Showing posts with label அனுபம் - நிகழ்வுகள். Show all posts
Showing posts with label அனுபம் - நிகழ்வுகள். Show all posts

Monday, January 22, 2018

ஐயா வைகுந்தர் - சுவாமித்தொப்பு - ஆதி மூலத்தின் தரிசனத்தை நோக்கிய பயணம் - 20 - Jan-2018

அகவழிப் பயணங்களில் முதன்மையானது ஒப்புக் கொடுப்பது அதன் மூலமாகவே நாம் ஆற்றின் கரையில் இருந்து அதன் மைய நீரோட்டத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறோம். பின் ஆற்றின் ஒழுக்கினோடே இயைந்து பயணம் செய்வதொன்றே வழி. நீரின் ஓட்டத்திற்கு எதிராகவோ, குறுக்கு மறுக்காகவோ அல்லது அந்த ஒழுக்கின் திசையோடோ நாம் முனைந்து நீந்த முற்படும் பொழுது விளைவுகள் எனும் வினைகளை சந்திக்க நேருகிறோம்.

அதுபோலவே 2016 துவக்கத்தில் இருந்தே மைய நீரோட்டத்தின் ஒழுக்கினோடே பயணிப்பதே வாழ்வென்றானது. குறிப்பாக பக்தி, மெய்யியல், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் தினசரி வாழ்வில் ஊடுபாவு போல ஒரு தனி இழையோடு பயணம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த தரிசன நீட்சியில் இந்த பயணத்தில் நான் சென்று நின்றது “ஐயா வைகுந்தரின்” வாசல். ஏகத்தை வலியிருத்தும் மற்றொரு மாற்று இந்து மதக் கோட்பாடுகளை உடைய மரபு. தந்தையின் பாதை, என்று பொருள் தரக்கூடிய “ஐயா வழி”.  My father blesses My father blesses  என்று சொன்ன யோகி ராம்சுரத்குமாரின் மாற்று வடிவம். எல்லா மாற்றுக் கோட்பாடுகளுக்கும் நேரும் சமூக ஒழுக்குகள் இந்த மரபிற்குள்ளும் நிகழ்வதைக் கண்கூட காண நேர்ந்தாலும் எவரோ சிலரின் உணர்தலுக்காக சாட்சியாக நிற்பதாக உணர்கிறேன் “சுவாமித் தோப்பில்” முதல் பதி என்றழைக்கபடும் இந்தப்  புனிதத்தலம்.

ஆதி உண்மையின் பரிணாமங்களைப் பேசும் எல்லா மாற்று இந்து மரபுகளையும் போல இங்கும் வருணாஸ்ரம நிராகரிப்பு, அத்வைதம், அகம்பிரம்மாஸ்மி, சமூக அக்கறை என்ற ஸ்ரத்தைகளை உள்ளடக்கி ஆதியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் பக்தி மரபின் ஒரு வாசலாக மாறியிருப்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக காண முடிகிறது. இது சரியா தவறா என்று எழுந்த கேள்விக்கான விடையையும் மறு புலரியில் அருணனின் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளில் கிடைக்கச் செய்ததும் அதை மேலும் பேசிப் பேசி விரித்துக் கொள்ளும் சக உயிரினை தந்தற்குமான இந்தப் பிரபஞ்ச்சத்தின் உள் நோக்கத்தில் இருக்கிறது என் ஸ்வதர்மாவிற்கான பதில் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

வடக்கு வாசல் அவர் தவம் இருந்த இடமாக போற்றப் படுகிறது அங்கு ஒரு மர இருக்கையும் அதன் மேல் அமையப் பெற்ற கண்ணாடியும் உத்திராட்சமும். கண்டு அமர்கையில் உள்ளே எழும் ஓசையின் அளவுகள் தனித்து வேறு எதனோடோ லயிக்கிறது. பின் கிழக்கு வாசல் சென்றால் பள்ளியறை என்று அழைக்கபடும் ஐயாவின் சமாதி அறை உள்ளது அங்கு உள்ளே நுழையுமுன் அவரது தொண்டர்களின் அனுமதி பெற்று நெற்றியில் செங்குத்தாக ஒற்றை பட்டை தரித்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
அங்கும் அமர்ந்து தியானத்தில் ஒன்ற,  காணும் தரிசனங்கள் இன்னும் மைய நீரோட்டத்திற்கு அழகாக இட்டுச் செல்கிறது.



Monday, January 14, 2008

நான் ஒரு திறமையற்ற நிர்வாகி..


