிறேன்.


எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காது, எழுதத்தூண்டும் நாட்களில் எழுத நினைப்பதை சமரசங்களற்று எழுதிக்கொள்வதற்கும் அசை போடவேண்டியவற்றிலிருந்து சிலவற்றை உரக்க அசைபோட்டுக்கொள்வதற்கும் மட்டுமே நான் பயன்படுத்திய என் வலைப்பக்கத்தில் தமிழ்மணத்திற்காக நான் எழுத நேர்ந்த இந்த ஒரு வார காலங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை வியப்போடு நானே வேடிக்கை பார்க்க கிடைத்த சந்தர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

உற்சாகத்தோடு கூட வந்த தோழமைக்கும் அங்கீகரித்த தமிழ்மணத்திற்கும் நன்றி


Tuesday, January 8, 2008

பால்ய நகரங்களின் மீதான என் மறுபார்வைகள்


மூளையின் ஞாபகக்குவியல்களில்
முகங்களுக்கான பெயர்களைத்
தேடித்தேடி அலைந்த வேளையில்
இருப்பின் தொடர்புகள் அறுந்துபோனது

நிஜங்களின் தொடர்பில்லாத
சுவடுகளின் மெய்யிருப்பு – என்
தேடுதல்களுக்கான வேட்கையில்
துணை செய்ய மறுத்தது

எழுத மறந்த கவிதைவரிகளில்
தொலந்துபோன உணர்வுகளாய்
தொடர்பில்லாத் தேடல்கள்
அர்த்தமற்றதானது

தேடல்களின் கணங்கள்
விடுபட்ட அந்நிமிடம் மட்டுமே
முழுமையாய்
இருப்புடன் ஒன்ற முடிந்தது


மீண்டும் புதியதாய்
என் ஞாபகத்திவலைகள் – இம்முறை
பெயர்களோடோ – இல்லை
முகங்களோடோ இணையாது
வெறும் இருப்பினோடு மட்டுமே

இனி தொடர்புமை இல்லாத
என் தேடல் வழிகளில்
அவ்வப்போதய இருப்புகளே
சுவைகளாய்.