Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, December 25, 2020

கண்ணனும் கர்த்தரும் - யோகிகளின் வரிசை

 

கண்ணனைப் போலவே மீட்பருக்கான அனைத்து குறியீடுகளோடும் நிகழ்ந்தது ஏசுவின் பிறப்பு.

இறுக்கமானதொரு காலகட்டத்தில் கொண்டாட்டங்களை மையப் படுத்தி உருவானது கிருஷ்ணம்.

அதுபோலவே கீழ்மைகளின் எக்களிப்புகளின் நடுவே இருக்கமும், ஒழுங்கும் விடுதலையும் வேண்டுவதாக எழும்பியது இயேசு வழி வந்த கிருஸ்துவம்.

அஹம் பிரம்மாஸ்மி எனும் அத்வைத இந்துத்துவத்தின் மகா வாக்கியமும், " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" எனும் இயேசுவின் வார்த்தைகளுக்கும் வித்யாசம் ஏதுமில்லை.

நிறம் மாறிப்போன சைவ, வைணவ, பௌத்த, சன்மார்க்க மார்க்கங்களைப் போலவே பின்னாளில் கிருஸ்துவமும் "என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."" பிதா குமாரன் பரிசுத்த ஆவி" என மாறிப்போனது.

ஒப்புமைகளைக் கொண்டு நிறுவப்படுவதற்காக அல்ல கிருஷ்ணா,புத்தா, மஹாவீரர், வள்ளலார் எனும் முழுவதும் உணர்ந்த பிரபஞ்சத்துளியான (fully conscious universal particle) யுக புருஷர்கள் வரிசையில் ஏசுவும் ஒருவர் என்று சொல்வதற்கான பிரயத்தனங்களே இவைகள்.

இது போன்ற எந்த புரிதலுமின்றியே கல்லூரிக் காலங்களில் கிருஸ்துவத்தை மனமுவந்து உள்வாங்க முடிந்த சூழல் அமைந்தற்குப் பின்னும் சில காரணங்கள் இருக்கலாம்.



Friday, September 21, 2018

கங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்

கங்காளநாதர் சந்நிதிக்கு போயிட்டு போங்கோ” என்று உத்தரவு போலுமல்லாது செய்தியாகவுமல்லாது பிரஹன் நாயகி அம்மையின் சந்நிதி அர்ச்சகர் சொன்ன பொது எனக்கு அந்தக் குரல் தனித்து தெரிந்தது. ஏனெனில் எங்களை #அம்பாசமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் #பிரம்மதேசம்(#அயனீஸ்வரம்) கோவிலுக்கு அழைத்துச் சென்றவர்கள் அந்தக் கோவிலோடு குறைந்த பட்சம் 30 வருட தொடர்புள்ளவர்கள். அங்கு அருட்கொடையும் அருட்பணியும் செய்பவர்கள். அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அந்த சந்நிதியின் மகத்துவம் பற்றி அப்படியானால் இந்த சொல் எனக்கானது என்று எண்ணி முடிக்கும் தருணம். அந்த சந்நிதியை சென்றடைந்திருந்தோம். மூடிய அழிக்கதவுகளுக்கிடையே பிரம்மாண்டாமாகத் தெரிந்த அவரது திருமேனியை உள்வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது எவரோ அருகில் பிட்சாடனர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். குருடன் தடவிக் கண்ட யானையாக அழிகளின் இடையே அவரை காண முயற்சித்துக் கொண்டிருக்கையில் அதே அர்ச்சகர் வந்து கதவைத்திறந்து 2 அடி தூரத்தில் கொண்டு நிறுத்தினார்.
எனக்கும் அவரது திருமேனிக்கும் இடையில் எவருமில்லாது வெளி மட்டுமே நிரம்பியிருந்த தருணம் அது.. குறைந்தபட்சம் 7 அடி உயரம் நீண்ட கைகளும் கால்களும். பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். இடைக்கால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடம். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலம். இடையில் புலிக்கச்சையாக இருக்கலாம் வஸ்திரம் தரித்திருந்ததால் தெரியவில்லை. புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகம். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும் மறுகையில் முத்திரையும்.
அவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்களின் நின்ற திருக்கோலம். உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் இதில் சில அப்ஸ்ரச்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யபட்டவை மிகவும் பழமையானவை.
அந்த இடத்தில் நிற்க நிற்க சந்நதியின் வெம்மையும் அவரின் ஆகர்ஷ்ணமும் நம்மை இழுக்க நம்முள் கங்காளத்தின் ஒலி இயல்பாக கேட்கத்துவங்குகிறது. உடலும் உயிரும் ஒரு புள்ளியில் சேர சில கணங்களில் நாம் அந்த சிவ கணங்களில் ஒன்றென மெய்மறந்து போகிறோம் என்பதே உண்மை.
கண்டு வந்து இத்தனை நாட்களாகியும் அப்படியே கண்ணுள் நிற்கும் அந்தக் காட்சியை என்னவென்று சொல்ல. பொதுவாக இந்த தருணங்களில் புகைப்படம் எடுக்கத் தோன்றுவதே இல்லை. இணையத்தில் எங்காவது இருக்கும் தேடிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன். அதன்படி இணையத்தில் கிடைத்த சில படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
மற்றபடி கோவிலின் அம்மையும் அப்பனும் அத்தனை அழகு. அம்மையைக் காண்கையில் எங்கள் ஊர் அம்மன் #ஆத்தூர்சோமசுந்தரியைக் .கண்டது போல் இருந்தது. நெல்லை காந்திமதியை ஒத்த உயரம். மடிசார் உடுத்திய பாங்கில் அருள் பொழிகையில் எங்கள் ஊருக்குச் சென்று வந்த உணர்வு கிடைத்தது. அழகிய வேலைப்பட்டுகள் அமைந்த மிகப் பெரிய இரண்டு மண்டபங்கள் என்று கோவிலின் பிரம்மாண்டத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
திருநெல்வேலியைச் சுற்றியுள்ள நவகைலாய கோவில்களில் முதன்மையாக #சூர்ய_ஸ்தலமாக இதுவே விளங்குகிறது என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது மக்கள் பாபநாசம் கோவிலையும் சூர்யஸ்தலமாக வணங்கி வருகிறார்கள்.
நான் தேடி அறிந்து கொண்டவரை #கங்காளநாதருக்கும்#பிட்சாடனருக்கும் கிழே கண்ட வித்தியாசங்கள் உள்ளது. நினைத்த மாத்திரத்தில் உள்ளே ஆழ அமிழ்த்தும் கங்காளரை வாழ்வில் ஒருமுறையாவது கண்டு மீள வேண்டும்.