என்னால் நீ வந்து இப்போது விடுப்பு கேட்டால் மாட்டேன் என்று சொல்ல முடியாது


ஏனெனில் உன் சிற்றூரில் உனக்காகா "யேஞ்சாமி, யே ராசா பொங்கலுக்கு வாரேன்னு சொல்லியிருக்காமுல்ல, அவனையும் கூட்டிகிட்டு உங்கோயிலுக்கு பொங்க வைக்க வந்திருதேன் எங்க அய்யா... எங்களை காப்பாத்து" என்று கடவுளிடம் வேண்டுகோள் வைத்திருக்கும் ஒரு பாட்டியிருக்கலாம்



"ஏட்டி அவே வந்தா தொணதொணன்னு தொணக்காம அவன சோரு திங்க விடுங்கடி, பாவம் புள்ள வாயில வைக்க விளங்காத சோத்த தினைக்கும் தின்னு தின்னு நாக்கு செத்துப்போயி வருவா(ன்) வாய்க்கு ருசியா ரெண்டு செய்து போடணும்" என்று சைவமோ அசைவமோ செய்யக்காத்திருக்கும் தாயிருக்கலாம்

"இன்னம் பத்தே நாளு பின்ன எங்க அண்ண வருது எனக்கு மெட்ராஸ்லேர்ந்து சரவணா ஸ்டோர்லேருந்து சுடிதார் வாங்கியாரேன்னு சொல்லிருக்கு இந்த தடவை சாமி கும்பிட அந்த ட்ரெஸ் தான் போடுவேனாக்கும்" என்று காத்திருக்கும் தங்கை இருக்கலாம்.

"எங்க வீட்டு பெரியவன் மெட்ராசிலதான் வேலபாக்கமில்ல நல்ல விவரமான ஆளு அவங்கிட்ட கேட்டா மெட்ராசில யாரைப்பாக்கணும், என்ன செய்யணுமின்னு சொல்லிட்டு போரான் நீரு ஏ கவல படுதீரு" என்று நன்பனை ஆற்றுப்படுத்தும் ஒரு தந்தை இருக்கலாம்

"எங்க அண்ணே எல்லா புது படமும் பாத்திருவாகல்ல, அவியளுக்கு எல்லா ஸ்டாரும் தெரியும் தெனைக்கும் யாரவது ஒரு ஸ்டார மெட்ராசில பாப்பாகளாமில்ல, அவியளும் கடை கண்ணிக்கெல்லாம் வருவாகளாம், இந்த வாட்டி எங்கண்ண யார புதுசா பாத்தகன்னு தெரியல வந்தா எல்லாஞ்சொல்லுவாக" என்று உனக்காக காத்திருக்கும் தம்பி இருக்கலாம்…

"ஏட்டி லட்சுமி, பார்வதி அவுக அண்ண (ன்) எப்ப வாராகளாம் அவ இந்த குதிகுதிக்கா" என்று நாசுக்காக விசாரிக்கும் உனக்காக காத்திருக்கும் ஒரு அண்டை வீட்டு பெண் இருக்கலாம்…

"அங்கனெ நாங்கெல்லா தினைக்கும் பஸ்டாண்டுல நின்னா போதுமில்ல எவ்ளோ பிள்ளைங்க எம்மா… அவிய யாருகிட்ட வேணா பேசுவாளுக என்னா ட்ரெசு, என்னா நடை, செல்போனு.. அதப்பாரு…. அன்னிக்கொருனா…. (நாள்)" என்று உன் கதை அளத்தல்களை வாய்பிளந்து கேட்க காத்திருக்கும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கலாம்

இல்லை இங்கிருந்து கொண்டு செல்லும் பெண்ணின் நினைவுகளை உன்னுள் போட்டு புதைத்து மற்றவர்களோடு சிரித்து பேச வேண்டிய அனுபவங்கள் காத்திருக்கலாம்…

இவையெல்லாம் தெரிந்திருந்தும் நான் எப்படி நீ விடுப்பு கேட்டு என்னிடம் வரும்பொழுது மாட்டேன் என்று சொல்வது, நான் அப்போது ஒரு திறமையான நிர்வாகியாக நிற்பதை விட ஒரு மனிதாபிமான மனுஷியாகவே நிற்க விரும்புகிறேன்.. இப்போது கூறுங்கள் நானொரு திறமையற்ற நிர்வாகி தானே….


(பின் குறிப்பு.. )
என் நிறுவணம் பல இளவயது பனியாளர்களைக் கொண்டு நடத்தும் ஒரு மிகப்பெரியதும் இல்லாத மிகச்சிரியதும் இல்லாத நடுவாந்திர BPO நிறுவணம். அதற்கென புள்ளி இலக்குகளும் மாதந்திர வருடாந்திர வருமான இலக்குகளும் உண்டு, இங்கு பணி செய்பவர்களில் பெறும்பான்மையான பணியாளர்கள், தமிழகத்தின் தென், வட பகுதி சிற்றூர்களில் இருந்து வந்து தங்கி பணி புரிபவர்கள், இவர்களுக்கு, தீபாவளியை விட, தமிழ் புத்தாண்டை விட பொங்கல் பண்டிகையும், விடுமுறையும் மிக முக்கியம்.

எல்லா வருடமும் என் ஜனவரி மாத புள்ளி இலக்குகளையும், மாதந்திர வருமான இலக்குகளையும் நான் என் நிறுவண நிர்வாக சபையின் எதிர்பார்புக்களையும் மீறி மிகவும் குறைவாகவே இலக்கிடுவது வழக்கம். ஏனெனில் (பதிவை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளலாம்…)