 

Monday, November 20, 2017

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 3 - நிறைவு

பார்த்துப் பார்த்து வெகு நாட்களாக பதியமிட்டதைப் போன்று பேணிய கூடு விலகும் நாள் வந்துவிட்டது. உருக்கி விட்ட உலோகம் படிந்ததும் கூட்டை அகற்றி விட்டு முழு உருவச்சிலையாக உருவாகி வெளிவருகிறார்கள் தெய்வங்கள்.
பின் அரம், உளி போன்ற சிறு சிறு கருவிகள் கொண்டு தேய்த்து, செதுக்கி, தங்களை முழுமையை நோக்கி சிற்பிகளின் கைகளின் மூலம் நகர்த்திக்கொள்கிறார்கள் கடவுளர்கள்.
நுணுக்கமான வேலைப்பாடுகள் முழுமை பெற்றதும் மெருகேற்றி உள்ளும் புறமும் பள பளக்க தயாராகிவிடுகிறார்கள் உற்சவ மூர்த்திகள்.
தன்னைத் தானே சமைத்துக் கொள்ளும் சிலைகளின் முன்னிலையில் அத்தனை கைகளும் கருவிகள் மட்டுமே.
இந்தப் பிறவியின் கூட்டிற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சக்திக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதைப் போல ஆயிரம் கஷ்ட நஷ்டங்களோடு பரம்பரையாக இந்த கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பங்களில் பிரபுவின் குடும்பமும் ஒன்று.
கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் சுவாமிமலைக்கு பயணம் செய்பவர்கள் அங்கிருக்கும் ஏதாவது ஒரு சிற்பக்கூடத்துக்கு சென்று வாருங்கள் உள்ளும் புறமும் வெம்மை ஏறட்டும் பின்பொருநாள் குளிர்ந்து உறையலாம்.

Image may contain: 1 personNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 personImage may contain: 1 personNo automatic alt text available.Image may contain: one or more peopleNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 person, indoorImage may contain: 1 person

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 2

தொடர்ச்சி..
இத்தனை அழகான மெழுகு சிலை ஒரு கட்டத்தில் உருகி ஒழுகி மண்ணோடும் கலந்து மீண்டும் இறுகி களிமண்ணைப் போலாகும் என்று சொன்னதும் வாழ்க்கையெனும் வட்டம் கொஞ்சம் புரிந்தது.
இந்த மெழுகு சிலைகளின் மேல் வண்டல் மண் கலவையை முதலில் அதே கலைநயத்தோடு பூசுகிறார்கள், பின் அது காய்ந்தபின் அதன் மேலும் நல்ல அடர்வான சுடுமண் பூசி காயவைக்கிறார்கள். இப்பொழுது முழுவதும் மெழுகுசிலையோ அதன் உருவங்களோ அற்று அது ஒரு மண் பொதி போல் ஆகிறது. காய்ந்து இறுகி இருக்கும் அந்தப் போதிகளின் அடிப்பாகத்திலோ, மேல் பாகத்திலோ உருவங்களுக்குத் தக்கவாறு நேர்த்தியாக துளையிடுகிறார்கள்.
பின் இந்த மண் பொதிகளை நல்ல சூளை போன்ற அடுப்புகளில் வைத்து சூடு செய்ய ஒரு பதத்தில் உள்ளே இருந்த மெழுகுச் சிலைகள் அந்த வண்டல் மண்ணில் தன் அடையாளங்களை விட்டு விட்டு போட்டிருக்கும் ஓட்டைகள் வழியே வெளியே உருகி வழிகிறது.
நிலையென நாம் நினைத்திருக்கும் அத்தனையும் ஒரு நாள் கலைவது போல......
அடுத்தபடிக்கு தயாராகிறது அந்தக்கூடுகள்.
Image may contain: foodImage may contain: foodImage may contain: plant and outdoorNo automatic alt text available.No automatic alt text available.

மேலும் மேலுமென அக்னியின் வெம்மையை சரியாகத் தன்னுள் உள்வாங்குமளவுக்கு அந்தக்கூடுகள் ஒரு புறம் சூட்டில் கனன்று கொண்டிருக்க..
மறுபுறம் பித்தளையும், செம்பும், இன்னம் சில உலோகங்களையும் குவை/குகை யெனும் குடுவையில் இட்டு அது கிட்டத்தட்ட நீர்மையின் நிலையை எட்டும் வரை அனல் குழம்பாகக் கொதிக்க கொதிக்க மிகப் பெரும் இடுக்கிகளின் துணைகொண்டு அந்த வெம்மையில் கனிந்திருக்கும் அந்தக்கூடுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வெம்மையோடு வெம்மை சேற கடவுளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவங்களுக்குள் ஒருங்கிக்கொள்கிறார்கள்.
நம்முள் தன்னை நிரப்பியிருக்கும் கடவுளர்கள், உருகி ஒழுகி அந்தக் கூடுகளுக்குள் தன்னை நிரப்பிக் கொள்கிறார்கள்.
கூடுகள் பாதுகாப்பானது தான் அருமையானதுதான், நமக்கென அனலும் வெப்பமும் தாங்கி நம்மோடு ஒட்டி உறவாடியவைதான் ஆனாலும் ஒரு நாள் விட்டு, வெட்டி விலகுவதே நியதி லௌகீக வாழ்விற்கு மட்டுமல்ல ஞான வாழ்விற்கும் அதுவே அடிப்படை.
ஏன் இப்போது இந்தக்கூட்டைப் பற்றிய விசாரம்...சொல்கிறேன் அடுத்த பதிவில்
Image may contain: one or more people and people standingImage may contain: outdoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 1

இது என்ன மெட்டீரியல்?? என்று பரவசமும் ஆர்வமுமாக அந்த காமாட்சி விக்கிரகத்தை நோக்கியபடி கேட்டேன் ஏனெனில் அது மரம் போலுமிருந்தது, உலோகம் போலவும் இருந்தது. "அது மெழுகு மாடல்ங்க" என்று சொன்ன நேரம் அவர் கையில் ஆஞ்சநேயர் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். என்னால் கண்களை அந்த சிலையை விட்டு நகர்த்தவே முடியவில்லை. மீண்டும் கண் அகட்டாமல் பார்த்தபடி "ஓ இது மோல்டா இதுக்குள்ள தான் உலோகத்தை உருக்கி விடுவீங்களா?? என்ற என் அபத்தமான கேள்வியை கேட்டு பிரபு, அந்த சிற்பக்கூடத்தின் சிற்பி ஒரு நிமிடம் கையில் இருந்த ஆஞ்சநேயரை வைத்து விட்டு ஒரு சிலை எப்படி உருவாகிறது என்று விளக்கமாகச் சொல்லலானார்.
அது ஒரு சிலை உருவாகும் செயல்முறை மட்டுமல்ல என்று தோன்றியது.
It is a process/travel every soul goes thru in their given birth... Let me share the process with you.
கோவில்களிலோ, பூம்புகார் போன்ற பெரும் வர்த்தக நிலையங்களிலோ பெரிதும் சிறிதுமான உலோகச் சிலைகளைக் காணும் போது நம்முள் எழும் மிகுந்த குளிர்ச்சியான உணர்விற்கு நேர் எதிர்மறையான தட்ப வெப்பத்தில் இருந்தது உலோகங்களில் கடவுளர் மூர்த்தங்களைச் சிலை வடிக்கும் அந்தச் சிற்பக்கூடம்.
சுமார் ஆயிரம் சதுரடி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நடராஜர், பிள்ளையார், பெருமாள், விதம்விதமான அம்மன், வீரசிவாஜி, அப்பர் பெருமான், என அத்தனை பேரும் ஒப்பனைகளேதுமற்று முழுமையாகவோ முழுமைக்கு முந்திய சில படி நிலைகளிலோ அங்காங்கு ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நம்முள் பலரும் கடந்துக்கொண்டிருக்கும் வாழ்வே என்னுள் ஒப்புமையாகத் தோன்றியது.
தேன்மெழுகும், குங்கிலியமும், ஒரு எண்ணையும் சில விகிதங்களில் ஒன்றாகக் கலந்து சூடு செய்ய ஒரே குழம்பாகி பின் குளிர்ந்து கெட்டியான களிமண் போன்ற பதத்தில் கிடைப்பது தான் அந்த மெழுகு.
நல்ல கெட்டியான பதத்தில் சிலைகளின் உருவங்களைச் செய்வதற்கும், கொஞ்சம் இளகிய பதத்தில் அந்த உருவங்களின் மேல் இருக்கும் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் செய்வதற்குமாக இரண்டு விதமான தரங்களில் இந்த மெழுகை உற்பத்தி செய்துகொள்ளுகிறார்கள்.
மிகவும் பொதுவான அளவு, மீண்டும் மீண்டும் செய்யும் சிலைகள் என்றால் அதற்கென சில மோல்டுகள் வைத்துள்ளார்கள் அதில் சூடாக ஊற்றி கட்டி வைத்து பின் பிரிக்க மெழுகு மாதிரிகள் கிடைத்து விடுகிறது.
ஆனால் நான் கண்டது போல் காமாட்சியோ, அப்பர் பெருமானோ அத்தனை வழமையான தேவை இல்லை என்பதால் அதன் மாதிரி உருவப் படத்தை வைத்துக் கொண்டு கை, கால், முகம், கழுத்து அணிகலன்கள், திருவாச்சி, பீடம் என்று ஒவ்வொன்றாகச் செய்து ஒன்றிணைத்து தெய்வத்தை கண்முன் ஒருக்குகிறார்கள்.
இளகவும், உருகவும், கலக்கவும் தயாராய் இருக்கும் மனதுதானே தன் அடுத்த படிகளுக்கு நகர முடிகிறது.
இன்னும் வரும்.......
Image may contain: 1 person, shoesImage may contain: one or more peopleImage may contain: shoesImage may contain: one or more peopleImage may contain: one or more people and indoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

Saturday, November 11, 2017

பிறந்த இடம் நோக்குதே - வீடு திரும்புதல்



ஒருவர் பிறந்தவீட்டில் இருந்து வெகு....தொலைவுக்கு சென்று வீடு திரும்பும் ஒரு காட்சியை இங்கு எண்ணிக் கொள்ளலாம்.
ஆஹா.. இந்தியாவின் தலை நகருக்கு வந்தாச்சு
ஆ..இந்த ட்ரெயினில்தான் தான் நாம் இன்னமும் இரண்டு நாட்களில் இந்தியாவின் தென்கோடியில் உள்ள என் கிராமத்துக்குச் செல்லப் போகிறேன்.
ஆஹா...மத்தியப்பிரதேசம் தாண்டியாச்சு, தெலுங்கானாவும் போயாச்சு, சென்னையும் தாண்டியாச்சு, திருச்சி போய், தூத்துக்குடி வந்தாச்சு. ஆத்தூர் பஸ்ஸில் ஏறியும் ஆச்சு. பஸ் ஸ்டாண்டில் இறங்கி வீட்டை அடைந்ததும் கிடைக்கும் நிம்மதிக்கும் மகிழ்வுக்கும் அளவுகோல் ஏது. ஆனாலும் இனியும் தொடரும்.
நாம் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்த படி அந்திச் சூரியனை ரசித்து அம்மா கையால் சாப்பிட்டு நமது படுக்கையில் கண் மூடி சாயும் நொடியில் அடுத்த வேளை செய்யவேண்டிய வேலை நியாபகம் வரும் பாருங்கள். அதுதான் வீடு திரும்புதலின் புனிதக் கட்டம்.
வீடுதிரும்பியோருக்கும் செய்வதற்கு சில உளது. இதுவே வாழ்க்கை.
இதையே மெய்மை தேடலிலும் பொருத்திப் பாருங்கள். வீடு திரும்புதலின் படிகளும், வீடடைந்தபின் செய்வதற்கென உள்ள கர்மாக்களையும் எதிர்கொள்ளும் நிலையிதுவே. என்ன, எப்படி, எவ்வாறு அதுவும் அந்தந்த நொடியில் தோன்றும்.
#மையம்

Wednesday, October 25, 2017

கிரியா - முக்தியின் படிநிலைகள்

சிறிதே முற்றிய தூறல் காரின் முகப்புக் கண்ணாடியில் துளிகளாய் படிகிறது. வண்டியின் வேகத்தில் உருவாகும் எதிர்காற்றில் கண்ணாடியில் தெறிக்கும் நீர்த்துளி கோடாக கீழிறங்காது விந்தனுவைப் போன்ற இயக்கத்தோடு கண்ணாடியில் மேல் நோக்கி நகர்கிறது.

இதை நகரும் கண்ணாடியில் நீர்துளி பட்டால் அது மேலே ஏறும் என்று பொது விதியாக்க முடியாது. ஏனெனில் இங்கு கண்ணாடியின் பரப்பு, காற்றின் வேகம், காரின் வேகம், தூறலின் அளவு இப்படி பல காரணிகள் இந்நிகழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது.

அது போலவே நம் கண்ணெதிரில் அல்லது அனுபவத்தில் காணும் அநேக விஷயங்களுக்கு தியரி கற்பிக்க முடியாது. அவற்றின் காரணிகள் பொது விதிக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக ஆன்மீக அனுபவங்கள்.  a+b=c என்று கணிக்க இது கணித பார்மூலாக்கள் இல்லை.

பறவைகள் - இயற்கையின் காரணிகள்

பறவைகளை இனம் கண்டு கொள்ளுங்கள், அதன் குரலை, வடிவத்தை, அழகை முழுமையாய் உள் வாங்கிக் கொள்ளுங்கள்.

சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கலாம், வெண்டக்காய் வதங்கிக் கொண்டிருக்கலாம், கிரைண்டரில் மாவு அரைபட்டுக் கொண்டிருக்கலாம், எங்கிருந்தோ வரும் ஒரு பறவையின் சப்தம் உங்களை ஈர்க்கும் அளவிற்கு ப்றவையை தியானியுங்கள்.

தான் இருக்கும் மரத்தை, கிளை மறைவுகளை, இலை அசைவுகளை உங்களுக்கு உணர்த்தும். அடுத்து எந்த திசையில் பறக்குமென்று உணர்த்தும். நம் விழிப்புணர்வை கூர்மையாக்கும்.

விழிப்புணர்வே தியானம். அதுவே கடவுளின் இருப்பு.

பறவையை தியானியுங்கள்.

ஓஷோ சொல்லவில்லை நான் தான் :)

பிரம்மத்தின் படிகள்

ஒரு பாதார்த்தத்தை நினைவில் மீட்டெடுக்கும் பொழுது மனம்  சுவையில் இருந்து உருவத்துக்கு தாவுகிறதா இல்லை வரிசை மாறுகிறதா???

Ex. அதிரசம் என்று நினைப்பதற்கு அடிப்படை அதன சுவை மனதில் எழுப்பிய வாசனையா இல்லை பெயர், வடிவம், நிறம், தன்மை இவைகளா??? எது முதல் என்பதே கேள்வி??

Tuesday, October 24, 2017

அசையும் பிரம்மம்

உள்ளிருந்து வெளித்தள்ளுகிறோமா??
இல்லை
உள்ளிழுப்பதையே வெளியேற்றுகிறோமா??
இடையில் தங்கும் அணுவுக்கும் குறைவான வெளி
எங்கு சென்று சேர்க்கிறதோ
அதுவே சிவமோ....

அசையாது தன்னுள் வளியை (காற்றை ) வாங்கி தானே வெளியாகும் (அண்டமாகும்) சிவம்...

மீண்டும் மீண்டும் வெளியை வளியாக்கி உள்கொணரும் சக்தியின் நடனமும் தான் ஜீவனோ...

சிவ சக்தி.... சிவசக்தி என முப்பாட்டன் இதைத்தான் கூத்தாடினானோ.....

உறக்கமற்ற  இரவின் விழிப்பு விடியலைக் காட்டுகிறதோ.

Wednesday, September 24, 2014

ஆன்மீக இறுமாப்பு


கேள்விகள் என்பது நம் வினைச்செயல்,கர்மா அதற்கும் கடவுளே காரணம் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கும்  நம் வினைப்பயனே காரணம்.

நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக் குறைக்க உதவும். அதன் மூலம் நாம் செய்யும் நன்மைகள் அதிகரிக்கும் அப்போதும் அதற்கான கர்த்தா நாம் தான்

இதில் நன்மையை நாம் கடவுளின் பெயருக்கு விடுவதன் காரணம் “நாம் ஒரு நன்மை செய்து விட்டோம்” என்ற ஆணவத்தை அடைந்து விடாமல் இருப்பதற்காகத்தான்.ஏனெனில் இந்த உணர்வு இறுமாப்பையும் அதற்கான பதில் உபகாரத்தையும் (குறைந்த பட்சம் ஒரு சிறிய அங்கீகாரத்தையாவது ) எதிர்பார்க்க வைக்கும். இதன் பயனால் இம்மையில் நாம் மீண்டும் ஒரு செயல் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். மறுமையிலோ மற்றுமோர் வினைச்சக்கரத்தை உருவாக்கிக்கொள்கிறோம். .

இப்போது கேள்விக்கு வருவோம். - எல்லாமும் கடவுள் செயல்தான் என்று சொன்னால் ஒருவர்  செய்யும் தவறையும் கடவுள் செயல் என்று சொல்லமுடியுமா?  அது நாத்திகவாதமாகதா? அது போலத்தான் கேள்விகளும். கேள்விகள் அறியாமையின், இருளின்,  வெளிப்பாடு, இதில் அணுவுக்குள் அனுவானவர்க்கும் ஒளியானவர்க்கும் தொடர்பில்லை.

 

இப்போது பதிலுக்கும் வரலாம் – பதில் எங்கும் எப்போதும் ஓரு  காற்றைப்போல நிலைத்து நிறைந்திருப்பது.  ஆனால் காற்றாடி சுற்றும் போதோ மரங்கள் அசையும் போதோதான் நாம் அதை புரிந்து கொள்கிறோம். இதில் நம் கேள்விகளை சுயம் ஏற்றி அதற்குண்டான பதில்களையும் தொடர்பு படுத்தி நம்மை சுகத்திலோ துக்கத்திலோ ஆழ்த்திக்கொள்கிறோம். தற்குறிப்பேற்றல் அணி உண்டல்லாவா அது போல.  இங்கும் நம் அறியாமை மட்டுமே வியாபித்திருக்கிறது.

கடவுளின் வேலை நம்மில் கேள்விகளை உண்டாக்குவதோ அதற்குண்டான பதில்களை தருவதோ இல்லை. அவரது நாமத்தால் நம்மை கேள்விகளற்ற நிலைக்கு தள்ளுவது மட்டுமே அதை உணர்த்துவது மட்டுமே. இதையும் தாண்டிய ஒரு நிலையில் அவர் வேறு எவரோ இல்லையென்றும், வேறு எங்கோ ஓர் தனி உலகத்தில் பருப்பொருளாய் இருக்கவில்லை என்றும் நம் ஆத்மா அந்த பேருணர்வின் ஒரு துகள் என்றும் புரிந்து கொள்ளும் நொடியில் மற்றுமொரு கடவுள் நமக்குள் உருக்கொள்கிறார்.

இதில் காலம் காலாமாய் நாம் செய்து கொண்டிருக்கும் சாங்கியத்திற்கு எந்த ஒரு கர்வமும் கொள்ளத்தேவையில்லை என்பது என் கருத்து.